\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சமையல்.. சமையல்.. சமையல்..

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்து அந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. உலகிலேயே சமையற்கட்டில் அதிக நேரம் செலவிடும் நாடு – இந்தியா, என்று ஆய்வு முடிவில் வந்திருந்தது. இதற்கு எதற்கு ஆய்வு, நமக்குத் தான் தெரியுமே!! என்கிறீர்களா? உண்மை தான். மற்ற நாடுகளுடான ஒப்பீடு, நமக்குப் பயனளிக்கும் தகவல்கள் தரும் வகையில் அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தன.

நமக்குத் தெரிந்த விஷயமான, உலகிலேயே அதிகம் சமையலில் செலவிடும் நாடான இந்தியாவில், ஒருநாளுக்கு இரண்டு மணி நேரம் சமையற்கட்டில் செலவிடுவதாகக் கூறியிருந்தார்கள். சரியாக ஆய்வு செய்தார்களா, தெரியவில்லை. காலை, மதியம், மாலை, இரவு என்று குறைந்தபட்சம் நான்கு மணி நேரங்களாவது செலவிடுவார்கள் என்பது என் கணிப்பு. எல்லாப்பக்கமும் எடுத்த ஆய்வின் சராசரியாக அந்த இரண்டு மணி நேரம் என்பது வந்திருக்கலாம்.

வீட்டுச் சமையலில் இந்தியாவிற்கு எதிர்பக்கம் இருப்பது, தென் கொரியா. அங்கு ஒரு வாரத்திற்கே நான்கு மணி நேரத்திற்குக் குறைவாகவே, வீட்டுச் சமையலில் ஈடுபடுகிறார்கள். இதற்குக் காரணம், நிறைய எண்ணிக்கையில் இருக்கும் உணவகங்களும், அங்குக் குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளும் ஆகும். தவிர, குடும்பமாக வெளியே சென்று சாப்பிடும் பழக்கமும், அங்கு ஒரு உணவு பதார்த்தத்தைப் பங்கிட்டு சாப்பிடும் பழக்கமும் ஆகும். நீங்கள் தென் கொரிய உணவகங்களுக்குச் சென்றிருந்தால் (தென் கொரியா பக்கம் போக முடியாவிட்டாலும் பரவாயில்லை. யூ-ட்யூப், நெட்ப்ளிக்ஸ் பக்கம் போய்ப் பாருங்கள்) கவனித்து இருக்கலாம். சாப்பிடும் மேசையில் ஒரு அடுப்பை வைப்பார்கள். அதில் பெரிய பாத்திரத்தை வைத்து, சமையல் பொருட்களைப் போட்டுப் பாதிச் சமையலை அங்கே முடிப்பார்கள். தனித்தனி தட்டுக் கலாச்சாரம் கிடையாது. நெடுநேரம் உட்கார்ந்து, சமைத்து, பேசி, சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள்.

இப்போது, திரும்ப இந்தியாவிற்கு வருவோம். ஏன் இந்தியர்கள், குறிப்பாக இந்தியப் பெண்கள் அடுப்படியில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள்? ஆண்களின் கடமை வெளியே சென்று சம்பாதிப்பது என்றும், பெண்களின் கடமை வீட்டில் இருந்து வீட்டைப் பார்த்துக் கொள்வது என்றும், வழிவழியாகத் தொடர்ந்த பிற்போக்கு கருத்தின் விளைவு இது. வீட்டைப் பார்த்துக்கொள்வது என்பதில் பெரும்பங்கை எடுத்துக் கொள்வது சமையல் தான். இன்று பெரும்பாலான பெண்கள் வெளியே வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார்கள். ஆனாலும், வீட்டைப் பார்த்துக் கொள்ளும் கடமையும், அவர்களிடத்தே இருக்கிறது. முடிந்தவரை, அதைப் பங்கிட்டுக்கொள்ளாமல், எடுத்துக்கொள்ளாமல் தள்ளியே நிற்கிறது சமூகம். இப்படி கண்டுக்கொள்ளாமல், கவனிக்காதது போல இருப்பதும் ஒருவகை வன்முறையே.

முப்பது வருடங்களுக்கு முன்பு, எனக்குத் தெரிந்தவரை, குடும்பங்கள் இவ்வளவு சமைத்ததில்லை. மதியம் சோறு, குழம்பு வைப்பார்கள், அதை இரவும் சாப்பிடுவார்கள், மீதமானதை தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அடுத்த நாள் காலை அதை உண்பார்கள். கால ஓட்டத்தில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டும் சாப்பிடப்பட்டுக்கொண்டிருந்த இட்லி, தோசை போன்றவை, தினசரி சிற்றுண்டியாக ஆனது. வடக்கிந்திய உணவு பதார்த்தங்களான பூரி, சப்பாத்தி போன்றவை, தமிழகச் சமையற்கட்டில் நுழைந்தன. பிறகு, உலகமயமாக்கத்தின் விளைவாக, ரொட்டி, சீரியல், ஓட்ஸ் போன்றவற்றிற்கு அறிமுகம் ஆனார்கள். இன்னொரு பக்கம், வீட்டிலேயே பீட்ஸா, பர்கர், பாஸ்தா மற்றும் இன்னபிற உலகளாவிய உணவுகளைச் செய்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டனர். ஆக, சமையலறையில் நேரம் குறைந்தாற்போல இல்லை.

இன்னமும் வீடு கட்டும் போது, இந்தியப் பெண்களிடம் கருத்து கேட்டால், எனக்குப் பெரிய கிச்சன் வேண்டும் என்பதைத் தான் முதலில் சொல்கிறார்கள். அங்குத் தான் அதிக நேரம் செலவிடுவோம், எனவே அதுவே முக்கியம் என்பார்கள். அடுத்தபடியாக, அவர்களது திட்டமிடுவதில் இருப்பது, பூஜையறை!!. சென்ற ஆண்டு, மலையாளத்தில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்றொரு படம் வெளிவந்து, இந்தப் பிரச்சினையைப் பேசியிருந்தது. சமையலறையிலேயே உழழும் நாயகி மூலம் இப்பிரச்சினையை முகத்திலறைந்தாற் போல் காட்டியிருந்தார்கள். படம் பார்க்கும் போது இருந்த சங்கடம், படம் முடிந்த பிறகு, சாப்பிடும் போது மறைந்து போனது.

வெளியே சென்று சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்றொரு கருத்தாக்கமும், இந்த நெடுநேர வீட்டு சமையல் முறைக்கு வலு சேர்க்கிறது. அதே சமயம், இந்த நெடுநேர வீட்டு முறை சமையல் இந்தியர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலமான (69.4), உலகச் சராசரிக்கு (72.81) கீழே இருக்கிறது. வீட்டுச் சமையலில் இந்தியாவிற்கு எதிர்பக்கம் இருக்கும் தென் கொரியாவில் சராசரி ஆயுட்காலம் 83.23 ஆக இருக்கிறது. நீண்ட ஆயுள் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் தென் கொரியா முன்னணி பட்டியலில் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், இதய நோய் பாதிப்பு கொண்டோர், உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை கொண்டோர் பட்டியல்களில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. ஆக, இவ்வளவு நேரம் சமையல்கட்டில் செலவிட்டாலும், இதனால் ஆரோக்கியம் மேம்பட்டுவிடவில்லை. அதற்காக வெளியே சென்று சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் மேம்பட்டுவிடும் என்று சொல்ல வரவில்லை. வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கும், ஆரோக்கியத்திற்கும் நேரடி சம்பந்தம் இல்லை. சமைத்தோ, வெளியே வாங்கியோ என்ன சாப்பிடுகிறோம் என்பதில் தான் ஆரோக்கியத்திற்குச் சம்பந்தம் இருக்கிறது.

சமைப்பதில் நேரத்தைக் குறைத்துவிட்டு, ஒன்றாக அமர்ந்து உண்பதில் நேரத்தை அதிகப்படுத்த வேண்டி இருக்கிறது. சுவை வேண்டி வேளாவேளைக்குச் சமைப்பதை நிறுத்திவிட்டு, ஒருவேளை சமைத்ததை மற்ற வேளைக்குச் சாப்பிட்டாலும், ஆரோக்கியத்தை முன்னிறுத்த வேண்டும். முக்கியமாக, சமையலறையில் பாலின வேறுபாடு அகற்றப்பட வேண்டும். சென்ற தலைமுறையை ஒப்பிடும்போது, ஆண்கள் சமையலில் தற்சமயம் அதிகம் ஈடுபடுகிறார்கள். ஆனாலும், இதில் பாலினக் கடமை கணக்குகளைக் களைந்து, நாம் செல்லும் தூரம் நிறையவே உள்ளது. செல்வோம்.

தரவுகள்

https://www.gfk.com/insights/consumers-attitudes-and-time-spent-cooking

https://ourworldindata.org/grapher/life-expectancy-at-birth-total-years

https://worldpopulationreview.com/country-rankings/diabetes-rates-by-country

https://www.webmd.com/heart-disease/news/20201209/heart-disease-is-worlds-no-1-killer

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad