இனிக்கும் இராசவள்ளிக் கிழங்கு
குளிர்பனிக் கூதலை தவிர்க்க இதமான இனிக்கும் இராசவள்ளிக் கிழங்குக் களி அல்லது கஞ்சி. இதன் நிறமோ கவர்ச்சிகரமான் ஊதாநிறம். இவ்வகை கிழங்குகள் பொதுவாக மினசோட்டாவில் இந்திய,சீன, வியட்நாமிய மரக்கறிக் கடைகளில் பிந்திய பனிமாதங்களாகிய் மாசி, பங்குனியில் கிடைக்கும். இவ்விடம் ஊதாக் கிழங்கு அல்லது பெர்பிள் யாம் (Purple Yam) என்றழைக்கப்படும் கிழங்கு, நமது தமிழ்ப் பிரதேசங்களில் மார்கழி, தைதொட்டு நிலத்தில் இருந்து கிண்டி எடுக்கப்படும் சுவையான ஊதாநிறக் கிழங்கு . இது வெவ்வேறு வள்ளிக்கிழங்கு வகைகளிலேயே இராச வம்சமாம்.
இராசவள்ளியானது நிலத்திலும் கம்புத்தடிப் பந்தல்களிலும் படரும் கொடித்தாவரத்தின் மண்ணின் அடியில் காணப்படும் கிழங்கு ஆகும். இதன் இலைகள் தாம்பூல வெற்றிலை போன்று அகன்றவை.. இலையின் தண்டு செவ்வுதா நிறத்தில் இருக்கும். இத்தாவரத்தின் தாவரவிய் பெயர் இலத்தீன் மொழியில் Dioscorea alata. இந்தக் கொடித்தாவரம் தனது ஊட்டச் சத்துக்களையும் (nutrients), மாப்பொருள் (carbohydrates),மற்றும் தண்ணீரையும் வறண்டகாலங்களைத் தாண்ட தனது கிழங்கில் சேகரிக்கும்.
காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
மாபொருள்,
புரதம்,
தயமின்
உயிர்ச்சத்து C
இன்னும் பிற சத்துக்கள்.
இராசவள்ளிக் களி செய்முறை
தேவையானவை:
500 கிராம் வெட்டிக் கழுவி நறுக்கிய இராசவள்ளிக் கிழங்கு
தேவையான அளவு தண்ணீர்
1/2 கோப்பை தடித்த தேங்காய்ப்பால்
1/2 கோப்பை சர்க்கரை அல்லது கரம்புச் சீனி
1/4 தேக்கரண்டி உப்பு
1/4 வனிலா இரசம் (விரும்பினால்)
தயாரிப்பு முறை
இராசவள்ளிக் கிழங்குத்துண்டுகளை நன்கு கழுவி எடுக்கவும். ஒரு ஆழமான பாத்திரத்தில் கிழங்குத்துண்டுகள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கிழங்கு மென்மையாகும் வரை அவிக்கவும். பின்னர் கிழங்கை ஒரு பாத்திரத்தில் வைத்து களியாகும் வரை பிசையவும். இதை ஓரளவு சூடாகச் செய்வதே நல்லது. தொடர்ந்து தேங்காய்ப்பால், சர்க்கரை, உப்புச் சேர்த்து கலந்து அதே சமயம் அடுப்பு எரிவதையும் நிவர்த்தி செய்யவும். அதன் பின் விரும்பினால் வனிலா இரசம் தூவிக் கலந்து சிறிய ஏதனங்களில் பரிமாறலாம். களியாக இல்லாமல் கஞ்சியாக வேண்டின் இன்னும் 1/2 கோப்பை தடித்த தேங்காய்ப்பால் 1/2 கோப்பைத் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
-யோகி