\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வரிகள் குறைக்கும் வழிகள்

 அமெரிக்காவில் வருமான வரி வழக்கம் தொடங்கி நூற்றி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. முதன்முதலில் 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சமயம் அதிகபட்ச வரியாக 7% மட்டுமே இருந்தது. பின்னர், இரண்டாம் உலகப் போரின் சமயம், அதிகப்பட்ச வரி 94% வரை சென்றது. 1960களில் இருந்து 1980களில் 70% ஆகக் குறைந்த உச்சபட்ச வரி, அடுத்த சில ஆண்டுகளில் 50% என்ற நிலைக்கு வந்து, கடந்த முப்பது வருடங்களாக 30-40% என்ற எல்லைக்குள் ஏறி இறங்கி கொண்டு இருக்கிறது. தற்சமயம் (2022) அதிக பட்ச வரி விகிதம் என்பது 37% ஆக இருக்கிறது.

 அமெரிக்காவில் தனி நபர் வருமானத்திற்குப் பலவகை வரிகள் விதிக்கப்படுகின்றன. மத்திய அரசின் வரி (Federal tax), மாநில அரசின் வரி (state tax), சமூகப் பாதுகாப்பு வரி (social security tax), மருத்துவப் பாதுகாப்பு வரி (medicare tax) என ஆரம்பித்து, வருமானத்திற்கேற்ப நீண்டு செல்கின்றன. மத்திய அரசின் செலவீனங்கள், மாநில அரசின் செலவீனங்கள், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களின் சமூக மற்றும் மருத்துவ நலன்கள் ஆகியவை, இந்த வரிகளின் மூலமே கவனித்துக் கொள்ளப்படுகின்றன.

 ஊர் கூடி தேர் இழுப்பது என்பதற்கேற்ப ஒரு நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்குக் குடிமக்களின் பங்களிப்பாக வரிகள் இருந்து வருகின்றன. மொத்த வருமானத்தில் (Gross Income) இருந்து சில வகை முதலீடுகள் (Contribution) கழிக்கப்பட்டு, மீதமுள்ள வருமானத்திற்கு (Taxable Income) வரிகள் விதிக்கப்படுகின்றன. வருமான அளவிற்கு ஏற்ப, வரி விகிதங்கள் மாறுபடும். உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தின் வருமானத்தில் முதல் $19,900க்கு 10%, அடுத்த $19,000 முதல் $81,050 வரை 12% என்று வரி விதிக்கப்படுகிறது. உச்சபட்சமாக, $628,300க்கு மேல் 37% வரி விதிக்கப்படுகிறது. மொத்த வரி கட்டுபவர்களில் 0.5% சதவித மக்கள் மட்டுமே இந்த அதிகபட்ச வரி கட்டத்திற்குள் வருகிறார்கள். பொது மக்களில் பெரும்பாலோர் இந்த 12% வரி கட்டத்திற்குள் தான் வருகிறார்கள்.

 சராசரியாகச் சம்பாதிக்கும் மத்திய வர்க்கத்தினர் கட்டும் இந்தளவு வரி விகிதத்தைக் கூடப் பெரு நிறுவனங்களும், பெரும் பணக்காரர்களும் கட்டுவதில்லை என்கிறார்கள். இதற்காகச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, அதற்கான வழிமுறைகளைக் கையாண்டு கட்ட வேண்டிய வரியைக் குறைத்துக் கட்டுகிறார்கள். அல்லது, கட்டாமல் தவிர்க்கிறார்கள்.

 சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட முறையில், சில முதலீடுகள் மூலம் தனி நபர்களும் தங்களுடைய வரியைக் குறைக்க முடியும். இது குறித்துப் பார்ப்பதற்கு, ஆண்டுக்கு $100,000 சம்பாதிக்கும் ஒரு குடும்பத்தை நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். மொத்த வருமானத்தில், வரி விதிப்பிற்கு முன்பு, சில வகை முதலீடுகளைக் கழிக்க முடியும். அதில் முக்கியமானவை, ஓய்வு காலத்திற்கான சேமிப்புத் திட்டங்கள்.

