\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பதியம் போட்ட உறவுகள்

Filed in கதை, வார வெளியீடு by on June 19, 2022 0 Comments

(பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)

“கிராமத்தில் தனியா இருக்கிற அம்மாவை, இங்கே வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போகச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்…..” தயங்கியபடி யோசனையைச் சொல்லிவிட்டு, மனைவி சுகுனாவின் பதிலுக்காக காத்திருந்தேன்.

அம்மா உள்பட, கிராமத்து உறவினர்கள் எவரையும், குடும்பத்துக்குள் சேர்த்தால், ஒத்து வராது என்ற கருத்தில், கல்யாணம் ஆனதிலிருந்தே பிடிவாதமாக நின்றாள் அவள்.

சிறு வயதில் அம்மாவை இழந்து, அப்பாவின் ஒரே செல்லப் பெண்ணாக வளர்ந்து, நவீன வாழ்க்கை முறைக்கு, தன்னை பழக்கப்படுத்திக் கொண்டவள் என்பதால், கிராமத்து வாசிகளின் மீது, அவளுக்கு மதிப்பு குறைவுதான்.  உறவுகள் என்பது ஒட்டுண்ணிகள் என்ற தன் எண்ணத்தை சில முறை என்னிடம் பகிர்ந்திருக்கிறாள்.

“நம்மை மாதிரி, கூர்மையான அறிவும், சமயோசித புத்தியும், அவங்களிடம் கிடையாது. எதை எப்ப எங்க பேசணும்னு தெரியாதவங்க. சுத்தம், சுகாதாரம்னா என்னன்னு சுட்டுப் போட்டாக் கூட வராது. பழைய காலத்து சமையலைத் தவிர, வேறொன்றும் தெரியாது. ஒரு முறை இடம் கொடுத்தா, நம்மை முழுவதும் ஆக்கிரமிச்சுடுவாங்க.  அவர்களுடன், சேர்ந்தால், நம்ம வாழ்க்கையும் நரகமாயிடும்,,” என்பது அவளுடைய வாதம். 

என்னைப் பொறுத்தவரை, கிராமமும், சுற்றியிருந்த மாமா, அத்தை, சிற்றப்பா, பெரியப்பா போன்ற உறவு முறைகளும்தான் என் வாழ்க்கையின் அடித்தளம்.  பள்ளிப் படிப்பு, கிராமத்துக்கு அருகில் இருந்த அரசு பள்ளியில்தான்.

ஹாஸ்டலில் தங்கி, அரசு பொறியியல் கல்லூரியில் படிப்பு முடிக்கும் வரை ஆனச் செலவுகளுக்கு, அம்மாவின் நகைகள் உதவின. அதற்குப் பிறகு, கேம்பஸ்ஸில் செலக்ட் ஆகி, பெரிய ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 

என்னுடன் பணி புரிந்த சுகுனாவுடன், காதல் கல்யாணத்திற்குப் பிறகு, ஈ.சி.ஆரில், நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஃப்ளாட் வாங்கிக் குடியேறி, ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. கல்யாணத்திற்குப் பிறகு, அம்மாவை நேரில் சென்று பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட, மனைவியின் சம்மதம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் வாழும் வசதியான வாழ்க்கையை அம்மா, ஒரு முறையாவது கண்குளிரப் பார்த்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அந்த யோசனை பிறந்தது. 

“அவுங்க, அவுங்க இருக்கிற இடத்திலேயே இருந்தாத்தான் நல்லது..அப்புறம் உங்க இஷ்டம்..” சிறிது நேரம் கழித்து, வந்த பதில், அவளுக்கு, அதில் இஷ்டமில்லை என்பதை உணர்த்தியது.

“இன்னைக்கு மார்ச் 20. நாளைக்கு புறப்பட்டு வந்தாங்கன்னா, ஒரு வாரத்தில், திருப்பி அனுப்பிச்சுடலாம்..” முயற்சியைத் தளரவிடாமல், பேசினேன்.

“இதுவே, முதலும் கடைசியுமா இருக்கட்டும்..’ ஒரு வாரம் என்றதும்,அரை மனதுடன் ஒப்புதல் அளித்தாள்.

