பொன்னியின் செல்வன் பாகம் 1
தமிழனின் நீண்ட நாள் கனவு, பொன்னியின் செல்வனைத் திரையரங்கில் சென்று பார்ப்பது. 1950களில் தொடர்கதையாக வெளிவந்த பொன்னியின் செல்வனை, முதலில் எம்.ஜி.ஆர் 70களில் திரைப்படமாக உருவாக்க முனைந்தார். பிறகு, கமலஹாசனும் முயன்றார். அந்த வரிசையில் மணிரத்னமும் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். அதற்கான காலம் தற்போது தான் வந்துள்ளது என்று கூற வேண்டும்.
பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பு என்று சொல்ல பல விஷயங்கள் உள்ளன. அந்த நாவலுக்கான வரவேற்பு, கதை எழுதப்பட்ட காலத்தில் மட்டுமல்ல, தற்போதும் உள்ளது. இன்று வரை, புத்தகக் கண்காட்சிகளில் அதிகம் விற்கப்படும் புத்தகம், பொன்னியின் செல்வன் தான். இனி, அந்த விற்பனை இன்னமும் அதிகரிக்கும். ஏற்கனவே, புத்தகத்தின் அட்டையில் திரிஷாவும், ஐஸ்வர்யா ராய்யும் வரத் தொடங்கிவிட்டனர். வரலாற்றுடன் கற்பனை கலந்து எழுதப்பட்ட புதினம் என்பதால் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லை. வீரம், காதல், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பங்கள் என்று ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான அம்சங்கள் அனைத்தும் கொண்ட கதை.
நாடகமாகப் பலமுறை அரங்கேற்றப்பட்டாலும், அக்கதையின் அடர்த்தியையும், பிரமாண்டத்தையும் மேடையில் காட்டமுடியாதது அக்கதையின் பலமே. வெப்சீரிஸ் என்பது அதற்கான சரியான வடிவமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசியத்தையும், கிளைக்கதைகளையும் அவசரமின்றி நிதானமாகக் காட்ட வெப்சீரிஸ் வடிவம் உதவும். ஆனால், திரைப்படம் என்பது பலதரப்பட்ட மக்களை உடனடியாகக் காண வைப்பதற்கு உதவும். ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு பெரும்புதினத்தைத் திரைப்படமாகச் சுருக்குவது என்பது அக்கதையை விடப் பிரமாண்டமான பணி. அதை இரு திரைப்படங்களுக்கான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறது, மணிரத்னம், ஜெயமோகன் & இளங்கோ குமரவேல் கூட்டணி.
உலகளாவிய பட வெளியீடு, கிராபிக்ஸ் துறையின் வளர்ச்சி, ஓடிடி டிஜிட்டல் தளங்களில் வியாபார வாய்ப்பு எனத் தற்போதைய சினிமா துறையின் பரிணாமம், பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க உதவியுள்ளது. சோழ பேரரசின் அதிகாரத்தைக் கைப்பற்ற துடிப்பவர்களைச் சுற்றிய கதை. அதற்குள் காதல், பழிவாங்கல், நயவஞ்சகம், வீரம் எனப் பல குணாசியங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் உலவுகின்றனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம் என அந்தக் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் கொண்டு வந்து, அக்கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அந்த நடிகர்களை நடிக்க வைத்து வெற்றிப் பெற்றிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
நடிப்பு, திரைக்கதை, வசனம் எனப் பல விஷயங்களில் இது வழக்கமான மணிரத்னம் படமல்ல. இப்படத்திற்காக ரொம்பவே மாறியிருக்கிறார் மணிரத்னம். இவ்வளவு பெரிய கதையைச் சினிமாவுக்காக மாற்றும் போது, எதை எடுப்பது, எதை விடுவது என்பது மிகப்பெரிய சவால். அதைத் திறம்படச் சமாளித்திருக்கிறார். இதிலும் குறை கூறுபவர்கள் இருப்பார்கள். போலவே, எப்படி மாற்றி மாற்றி எடுத்தாலும் குறை கூறுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அதனால் அதைக் கண்டுக்கொள்ளத் தேவையில்லை. ’பொன்னியின் செல்வன்’ போன்ற தமிழின் ஒரு முக்கிய நாவலை, நல்லவேளை மணிரத்னம் எடுத்தார் என்று மனிதர் நினைக்க வைத்துவிட்டார்.
அவ்வளவு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைக்கவே, பெரும் நேரத்தை படம் எடுத்துக்கொள்கிறது. கதையைப் படிக்காதவர்களுக்கு, அவ்வளவு கதாபாத்திரங்களையும், அவர்களது பெயர்களையும் நினைவு வைத்துக்கொள்வது போன்ற சிரமத்தை படத்தின் ஆரம்பக்காட்சிகள் கொடுக்கிறது. அறிமுகப்படலம் முடிந்த பிறகு, படம் குழப்பமில்லாமல் செல்கிறது.
பாகுபலி, இம்மாதிரி படங்களுக்கு வழி திறந்து வைத்திருக்கிறது என்றாலும், இன்னொரு பக்கம், இப்படத்திற்குப் பிரச்சினை ஏற்படுத்துவதும் அதுவே. அப்படம் எழுப்பி வைத்திருக்கும் முன்மாதிரி உதாரணம், அது போன்ற எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டுவிடுகிறது. பாகுபலி சினிமாவிற்காக முழுக்க எழுதப்பட்ட கதை என்பதால், ஹீரோவிற்கான மாஸ், கமர்ஷியல் படத்திற்கான மசாலா எல்லாம் சுதந்திரமாகச் சேர்க்க முடிந்தது. அப்படம் வந்த புதிதில் அதனுடன் ஒப்பிட்டு ‘பொன்னியின் செல்வனை’ எடுத்தால், அதை விடச் சிறப்பாக வரும் என்று கதை படித்த தமிழ் ரசிகர்களே பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு விட்டார்கள். அது போன்ற எதிர்பார்ப்புக் கொண்ட, முன்பே கதை படிக்காத தமிழ் ரசிகர்களுக்கு, இப்படம் முழுத் திருப்தியை அளிக்காது. பொன்னியின் செல்வன் கதை படிக்கும் போது உண்டான அனுபவத்தை, திரையில் வடிக்க முயல்வது தான் இப்படத்தின் நோக்கம். அந்த நோக்கத்தை மணிரத்னம் நிறைவேற்றியதாகவே தெரிகிறது.
பெரும் நடிகர் பட்டாளம், ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரம் புரிந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பிட்டு பாராட்ட வேண்டும் என்றால், ஐஸ்வர்யா ராய், ஜெயராம் மற்றும் ஜெயம் ரவியைக் குறிப்பிட வேண்டும். தாங்கள் இதுவரை திரையில் காட்டிய பிம்பத்தை மறக்க செய்து, அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறியிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஏற்ற இசையை, இத்தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ப ஜனரஞ்சகமாகக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னணி இசையிலும் அசரடித்திருக்கிறார். கண்ணிற்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவு என்றாலும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அடக்கி வாசித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். தோட்டாதரணியின் கலை ஆக்கம், ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாமல் மினிமலிஸ்ட்டாகத் தெரிந்தது. சில இடங்களில் சிமெண்ட் பூச்சு கட்டிடப் பகுதிகள், அட்டையில் வண்ணம் தீட்டிய பின்னணிகள் போன்றவை கண்ணில் பட்டு, அதற்குக் கொஞ்சம் செலவழித்துக் கவனித்திருக்கலாமே என்று தோன்றியது. ஸ்ரீகர் பிரசாத்தின் தொகுப்பு, படத்தைத் தெளிந்த நீரோடை போல் உருவாக்கியுள்ளது.
ஒரு பெரும் கனவு சரியானவர்களின் கைவண்ணத்தில் நனவாகும் போது எல்லோருக்குமே பெரும் மகிழ்ச்சி கொடுக்கும். அது போன்ற ஓர் உணர்வை இப்படம் அளிக்கிறது. படத்தில் சில குறைகள் இருந்தாலும், ஒரு பெரும் கனவைச் சாத்தியப்படுத்தியவர்களைப் பாராட்டவே நம் நேரத்தை எடுத்துக்கொள்வோம். முதல் பாகமான இப்படத்தை முடித்து வைக்கத் தேர்ந்தெடுத்த காட்சி மிக அருமை. அடுத்தப் பாகத்தைக் காண ஆர்வத்தைத் தூண்டிவிடக் கூடிய புள்ளி அது. அடுத்த ஆண்டு, 2023 இல் வெளிவர இருக்கும் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை மீறிய காட்சியனுபவத்தை அளிக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
- சரவணகுமரன்
Tags: Ponniyin Selvan, PS-1