\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்காவில் வளரும் சகிப்பின்மை

மெரிக்காவில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் நன்கொடை திரட்டும் நிகழ்வுகளை நடத்துவதுண்டு. இதன் முதன்மை நோக்கம், கிறிஸ்துமஸ், ஹனுக்கா பண்டிகைகளை, பொருளாதாரக் குறைபாடுகளால் கொண்டாட முடியாத நிலையிலிருக்கும் குடும்பங்களுக்கு உணவு மற்றும் பரிசுப் பொருட்களை ஒழுங்கமைத்துக் கொடுப்பதாகும்.

ஆனால் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி, டெக்சாஸ் மாநிலம், ஃபிரிஸ்கோ நகரில் நடைபெற்ற நன்கொடை நிகழ்வின் செயல்நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நோக்கங்களில் ஒன்று – ‘திருப்பதியில் முறையான அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் தேவாலயங்களைத் தகர்ப்பது’. ‘உலகளாவிய இந்துப் பாரம்பரிய அறக்கட்டளை’ எனப் பொருள்படும் ‘குளோபல் ஹிந்து ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன்’ (Global Hindu Heritage Foundation – GHHF) நடத்திய நிதி திரட்டும் இரவுணவு விருந்தின் அழைப்பிதழில் இந்தியாவில் வாரயிறுதிப் பள்ளிகள், கோசாலைகள் ஏற்படுத்துதல், கிராம தேவதை கோவில்களைப் புனரமைத்தல், கார்த்திகை மாதப் பூஜை பொருட்கள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், டெக்சஸ் மாநில முன்களப் பணியாளர்களுக்கு உணவு வழங்குதல் எனும் நல்லெண்ணப் பட்டியலோடு மதம் மாறியவர்களை மறுபடியும் இந்து மதத்திற்குத் திரும்ப வரக்கோரும் ‘கர்வாபஸி’ மற்றும் தேவாலய இடிப்பு போன்ற விஷயங்களுக்காகவும் நிதியுதவி கோரப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள 14 சமூக உரிமை சங்கங்கள் மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையிலான அமைப்புகள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு அமெரிக்க செனட்டர்கள், ஃபிரிஸ்கோ மேயர் ஜெஃப் செனி மற்றும் டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபாட் ஆகியோருக்கு GHHF குறித்து விசாரணை நடத்தக் கோரி கடிதம் எழுதியுள்ளனர். வட அமெரிக்காவில் உள்ள இந்திய அமெரிக்க கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு, இந்திய அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் மற்றும் ஜெனோசைட் வாட்ச் போன்றவை, டெக்சாஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எழுதிய கடிதத்தில் GHHF போன்ற இலாபநோக்கற்ற, 501c பிரிவின் கீழ் அமெரிக்க வரி சட்டங்களிலிருந்து விலக்கு பெற்ற நிறுவனமொன்று, இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விடுவதைக் கண்டித்து, அந்த அமைப்புக்குத் தடைவிதிக்கக் கோரினர்.

டெக்சாஸிலுள்ள ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரான பீட்டர்  ஃபிரெட்ரிச், ஃபிரிஸ்கோ சிட்டி கவுன்சில் கூட்டத்தில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது குறிவைத்து நடத்தப்படும் வன்முறை மற்றும் வெறுப்பு சம்பவங்கள் குறித்து விளக்கினார். GHHF போன்ற அமைப்புகளை ஃபிரிஸ்கோவில் செயல்படவும்,, நிதி திரட்டவும் அனுமதிப்பது, அமெரிக்கர்களும் மத வன்முறையை ஆதரிப்பதாக அமைந்துவிடும் என சுட்டிக் காட்டியுள்ளார்.

இது குறித்து GHHF அமைப்பின் நிறுவனரும், தலைவருமான பிரகாசராவ் வெலகாபுடி, நவம்பர் 27ஆம் தேதி இரவுணவு விழா நடந்தபோதிலும், அழைப்பிதழில் சொல்லியிருந்தபடி நிதி திரட்டப்படவில்லை என்றும், செயல் நிரலில் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் பற்றிய விவாதங்கள் மட்டுமே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், திருப்பதி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கும் தேவாலயங்கள், மசூதிகள் இடிக்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் சொல்லியிருக்கிறார். வாட்டிகனிலும், மெக்காவிலும் இந்து ஆலயங்கள் இல்லாத போது, இந்தியாவில் மட்டும் எப்படி சர்சுகளையும், மசூதிகளையும் அனுமதிக்க முடியும் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார் ‘விஸ்வ இந்து’ எனும் பட்டம் பெற்ற பிரகாசராவ். மிச்சிகன் மாநிலக் கல்லூரியில் முதுநிலை பட்டமும், மிஸ்ஸிப்பி மாநிலக் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற பிரகாசராவ், பல அமெரிக்கக் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பின்னர் மிஸிஸிப்பியின் ஜாக்சன் மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்குச் சென்ற நூற்றுக்கணக்கானோரை மீட்டு தாய் மதத்துக்குத் திரும்ப வரைவழைத்தது (கர் வாபஸி), கோசாலைகள் அமைத்தது போன்றவற்றை GHHF அமைப்பின் சாதனைகளாகச் சொல்லும் பிரகாசராவ், திருப்பதியில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதாகச் சில சர்சுகளை பட்டியலிட்டு, அவற்றை அகற்றக்கோரி ‘திருப்பதி நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்துக்கு’ (Tirupati Urban Development Authority-TUDA) இந்தாண்டின் துவக்கத்தில் மனுயளித்திருந்தார். ஆந்திர மாநில முதலமைச்சர் Y. S. ஜெகன்மோகன் ரெட்டி கிறித்துவ மதத்தை அரவணைத்தவர் என்பதால் திருப்பதியில் தேவாலயங்கள் முளைத்தவாறுள்ளன என்பது பிரகாசராவின் அனுமானம். இதனையொட்டி TUDA, திருப்பதி நகராட்சிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. லாபநோக்கற்ற ஆன்மிக அமைப்புக்கான விதிகளைக் கடந்து, அரசியலை நுழைத்து, அதனை GHHFன் சாதனையாக ஆவணப்படுத்த பிரகாசராவ் முயல்கிறார் என்கிறார்கள் டாலஸிலுள்ள பிற இந்து, கிறித்துவ, இஸ்லாமிய அமைப்பினர்.

பிரகாசராவின் நிதி திரட்டல் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய அமெரிக்க சமூக உரிமை மற்றும் மத நல்லிணக்க அமைப்புகள் சில டாலஸில், டிசம்பர் 11ஆம் நாள் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்து, கிறித்துவ, இஸ்லாமிய, புத்த நம்பிக்கையுடைய அமைப்புகளிலிருந்து சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய ஜஸ்டின் சாபு எனும் போதகர், “எனது சிறிய வயதில், பெங்களூரில் எங்கள் குடும்பம் கிறித்துவத்துக்கு மாறியதால், இந்து மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளையும், துன்புறுத்தல்களையும் அனுபவித்திருக்கிறேன். அதிலிருந்து விடுபட்டு, அமைதியாக வாழ விரும்பி அமெரிக்காவுக்கு வந்த பின்னரும் அவ்வகையான அச்சுறுத்தல்கள் விடாமல் எங்களைத் துரத்துவது துரதிர்ஷ்டமானது. எந்தவொரு அமைப்பிலிருந்தும், எந்த ஆன்மீக வழிபாட்டு சுதந்திரத்துக்கும் எதிராக எழும் வெறுப்புகளையும், வன்முறையையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்” என்ற கோரிக்கை வைத்தார்.

“இந்தியாவில் வேரூன்றிய மதங்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும். முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்கு அடிபணிய வேண்டும் அல்லது அழிந்து போக வேண்டும் என்ற சித்தாந்தத்தோடு நூற்றுக்கணக்கான அமைப்புகள் அமெரிக்காவில் செயல்படுகின்றன. அதில் GHHF பனிப் பாறையின் முகடு மட்டுமே. அமெரிக்க இந்தியர்களை, குறிப்பாக இந்துக்களை மூளைச் சலவை செய்து, இஸ்லாமிய, கிறித்துவ மதத்தினருக்கு எதிராகத் திருப்புவதே இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணி” என்று பேசினார் அமெரிக்கப் பத்திரிக்கையாளர் / எழுத்தாளர் விஜயலட்சுமி நாடார்.

2021 ஆம் ஆண்டு ‘வாலே ஹப்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, பன்முகக் கலாச்சாரம் மிகுந்த நகரங்களின் பட்டியலில் டாலஸ் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது (ஹூஸ்டன், ஜெர்சி சிட்டி, நியுயார்க் சிட்டி ஆகியவை முறையே 1,2,3 இடங்களைப் பிடித்திருந்தன). ஆனால் அண்மைக் காலங்களில் டாலஸிலும், அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் நடைபெறும் சம்பவங்கள் நாட்டின் பன்முகத் தன்மையையே கேள்விக்குறியாக்கி வருகின்றன, என்கிறது ‘மனித உரிமைக்காக இந்துக்கள்’ (Hindus for Human Rights) எனும் அமைப்பு.

கடந்த ஆகஸ்ட் மாதம் டாலஸ் நகர உணவக வாசலில், இந்தியப் பெண்கள் சிலரை, இனத்துவேஷத்துடன் அச்சுறுத்தும் மிரட்டல்கள் விடுத்ததோடு, அவர்களைத் தாக்கவும் முற்பட்டதாக மது போதையிலிருந்த எஸ்மி அப்டன் எனும் பெண்மனி கைது செய்யப்பட்டார். ஆசியச் சமூகத்தினரிடையே இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. ஆனால் இச்சம்பவத்தை, இந்துப் பெண்கள் மீதான தாக்குதலாக மாற்றி, இந்து கிறித்துவ மோதலாகச் சித்தரித்தன சில இந்து தேசியவாத அமைப்புகள்.

அமெரிக்காவில் இந்தாண்டு இந்திய சங்கங்கள் ஒருங்கிணைத்திருந்த, இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாக்களிலும் மதப் பிரிவினைவாதம் தலைதூக்கியதைக் காண முடிந்தது. கலிஃபோர்னியா அனாஹெம் பகுதியில் ஆகஸ்ட் மாதம் நடந்த இந்திய சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் விதத்தில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், இந்தியாவில் ஒடுக்கப்பட்டு வரும் சிறுபான்மையினருக்குக் குரல் கொடுக்கும் விதமாக சில போராட்டக்காரர்கள் (சுமார் 20 பேர்)  ‘யாருக்கு சுதந்திரம்’, ‘திறந்த மனதுடன் வாழுங்கள்’ போன்ற பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர். இதனால் கோபமுற்ற பேரணியிலிருந்த நூற்றுக்கும் அதிகமானோர், போராட்டக்காரர்கள் மீது பாய்ந்து, பதாகைகளைப் பிய்த்தெறிந்தனர். ‘நாங்கள் யார், எங்கள் கோரிக்கை என்னவென்ற எந்தவித புரிதலுமின்றி எங்களை ‘முட்டாள் முஸ்லிம்கள்’, ‘நீங்கள் பாகிஸ்தானியா?’ என்று கேட்டு மிரட்டினர். ‘பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷத்துடன் எங்களைத் தாக்க முயன்றனர்’ என்றனர் போராட்டக் குழுவைச் சேர்ந்த ரீதா கவுர், ஷனேல் குலாபி ஆகியோர். பேரணி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மனோஜ் அகர்வால், ‘அவர்கள் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன், முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை’ என்று மறுத்தார்.

அதே நாள், நியூ ஜெர்சியின் எடிசன் நகரில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்களைத் தாங்கிய ‘புல்டோசர்’ (bulldozer) ஒன்று வலம் வந்தது பலரை முகம் சுளிக்க வைத்தது. இதில் யோகியின் படத்துக்கு ‘புல்டோசர் பாபா’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. உத்தரப் பிரதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமிய குடியிருப்புகளை அரசியல், மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டு அரசு இயந்திரம், இடித்துத் தள்ளப்படுவதை நினைவூட்டி இங்கிருக்கும் சிறுபான்மையினருக்கும் எச்சரிக்கை விடுப்பதைப் போலிருந்தது இந்தக் காட்சி.

இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட ‘மனித உரிமைகளுக்கான இந்துக்கள்’ அமைப்பின் இணை நிறுவனர் தீபக் குமார், “‘புல்டோசர் அடையாளத்தை’  பார்த்ததும் என் மனது மிகவும் வருந்தியது. உள்நாட்டில் நடைபெற்ற வன்முறையை உலகளவில் மேடையேற்றிக் காண்பிப்பது வக்கிரமத்தின் உச்சம்” என்றார். “ஸ்வஸ்திக் முத்திரையைக் காட்டி யூதர்களைப் புண்படுத்துவது போல, புல்டோசரைக் காட்டி இந்திய இஸ்லாமியர்களை அச்சமடைய வைக்கிறார்கள். அமெரிக்காவில், நிற துவேஷம் இருப்பது போதாதென இவர்கள் மதத் துவேஷத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார், 45 ஆண்டுகளாக எடிசனில் வாழ்ந்து வரும் மொகமது நிசார் எனும் புற்றுநோய் மருத்துவர். விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சந்திரகாந்த் படேல், அணிவகுப்பில் புல்டோசர் இடம்பெறச் செய்ததற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். எடிசன் நகரமைப்பு, விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு மதப் பிரிவினைகள் அனுமதிக்கப்பட மாட்டாது எனும் கண்டனத்தோடு கூடிய எச்சரிக்கையை விடுத்தது.

மேற்சொன்ன நிகழ்வுகள், இந்து தேசியவாதத்துக்கு ஆதரவான் மற்றும்  எதிர்ப்பான கருத்துகள் சமீபக் காலங்களில் அமெரிக்காவிலும் வலுத்து வருவதை ஊர்ஜிதப்படுத்துகிறது. இவை மட்டுமின்றி இந்தியச் சங்கங்கள் அமைந்துள்ள அமெரிக்க நகரங்கள் பலவற்றிலும் சர்ச்சைக்குரிய கூட்டங்கள், அணிவகுப்புகள், ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய தேசப்பற்றும், இந்து மதப்பற்றும், இந்து தேசியவாதமும் வெவ்வேறு வரையறை, கொள்கைகள் கொண்டவை என்ற புரிதலின்மையே பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

சமூக ஊடகங்கள், இப்பிளவுகளை நிவர்த்திக்காமல் மேலும் அகலமாக, ஆழமாக விரிவுப்படுத்தி வருகின்றன. GHHF ‘திருப்பதியில் அனுமதியற்ற தேவாலயங்களைத் தகர்ப்பது’ என்று அறிவித்ததை, இடதுசாரி சமூக ஊடகங்கள் சில, ‘GHHF திருப்பதியில் தேவாலயங்களைத் தகர்க்கிறது’ என்று திரித்துவிட்டன. அதனால், GHHF ன் கோரிக்கை நியாயமானது என்றும் சொல்வதற்கில்லை. திருப்பதியில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட எண்ணற்ற கட்டடங்கள், கோயில்கள் இருக்கையில், தேவாலயங்களை மட்டும் குறிவைப்பது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டங்களில், ‘புல்டோசர் பாபா’ என்ற தலைப்பிட்டு பிரதமரையும், மாநில முதலமைச்சரையும் பிரகடனப்படுத்துவது அருவருக்கத்தக்கது; அபாயகரமானது.

மறுபுறம், இது போன்ற பிரிவினைகளைக் கண்டித்து,  விழிப்புணர்வு எழுப்புவோர் மீது சமூக ஊடகங்கள் வழியே பாயும் அச்சுறுத்தல்கள், குற்றச்சாட்டுகள், மறைமுகத் தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதும் ஆபத்தானது. நியு ஜெர்சி, ரட்ஜர்ஸ் பல்கலையில் உதவிப் பேராசிரியராக, ‘தெற்காசிய வரலாற்றுப் பிரிவில்’ பணியாற்றும் ஆட்ரே ட்ருஷ்கி, முனைவர் பட்டத்துக்காக ‘இந்து ராஷ்டிரம்’ குறித்து ஆய்வுகள் செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் ‘மனித உரிமைக்காக இந்துக்கள்’ போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து பயணித்து வருவதோடு, சில பத்திரிக்கைகளில் அவ்வப்போது கட்டுரைகளும் எழுதி வருகிறார்.  2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ‘டிஸ்மேண்ட்லிங் க்ளோபல் இந்துத்துவா’  (Dismantling Global Hindutva) எனும் கருத்தரங்கை ஒருங்கிணைத்தவர்களில் ஆட்ரேவும் ஒருவர். இதனால் இந்து தீவிரவாதிகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருவதாகச் சொல்கிறார் ஆட்ரே. தீவிர வலதுசாரி இந்திய அமெரிக்கர்கள் சிலர் ஆட்ரேவுக்கு ரட்ஜர்ஸ் பல்கலை எந்தவித கல்வி உதவித் தொகையும் வழங்கக்கூடாது, மற்றும் பணி நீக்கம் செய்யவேண்டுமென்றும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதற்கு முன்பு ஆட்ரே “ஒளரங்கசிப்” பற்றிய வரலாற்று புத்தகத்தை எழுதி வெளியிட்டதிலிருந்தே அவர் மீதான தனிப்பட்ட தாக்குதல் அதிகரித்து வந்தது. டிவிட்டரில் “முட்டாள் யூதப் பெண்ணே, நீ முகலாயர்களை நேசித்துக் கொண்டேயிரு; நாங்கள் ஹிட்லரை நேசிப்பவர்கள்”, “நீ வீட்டிலேயே இரு; வெளியில் வந்தால் நீ கடத்தப்படுவாய்”; “வாய்ப்புக் கிடைத்தால் உன் தலையை நான் துண்டிப்பேன்”  போன்ற ஆயிரக்கணக்கான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களை ஆய்வு செய்து, அவை கணினி வழியே அனுப்பப்படும் ‘சுயாதினத் தகவல்’ (bot messages) அல்ல என்பதை உறுதிசெய்துக் கொண்டு காவல் துறைக்கும், அமெரிக்க உளவுத் துறைக்கும் புகார் அனுப்பியுள்ளார். இவ்வித அச்சுறுத்தும், அருவருக்கத்தக்க முகநூல், கீச்சுத் தகவல்கள், போலிக் பெயர்களிலிருந்து வந்தாலும், அவை தீவிர ‘இந்து ராஷ்டிர’ ஆதரவாளர்களால் அனுப்பப்பட்டவை என ஆழமாக நம்புகிறார் ஆட்ரே.  அதனால் தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் தனிப் பாதுகாவலர்கள் நியமிக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளார் அவர்.

“கல்வி சுதந்திரமாக்கப்பட வேண்டும்; கற்றவர்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். பிளவுப்படுத்தப்படும் சமூகங்கள் அபாயகரமானவை. அமெரிக்காவில் அதிகரித்து வரும் இந்து தேசியவாதம் அதன் பன்முக கலாச்சார விழுமியங்களை அச்சுறுத்துகிறது. வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது – அதுவே இந்நாட்டின் பலம். வெறுப்பாளர்கள், நான் என் வேலையைச் செய்யக்கூடாது என்று விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற எனது ஆராய்ச்சி ஆர்வங்களை நான் மாற்றிக்கொள்ள இயுலாது” என்று கூறியுள்ளார். இக்கட்டுரை எழுதப்பட்ட, டிசம்பர் 18ஆம் தேதி கூட, நியு ஜெர்சியில் ஆட்ரே கலந்துகொண்ட இந்து தேசியவாதம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தில், தீவிர இந்திய அமெரிக்க வலதுசாரி ஆதரவாளர்கள் சிலர் புகுந்து பேச்சாளர்களை மிரட்டி அமளி செய்துள்ளனர்.

அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தம், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்பட்ட மதத்தை பின்பற்றவோ அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாமலிருப்பதற்கோ உரிமை உண்டு என்று கூறுகிறது. அமெரிக்காவில் வாழும், இந்து தேசியவாதத்தை ஆதரிக்கும் நபர்கள் பலரும் அமெரிக்க பிரஜைகளாக மாறியிருப்பர்; குடியுரிமை தேர்வின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களையும், மீறினால் நேரும் நிகழ்வுகளையும் படித்திருப்பர். ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற வள்ளுவன் கூற்று, சமூக நல்லிணக்கத்தை வளர்க்க உதவக்கூடும்.

 

  • ரவிக்குமார்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad