பனி ஏரியில் மீன் பிடிக்கலாமா?
மினசோட்டாவின் நிலப்பரப்பெங்கும் ஏரிகள் நிறைந்து இருக்கின்றன. இந்த நிலப்பரப்பிற்கேற்றாற்போல் இங்குள்ள மக்களின் முக்கியப் பொழுதுபோக்காக மீன் பிடித்தல் உள்ளது. மீன் பிடித்தல் என்றால் கோடைக்காலத்தில் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் போது மட்டுமில்லாமல், குளிர்காலத்தில் நீர்நிலைகள் பனியாக உறைந்திருக்கும் போதும் அதைத் தொடர்வது தான் இங்குள்ள சிறப்பு.
வெப்பமான நிலப்பரப்பிலிருந்து வந்திருக்கும் இந்தியர்களுக்கு, குளிர்காலத்தில் கடைகளுக்குச் சென்று வருவதே பெரிய சாகசமாக இருக்கும். அதுவே மினசோட்டாவின் கடுங்குளிருக்குப் பழகிய உள்ளூர்காரர்கள், பொழுது போகவில்லை என்று குளிரில் உறைந்திருக்கும் ஏரியில் மீன் பிடிக்கச் சென்று விடுவார்கள். இதைப் பார்க்கும்போது ”ஏற்கனவே இந்தக் கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு உயிரைப் பிடித்துக்கொண்டு, பனிக்கு அடியில் தண்ணீரில் நீந்திக்கொண்டிருக்கும் மீன்களை ஏன்யா கொடுமை பண்றீங்க?” என்று கேட்கத் தோன்றும்.
ஆனாலும் இது போன்ற அனுபவத்தைப் பெறுவது, உலகில் மிகச் சில இடங்களிலேயே சாத்தியம். நல்ல குளிரில், நிறைய ஏரிகள் இருக்கும் மினசோட்டாவில் இருந்துகொண்டு இதையெல்லாம் அனுபவிக்காமல் விட்டால் அது பெரும் இழப்பே. பிறகு, இந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல நேர்ந்துவிட்டால், இந்த அனுபவத்தைத் தவறவிட்ட வருத்தம் ஏற்பட நேரிடலாம். அதனால், இங்கு இருக்கும் போதே, ஒரு நல்ல குளிர்காலத்தில் பனி ஏரிக்கு சென்று மீன் பிடிக்க முயற்சி செய்திடுங்கள்.
ஏரிகள் குளிரில் உறைந்து பனியாகி, அதன் மீது வாகனங்கள் ஓட்டும் அளவுக்கு வலுவான நிலையில் இருக்கும். மினசோட்டா ஏரிகள் நவம்பர் மாதத்தில் உறையத் தொடங்கி, மே மாத வாக்கில் பனி உருகி நீராக மாறும். இந்த இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களை, பனி ஏரியில் மீன் பிடிப்பதற்குச் சிறந்த மாதங்கள் என்கிறார்கள். சூரிய உதயத்திற்குப் பின்னான இரண்டு மணி நேரங்களும், சூரியன் மறையும் நேரத்திற்கு முன் இரண்டு மணி நேரங்களும் மீன் பிடிப்பதற்கு உகந்த நேரங்கள் ஆகும். அந்தச் சமயத்தில் தான் மீன் இரையைத் தேடி, நீரின் மேற்பக்கமாகச் சுற்றி வரும் என்பதால், இந்த நேரங்களில் மீன் அகப்படும் சாத்தியங்கள் அதிகம்.
நம் சிறு வாகனங்களை ஏரியின் மீது ஓட்டி செல்வதற்கு, ஏரியின் மேல் உறைபனியின் அளவு குறைந்தபட்சம் ஒரு அடியாகவாவது இருக்க வேண்டும். மீன் பிடிக்கச் செல்பவர்கள், ‘ட்ரில்லிங் ‘ இயந்திரம் கொண்டு உறைபனியில் துளையிட்டு, அந்தத் துளை வழியே தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள். முதல்முறையாகப் பனி ஏரியில் மீன் பிடிக்கச் செல்பவர்கள், இப்படித் துளையிடும் கருவி, மீன் பிடிக்கப் பயன்படுத்தும் உபகரணங்கள் என வாங்கிச் செலவிட வேண்டாம். நமக்கு இதுபோல் மீன் பிடித்தல் தொடர் விருப்பமானதாக இருக்குமோ, இல்லையோ, எத்தனை முறை போவோம் என்று தெரியாது. இது போல் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு மினசோட்டாவின் இயற்கை வளங்களுக்கான துறை (Minnesota Department of Natural Resources) சில ஏற்பாடுகள் செய்து தருகிறார்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் வாரயிறுதிகளில் ‘Take a Kid Ice Fishing’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான மீன் பிடிக்கக் கற்று கொடுக்கும் நிகழ்ச்சிகளை, மினசோட்டாவில் இருக்கும் ஏரிகளில் இலவசமாக நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீன் பிடிப்பதற்கு என நாம் எதுவும் கொண்டு செல்ல தேவையில்லை. பொதுவாக, மீன் பிடிப்பதற்கு என வாங்க வேண்டிய உரிமம் கூட வாங்க வேண்டியதில்லை. துளையிடும் கருவி, மீன் பிடிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் அவர்களே வழங்கிவிடுவார்கள். நாம் குளிர் தாங்கும் உடைகளை அணிந்து சென்றால் போதுமானது.
பனி ஏரியில் மீன் பிடிப்பதற்கு மனரீதியான ஆர்வமும் உடல் ரீதியில் குளிரைத் தாக்குபிடிக்கும் உடைகளும் தேவை. ஆர்வம் இருந்து குளிர் தாங்க முடியாமல் போனால், வருத்தத்துடன் திரும்பிட நேரிடும். அதனால், குளிர் காற்றைத் தாக்குப்பிடிக்கப் பல அடுக்குகளில் உடைகளை அணிந்துகொள்ளுங்கள். கைகள், கால்கள், காதுகள் என உடலின் அனைத்து பாகங்களையும் குளிர்காற்றில் இருந்து காத்திடும்வகையில் உடை அணிவது அவசியம்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், வசதியாக ஒரு வீட்டின் உள்ளே அமர்ந்து கொண்டு, சூடாகத் தேநீர் அருந்தியவாறு, தொலைகாட்சி பார்த்துகொண்டு, பனி ஏரியில் மீன் பிடிக்க முடியும். ஆம், அதற்கான வசதிகளும் மினசோட்டாவில் அமைந்துள்ளன. மீன்பிடி சொகுசு வீடுகள் என இவை வாடகைக்குக் கிடைக்கின்றன. சொகுசான வசதிகள் கொண்ட கண்டெய்னர் வீடுகளைப் பனிஏரியின் மேல் நிறுத்தி, அதில் வாடகைக்குத் தங்கி மீன் பிடிக்கலாம். மீன் பிடிக்கிறமோ இல்லையோ, பனி படர்ந்த ஏரிகளுக்குச் சென்று இப்படி மீன் பிடிப்பவர்களைப் பார்த்துவிட்டு வருவதே நல்ல அனுபவமாகத்தான் அமையும்.
இப்படியாக வித விதமான வகைகளில் பனி ஏரியில் மீன் பிடிக்க நிறைய வாய்ப்புகள் மினசோட்டாவில் இருக்கின்றன. மினசோட்டாவைப் போன்ற குளிர் அதிகமுள்ள இடத்திலிருந்து வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து செல்பவர்கள், ”குளிர்காலத்தில் என்ன செல்வது? வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியிருக்கிறதே!!” என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். அந்தக் கேள்விக்கு இருக்கும் ஏராளமான பதில்களில் ”பனிஏரி மீன் பிடித்தல்” என்பது ஒன்றாகும்.
மேலும் தகவல்களுக்கு
https://www.dnr.state.mn.us/state_parks/ice_fishing.html
- சரவணகுமரன்
Tags: Fishing, ice fishing