இடி, மின்னல், மழை மங்கை!
நெற்றிப் பரப்பினில்
சுற்றிப் பறந்திடும்
கற்றைக் கூந்தலைச்
சற்றே விலக்கிச் சிரித்தாள்!!
விலக்கலில் வழிந்த
வியர்வையும் மெதுவாய்
விழிகளைத் தாண்டி
விழுவதில் விழுந்தேன்!!
நாசிகளைக் கடக்கையில்
சுவாசித்துத் தணிந்ததால்
வீசிய கனலது
தூசியாய் மேகமாகியது!
மங்கையின் வியர்வையும்
பொங்கிய கனலினால்
தங்கியே வான்புக
கங்கையாய்ப் பொழியுதோ?
கண்ணதன் ஒளியுமே
மண்ணிதின் மீதிலே
எண்ணத்தின் வேகமாய்
மின்னலாய்ப் பாய்ந்ததோ?
கன்னியவள் குலுங்கிடக்
கடலலையும் குதித்திடுமோ?
என்னவளும் சிணுங்கிட
இடியதுவும் சினந்திடுமோ?
மழையும் பொழிந்திட
மனமும் நினைந்திடுது!
மடையிடை நனைந்ததினம்
மலரும் நினைவானது!
கடந்த காலமது
கண்களிலே திரையாடுது!
கருமையான வானமது
கருணையின்றித் தொடர்ந்திடுது!
இன்றும் இடிக்கிறது!
இனியவளும் இருக்கவில்லை!!
இதயம் துடிக்கிறது!
இனியவளும் கேட்கவில்லை!!
– வெ. மதுசூதனன்.