\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

டெலிப்ராம்ப்டர்

டெலிப்ராம்ப்டர் என்று தற்போது நாம் குறிப்பிடும் சாதனம், அந்தச் சாதனத்தை உருவாக்கிய நிறுவனத்தின் (TelePrompTer Corporation) பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்படிப் பிரதி எடுக்கும் சாதனத்தின் (Photo copier) பெயராக, அதை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் (Xerox) உருவெடுத்ததோ, எப்படி இணையத்தில் தேடும் செயலை (Search), ஒரு தேடுபொறியின் (Google) பெயர் கொண்டு குறிப்பிடுகிறோமோ, அது போல, இங்கும் அந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமானது. தவிர, அச்சாதனத்திற்கு அப்பெயர் பொருத்தமாகவும் அமைந்தது.

நாடகத்தில், திரைப்படத்தில் நடிப்பவர்கள் எல்லோராலும் வசனங்களை மனப்பாடம் செய்து ஒரே மூச்சில் பேசுவது இயலாது. சிலருக்கு சில வகை உதவிகள் தேவைப்படும். உதாரணத்திற்கு, நாடகங்களில் சில சமயங்களில் பக்கத்தில் நடிப்பவர் எடுத்துக் கொடுப்பார். சில இடங்களில் மேடையில் ஓரத்தில் மறைந்தபடி பேப்பரில் எழுதி காட்டுவார்கள். திரைப்படங்களின் படமாக்கத்தின் போது கேமராவில் படாதபடி, வசனங்களை ஒரு காகிதத்தில் எழுதி ஒருவர் காட்ட, நடிப்பவர் அதைப் பார்த்து அதில் எழுதியிருப்பதைப் பேசி, நடிப்பார். பிரபல ஹாலிவுட் நடிகரான மார்லன் ப்ரண்டோ இப்படிப்பட்ட வசன அட்டைகளைப் (Cue Card) பயன்படுத்துவார் என்று சொல்வதுண்டு. சிவாஜியை மார்லன் ப்ராண்டோவுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால், சிவாஜிக்கு எப்போதும் இது போன்ற உதவிகள் தேவைப்பட்டதில்லை.

முதல் டெலிப்ராம்ப்டர் 1950 ஆம் ஆண்டு ஷ்லாஃப்லே (Schlafly) என்னும் மின்னியல் பொறியாளரால் உருவாக்கப்பட்டது. அவருக்கு அதற்கான தேவையைச் சொன்னது, அச்சமயம் நடிகராக இருந்த ஃப்ரெட் பார்ட்டன் (Fred Barton) அவர்கள். நீளமான வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பதில் இருக்கும் சிரமத்தை அறிந்திருந்தார் அவர். ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அங்கு இந்தச் சாதனத்தை உற்பத்தி செய்து, அதை வணிகம் செய்வதற்கு முதலீடு செய்ய முன்வந்தார் இர்விங் பெர்லின் (Irving Berlin). இவர்கள் மூவரும் அச்சமயம் ஃபாக்ஸ் ரேடியோவில் ஒன்றாகப் பணிபுரிந்து வந்தனர். மூவரும் இணைந்து TelePrompTer நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

ஆரம்பக் கட்டத்தில் மெக்கானிக்கல் முறையில் செயல்படும் கருவியாக இது இருந்தது. அதாவது, ஒரு தாளில் பெரிய எழுத்துகளாக அச்சிடப்பட்டு, அத்தாள் இரு உருளைகளுக்கு மத்தியில் நகர்ந்து செல்லும் வகையில் அந்தக் கருவி உருவாக்கப்பட்டிருந்தது. அக்கருவியை இயக்க ஒருவர் தேவைப்பட்டார். பின்னர், தொழில் நுட்பம் வளர, வளர வெவ்வேறு வகை டெலிப்ராம்ப்டர் சாதனங்கள் உருவாக்கப்பட்டன. தற்சமயம் மூன்று வகையான டெலிப்ராம்ப்டர்கள் பெருமளவில் பயன்பட்டு வருகின்றன.

முதல் வகையானது, ஸ்டூடியோக்களில் பயன்படுத்தப்படுவது. இவ்வகை டெலிப்ராம்ப்டர், பேசுபவருக்கு எதிரே இருக்கும் கேமராவின் முன் இணைக்கப்பட்டிருக்கும். கேமரா லென்ஸின் முன் சாய்ந்த கோணத்தில் ஒரு கண்ணாடி இருக்கும். அந்தக் கண்ணாடியின் கீழ்பக்கம் இருக்கும் கருவியில் வாசிக்கப்பட வேண்டிய வாக்கியங்கள் தேவைப்படும் வேகத்தில் ஓடும். அந்த வாக்கியங்கள் சாய்ந்த நிலையில் இருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும். அந்த எழுத்துகள் கேமராவிற்கு எதிர்புறம் இருக்கும் பேசுபவருக்குத் தெரியும். ஆனால், கேமரா பக்கம் தெரியாது. அப்படி ஒரு விசேஷமான கண்ணாடி அது. அதனால், பேச்சாளர் கேமராவைப் பார்த்தபடி, அதற்கு முன்னால் ஒளிரும் எழுத்துகளைப் பார்த்து பேச, கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோவைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு, அவர் பார்த்து வாசித்த ரகசியம் தெரியாது. இவ்வகை டெலிப்ராம்ப்டர்களைச் செய்திகள், கலந்துரையாடல், பிற அறிவிப்புகள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவார்கள். தற்சமயம் யூ-ட்யூப் சானல்களில் கூடப் பயன்படுத்துகிறார்கள். அரசியல் தலைவர்கள் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதும் இதைப் பயன்படுத்துவார்கள்.

50 டாலர்களுக்குக் கிடைக்கும் கண்ணாடி கொண்டு, நம்மிடம் இருக்கும் டேப்லட்டைக் கொண்டு நாமே இது போன்ற டெலிப்ராம்ப்டர்களை உருவாக்கிக் கொள்ள முடியும். பேச வேண்டிய உரையைத் திரையில் ஓடவிடக் கூடிய செயலிகள், இணைய தளங்கள் நிறைய வந்து விட்டன.

அடுத்த வகையானது, உலகத் தலைவர்கள் தற்சமயம் மேடைகளில் பயன்படுத்தும் பிரசிடென்ஷியல் டெலிப்ராம்ப்டர் வகை. தலைவர்கள் மேடையில் பேசும்போது, அவருக்கு இரு பக்கத்திலும் ஒரு மெல்லிய ஸ்டாண்டில் மெல்லிய கண்ணாடிகள் சற்றுச் சாய்ந்த நிலையில் இருப்பதைக் கவனித்து இருப்பீர்கள். அதற்குக் கீழே பார்வையாளர்களுக்குத் தெரியாதவாறு ஒரு திரைச் சாதனம் இருக்கும். அதில் பேச வேண்டிய உரை ஓடும். அந்த உரை மேலே இருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும். அதை இரு பக்கங்களில் பார்த்தவாறு பேச்சாளர் பேச முடியும். மறுபக்கம் மக்களுக்கு அந்தக் கண்ணாடிகளில் இருக்கும் எழுத்துகள் தெரியாது. கண்ணாடி என்பதால், பேச்சாளரையும் முழுமையாக மறைக்காது. இருந்தாலும், கொஞ்சம் குறுக்கீடாகத் தான் இருக்கும். இவ்வகை டெலிப்ராம்ப்டர்களை உருவாக்கியதும் ஷ்லாஃப்லே தான். இவை 1956இல் இருந்து புழக்கத்தில் உள்ளன.

மூன்றாவது வகை, மானிட்டர் என்று சொல்லப்படும் பெரிய திரை வடிவிலானது. இது பேச்சாளருக்கு முன்பு பார்வையாளர்கள் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். பேச்சாளருக்கு எதிரே இருப்பதால், அவர் அதைப் பார்த்துப் பேசுவார். மக்களுக்கும் அது தெரியும் நிலையில் தான் இருக்கும். பேச்சாளருக்குப் பின்பக்கம் திரை அமைத்து அதில் ப்ரசண்டேஷன் இருக்கிறது என்றால், அதே காட்சி இந்த மானிட்டர் திரைகளிலும் வரும். பேச்சாளர் பின்னால் திரும்பி திரையைப் பார்க்க வேண்டியதில்லை. முன்னால் இருக்கும் திரையில் அதே காட்சியைக் கண்டு பேசலாம். மக்களையும் அப்போது பார்த்ததுபோல் இருக்கும்.

தமிழில் டெலிப்ராம்ப்டரைத் தொலை உரைகாட்டி எனக் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. நாம் மேலே குறிப்பிட்டதில் மூன்றாவது வகைதான் பேச்சாளருக்குச் சிறிது தொலைவில் இருக்கும். மற்ற வகைகள், பேசுபவருக்குப் பக்கத்தில்தான் இருக்கும். அது வெளிப்படுத்தும் உரையின் மூலமும், அதற்குப் பக்கத்தில் தான் இருக்கும். அதனால், இப்பெயர் அதன் செயல்பாட்டிற்குப் பொருத்தமில்லாமல் இருப்பதால், வேறொரு பெயரைச் சூட்டலாம்.

இப்படி வகைவகையாகக் கிடைக்கும் டெலிப்ராம்ப்டர்கள் எல்லாம், பேச்சாளரின் வசதிக்கேற்ப உருவாக்கப்பட்டவை. வசதி என்றால் சௌகரியம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். பொருளாதார நிலை என்றும் எடுத்துக் கொள்ளலாம். எழுதி வைக்காமல் அப்படியே சரளமாக, மணிக் கணக்கில் பேசும் தலைவர்கள் இருக்கிறார்கள். சொல்ல வரும் கருத்தை எழுதி வைத்து வாசிக்கும் தலைவர்களும் இருக்கிறார்கள். இந்த வழிமுறை சரி, இன்னொன்று தவறு என்று சொல்லுவதற்கில்லை. சொல்ல வரும் செய்திசரியாகச் சொல்லப்படுகிறதா, சரியாகச் சென்றடைகிறதா என்பது தான் முக்கியம். அதற்கு எந்த வழியைப் பயன்படுத்தினாலும் சரிதான். அதே சமயம், இது போன்ற தொழில் நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி, பின்பு அதற்கு முழுமையாகப் பழகி, முற்றிலும் அதனையே சார்ந்திருக்கும் நிலைக்குச் சென்றுவிடக் கூடாது.

பரீட்சைக்குப் படித்துவிட்டு சென்றால், எப்படியாவது யோசித்து எழுதிவிடலாம். படிக்காமல் பிட் பேப்பர் இருக்கிறது, அதை வைத்துச் சமாளித்துவிடலாம் என்று சென்றால், மனம் பிட்டைத்தான் தேடும். எவ்வளவு யோசித்தாலும் எதுவும் தோன்றாது. தலைவர்களும் டெலிப்ராம்ப்டர் இருக்கிறதே என்று பேச்சைத் தயார் செய்யாமல், முன்பே படித்துப் பார்ப்பதற்கு நேரத்தை ஒதுக்காமல் நேரடியாக மேடை ஏறும் பழக்கத்திற்குச் சென்றுவிடக் கூடாது.

இன்றைய காலத்தில், டெலிப்ராம்டர் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் பெருகியுள்ள நிலையில், தலைவர்கள் டெலிப்ராம்ப்டர்கள் பயன்படுத்துவது குறித்து நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். இன்னும் வரும் காலத்தில் இது குறித்து மேலும் நன்றாகத் தெரிந்து கொள்வார்கள். செய்தி வாசிப்பாளர்கள் டெலிப்ராம்ப்டர் பார்த்துச் செய்தி வாசிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. காட்சியூடாக அனுபவத்திற்கு நன்றாக இருப்பதால், மக்கள் ரசிப்பார்கள். அதே சமயம், ஒரு தலைவரிடம் நல்ல பேச்சாற்றல் இருந்தாலும், முன்னே டெலிப்ராம்ப்டர் இருந்தால், அதைப் பார்த்துத்தான் பேசுகிறார் என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள். அதற்குப் பதில், அவற்றை ஒதுக்கிவிட்டு, தேவைக்கு ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்து, தேவைப்படும் நேரம் அதைப் பார்த்துப் பேசினாலும் ஒன்றும் குறையப் போவதில்லை. அதுதான் மனதில் இருந்து பேசுவதாக இருக்கும். இல்லாவிட்டால், அந்தப் பேச்சை டெலிப்ராம்ப்டரில் இருந்து பேசுவது என்று எடுத்துக் கொள்ள நிலைக்கு ஆளாக நேரிடும்.

  • சரவணகுமரன்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad