முத்தமிழ் விழா
மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தினர் 2023ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் விழாவை ‘ஓக்டேல்’ நகரில் அமைந்துள்ள ‘ரிச்சர்ட் வால்டன்’ பூங்காவில் உள்ள வெளிப்புற மேடையில் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று நடத்தினர். இந்த விழாவில் பறை மற்றும் சிலம்பம் பயிற்சிப் பட்டறையைக் காலை நேரத்திலும், மக்களிசை மற்றும் மரபுக் கலை நிகழ்ச்சிகளை மதியத்திற்குப் பிறகும் நடத்திக் காட்டினர்.
தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் பறை பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பறையிசை கற்றுக்கொடுத்தார். அதே போல், தமிழ்நாட்டில் இருந்து வந்து சிலம்பம் கலையைத் திரு. R.T. பாவேந்தன் அவர்கள் கற்றுக்கொடுத்தார். பிறகு நடந்த கலைநிகழ்ச்சிகளிலும் இவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் பண்ருட்டிப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு. பண்ருட்டி பாண்டு அவர்கள் தலைமையில் தமிழ் மரபு கலைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தமிழ் மரபுக் கலைகள் குறித்தும், அவற்றின் இன்றைய நிலை குறித்தும் பேச்சாளர்கள் பேசினார்கள்.
இவ்விழாவில் மினசோட்டா செனட்டர் திரு. ஜான் ஹாப்மென் அவர்கள் கலந்துகொண்டு கலைஞர்களை வாழ்த்திப் பேசினார். அவர்களுக்கு நினைவு பரிசாகப் பறை வழங்கப்பட்டது. அவரும் பறையை மேடையில் இசைத்துக்காட்டி, பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெற்றார்.
திரு. R.T. பாவேந்தன் அவர்கள் ‘பரதம் தமிழர் கலையே’ என்ற தலைப்பில் அவரது தந்தையார் செய்த ஆய்வை, இங்குள்ள கலைஞர்களின் செயல்முறை ஆட்டங்களின் மூலம் விளக்கிப் பேசியது, பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. பரதத்தில் உள்ள ஒவ்வொரு ஆட்ட நுணுக்கங்களும் எவ்வாறு தமிழர்களின் பிற கலைகளான கரகம், சிலம்பம், பறை, ஒயிலாட்டம் ஆகியவற்றில் உள்ளன என்பதை அந்தந்த ஆட்டத்தில் இருந்து எடுத்து காட்டி விளக்கியது சிறப்பாக இருந்தது.
இளம் சிறார்களின் கைச்சிலம்பம், தெருக்கூத்து, பெரியோர்களின் பறையிசை, மரபு இசைப் பாடல் நிகழ்ச்சிகள் என மாலை வரை நீண்ட இந்த விழா, வந்திருந்த விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டதுடன் நிறைவு பெற்றது.
- சரவணகுமரன்