 ஓய்வு காலத்திற்காக 401K மற்றும் IRA போன்ற ஓய்வூதியத் திட்டங்களில் இணைந்து மாதந்தோறும் நமது வருமானத்தில் இருந்து

பணம் செலுத்தி, சேமிக்கலாம். இந்தத் திட்டம் குறித்த தகவல்களை இந்தக் கட்டுரை இணைப்பில் வாசிக்கலாம். ஓய்வூதியத் திட்டங்களில் சேமிக்கப்படும் பணத்திற்கு, அதற்குரிய உச்ச வரம்புக்குட்பட்டு, வரி விலக்கு உண்டு. வரிவிலக்குப் பெற, 401K கணக்கில் அதிக பட்சமாக ஒரு ஆண்டுக்கு $19,500 வரை சேமிக்கலாம். அந்தச் சேமிப்பு நிதி உங்களின் மொத்த வருமானத்தில் இருந்து கழிக்கப்பட்டு, அதன் பிறகே மீதமுள்ள தொகைக்கு வரி விதிக்கப்படும். நமது உதாரணத்தில், $100,000 வருமானத்தில் $19,000 கழிக்கப்பட்டு வரி கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்படும். IRA திட்டமென்றால் $6,000 வரை கழித்துக் கொள்ளலாம். 50 வயதுக்கு மேற்பட்டோர் என்றால், இன்னும் அதிகமாக முதலீடு செய்து, சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

 அடுத்து, நமது பிள்ளைகளுக்கான கல்லூரிச் சேமிப்புத் திட்டமான 529 கணக்கில் சேர்க்கப்படும் பணத்தின் மூலம் மாநில வரியைக் குறைக்க முடியும். 529 சேமிப்புத் திட்டம் பற்றி இந்தக் கட்டுரை இணைப்பில் வாசிக்கலாம். 529 திட்டத்தில் சேமித்தால், மினசோட்டா மாநில வரியைக் கணக்கிடும்போது, அதிகபட்சம் $3,000 டாலர்கள் வரை கழிக்க முடியும். அல்லது, அதிகபட்சமாக $500 வரை வரவு கிடைக்கும். 529 திட்டம் மூலம் மத்திய அரசின் வரியில் எந்தச் சலுகையும் கிடைக்காது.

 அடுத்ததாக, மருத்துவத் தேவைகளுக்காகச் சேமிக்க உதவும் Flexible Savings Account (FSA) மற்றும் Health Savings Account (HSA) ஆகிய கணக்குகளில் சேமிக்கப்படும் தொகை மூலம் மத்திய அரசின் வரிவிதிப்பில் சலுகை பெறலாம். FSAஇல் அதிகபட்சமாக $2,750 வரை விலக்கம் பெறலாம். HSAஇல் அதிகபட்சமாக $7,200 வரை விலக்கம் பெறலாம்.

 இவையெல்லாம் சேமிப்புகளின் மூலம் பெறக்கூடிய வரிக் குறைப்பு அனுகூலங்கள் ஆகும். இவை தவிர, நன்கொடைகளின் மூலமும் வரிச் சலுகை பெறலாம். வரிச்சலுகைக்கு என்று நன்கொடை அளிக்கத் தேவையில்லை. நன்கொடை அளித்திருப்பின் அதை வரிச் சலுகைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரிக் கணக்கீட்டில் Standard Deduction மற்றும் Itemized Deduction என்று வழிமுறைகள் உள்ளன. நமது செலவீனங்களைப் பொறுத்து இதில் ஏதேனும் ஒரு வழிமுறையை நாம் தேர்ந்தெடுக்கலாம். Itemized Deduction முறையில் வரிக் கணக்குப் பார்த்தால், இன்ன பிற தன்னார்வலச் செலவுகளைக் குறிப்பிடலாம். சொத்து வரி, வீட்டுக் கடன் வட்டி (இந்தியா போன்ற பிற நாடுகளில் வீடு இருந்தாலும்), மருத்துவச் செலவுகள் போன்றவற்றையும் இதில் குறிப்பிடலாம். அந்தளவு சில்லறை செலவுகளைப் பட்டியலிடத் தேவையில்லை அல்லது விருப்பமில்லை எனில், எளிமையாக Standard Deduction முறை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் $25,900 வரை விலக்கம் பெற முடியும்.

 இவை தவிர, பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்புகளை, வரிக் குறைப்பிற்குப் பயன்படுத்த முடியும். அதற்காக எல்லாம் பங்குச் சந்தையில் சென்று இழக்க முடியாது அல்லவா!!. இது போல, உப தொழில் இருந்தால் அதில் ஏற்படும் செலவுகளை, வரிக் கணக்கில் காட்டி, சலுகை பெற முடியும். இவற்றை எல்லாம், ஒவ்வொருவர் நிலைமைக்கேற்ப கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது சம்பந்தமான மேலும் விபரங்களுக்கு, வருமான வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும். வருமானம் குறைவாக இருந்தால் வரி குறைவாக இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடையவும். வரி அதிகம் கட்ட வேண்டி இருந்தால், வருமானம் அதிகம் வருகிறது என்று மகிழ்ச்சி அடையவும்.

 மேலும் விபரங்களுக்கு,

https://www.panippookkal.com/ithazh/archives/20472

https://www.panippookkal.com/ithazh/archives/21767

https://www.investopedia.com/articles/tax/10/history-taxes.asp

https://www.investopedia.com/terms/f/federal_income_tax.asp

  • சரவணகுமரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad