நிரந்தரப் போர் நிறுத்தம் சாத்தியமா?
காஸா பகுதியில், ஏறத்தாழ 14,000 நபர்கள் உயிரிழந்த நிலையில், கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்திற்கு முனைந்து வருகின்றன. போர் நிறுத்தத்திற்கு உடன்பட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர், இருதரப்பும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம், காஸாவைக் கட்டுப்படுத்தும் பயங்கரவாத ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலின் முக்கியமான பகுதிகளில் மிகக் கொடுரமான அதிரடித் தாக்குதலை நிகழ்த்தியது. வான், கடல், மற்றும் தரை வழியாக இஸ்ரேல் நாட்டிற்குள் ஊடுருவிய ராக்கெட்டுகள் மற்றும் பாராகிளைடர்கள், படகுகள், மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் தாக்கியதில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250க்கும் மேற்பட்டவர்கள் பணயக் கைதிகளாக அபகரித்துச் செல்லப்பட்டனர். பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பன்நெடுங்காலமாக நடத்தி வந்த அடக்குமுறைத் தாக்குதல்களை நிறுத்தவும், தங்களுக்கென, சுதந்திரமான நிலப்பகுதியைக் கோரியும் இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தியதாக ஹமாஸ் தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக, 48 மணி நேரத்தில், சுமார் 3 லட்சம் இராணுவ இருப்பு வீரர்களை ஒருங்கிணைத்துத் திரட்டிய இஸ்ரேல், காஸா பகுதியிலிருந்து ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டவேண்டுமென்ற நோக்கத்துடன் போரை அறிவித்தது. ‘நாம் போரில் இறங்கியுள்ளோம். இது தற்காலிக, எதிர்ப்பு நடவடிக்கை அல்ல; ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரையில் இது ஓயப்போவதில்லை’ என்று வெளிப்படையாக அறிவித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அதனைத் தொடர்ந்து, மிகத் தீவிரமான தாக்குதல்களில் இறங்கிய இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில், குறிப்பாக காஸாவில் முதல் நாளிலேயே 200க்கும் மேற்பட்டோரைக் கொன்றது; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
‘ஆபரேஷன் அயர்ன் ஸ்வோர்ட்’ (Operation Iron Sword) என்ற பெயரில் ‘இஸ்ரேலியப் பாதுகாப்பு படைகள்’ (Israeli Defense Forces – IDF) முதல் இரண்டு வாரங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில், பாலஸ்தீனிய பொதுமக்கள் பலர் மாண்டனர். சுமார் 140 சதுர மைல் அளவிளான காஸா பகுதியில் வாழும் 10 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தினியர்களை, அங்கிருந்து வெளியேற, 24 மணிநேரம் மட்டுமே அவகாசம் கொடுத்திருந்தது இஸ்ரேல். பெண்கள், முதியவர்கள் என பாகுபாடின்றி, போட்டிருந்த துணிகள் தவிர வேறெதுவும் எடுத்துச் செல்ல முடியாமல், தஞ்சமடைய இருப்பிடம் இல்லாமல், குழந்தைகளுடன் திக்குத் திசையின்றி அலைந்தனர் அங்கிருந்த மக்கள். இவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிடாதவாறு ஹமாஸ் அமைப்பினர் தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்த இஸ்ரேல், பயங்கரவாதிகளுக்கு அவகாசம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் விடாமல் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களுடன், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்று சொல்லி, பள்ளிக்கூடம், மருத்துவமனை, அலுவலகங்கள் என்ற பாகுபாடில்லாமல் தரைவழி மற்றும் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்தது IDF. ஆயிரக்கணக்கானோர் கொத்து, கொத்தாக மடிந்தனர். அங்கிருந்த அகதி முகாம்களில் பணியாற்றி வந்த 90க்கும் அதிகமான ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த ஊழியர்களும் IDF தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
காஸா பகுதியை முற்றிலுமாக முடக்கவேண்டுமென கருதிய இஸ்ரேல், அப்பகுதிகளுக்கான மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றை நிறுத்தியது. செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. போன்ற அமைப்புகள் எடுத்துச் சென்ற உணவு, மருந்துகள் மற்றும் உதவிப் பொருட்கள் எதுவும் காஸாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. உணவு, தண்ணீர், பொதுச் சுகாதாரம் ஏதுமின்றி பொதுமக்கள் தவித்தனர். மருத்துவ உதவியின்றி சிறுவர்களும், முதியவர்களும் கண் முன்னே மாண்டது கண்டு செய்வதறியாமல் வெம்பித் தவித்தனர் குடும்பத்தினர். வெடிகுண்டு, ஏவுகணை தாக்குதல்களில் காயமுற்ற பொதுமக்கள், மருத்துவமனைகளுக்குச் செல்ல அவசர உதவி, ஆம்புலன்ஸ் வண்டிகள் இயங்குவதற்குக் கூட எரிபொருளின்றி, பலர் மாண்டனர். மருத்துவமனைகளில், ஹமாஸ் பயங்கரவாதிகள், ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் குவித்துவைத்துள்ளன என்று சொல்லி மருத்துவமனைகளைக் குறி வைத்துத் தாக்கி அழித்தது IDF. காஸா பகுதியிலிருந்த 46 மருத்துவமனைகளில், இன்று 12 மட்டுமே ஓரளவுக்குச் செயல்படுவதாகவும், மற்றவை நிர்மூலமாக அழிக்கப்பட்டுவிட்டன என்றும் பதிவிட்டிருந்தார் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஒருவர். ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலை நோக்கி செலுத்திய ஏவுகணைகள் பழுதாகி காஸா பகுதி மருத்துவமனைகளில் வெடித்துவிட்டதாக இஸ்ரேல், பழியைத் திசைத் திருப்பியது. இதனை உண்மையென நம்பி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஹமாஸுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. பின்னர், இஸ்ரேல் இத்தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியதாகச் செய்திகள் வெளியாயின.
நவம்பர் 20 நிலவரப்படி, உயிரிழந்த பாலஸ்தீனியர்களில், 40 சதவிகிதத்தும் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். வருங்காலத்தில், பாலஸ்தீனத் தலைமுறை தலையெடுக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் பொதுமக்கள், பொது இடங்களை அழித்துவரும் நடவடிக்கைகள், போர் குற்றங்களாகும் என்று ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்த பின்பும் கூட அந்நாடு தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை. மாறாக, ஐ.நா. தலைவர், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறார் என்று கூறி அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டுமென அறைகூவலிட்டார் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர். ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல், பாலஸ்தீனப் பொதுமக்கள் மீது மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆவணப்படுத்தித் தெரிவித்தது. ஜெனிவா ஒப்பந்தம், பொதுமக்களை நேரடியாகத் தாக்கிக் கொல்வதும், பிணைக் கைதிகளாக அபகரித்துச் செல்வதும் போர்க் குற்றங்கள் என்கிறது. அந்த அடிப்படையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேலிய அரசு இரண்டுமே போர்க் குற்றங்களைச் செய்துள்ளன எனலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (The International Criminal Court (ICC)) இதற்கான வழக்குத் தொடரப்படவுள்ளது.
ஹமாஸ் தாக்குதல் நடைபெற்றவுடனே, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள், இஸ்ரேலுக்குத் துணை நிற்பதாகத் தெரிவித்தன. அது போலவே, பன்நெடுங்காலமாக, இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி வந்த கிழக்கு அரேபிய நாடுகள் சில, ஹமாஸ் நடத்திய தாக்குதலை, தங்கள் மீதான அடக்குமுறையை மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல், உய்யநிலையில் (threshold) வெடித்த வெடிகுண்டாகவே கருதுகின்றனர். பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் குற்றச்செயல்கள், அடக்குமுறை, அநீதியான செயல்பாடுகளை அமைதியாக வேடிக்கைப் பார்த்து வந்த சர்வதேச நாடுகள், இது போன்ற பதட்டமானச் சூழலுக்கு வழிவகுத்துவிட்டதாக பாலஸ்தீன வெளியுறவுத் துறை குற்றஞ்சாட்டியது. ‘அல் அக்ஸா’ மசூதிக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அட்டூழியம் செய்ததும், பாலஸ்தீனர்கள் மீது தொடர்ந்து நடத்திவந்த அத்துமீறல்களும் தான், ஹமாஸின் இந்தப் பதிலடி என்றது கத்தார். பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் சுதந்திரமடையும் வரை பாலஸ்தீன விடுதலை படையினருக்கு உதவுவோம் என்று ஈரான் கூறியது.
போர்நிறுத்தம் குறித்து ஜோர்டான் அரசு முன்னெடுத்ததில், ஐ.நா. பொதுச்சபை ‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய காசா நெருக்கடியில் சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்’ பற்றிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது இத் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும், 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாமல் தவிர்த்துவிட்டதாகவும் முடிவுகள் வெளியாகின. இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் போர்நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த 14 நாடுகளில் அடங்கும். இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கத்தார் அரசு முனைந்து பங்காற்றியதன் பலனாக, நவம்பர் 20ஆம் நாள், இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு (4 நாட்கள்) ஒப்புக் கொண்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 150 பாலஸ்தீனியப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் விடுவிக்கப்படுவர் எனவும், அதற்குப் பதிலாக, ஹமாஸ் போராளிகளிடம் பிணைக் கைதிகளாக இருந்த 50 பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் முடிவானது. இந்தச் சமயத்தில் செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா அமைப்பின் உணவு, மருந்துகள், எரிபொருள், குளிர்காலத் துணிமணிகள் போன்ற உதவிப் பொருட்கள் காஸா பகுதிக்குள் அனுமதிக்கப்படும்.
கடந்த நாற்பத்தியைந்து நாட்களாக, உயிருக்குப் பயந்து, உறைவிடம் துறந்து, பிணக் குவியல்களுக்கு நடுவே அஞ்சியஞ்சி வாழ்ந்து வந்த பாலஸ்தீனியர்களுக்கு, 4 நாட்கள் சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் தரப்பட்டிருக்கும் ஒரு சிறிய இடைவேளையாகவே இது பார்க்கப்படுகிறது. இது நிரந்தரப் போர் நிறுத்தமல்ல என்பதை இஸ்ரேல் மிகத் தீர்மானமாகச் சொல்லிவிட்டது. ஆனால், தங்களது உலகச் சிறந்த உளவுத் துறையை சின்னாபின்னமாக்கி விட்ட ஹமாஸ் மீது பழிவாங்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மிகுந்திருந்த இஸ்ரேல், சீற்றம் குறைந்து ‘இரு நாடுகள்’ என்ற தீர்வைப் பரிசீலிக்க வேண்டுமென உலகநாடுகள் விரும்புகின்றன. மூன்றாவது உலகப்போரைத் தாங்கும் நிலையில் எந்த நாடும் இன்று தயாராகயில்லை.
இதனிடையே எந்தவொரு நாடும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போராக மட்டும் இதைப் பார்க்கவில்லை. இந்தப் போரினால் தங்களது லாப / நஷ்டங்களை, குறிப்பாகத் தங்களது அரசியல் எதிர்காலத்தைப் பற்றி கணக்கிடுவதில் குறியாகவுள்ளன. இவை பெரும்பாலும், மொழி, மதம், இனம் அடிப்படையில் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலுக்குள்ளேயே, பாலஸ்தீனர்கள் மீதான் இஸ்ரேலின் தாக்குதலை, போரை ஆதரிக்காத பல மக்கள் உள்ளனர். சமூக ஊடகங்களில் போரை ஆதரித்து ஹீப்ருவில் வரும் செய்திகளை விட, ஹிந்தி மொழியில் அதிக ஆதரவுக் கருத்துகள் பகிரப்படுகின்றன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், பாலஸ்தீனர்கள் மீதான போரை எதிர்த்து, பொதுமக்கள் போராட்டங்கள் நடத்திய போதும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இவ்வகையான போராட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
‘ஜித்து கிருஷ்ணமூர்த்தி’யின் சித்தாந்தப்படி, எந்த அமைப்பும், நிறுவனமும், பொதுச் சபையும், அரசாங்கமும் பூமியில் அமைதியைக் கொண்டுவர இயலாது. நாம் ஒவ்வொருவரும் மனதளவில் மாற்றம் தேடும் வரை, நிரந்தரமான போர்கள் இருக்கும்; பூமியில் அமைதி இருக்காது. பிடிவாதம், இலட்சியங்கள், நம்பிக்கைகள் இல்லாமல் அமைதியாக வாழ இயலாது என்ற நிலையில் நாமுள்ளோம்; மனிதர்களுள் பிரிவினைக்கு இவையே காரணங்கள். அதன் வழியாக நாம் ஒவ்வொருவரும் இந்தக் குழப்பமான, முரண்பாடான, மிருகத்தனமான சமூகத்தை உருவாக்கியுள்ளோம். வேறொரு அமைதி இயக்கத்தை, நிறுவனத்தை, அமைப்பை உருவாக்க முனைவதில் பயனில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது மூளைக்குள்ளும், மனதுக்குள்ளும் விதைக்கப்பட்டிருக்கும், பதனப்பட்டிருக்கும் (conditioned) நம்பிக்கைகளை ஆராய்ந்து அவற்றிலிருந்து விடுபடவேண்டும். இல்லையெனில் இஸ்ரேல்-பாலஸ்தீனம், ரஷ்யா-உக்ரைன், அமெரிக்கா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் என எங்கோவொரு இடத்தில், எதோவொரு வடிவில் முரண்கள், போர்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
ரவிக்குமார்.