\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

டைகர் கா ஹுக்கும் ..

72 வருடங்கள், எட்டு மாதங்கள், 10 நாட்கள் – இந்தப் படம் வெளியாகும் தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வயது. முக்கால்வாசி மனிதர்களுக்கு, அந்த வயதில் கழிப்பறை செல்வதற்கே துணை வேண்டும். இவரால் மட்டும், இன்னும் அந்த லட்சக்கணக்கான ரசிகர்களை வசீகரிக்க முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 1978இல் வெளிவந்த ‘பைரவி’ கதாநாயகனாக அவரின் முதல் படம். அதைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துப் பெற்று, கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஆறிலிருந்து அறுபது வரை ரசிகர் கூட்டம். அன்று ஆறு வயதிலிருந்தவர்களை இன்றும் ரசிகர்களாக வைத்திருப்பது பெரிய சாதனையில்லை; இன்றும் ஆறிலிருந்து அறுபது வரை லட்சக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப் போட்டிருப்பது உலகில் இன்னொருவருக்கு சாத்தியமா என்பது சந்தேகத்துக்குரியதே. அந்தப் பெருமை அவரே நம்பும், வணங்கும் கடவுளின் அனுக்கிரகத்தால் அவருக்குத் தொடர வாழ்த்துகிறோம்.

பொதுவாக, ரஜினி படம் பார்க்க வருபவர்கள் ஒரு ஆழமான கதையை எதிர்பார்த்து வருவதாக நாம் கருதவில்லை. அவர் படங்களின் கதைகளை விமரிசித்து எழுத வேண்டுமென்ற தேவை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே எழுதினாலும், இரண்டு மூன்று வரிகளில் முடித்து விடலாமென்பதே உண்மை. ஒரு சிலைத் திருட்டுச் செய்யும் ஈவு இரக்கமில்லாத கொலைகாரக் கும்பல். அதனைப் பிடிக்கும் முயற்சியில் ஓய்வு பெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் (வேறு யார், சூப்பர் ஸ்டாரேதான்!) மகன் அஸிஸ்ட்டெண்ட் கமிஷனர் (இந்தப் பட்டத்தைத் தமிழ்த் திரையுலகு பயன்படுத்தியதுபோல தமிழகக் காவல் துறையே பயன்படுத்தியிருக்காது) அர்ஜுன் முத்துவேல் (நடிகர் வசந்த் ரவி) கொல்லப்படுகிறார். அதனை அறிந்த அப்பா, கும்பலைப் பழிவாங்கி, கொத்திப் போட்டு, (முப்பத்திரண்டு துண்டுகளாக, பத்து நாட்கள் தேடினாலும் கிடைக்காத வண்ணம், இத்யாதி, இத்யாதி – இவையெல்லாம் கொத்திப் போட்ட பின்னர் செய்யப்போவதாகச் சொல்லப்படும் வசனங்கள்) வேலையை முடிக்கிறார். அவ்வளவுதான் கதை!

“கொஞ்ச லெவலுக்குத்தான் பேச்சு, 

அப்றம் ஒரே வீச்சுத்தான் .. “

    ரஜினிகாந்த் அவருக்கே உரித்தான ஸ்டைலில், உதட்டை ஒரு பக்கமாகக் குவித்து, ஒரு தலையைச் சீவி – சீப்பால் அல்ல, அரிவாளால் – முடித்த பின்னர் சொல்லும் டயலாக்கை கேட்க நமக்கே விஸில் அடிக்கத் தோன்றுகிறது.

“சொன்னதுக்கு மேலயும், கீழயும் இருக்கக் கூடாது;

சொன்னபடி இருக்கணும்”

    கூல்’லாக வில்லனைப் பயமுறுத்தும் டயலாக்.

“நான் தான் இங்க கிங்க்…”

    மொத்தக் கூட்டத்தையும் நடுங்கச் செய்யும், நிதானமான, தெளிவான, ஆனால், டெர்ரரான வசனம் .. 

“பொண்டாட்டிக்கிட்ட பொய் சொல்லியே 

நரகத்துக்குப் போய்டுவோம் போல … “

“படிச்சாலும், ரிடையர்ட் ஆயிட்டாலும்,

வீட்டிலே மதிப்பு இல்லை …. “

    ரஜினியின் மெச்சூர்டான காமெடிக்குப் பஞ்சமில்லை. 

“குழந்தைங்க கெட்டவங்க ஆய்ட்டா, 

பெத்தவங்க வாழ்க்க நரகம் ஆயிடும் …”

    வழக்கமான ரஜினி பாணி தத்துவ வசனம். அதிகமில்லாவிட்டாலும், ஒன்றிரண்டு இடங்களில் வருவன ரசிக்கத்தக்க விதத்தில் கையாளப்பட்டுள்ளன.

படத்தின் இயக்குனர் ‘கோலமாவு கோகிலா’வின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமான நெல்சன் திலிப்குமார். (அதற்கு முன்னராக சிலம்பரசனை வைத்து எடுத்த “வேட்டை மன்னன்” என்ற படம் திரைக்கு வரவில்லை). அதற்குப் பிறகு, சிவகார்த்திகேயனின் “டாக்டர்” மற்றும் விஜய் நடித்து வெளிவந்த “பீஸ்ட்”, தற்போது “ஜெயிலர்”. திறமையானவர் போல்தான் தெறிகிறது. ஆனால், இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம். பெரும் நடிகர்களின் ஸ்டார்டம் விட்டு வெளிவந்து, தனது கதைகளாலும், வசனங்களாலும், டைரக்டோரியல் டச்’சாலும் காண்பிக்க வேண்டியவை நிறைய உள்ளன. (‘கோலமாவு கோகிலா’ மிகவும் புத்திசாலித்தனமான ஸ்க்ரிப்ட் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்). அவரின் நெடிய பயணம் வெற்றிகரமாக அமைய நம் வாழ்த்துக்கள்.

“டார்க் ஹ்யூமர்” என்கிற வகையில் “ப்ளாக் காமெடி” என்றழைக்கப்பட்டு, படத்தில் சில நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளன. யோகி பாபு சற்றும் தயக்கமில்லாமல் சூப்பர் ஸ்டார் உடன் நடிக்கும் காட்சிகளில் ஓங்கி நிற்கிறார். வாழ்த்துக்கள். ரஜினியின் முக்கியத் திறமைகளில் ஒன்றான ‘நகைச்சுவை’ இந்தப் படத்தில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மையென்ற போதிலும், சில காட்சிகளில் கொலைவெறியை நகைச்சுவையாய்க் காட்டுமிடங்களில் மிளிர்கிறார். சரவணன் போன்றவர்கள் இயல்பாக நடிக்க, அவர்களை மிரள வைக்கும் வண்ணம் பேசுவதையும், முகபாவம் காட்டுவதையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். வி.டி.வி.கணேஷின் பாத்திரம் பெரும் சிறப்பாக அமையவில்லையெனினும், அவரைத் திரையில் பார்த்தாலே நகைப்பதற்கு ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதுபோல் தோன்றுகிறது. நெல்சன் இன்னும் சற்று முயன்றால், மீண்டும் மீண்டும் நினைத்துச் சிரிக்குமளவுக்கு உண்மையான நகைச்சுவைக் காட்சிகளையும், வசனங்களையும் அமைக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது – டார்க் ஹ்யூமர் உட்பட. 

தமன்னா ஒரு பாட்டுக்கு வருகிறார். அதன் பின்னர், அவர் பாட்டுக்குப் போய்விடுகிறார். ரம்யா கிருஷ்ணன் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. இந்த ரோல் எந்தவொரு ஆண்ட்டி ஆக்ட்ரஸாலும் செய்யக்கூடிய ஒன்று. இதற்கு ராஜமாதா நீலாம்பரி தேவையில்லை. மற்றபடி, கௌரவ வேடங்களில் கன்னடப் பிரபலம் ஷிவ் ராஜ்குமாரும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், ஹிந்தி ஹீரோ ஜாக்கி ஷ்ராஃபும் சிறு வேடங்களில் வந்து செல்கின்றனர். பத்திரிகைகளும், விமரிசனங்களும், மீம்ஸ்களும் பேசுமளவுக்கு இம்பாக்ட்ஃபுல் கேரெக்ட்டர்ஸ் எல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் நட்புக்காகத்தான் … சூப்பர் ஸ்டாரின் நட்புக்காகத்தான். மோகன்லாலின் கெட்டப் நமக்கு எழுபதுகளையும், எண்பதுகளையும் நினைவில் கொண்டுவந்து காட்டியது குறித்து மகிழ்ச்சி.

படத்தின் வில்லன் விநாயகத்தைக் குறித்துச் சொல்லியே ஆக வேண்டும். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகச் செய்துள்ளார். மலையாள நடிகரும், “ப்ளாக் மெர்க்குரி” என்ற பெயரில் நடனக்குழு வைத்து நடத்தி வருபவருமான விநாயகம் சில தமிழ்ப் படங்களில் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். விஷாலின் “திமிரு”, சிம்புவின் “சிலம்பாட்டம்” மற்றும் “காளை”, கார்த்தியின் “சிறுத்தை” போன்ற படங்களில் குறிப்பிடப்படும்படியான அடியாளாக நடித்த இவருக்கு, இந்தப் படம் மிகப்பெரிய மைல்கல். இதேபோல் கொடூரமான மனிதர் கதாபாத்திரங்களை விடுத்து, நல்ல நடிப்பிற்கு வாய்ப்பிருக்கும் பாத்திரங்களாக ஏற்றுக் கொண்டு, தமிழ்த் திரையுலகில் குறிப்பிடப்படும்படியான நடிகராக வலம் வருவார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. 

கனக்கச்சிதமான ஒளிப்பதிவு. பல இடங்களில் இருட்டிலேயே காட்சிப் பதிவு செய்ய வேண்டிய கதையமைப்பு. மிகவும் அருமையாகச் செய்திருக்கிறார் விஜய் கார்த்திக் கண்ணன். ரஜினிகாந்த் வசிக்கும் வீட்டின் காட்சிகள், குறிப்பாக காம்பவுண்ட், வாழைமரங்கள், கேட் மற்றும் காரிடார், அருமையாகக் காட்டப்பட்டுள்ளன. நூறு படங்களுக்கும் மேலாக ஸ்டண்ட் மாஸ்ட்டராக இருந்து, “ராயபுரம் மணி”யாக வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த “ஸ்டன்ட் சிவா”வின் மகன் கெவின் குமார் சண்டைக் காட்சிகளை வேகத்துடனும், அழகுடனும் வடிவமைத்து அசத்தியுள்ளார். ஆனால், “எங்கெங்கு காணினும் ரத்தமடா” என்னும் வகையில், அனைத்துக் காட்சிகளிலும் சிவப்பு வண்ண மயம் … 

படத்தின் இரண்டாவது ஹீரோ என்று இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனைச் சொன்னால் மிகையாகாது. அதிலும், பி.ஜி.எம். பல இடங்களில் நம்மை நாற்காலியின் முனைக்கே வரவழைக்கிறது. ‘காவாலயா’ உட்பட பாட்டுக்கள் எதையும் பிரமாதம் என்று சொல்ல இயலவில்லை; ஆனால் மிஸ்ட்டீரியஸ் டைப் ம்யூஸிக் பல இடங்களில் படத்திற்கு உயிரோட்டம் எனவே கூறலாம். அவருக்கு இப்படத்தில் வேலைப்பளு மிகமிக அதிகம். கத்தி, ஈட்டி, கோடாரி, பெரிய பெரிய சுத்தியல்கள், பலவகையான துப்பாக்கிச் சூடு, இன்னபிற ஆயுதங்கள் மனித எலும்புகளையும், தசைநார்களையும், சதையையும் பிய்த்தெறியும்போது எவ்வாறு சத்தம் வரும் என்பதற்கான ஆராய்ச்சியிலேயே அவர் பல நாட்களைச் செலவிட்டிருக்க வேண்டும். ஒருவரை சல்ஃப்யூரிக் ஆசிட் உள்ள பேரலில் அமிழ்த்தி மூடினால் அவரின் மரண ஓலம் எவ்வாறிருக்க வேண்டுமென்பதெற்கெல்லாம் பல நாட்கள் ரிஹர்சல் செய்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. 

பொதுவாக, ரஜினி படங்களைக் குடும்பத்துடன் முகம் சுழிக்காமல் பார்க்கலாம் என்ற காலம் மாறிச் சில வருடங்களாகி விட்டன. ஜெயிலர் அவற்றிற்கு உச்சம் வைத்ததுபோல. குழந்தைகளுடன் பார்க்க முடியாத அளவுக்கு வன்முறை படம் முழுக்க; திரும்பிய பக்கமெல்லாம் ரத்தம் தெறிக்கிறது; பெரிய பெரிய கத்தியும் வாளும் பல மனிதர்களைப் பல விதங்களில் கொன்று குவிக்கிறது. வாளொன்று கழுத்தை வெட்டியெடுக்க, ரத்தக் குளத்தில் தலையற்ற முண்டம் ஒருமுறை குலுங்கி மடிய, பெரியவர்களுக்கே சற்று குலை நடுங்குகிறது. பெரிய பெரிய சுத்தியல் எடுத்துக் கொண்டு, மூன்று பேரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, பொறுமையாக முகத்தின் மீது பலமுறை அடித்து மாய்ப்பது – எழுதுவதற்கு, கேட்பதற்கே சற்றுக் கொடுமையாக இல்லை? தலைகீழாகக் கட்டப்பட்டவரை அப்படியே சல்ப்ஃயூரிக் ஆஸிட் நிரப்பப்பட்ட பேரலில் போட்டு ஓலமிடக் கொலை செய்வது – வாந்தி வருவதைக் கட்டுப்படுத்துவது சற்றுச் சிரமம். வில்லனால் கொல்லப்படுவோம் என்பதை உணர்ந்த வில்லனின் கையாள் தன் கையாலேயே தனது கழுத்தை நிதானமாக அரிந்து கொல்ல .. ஐயோ, சாமி!! எதிரிகள் வீடு புகுந்து கொலை செய்ய இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு, ஸ்னைப்பர்களை ஏற்பாடு செய்து, அவர்களை ஒவ்வொருவராகச் சுட்டு வீழ்த்துவதும், அவர்கள் சுடப்பட்டு இறக்கும் பொழுது மனைவியையும் மருமகளையும் டைனிங்க் டேபிளில் அமர்த்தி வைத்துப் பார்த்து ரசிக்கும்படிப் பணிப்பதும், “டிஷ்யூ பேப்பர்” கொடுத்து முகத்தில் தெறிக்கும் ரத்தத்தைச் சுத்தம் செய்து கொள்ளச் சொல்வதும், துப்பாக்கிக் குண்டால் அடிபட்டு இறந்தவனின் பிணம் அந்த இரண்டு பெண்களின் மடியில் விழ, “மெதுவா, மெதுவா… தள்ளி விட்டுடு..” என்று சாவதானமாகச் சொல்வதும், அவர்களும் அந்தப் பிணத்தைத் தள்ளிவிட்டு அடுத்த பிணத்திற்காகக் காத்திருப்பதும் …..

கடவுளே, இந்த வன்முறைக்கு ஒரு எல்லையே இல்லையா? ஒரு சக மனிதனின் உயிரைப் பறிப்பதென்பது அவ்வளவு சுலபமா? டைரக்டர் சார், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ப்ளீஸ்… இதையெல்லாமும் திரையரங்குகளில் விசில் அடித்து ரசிக்குமளவுக்கு பாமரன் தொடங்கி படித்தவன்வரை பழகி விட்டானே? எவ்வளவு பெரிய வருத்தத்திற்கும், கவலைக்குமுரிய நிலைமை இது? இவை குறித்த பொறுப்பும், கடமையும் எழுபத்தி இரண்டு வயதைக் கடந்த, உச்சம் தொட்ட ரஜினிகாந்த் போன்ற சாதனையாளருக்கு இருக்க வேண்டாமா? அவர்மீது மிகுந்த மரியாதை கொண்ட ஒரு நல்ல ரசிகனாக, இந்த அளவு கடந்த வன்முறை குறித்த வருத்தத்தை வெளிப்படுத்துவது நமது கடமை என்றே கருதுகிறோம். 

படம் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம் – குழந்தை குட்டிகளைக் கூட்டிக் கொண்டு செல்லாவிடில்!! 

வெ. மதுசூதனன். 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad