\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சிப்போட்லே

சில மெக்சிகன் படங்களைக் காணும்போது, அவர்களின் கலாச்சாரத்திற்கும் நமது கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறதே என்று தோன்றுவதுண்டு. உதாரணத்திற்கு, அனிமேஷன் படமான கோகோ (Coco) படத்தில் வரும் மூதாதையர் வழிபாட்டைக் குறிப்பிடலாம். அதேபோல், உணவிலும் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம். மல்லி, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, எள்ளு, மிளகாய் வற்றல், பூண்டு, வெங்காயம், தக்காளி, பீன்ஸ், அரிசி என நமது சமையலறையில் பயன்படுத்தும் பல உணவு பொருட்களை, மெக்சிகன் உணவுத் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். அதனால், அமெரிக்காவில் வெளியே உணவு சாப்பிடும் நேரங்களில் நம்மூர் உணவையொட்டிய சுவையுடன் சாப்பிட ஆசைப்பட்டால், மெக்சிகன் உணவகங்களுக்குச் சென்றுவிடலாம்.

நம்மூர் மிளகாய் வற்றல் போல மெக்சிகோவில் தீயில் வாட்டி, காய வைத்த மிளகாய்க்கு பெயர் – சிப்போட்லே (Chipotle). அந்தப் பெயரில் அமெரிக்காவெங்கும் கிட்டதட்ட மூவாயிரம் இடங்களில் கிளை பரப்பி இருக்கும் ஒரு துரித உணவகத்தைப் பற்றித் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம். 1993இல் தொடங்கப்பட்ட சிப்போட்லே நிறுவனத்திற்கு, இது முப்பதாவது ஆண்டு. பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுகிறது. கடந்தாண்டின் வருவாய் எட்டுப் பில்லியனைத் தொட்டுவிட்டது. 2006இல் பங்குச்சந்தையில் நுழைந்தபோது, ஒரு பங்கின் மதிப்பு டாலர் 22ஆக இருந்தது. தற்போது 1500 டாலர்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

இண்டியானாபொலிஸில் பிறந்த ஸ்டீவ் எல்ஸ் (Steve Ells), டென்வரிலும், நியூயார்க்கிலும் படித்து, சான் பிரான்சிஸ்கோவில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வந்தார். தனியாக ஒரு உயர்தர உணவகத்தைத் தொடங்கும் திட்டம் இருந்தது. அதற்கு முதல்படியாக ஒரு துரித உணவகத்தை முதலில் தொடங்கி, அதன் மூலம் வரும் வருவாயில் நல்லதாகப் பெரிய ஒரு உணவகத்தைத் தொடங்கலாம் என்று எண்ணினார். அதற்காகத் தனது தந்தையிடம் 85,000 டாலர்கள் கடனாக வாங்கி, தான் படித்த போல்டர் யூனிவர்சிட்டி அருகே ‘சிப்போட்லே’ என்ற பெயரில் தனது முதல் துரித உணவகத்தைத் தொடங்கினார்.

ஏற்கனவே அமெரிக்காவில் மெக்சிகன் பாணியிலான துரித உணவகங்கள் பல இருந்தாலும், ஸ்டீவ் தனது துரித உணவகத்தைப் புது மாதிரியாக உருவாக்கியிருந்தார். பொதுவாகத் துரித உணவு என்றாலே விலை மலிவாக இருக்கும், மலிவான பொருட்களைப் பயன்படுத்துவார்கள், உடலின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதாக இருக்கும். இது போன்ற கருத்துகளை மெய்ப்பிக்கும் வண்ணமாகவே, துரித உணவகங்கள் செயல்பட்டு வந்தன. அது போல இல்லாமல், இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட உள்ளூர் உணவுப் பொருட்களைக் கொண்டு, ஆரோக்கியமான முறையில் சமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உணவைத் தயாரித்துத் துரிதமாக வழங்குவதே ஸ்டீவ்வின் நோக்கமாக இருந்தது.

பரிட்டோ (Burrito) என்பது ஒரு பிரபல மெக்சிகன் உணவாகும். சோள மாவு கொண்டு உருட்டப்பட்டுச் சப்பாத்தி போலத் தயாரிக்கப்பட்டிருக்கும். அதன் நடுவே அரிசி சோறு, காய்கறி, கறி, சீஸ் போன்றவை வைத்து சுருட்டித் தருவார்கள். தனது முதல் உணவகம் லாபமாகச் செயல்பட, அங்கு ஒருநாளைக்கு நூறு பரிட்டோக்கள் விற்க வேண்டும் என்று கணக்கிட்டு வைத்திருந்தார். அவருடைய எதிர்பார்ப்பை மீறி, அங்கு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பரிட்டோக்கள் விற்றுத் தள்ளின.

முதல் கடையின் வெற்றி, அது போல இன்னும் சில கடைகளைத் திறக்க உதவின. 1995இல் கொலராடோவில் சில கடைகளையும், 1998இல் கேன்சாஸில் ஒரு கடையையும் திறந்தார்கள். மேலும் கடைகளைத் திறக்க, ஸ்டீவ் பணத்தைத் திரட்டினார். அச்சமயம் மெக்டொனால்ட்ஸ் (McDonalds) நிறுவனம் சிப்போட்லேயில் சிறிய அளவில் முதலீடு செய்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் முதலீடு அதிகரித்தது. மினசோட்டா தொடங்கி அமெரிக்காவெங்கும் கிளைகள் பரவின. சிப்போட்லேயின் சங்கிலித் தொடர் உணவகங்களின் எண்ணிக்கையை ஐநூறுவைத் தொட உதவியது. அதன் பிறகு, பங்குச்சந்தையில் நுழைந்து முதலீட்டைப் பெருக்கி, மேலும் பல கிளைகளைத் தொடங்கினார்கள். வளர்ச்சி தொடர்ந்து அமெரிக்கத் துரித உணவகங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.

சிப்போட்லே உணவகங்களில் அங்கேயே வாடிக்கையாளர்கள் பார்க்கும்வண்ணம் தயாரிக்கப்பட்ட சாத வகைகள், பயறு வகைகள், கறி வகைகள் என வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பரிட்டோ, டாகோ அல்லது பவுலில் என்னென்ன வேண்டும் என்று நமது விருப்பத்திற்கேற்ப வாங்கிக்கொள்ளலாம். அதனால் சுவை நமது விருப்பத்திற்கேற்ப இருக்கும். டார்டில்லோ சிப்ஸ்ஸைத் தவிர்த்து வேறு எதையும் இங்கு எண்ணெயில் பொறிப்பதில்லை. கார்ப் டயட் இருப்பவர்கள், அரிசி, சோள மாவு தவிர்த்து கறி, காய்கறி மட்டும் போட்டுத் துரிதமாக உணவு வாங்கிக்கொள்ளலாம். இங்குச் செயற்கை சுவையூட்டிகள், செயற்கை வண்ணங்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுவகைகள், ஃப்ரிசர் குளிர்பதனப்பெட்டி பயன்படுத்துவதில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். எல்லாம் ஆர்கானிக் என்கிறார்கள். எது எப்படியோ, பிற துரித உணவகங்களை ஒப்பிடும் போது, இதை ஆரோக்கியமான உணவு என்று தாராளமாகக் கூறலாம்.

அதே சமயம் பிற துரித உணவகங்களுடன் ஒப்பிடும்போது, இங்கு விலை கொஞ்சம் அதிகம். விலைக்கேற்றாற் போல், அளவும், தரமும் அதிகமாக இருப்பதால், அதை மக்கள் குறையாக எண்ணுவதில்லை. பத்து டாலருக்கு குறைவாக, வயிறு நிறையும் அளவு சாப்பிட முடியும் என்பதால், அலுவலகப்பகுதியில் இருக்கும் கிளைகளில், மதிய நேரத்தில் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் அறிமுகப்படுத்திய மொபைல் செயலியில், கடையில் எவ்வாறு பொருட்களைத் தேர்ந்தெடுத்து நமக்கான பரிட்டோவை தயார் செய்வோமோ, அதே போல் செயலி மூலம் தயார் செய்யும் வசதியை செய்து கொடுத்தார்கள். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதற்கு முன்பே ஆர்டர் கொடுத்து, கடையில் வரிசையில் காத்திருக்காமல் உணவை உடனே எடுத்துச் செல்லும் வசதி கிடைத்தது. சிப்போட்லேயின் விற்பனையும் இதன் மூலம் அதிகரித்தது.

ஒரு பக்கம் வளர்ச்சி என்றால், இன்னொரு பக்கம் பிரச்சினைகளும், சர்ச்சைகளும் வந்து சேர்ந்தன. பிற உணவகங்களைப் போல, தொழிற்சாலையில் இயந்திரங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு, குளிர்பதனிடப்பட்டு, பிறகு கடையில் திரும்பப் பொறிக்கப்பட்டோ, அல்லது, சுட வைத்தோ தரும் முறை இல்லாமல், நேரடியாக உணவுப்பொருட்களாகக் கொண்டு வரப்பட்டு, கடையில் இருக்கும் ஊழியர்களால், கடையில் தயாரிக்கப்படும் உணவாக இருப்பதால், மனிதத் தவறுகள் நிகழும்பட்சத்தில், உணவின் தரம் சீர்கெடும் வாய்ப்பு இதில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சிப்போட்லே சாப்பிட்ட உணவினால், நோய் தொந்தரவுகள் ஏற்பட்டன என்று சர்ச்சைகள் கிளம்பின. அதனால், சில இடங்களில் கடைகள் மூடப்பட்டு, பிறகு நிலைமை சரியான பிறகு மீண்டும் திறக்கப்பட்டன. ஊழியர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் சேர்க்கப்பட்டனர் என்றொரு சர்ச்சைக்கும் இந்நிறுவனம் ஆளானது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் காணப்படும் ஊழியர்-அதிகாரிகளுக்கிடையே பெரும் சம்பள வேறுபாடு, சிப்போட்லேயிலும் இல்லாமல் இல்லை. மார்ச் 2020இல் இதன் நிறுவனர் ஸ்டீவ், நிறுவனத்தின் அனைத்து பொறுப்பிலும் இருந்து விலகினார். இதன் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக ப்ரையன் நிக்கோல் (Brian Niccol) இருக்கிறார். இவர் இதற்கு முன்பு டகோ பெல் (Taco Bell) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர்.

மாறி வரும் காலத்திற்கேற்ப, வாடிக்கையாளர்களுக்கு என்ன பிடிக்கும் என்று மட்டும் நினைக்காமல், எவ்வகையில் நல்ல உணவை அளித்தால் அவர்களின் மனதில் இடம் பிடிக்கலாம் என்று யோசித்து அதில் வெற்றி பெற்றவர் ஸ்டீவ் எல்ஸ். பிரச்சினைகளைக் கண்டாலும் தளராமல், தரமான இயற்கை உணவுப் பொருட்கள் என்னும் நோக்கில் தொடர்ந்து மாற்றங்களைக் கொண்டு வருகிறது சிப்போட்லே உணவக நிறுவனம். அரிசி, பருப்பு சாப்பிடும் இந்தியர்களுக்கு நெருக்கமான உணவு என்பதால், அமெரிக்கர்கள், மெக்சிகர்கள் மட்டுமின்றி இந்தியர்களும் சிப்போட்லேவை விரும்புகிறார்கள். சிப்போட்லே மாதிரியைப் பின்பற்றி ஆங்காங்கே இந்திய உணவகங்கள் அமைவதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

பொறுப்புத் துறப்பு – இக்கட்டுரையின் நோக்கம் எந்தவொரு உணவு முறையையோ, நிறுவனத்தையோ பரிந்துரைப்பதல்ல.

தரவுகள்:-

https://chipotle.com/

https://en.wikipedia.org/wiki/Chipotle_Mexican_Grill

https://www.crunchbase.com/organization/chipotle-mexican-grill/company_financials

  • சரவணகுமரன்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad