நேர்மைக்கு ஒரு பாராட்டு விழா
தமிழ்நாட்டில், ஜெயங்கொண்டம் கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த நீலமேகம், தினமலர் பத்திரிகை ஏஜெண்டாக இருந்து வருபவர். இவர் பேப்பர் விநியோகித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் கிடந்த ஒரு பையில் ரூ. ஒரு இலட்சத்து 53 ஆயிரத்தை கண்டெடுத்தார். உடனே ஜெயங்கொண்டம் போலீஸில் பணத்தை ஒப்படைத்தார். பின்னர் பணம் உரியவரிடம் சேர்க்கப்பட்டது. இதற்காக நீலமேகத்தின் நேர்மையை பாராட்டும் வகையில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, விழா ஒன்றை நடத்தியது. கல்லூரியின் தாளாளர் க. செங்குட்டுவன் அவர்கள் தலைமை வகித்து மாணவ, மாணவியர் தங்கள் வாழ்வில் நேர்மையுடன் வாழ இவரை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் திரு. நீலமேகம் அவர்களுக்கு ஒரு நினைவுப் பரிசும் வழங்கினார். இதில் நீலமேகத்தின் தாய் திருமதி.கனகாம்பாள், மற்றும் கல்லூரியின் செயலாளர் திருமதி. ஹேமலதா செங்குட்டுவன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
நீலமேகம் அவர்கள் பேசுகையில் நேர்மையை மனதில் கொண்டு இந்த செயலை செய்தேன். இதே மாதிரி நீங்களும் என்றும் வாழ்வில் நேர்மையாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று மாணவ, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.