மார்ச் 21 அன்று, அம்மாவை என் வீட்டுக்குள் அழைத்து வந்த சந்தோஷத்தில் மிதந்தேன். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை.

“அக்கம் பக்கத்தில் பேசக் கூடாது. துணிமணிகளை நம்முடையதோடு கலக்கக் கூடாது. நண்பர்கள் வந்தா, ஹால் பக்கம் வரக்கூடாது…அனுமதியில்லாமல், கிச்சன் கதவைத் திறக்கக் கூடாது என்று, அம்மா சம்பந்தமான பத்து கட்டளைகள், பிறப்பிக்கப்பட்டன.

இந்த மாறுபட்ட சூழ்நிலையை, அம்மா நல்லவிதமாக கடந்து, ஊர் திரும்ப வேண்டும் என்று மானசீகமாக வேண்டிக் கொண்டேன்.

நான்கு நாட்கள், அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை விட்டு, அம்மா வெளியே வரவில்லை. நான்காவது நாள், அவசர வேலை இருந்ததால். சுகுனா, முன்கூட்டியே அலுவலகம் கிளம்பி சென்று விட்டாள்.. அந்த இடைவெளியில், அம்மாவிடம் சிறிது நேரம், மனம் விட்டு பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பேச்சு பரிமாற்றத்தில், எனக்கு அமைந்த வாழ்க்கையைப் பற்றிய அவளுடைய சந்தோஷத்தை உணர முடிந்தது. மற்றபடி, நவீன அடுக்குமாடி வீடுகள், சுற்றிலும் நாகரீக உடையில் நகரத்து வாசிகள், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பலவிதமான கார்கள் ஆகிய எதுவும் அவளை வியப்பில் ஆழ்த்தியதாக எனக்குத் தோன்றவில்லை.

“கடவுள் நமக்கு என்ன கொடுத்திருக்காரோ அதைப் பற்றிதான் நினைக்க வேண்டும். மற்றவர்களுக்கு கொடுத்திருப்பதைப் பற்றி யோசிப்பது, கடவுளைக் கேள்வி கேட்பது போல..”என்று சிறு வயதில் அவள் அடிக்கடி எனக்கு அறிவுரை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

பசு மரத்தாணி போல், மனதில் பதியும்படியாக பல எளிய அறிவுரைகளை மகனுக்கு சொல்லி கொடுத்த அம்மாவாக அவளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், மருமகள் என்ற உறவைப் பற்றிய, அவளுடைய கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

“சுகுனா உன்னிடம் அதிகம் பேசாததைப் பெரிசா எடுத்துக்காதே..” என்றேன்.

“என் மருமகள பற்றி இப்படி சொல்றதுக்கு உனக்கு எப்படி மனசு வந்துச்சு..வேலைக்குப் போறவளுக்கு என்னோட பேசறதுக்கு எங்க நேரம் கிடைக்கப் போவுது. சின்னப் புள்ளையைப் பத்தி குறை சொல்லிக்கிட்டு..” என்று என் வாயை அடக்கினாள்.

“ஊருக்கு கிளம்பறதுக்குள்ளாற, எனக்கு ஒரே ஒரு ஆசை..”என்றவளை வியப்போடு பார்த்தேன்.

“உங்க ரெண்டு பேருக்கும். வாய்க்கு ருசியா, ஒரு நாளாவது சமைச்சு போடணும்..!”

அம்மாவின் கைமணம் பற்றி எனக்குத் தெரியும். சமையலறையில் நேரம் செலவிடுவது கிரிமினல் வேஸ்ட் என்பது சுகுனாவின் கொள்கை. எனவே வீட்டில், எப்பொழுதும் வெளி உணவுதான். அதைப் பற்றி அம்மாவிடம் விரிவாகச் சொல்லாமல், ‘உனக்கு அந்த சிரமமெல்லாம் வேண்டாம். ஒரு போன் பண்ணால் போதும்.வெளியிலிருந்து, விதம் விதமா சாப்பாடு வரவழைக்கலாம். நாலு நாளா, அதைத்தானே நீயும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கே. பிடிச்சுருக்கும்னு நினைக்கிறேன்..” என்றேன்.

என் பதிலில், அம்மா திருப்தி அடைந்தது போல் தெரியவில்லை. ஆனால், அதை வெளிக்காட்டாமல், ‘உங்க ரெண்டு பேருக்கும் எது பிடிச்சுருக்கோ அதுதான் எனக்கும் பிடிக்கும்..’ என்று சொல்லி, அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

மறு நாளிலிருந்து அமலுக்கு வந்த முழு ஊரடங்கால், நாங்கள் அலுவலகம் செல்ல முடியாமல், வீட்டில் முடங்கினோம். நண்பர்களுடன் அரட்டை, சினிமா, பார்ட்டி, பிக்னிக் என்பதுதான் வாழ்க்கையின் சந்தோஷ அத்தியாயங்கள் என்று நினைத்திருந்த எங்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. வழக்கமாக, அலுவலக கேண்டீனில்தான், தினமும் காலை சிற்றுண்டி என்பதால், வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப் படவில்லை என்பதை விட, அதை எப்படி செய்வது என்பது தெரியாது என்பதுதான் உண்மை நிலவரம்.

சுகுனாவுக்குப் பசி தலைவலி வந்து விடும் என்பது எனக்குத் தெரியும். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததால், பன்னிரெண்டு மணிக்கே, பசியின் தாக்கம் அவள் முகத்தில் படர ஆரம்பித்ததைக் கவனித்தேன்.

“வெளியில் எங்கும், நமக்குத் தேவையான லஞ்ச் கிடைக்க வாய்ப்பில்லை. அம்மாவைச் சமைக்க சொல்லட்டுமா..?” வழக்கமான தயக்கத்துடன் மனைவியிடம் கேட்டேன்,.

ஒரு கையால் தலையைப் பிடித்துக் கொண்டு, சிறிய யோசனைக்குப் பிறகு, ‘சரி’ என்று ஒரு பக்கமாக தலையை ஆட்டி, அவள் போட்ட ஒரு கட்டளையை, அவளே உடைத்தாள்.

தன் துணிகளை மடித்து பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த அம்மாவிடம், ஊரடங்கு பற்றி விவரித்து,  நிலைமை சீரான பிறகுதான், ஊருக்கு கிளம்ப முடியும் என்பதையும், சிறிது கலவரத்தோடு சொன்னேன்.

“மாரியாத்தா யாருக்காச்சும் வந்தா, அக்கம்பக்கத்தில பரவாம இருக்க, அந்த வீட்டுக்கு யாரும் போக மாட்டாங்க. அது போலத்தான் இதுவும்..சுத்தமா இருந்தா காய்ச்சல் அண்டவே அண்டாது..” என்று சர்வ சாதாரணமாக, நிலைமையை எனக்கு விளக்கியதை, ஹாலில் உட்கார்ந்திருந்த சுகுனாவும் கேட்டுக் கொண்டிருந்தாள். 

“இன்னைக்கு சாப்பாடு உன் கையால்தான்..” என்றவுடன், லாட்டரி அடித்தது போல், அவள் முகத்தில் திடீர் பிரகாசம் தெரிந்தது.    

“மருமகளுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லேன்.?.”..என்ற அவளூடைய முதல் கேள்வி, என்னை வியப்பில் ஆழ்த்தியது.

“உன் கையால எது செய்தாலும் நல்லா இருக்கும்மா..ஆனா, கையிருப்பில் இருக்கிற சாமான்களை வச்சுக்கிட்டு மட்டும்தான் இப்ப சமாளிக்கணும்..” நான் சொன்னதைப் புரிந்து கொண்டவளாக, சமையலறை பக்கம் போனாள்.

சமையல் அறையை திறந்து, பாத்திரங்கள், பல நாள்களுக்கு முன்பு வாங்கி, பயன்படுத்தாமல் ஃப்ரிஜ்ஜில் இருந்த காய்கறிகள், மளிகை சாமான்கள் ஆகியவைகள் அடையாளம் காட்டினேன். 

“வெளியில சாப்பிடுவதால், அதிகமா சாமான்கள் வாங்கி வச்சுக்கறது இல்ல. நண்பர்கள் குடும்பம் வந்தா, அவுங்க சமைப்பாங்க. அதுக்கு வாங்கி, மீந்து போன சாமான்களை வச்சுத்தான் இப்ப சமாளிச்சாகணும். ஏற்கனவே மீந்து போன சில பதார்த்தங்களும் ஃப்ரிஜ்ஜில் இருக்கு. அதைக்கூட சூடு பண்ணி உபயோகப்படுத்திக்கலாம்..”..என்றேன்.

“நான் இருக்கும்போது, பழைய பதார்த்தங்கள் வேண்டாமே..அவளோடு பேசிக்கிட்டு இரு….முக்கால் மணி நேரத்தில் சாப்பாடு ரெடி பண்ணிடறேன்’ என்று அம்மா என்னை வெளியே அனுப்பினாள்.

மிக்ஸி ஓடும் சத்தத்தைத் தொடர்ந்து, பத்து நிமிடங்களுக்கு பிறகு, சமையல் அறையிலிருந்து வந்த வாசனையை மோப்பம் பிடித்து, எட்டிப் பார்த்தேன். இரண்டு டம்பளர்களில் சுடச் சுட, தக்காளி ரசத்தையும், சுட்ட அப்பளத்தையும் ஒரு தட்டில் வைத்து என்னிடம் கொடுத்து, ‘என் மருமகளுக்கு இது பிடிக்கும்னு நினைக்கிறேன்..’என்றவள் மற்ற வேலைகளில் மும்முரமானாள்.

தன்னிடம் பேச தயங்கும் மருமகளிடம், என் மூலமாக அன்பை பொழிய நினைக்கும் மாமியாரை அந்தத் தருணத்தில் பார்க்க முடிந்தது.

சூடான டம்ப்ளரை கீழே வைக்காமல், சூப்பை மெதுவாக ரசித்துக் குடித்த சுகுனாவின் வாயிலிருந்து, ‘குட்’ என்ற வார்த்தை அவளையும் அறியாமலேயே வெளிப்பட்டது. 

சாப்பாட்டு டேபிளில், சுடச்சுட வைக்கப்பட்டிருந்த வெங்காய சாம்பாருடன், உருளைக் கிழங்கு பொறியல் மற்றும் தக்காளி ரசம் அடங்கிய மதிய உணவை சாப்பிடும்போது, சுகுனா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தலைவலி மறைந்து, அவள் முகம் தெளிவடைந்து இருந்ததைக் காண முடிந்தது. நீண்ட நாள்களுக்கு பிறகு, அந்த சுவையான உணவை ரசித்து சாப்பிடும்போது, எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.

மறுநாளிலிருந்து, ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற கட்டளை அலுவலகத்திலிருந்து வந்தது. பணிப் பட்டியல்படி, முதல் நாளே, அலுவலகத்தை விட, வேலை பளு, அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்கள் எவரும், குடியிருப்பு வளாகத்திற்குள் வரத் தடை விதித்த அசோஷியேஷன் சுற்றறிக்கையைப் பார்த்தவுடன் டென்ஷன் கூடியது. ஏனென்றால், வீட்டு வேலைகளை எதுவும் செய்து பழக்கப்படாதவள் சுகுனா. 

அதைப் பற்றி, பால்கனியிலிருந்து எதிர் ஃப்ளாட்காரரிடம் சற்று உறக்க பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பேச்சு, அம்மாவின் காதில் விழுந்திருக்க வேண்டும்.

அந்த இடைவெளியில், வீடு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. ‘உதவிக்கு நான் இருக்கிறேன்..’ என்ற அம்மாவின் மௌன பிரகடனம், சுகுனாவுக்கு மனத் தெம்பை அளித்திருக்கிறது, என்பது அவள் முகத்தில் டென்ஷன் ரேகைகள் குறைந்திருப்பதன் மூலம் தெரிந்தது. ஆனால், அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“மளிகை சாமான்களுக்கும், காய்கறிகளுக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, ஆபீஸ் வேலையில் கவனம் செலுத்துங்க..மற்ற வேலைகளை நான் பார்த்துக்கறேன்..” என்ற அம்மாவின் வார்த்தைகள், காதில் தேனாக வந்து பாய்ந்தன. .

தேவையான பொருள்களை ஆன் லைனில் ஆர்டர் செய்துவிட்டு, இருவரும் அலுவலக வேலையில் மூழ்கினோம். வேளா, வேளைக்கு, சாப்பாடும் நொறுக்குத் தீனியும் எங்கள் டேபிளுக்கு வந்து கொண்டிருந்ததில், ஊரடங்கு விஷயம் மறந்து, வேளைப் பளு, குறைந்தது போல் தோன்றியது.

கையிருப்பில் இருந்த பொருள்களுக்கு ஏற்ப, சாப்பாட்டு மெனு, விதவிதமாக மாறிக் கொண்டிருந்தது. காலை உணவுடன், முளை கட்டிய பயிரை பார்த்ததும், தன்னை மறந்து. ‘வாவ்’ என்றாள் சுகுனா. சுவையுடன் கூடிய உணவு வகைகளுடன், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான மிளகு கலந்த நெல்லிக்காய், இஞ்சி, எலுமிச்சை ஜூஸ் வகையறாக்கள், சீரக தண்ணீர் போன்றவைகளும் சேர்ந்திருந்தன. 

குழிப் பணியாரம், கொழுக்கட்டை, கந்தரப்பம், அதிரசம், பால் கொழுக்கட்டை என்று மாலை உணவு வகைகளின் பட்டியலும் பரந்து விரிந்து, ஒவ்வொரு ஐட்டமும், வெவ்வேறு சுவைகளுடன் நாவில் கரைந்து கொண்டிருந்தன. ஆனால், அம்மாவைப் பற்றிய அணுகுமுறையில், சுகுனாவிடம் எந்த மாற்றத்தையும் என்னால் உணர முடியவில்லை.  

இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு, ஆறு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருந்தது. அலுவலக பணி சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்ததால், அணுகுமுறை குறைபாடுகளைப் பற்றி நினைக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.

அன்று இரவு, திடீரென்று, தலைவலியோடு, தலைசுற்றல் என்று சொன்ன சுகுனாவிடம், ‘வேலை பளுவால் இருக்கலாம். ரெஸ்ட் எடு சரியாயிடும்..’ என்று சொல்லி, என் வேலையைத் தொடர்ந்தேன்.

என் வேலை கெடக்கூடாது என்ற எண்ணத்தில், நான் இருந்த அறையை மூடிவிட்டு, சுகுனா ஹாலுக்குப் போனாள்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு, ஹாலிலிருந்து பேச்சுக் குரல் கேட்டதும், யாரென்று பார்க்கலாம் என்று கதவை திறந்தேன்.

அங்கு நான் கண்ட காட்சி, என்னை வியப்பில் ஆழ்த்தியது.

தன் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த சுகுனாவின் தலையை வாஞ்சையோடு, அம்மா தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். சுகுனாவின் முகத்தில் சிறிது பயம் தெரிந்தது. 

“வாந்தி எடுத்ததில், என் மருமக பயந்துட்டா.. வேற ஓண்ணும் இல்ல. இஞ்சி கஷாயம் வச்சு கொடுத்திருக்கேன். பக்கத்தில் யாராவது டாக்டர் இருந்தா, நாளைக்கு முத வேலையா கூட்டிக்கிட்டு போ. நான் கூட இருக்கும்போது, எந்த பயமும் வேணாம்..” என்று தைரிய வார்த்தைகளைக் கூறினாள். 

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அம்மாவின் மடியில் படுத்து கண் அயர்ந்த சுகுனா, அரை மணி நேரத்தில் கண் விழித்து, முகத் தெளிவுடன் எழுந்து, வேலையை தொடர்ந்தாள்.

அவளால், வேலையில் முழுவதும் ஈடுபடமுடியாததை என்னால் கவனிக்க முடிந்தது.

“உடம்புக்கு ஒண்ணும் இல்லையே…வலி முழுவதும் போயிடுச்சா..?’ என்றேன்.

“உடம்பில் வலி போயிடுச்சு..இப்ப மனசில் வலி..” என்றவளைத் திகைப்புடன் பார்த்தேன்.

இப்படி உணர்ச்சி பூர்வமாக அவள் பேசி, நான் இதுவரை பார்த்ததில்லை என்பதால் திகைப்பு கூடியது.

“அவமதிச்ச எனக்கே இவ்வளவு வலின்னா, அவமதிக்கப்பட்ட அவங்களுக்கு எவ்வளவு வலி இருக்கும்னு நினைச்சா, வலியின் தாக்கம் அதிகமாகுது..:’என்றவள் தொடர்ந்தாள்.

