லோரா ஏங்கள் வைல்டர் நூதனசாலை, வால்நட் க்ரோவ், மினசோட்டா.
ஐரோப்பிய மக்கள் அமெரிக்காவில் வந்து குடியேறிய காலகட்டத்தில் இந்த வட கண்டத்தில் வெவ்வேறு பாகங்களிலே பலவாறான காலச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையமைத்து கொள்ள வேண்டியிருந்தது .
மினசோட்டா மாநிலத்தைப் பொறுத்தளவில் நோர்வே நாட்டவர் வந்து குடியேறியதையும் அப்போது நடந்த உண்மை சம்பவங்களைப் பற்றியும் வெகு எளிமையான முறையில் சொல்லப்பட்ட கதை லோரா ஏங்கள் வைல்டர் அம்மையாரின் Little House On the Prairie ஆகும்.
இந்தப்புத்தகம் 1970களில் தொலைகாட்சி தொடராக தயாரிக்கப்பட்டு சிறுவர், சிறுமியர் தொட்டு தாய், தந்தையர், பாட்டா, பாட்டி, பூட்டா, பூட்டி என ஏறத்தாழ பல அமெரிக்கத் தலைமுறைகளையும் கவர்ந்தது.
மினசோட்டா மாநிலத்தில் வோல்நட் குரவ் Walnut Grove என்னும்சிறிய கிராமத்தில் இந்த கதை இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
தொலைகாட்சித் தொடர்களைப் பார்த்தாலும், லோரா ஏங்கள் வைல்டர் நூதனசாலை, பார்க்க வருபவர்களை இன்றும் 1800 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.
இங்கு, கதையில் வரும் கதாபாத்திரங்களின் மாதிரி பொம்மைகளை அவர்கள் அணிந்த உடுப்புகளோடு அலங்கரித்து வைத்துள்ளார்கள். பண்டைய கால பள்ளிக்கூடம், தேவாலயம், கடை, வங்கி, பத்திரிக்கைக் காரியாலயம், மற்றும் மக்கள் பாவித்த குதிரை, மாட்டு வண்டிகள் போன்ற அனைத்தும் அப்படியே வைத்துள்ளார்கள்.
இலத்திரனியல் நூற்றாண்டாகிய இன்றும் எவ்வாறு பண்டைய காலத்தில் தட்டச்சுத்தந்தி, தொலைபேசி தொடர்புகள் அமெரிக்காவின் சிறு கிராமங்களிலும் நடைபெற்றன என்பதை இவ்விடம் பார்க்க முடிந்தது.
மேலும் அக்காலத்திலேயே எவ்வாறு பத்திரிகை என்பது மக்களின் உயிர்நாடியாக இருந்தது என்பதை அறிய முடிகிறது. வசதியுள்ள ஊர்களில் பத்திரிகை அச்சுக்கூடத்தில் ஈயம், செம்பு, இரும்பு உலோகங்களினால் ஆன அச்சுக்கருவிகள் பாவிக்கப்பட்டனவாம் .
இக்கருவிகளில் பணிபுரிய அச்சுக்களைப் பிழையிலாது தலைகீழாக வாசிக்கும் பயிற்சியுடையோரும் தொழில் செய்து வந்துள்ளார்கள்.
புல்மேட்டு இடங்களில் குடியேறிய மக்கள் மினசோட்டா மாநிலத்தில் புகையிரதம் வரும் முன்னரே மாட்டு வண்டிகளில் 1 மைல் தூரத்தை ஒரு மணித்தியாலத்திலும், குதிரையில் 10 மைல்கள் தூரத்தை 1 மணித்தியாலத்திலும் கடந்து பயணம் செய்தார்கள் என்பதும் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வோரு ஊரிலும் ஒரேயொரு கடைதான் இருந்திருக்கிறது, மக்கள் பல மாதங்களிற்கு ஒரு முறை தமது பண்டங்களை புதுப்பித்துக் கொள்வர். 1800 ஆம் ஆண்டுகளில் காசு பணம் புழக்கத்தில் இருந்தாலும் விவசாயம், வேட்டைப் பண்டங்கள் பரிமாறலிலேயே சாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்தினர் என்பதும் இவ்விடம் தெரியவருகிறது.
மேலும் லோரா ஏங்கள் வைல்டர் ஞாபகார்த்தமாக மாநிலத்தின் தென்புற பெருவீதியான Highway 14 லோரா ஏங்கள் பெருவீதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீதி மாநிலத்தின் மேற்குப் பக்கத்து எல்லையிலிருந்து அகன்ற கிழக்குப் பக்க எல்லையில் வைனோனா நகரத்தையும் இணைக்கிறது.
– யோகி அருமைநாயகம்