மாணவர் படைப்பாளிகள் – FAQ : பனிப்பூக்கள் \n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மாணவர் படைப்பாளிகள் – FAQ

  1.  இத்திட்டத்தில் பங்குப்பெறுவதற்கான அடிப்படைத் தகுதி என்ன?

இத்திட்டத்தில் பங்கேற்க பின்வரும் தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன:

  • 15 வயது முதல் 25 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும்
  • மினசோட்டா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
  • எழுத்தாளர்களுக்குத் தமிழில் பேச, எழுத, வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    • கணினித் தொழில்நுட்பம், ஓவியம், புகைப்படத் திறன்களுக்கு தமிழ் வாசிக்கவும் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளவும் தெரிந்திருந்தால் போதுமானது.
  • புதிய, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பங்களிப்புகளுக்கு உதவும்
  • பள்ளி இதழ் / பத்திரிக்கைகளில் (School Magazine / School Newspaper) பங்களித்த அனுபவம் இருத்தல் நலம்.
  • கணினி வழியில் தமிழ் தட்டச்சு செய்ய தெரிந்திருத்தல் நலம்.
  1. இதில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புத்திறன் பிரிவுகளைத் தவிர வேறு திறன் இருந்தால் பங்குக்கொள்ள முடியுமா?

பனிப்பூக்கள் தற்போது மின்னிதழாக மட்டுமே வெளியிடப்படுகிறது. கதை, கட்டுரை, ஓவியம், புகைப்படம், கணினித் தொழில்நுட்பம் ஆகியவை அல்லாமல், உங்களது வேறுதிறன்கள் எங்களது சஞ்சிகைக்கு உதவக் கூடுமென்றால் கண்டிப்பாகப் பரிசீலிக்கலாம். வருமாண்டில் விளம்பரங்களை அதிகரித்து, மேலும் பல வாசகர்களைக் சென்றடைவது பனிப்பூக்களின் முக்கிய குறிக்கோள். அது தொடர்பான ஆர்வம்/அனுபவமிருப்பின் கண்டிப்பாக உங்களது திறன்களைப் பயன்படுத்திக் கொள்வோம்,

  1. இத்திட்டத்தில் மினசோட்டாவில் வசிப்பவர்கள் மட்டும் தான் பங்குப்பெற முடியுமா?

ஆம், தற்சமயம் இத்திட்டம் மினசோட்டாவைச் சேர்ந்த மாணவர்களுக்கானது மட்டுமே. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், அமெரிக்காவில் அடுத்த தலைமுறை இதழியல், ஊடகத் துறை படைப்பாளிகளை உருவாக்குவது தான். அமெரிக்காவில் பல பத்திரிக்கைகள் இருந்தாலும் தமிழில் வெளியாகும் பத்திரிக்கைகள் மிகக் குறைவு. இந்த இடைவெளியை நிரப்பி மழலையர் தொடங்கி முதியோர் வரை அனைவரும் படித்து, கேட்டு, கண்டு பயனுற தமிழில் படைப்புகளைத் தரவேண்டுமென்பது கானம்பாடி பதிப்பகத்தின் (Loon Media Group LLC) குறிக்கோள். இதனைச் செயல்படுத்தும் நோக்கில் தொடங்கப்படுவது தான் மாணவர் படைப்பாளிகள் திட்டம். தற்போது இத்திட்டத்தைச் செயல்படுத்த போதுமான மனிதவளம் இல்லாததால்  முதலில் மினசோட்டாவில் தொடங்கி, பின்னர் படிப்படியாக அமெரிக்காவின் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டமுள்ளது.

  1. இத்திட்டத்தில் பங்குப்பெற ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

மாணவர் படைப்பாளிகள் திட்டத்தில் பங்கேற்க, படைப்புகள் வழங்கிட கட்டணமேதுமில்லை. வருங்காலங்களில், பங்கேற்பாளர்களின் தேவைக்கேற்ப சிறப்பு பயிற்சியாளர்களைக் கொணரும் திட்டமும் உள்ளது. ஒருவேளை இவ்வகைப் பயிற்சிகள் நேர்முகமாக நடத்தப்படவேண்டியிருந்தால் அதனை ஒருங்கிணைக்க மிகச் சிறிய கட்டணம் தேவைப்படலாம். ஆனால் இத்திட்டத்தின் பங்குபெறவும், பங்களிக்கவும் கட்டணம் ஏதுமில்லை.

  1. இத்திட்டத்தில் பங்குப்பெற நேரடியாக வர வேண்டியிருக்குமா?

எதிர்காலங்களில் நேர்முகப் பயிற்சிகள் எவையேனும் ஒழுங்கமைக்கப்பட்டால் நேரடியாக வரவேண்டியிருக்கலாம். மற்றபடி இத்திட்டத்தில் பங்கேற்க நேரடியாக வரவேண்டிய அவசியமில்லை. உங்களுடனான தொடர்பாடல், தொலைபேசி கூட்டம் மூலமாகவோ, மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலமாகவோ இடம்பெறும்.

  1. இத்திட்டத்தில் பங்குப்பெற எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும்?

இது உங்களது படைப்புத் திறன், ஆர்வத்தைப் பொறுத்து அமையும். எங்களின் எதிர்பார்ப்பு, உங்களிடமிருந்து மாதம் ஒரு படைப்பு. தேர்வுக் காலங்களிலோ அல்லது வேறு தவிர்க்க முடியாத காரணங்களினால் ஓரிரு மாதங்கள் படைப்புகள் தரமுடியாமல் போவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். இயன்ற சமயங்களில் கூடுதலான படைப்புகள் தரமுடிந்தால் அதையும் வரவேற்கிறோம். நீங்கள் வாரம் 1 முதல் 2 மணிநேரம் செலவிட நேரும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.

இதைத் தவிர உங்களது படைப்புகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள மாதம் இரு தொலைபேசி கூட்டங்கள் தேவைப்படலாம். உங்களின் ஆர்வம், விருப்பத்துக்கேற்ப எங்களது ஆசிரியக் குழுவினரின் உதவி தேவைப்பட்டால் நீங்கள் அவர்களை எந்த நாட்களிலும் அணுகலாம்.

  1. இத்திட்டத்தின் மொத்த கால அளவு எவ்வளவு?

இத்திட்டத்தில் பயன்பெற குறிப்பிட்ட கால அளவு ஏதுமில்லை.

கானம்பாடி பதிப்பகத்தின் (Loon Media Group LLC) குறிக்கோள் அமெரிக்க இதழியல் மற்றும் ஊடகத்துறையில் அடுத்த தலைமுறை தமிழ் படைப்பாளிகளை உருவாக்குவது. போதுமான படைப்பு அனுபவம், பயிற்சிகள் தேவைப்படும் வரையில் நீங்கள் தொடர்ந்து இத்திட்டத்தில் பங்குபெறலாம். எனினும் பனிப்பூக்களின் மாணவர் படைப்பாளிகள் திட்டத்தில் தொடர்ந்திட ஆண்டுதோறும் உங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ள தேவைப்படும். போதுமான அனுபவம் பெற்ற பிறகு நீங்கள் பனிப்பூக்கள் ஆசிரியர் குழுவில் பங்குபெறுவதையும், படைப்புகள் தருவதையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

  1. இத்திட்டத்தில் பங்குப்பெறத் தொடங்கி, சில காலத்திற்குப் பிறகு வேறு மாநிலத்திற்கு மாறிப் போக நேர்ந்தால், இத்திட்டத்தில் தொடர்ந்து பங்குக்கொள்ள முடியுமா?

அத்தகையச் சந்தர்ப்பங்களில், சூழ்நிலையின் அடிப்படையில் இதனை ஒழுங்கமைத்துத் தருவோம்.

  1. இத்திட்டம் மூலம் என் பள்ளியில் எவ்வாறு தன்னார்வத் திறனுக்கானப் புள்ளிகளைப் பெறுவது?

பொதுவாக உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தன்னார்வப் பணிகளுக்குப் புள்ளிகள் வழங்கப்படுவதுண்டு. பள்ளி நேரம் முடிந்த பிறகு சமூக, கல்வி, கலாச்சார, கலைப் பிரிவுகளில் மாணவர்கள் ஊதியம் ஏதுமின்றி செய்யும் பணிகளுக்கு ஒவ்வொரு பள்ளியும் தகுந்த புள்ளிகள் வழங்கும். அப்படி நீங்கள் பனிப்பூக்கள் இதழியல் தொடர்பாகச் செலவிடும் நேரத்தைக் கணக்கிட்டு உங்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். பள்ளிக்குப் பள்ளி இதற்கான விதிமுறைகள் மாறுபடுவதால், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உங்களது பள்ளியில் கல்வி ஆலோசகரை அணுகவும்.

https://ecs.secure.force.com/mbdata/mbquest3RTE?Rep=SL1301

  1. து குறித்த பிற கேள்விகளுக்குப் பனிப்பூக்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?

vanakkam@panippookkal.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டால் உங்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும். தொலைபேசி எண்ணைப் பகிர்ந்தால் உங்களை தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளவும் நாங்கள் காத்திருக்கிறோம்.

 

ad banner
Bottom Sml Ad