“இந்த ஊரடங்கு தருணத்தில் யார் நமக்கு உதவியா இருக்காங்களோ, அவங்களை தெய்வமா கொண்டாடனும். என் புறக்கணிப்பை ஒரு பொருட்டா கருதாமல்,, வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்துக்கிட்டு, வேளா வேளைக்கு நமக்கு சுவையான சாப்பாடும் செய்து போட்டுக்கிட்டு இருக்கிற உங்க அம்மா, என்னைப் பொருத்தவரை ஒரு தெய்வம்தான் ” என்றவளை, திகைப்பு மறைந்து, வியப்போடு பார்த்தேன்.

இதுவரை, என் வாழ்க்கையில் அம்மாவின் அன்பையும், அரவணைப்பையும் அனுபவிக்க முடியாதவள், அவுங்க மடியில் படுத்திருந்தபோதும், பாசத்தோடு என்னை வருடிக் கொடுத்த போதும், எனக்கு அம்மா இல்லாத குறையே மறைந்து போனது போல் உணர்ந்தேன். அப்படிப்பட்டவங்களைப் புறக்கணிச்சது, எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்ததால், இப்ப மனசு ரொம்ப வலிக்குது..” என்றவளை, நிம்மதியாகத் தூங்கச் சொன்னேன்.

காலையில் எழுந்த எனக்கு, பக்கத்தில் சுகுனா இல்லாதது, திகைப்பாக இருந்தது. அவசரமாக வெளியில் எட்டிப் பார்த்தேன். சுகுனாவும், அம்மாவும் நீண்ட நாட்கள் பழகியவர்கள் போல், பேசிக் கொண்டிருந்தார்கள். நகரமும், கிராமமும், பதியம் போட்ட செடிகளாக ஒட்டி, உறவாடிக் கொண்டிருந்தது, மனதிற்கு இதம் அளித்தது.. ஊரைப் பிரித்த ஊரடங்கு, இங்கு உறவை மலரச் செய்து கொண்டிருந்தது.

அடுத்த நாள், வளாகத்தில் வசித்த லேடி டாக்டரை சந்தித்தோம்.  

“பாராட்டுகள்..உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க..” என்றவுடன், தாய்மை உணர்வுகள், சுகுனாவின் முகத்தில் துள்ளி விளையாட ஆரம்பித்தன. 

“ஆறு வருஷ தாம்பத்தியத்தில் தள்ளிப்போனது இப்ப எப்படி சாத்தியமானது டாக்டர்..?” ஆச்சரியத்துடன் என் சந்தேகத்தை கேட்டேன்.

“தாய்மை அடைந்தால், தன்னைக் கவனித்துக் கொள்வதற்கு ஒருத்தர் இருக்காங்கங்கற பாதுகாப்பு உணர்வுக்கான சூழ்நிலை உருவாகி இருக்கலாம்.  உடலுக்குக் கிடைக்கும் ஊட்டச் சத்துள்ள ஆரோக்கியமான உணவாகக் கூட இருக்கலாம். இத்தனை நாளாக வராத அவுங்க அம்மா இப்ப வந்திருக்காங்களா..? டாக்டர் தன் சந்தேகத்தைக் கேட்டார்.

“ஆமாம் டாக்டர்..” நான் பதில் சொல்வதற்கு முன்பு, சுகுனாவே அழுத்தமாகப் பதில் சொன்னாள்.

“போக்குவரத்து சீரானவுடன், அம்மாவை ஊருக்கு அனுப்பிச்சிடலாம்னு இருக்கேன்..”வீட்டுக்கு வரும்போது சுகுனாவிடம் சொன்னேன்.

“என் அம்மா, இனி என் கூடத்தான் இருக்கப் போறாங்க. உங்க மற்ற உறவுகாரங்களும் வந்து போகட்டும். அப்பத்தான், நமக்கு பிறக்கப் போற ராஜாவுக்கோ, ராணிக்கோ, உறவுகளின் மகத்துவம் புரியும்!”

சுகுனாவின் பதிலில், எங்கள் குடும்பத்து அடுத்த தலைமுறைக்கான உறவுக் கதவுகள் திறப்பதற்கான சாவி வெளிப்பட்டது.

 

எஸ். ராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad