நானே சிந்திச்சேன் – திரைப்படக் குறியீடுகள்
நேற்று நானும், ஜனாவும் வரதுவைப் பார்க்கப் போயிருந்தோம். அவன் வீட்டருகிலிருக்கும் ‘ஸ்வீட் வாட்டர் டிரெய்லில்’, ‘டிரக்கிங்’ கிளம்பினோம்.
கொஞ்ச தூரம் நடந்ததும் ஜனா பேச்சைத் துவங்கினான்.
‘என்ன மச்சி.. உங்காளு படத்துக்குப் பூஜை போட்டாங்க போலிருக்கு?’ என்றான் என்னைப் பார்த்து.
‘எந்தப் படத்தடா சொல்ற?’, அறிந்தும் அறியாமல் கேட்டேன் நான்.
‘உங்காளுன்னு அவன் என்ன ஆலியா பட்டையா சொல்லப்போறான்.. ஆண்டவரத்தான்..’, வரது பல்ஸைப் பிடித்துவிட்டான்.
‘ஓ.. ‘தக் லைஃபை’ சொல்றியா. அப்டியே ‘தக்’ லுக்கு இல்ல?..’
‘என்ன பெரிய ‘தக்’ லுக்கு… வழக்கம் போல காப்பி தானே?’ ஜனா கடுப்பேத்தினான்.
‘என்னடா போற போக்குல மணி சாரை இப்டி பொசுக்குனு போட்டுத் தள்ளிட்ட?’ என்று வருத்தப்பட்டான் வரது.
‘எங்கருந்துடா கிளம்பி வர்றீங்க? 30 செகண்டு ஓடற டீசரைப் பாத்துட்டு இது காப்பி, ஹார்லிக்ஸுன்னு சொல்லிகிட்டு.’
ஜனா ‘காப்பியோ, கீப்பியோ.. குறீயீட்டைக் கவனிச்சல்ல? ஏற்கனவே சர்ச்சையாயிடுச்சு.. இப்ப இதெல்லாம் தேவையா?’ என்று லேசாக ஜகா வாங்கினான்.
‘இரு ..இரு.. மொதல்ல இந்த காப்பி விஷயத்த முடிச்சிடுவோம்.. சொல்லுடா .. என்ன காப்பியைப் பாத்த?’ விடவில்லை நான்.
‘ஏன்டா இவ்ளோ சீரியஸ்னஸ்ஸூ.. அதான், இந்த ‘ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’ படத்துல ‘மார்க் ஹேமல்’, ‘ஹூடி’ போட்டுகிட்டு வருவாரே, அது மாதிரியே இருந்துச்சு..’
‘போடாங்…’
‘ஸ்டாப், ஸ்டாப் … நோ பேட் வேர்ட்ஸ்.. வன்மம் கூடாது’ என்று பதறினான் வரது.
‘காத்துல பறக்கிற போர்வை தோள்ல வந்து இறங்குற மாதிரி ஒரு சீன்.. அஞ்சு செகண்ட் கூட இருக்காது.. அதுக்கு மெனக்கெட்டு ‘ரிவர்ஸ் லிப் சிங்க்’ பண்றதெல்லாம் வேற லெவல் தெரியுமா?’
‘அதான் ஒரு பாட்டையே அப்டி பண்ணிட்டாரே.. ‘மன்மதன் அம்பு’ படத்துல..’ வரது ஞாபகப்படுத்தினான்.
‘அப்ப? அதப் பாத்து இதக் காப்பியடிச்சிட்டாருன்னு சொல்லுவியா? ‘குணா’வைப் பாத்துதான் ‘காதல் கொண்டேன்’ வந்தது.. ‘மும்பை எக்ஸ்பிரஸ்’லருந்து வந்ததுதான் ‘சூது கவ்வும்’.. ‘ஆளவந்தான்’ தான் ‘நானே வருவேன்’ க்கு மூலம்.. அப்ப அதெல்லாம் காப்பின்னு சொல்லலையே எவனும்.. 2015 ‘உத்தம வில்லன்’ மனோ கேரக்டர் அப்படியே 2017ல வெளிவந்த ‘சாம் எலியட்’டோட ‘த ஹீரோ’ படத்துல வந்துதே, ஒருத்தனும் பாக்கலையா? அவ்ளோ ஏன்? ‘ஆளவந்தான்’ அனிமேஷன் சீன்லருந்து இன்ஸ்பையர் ஆகி ‘கில் பில்’ல ரிவன்ஞ் சீன் வெச்சதா, ‘குவெண்டின் டாரண்டினோ’ சொல்லிருக்காரு தெரியுமா உனுக்கு?’’
’டென்ஷனாவதடா, வோல்ட்டு.. ஒன்னு ரெண்டு அப்படி இப்படின்னு வர்றது தான்… ஆனாலும் இந்தக் குறியீடு தான்.. ‘
‘என்ன, என்ன குறியீட்டைக் கண்டுட்டே..சொல்லு..’ என்று ஜனாவை முறைத்தேன்.
‘ரங்கராய, சக்திவேல் நாயக்கன்’ .. இது தேவையா இப்ப?
‘குறியீடுன்னா என்னன்னு தெரியுமா மொதல்ல? ஒரு கருத்தை, வெளிப்படையா, வார்த்தைகளால் சொல்லாம ஒரு சீன்ல, கேரக்டர் இல்லைன்னா பின்னணி மூலமா, ரொம்ப மென்மையா தெரியப்படுத்தறது தான் குறியீடு.. Semiotic இல்லைனா Symbolism ன்னு சொல்லலாம்.. பழைய சினிமாலெல்லாம் ஹீரோ-ஹீரோயின் கிஸ் பண்ண கிட்ட வந்ததும், ரெண்டு பூக்கள் ஒரசிக்கிறத காமிக்கிறதும், வில்லன் ஒரு பொண்ணை ரேப் பண்ணிட்டான்னு சொல்ல புலி மான் மேல பாயற ஃபோட்டோவைக் காமிக்கிறதும் ஒருகாலத்துல குறியீடா பயன்படுத்தினாங்க.. அது ‘denotative semiotics’. ‘பரியேறும் பெருமாள்’ கிளைமேக்ஸ்ல பால் கலந்த டீ (காபி) கிளாஸ், பால் கலக்காத டீ (காபி) கிளாஸ் நடுவிலே பூ விழுந்து கிடக்கும்.. இது பாக்கறவனுக்கு பலவித புரிதலைக் கொடுக்கும்.. ஆனா, பின்னாடி வர்ற அந்தப் பாட்டுல ‘ஒசத்தி கொறச்சல்’னு வர்ற வரி, இதத்தான்டா சொல்ல வர்றேன்னு, லேசா ஆடியன்ஸைக் கையைப் புடிச்சு இழுத்துட்டு போற மாதிரியிருக்கும்.. ஆனா, ‘தசாவதாரத்’துல கமல், அசின் கிளைமேக்ஸ்ல பேசிக்குவாங்க ‘கடவுள் இல்லன்னு சொல்லல, இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்’ னு டயலாக் முடிஞ்ச ஒடனே, அலையோசை சத்தத்துல கேமரா மெதுவா கீழே இறங்கி பெருமாள் சிலையைக் காட்டும்..’இருக்குனு அர்த்தமா, இல்லன்னு அர்த்தமா? ஒரு வேளை, இருக்கு ஆனா கல்லா இருக்குனு’ சொல்ல வர்றாங்களான்னு பாக்கறவங்களுக்கு கேள்வி எழணும்.. இதெல்லாம் தான் ‘Connotative semiotics’.
‘அதெல்லாம் நான் பாக்கல மச்சி ..கிளைமேக்ஸ்ல இதெல்லாம் எடுபடாது..’ எனச் சமாளித்தான் ஜனா.
‘அதென்னவோ கரெக்டு தான்.. ‘இந்தச் சண்டையெல்லாம் வேணாம்டா. இத்தோட போதும்டா…போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடா’ன்னு கிளைமேக்ஸ்ல சொன்னது எவனுக்கும் புரியல.. ‘போற்றிப் பாடடி பொண்ணே.. தேவர் காலடி மண்ணே’ மட்டும் மனசில நின்னுடுச்சு.. அதுவே, வானவராய ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்’ யாரையும் உறுத்தல, இல்லையா? ‘ஹேராம்’ படத்துல தனிப்பட்ட இழப்புகள், மதவெறியாய் உருவெடுத்து, மாறிக் குழம்பும் ஒருவன், நண்பனின் மரணத்தால் மனம் மாறுவதாக 200 நிமிஷம் காமிச்சதை ஏத்துக்காத மக்கள், ‘ஐயங்கார் மூக்கு வேணும்னு ஹீரோயினைத் தேடிப் பிடிச்சோம்’னு அவர் 20 செகண்ட் பேசினத கெட்டியாய்ப் புடிச்சிகிட்டாங்க.. ஜாதி வெறியன்னு முத்திரை குத்திட்டாங்க.’
‘ஜாதி இல்லைனாலும் பொண்ணுங்களை இப்டி இன்சல்ட் பண்லாமா?’ என்று வரது கேட்டான்.
‘அப்ப, ‘படையப்பா’வோட சாத்விகம், பிரச்சோதகம், பயானகம் இதெல்லாம் எப்படிங்க சார்?’
‘சரி சரி .. குறியீட்டுக்கு வா.. ரங்கராய சக்திவேல் நாயக்கர் குறியீடா இல்லையா?’
‘இவ்ளோ சொல்லியும் உனக்குக் குறியீடுன்னா என்னன்னு புரிய மாட்டேங்குது.. ஹாலிவுட் படம் ‘ஜோக்கர்’ பாத்திருக்கியா .. 2019ல வந்தது.. அதுல, நாலஞ்சு பசங்க சேந்து ‘ஆர்தரை’, அடிச்சிடுவாங்க.. நிலை குலைஞ்சு கீழே விழுந்து வலியில துடிச்சிகிட்டே இடுப்பில கை வெப்பாரு.. சின்னப் பசங்களுக்கு வேடிக்கை காட்ட சட்டைல குத்தியிருக்கிற பூவில இருந்து தண்ணி வர்ற மாதிரி சின்னதா ‘வாட்டர் பம்ப்’ செட் பண்ணி வெச்சிருப்பாங்கல்ல, அதில கை பட்டு பூவிலேருந்து தண்ணி கொட்டும்.. கோமாளியோட வலி கூட மத்தவங்களுக்கு வேடிக்கையா இருக்குங்கிறத சொல்ற மாதிரியான ‘விஷுவல்’ அது.. அந்த நேரத்துல ‘ஜோக்கர்’னு டைட்டில் வரும்.. அது குறியீடு.. அதே மாதிரி டைட்டில் சீனை வெச்சு இன்னொரு எக்ஸ்சலண்ட் குறியீடு ‘உத்தம வில்லன்’ல வரும்… கவனிச்சிருக்கிறியா?’
‘சாகாவரம் வேண்டுமேனு கேப்பாரே அதுவா’? ஜனா அப்பாவியாய்க் கேட்டுவிட்டு, வரது கையிலிருந்த வாட்டர் பாட்டிலை வாங்கித் தண்ணி குடித்தான்.
‘உன்னல்லாம் திருத்தவே முடியாதுடா.. அந்தப் படத்துக்குள்ளேயே ஒரு படம் எடுப்பாங்க.. அதும் பேரும் ‘உத்தம வில்லன்’ தான்.. எடுத்த வரைக்கும் ‘டைரக்டர்ஸ் கட்-ரஷ்’ போட்டுப் பாப்பாங்க.. அந்தச் சமயத்தில , சொக்கு, யாமினிக்கிட்டயிருந்து வந்த லெட்டரைப் படிப்பாரு.. யாமினி, மனோவோட கல்யாணத்துக்கு முன்ன இருந்த ரிலேஷன்ஷிப்ல பிறந்த குழந்தையைப் பத்தின லெட்டர்… அதைக் கேட்டுகிட்டே மனோ, ஸ்கிரீன் பக்கத்துல வந்து நிப்பாரு.. ஸ்கிரீன்ல பாதி டைட்டில் மட்டும் தெரியும்.. அதாவது ‘வில்லன்’ ங்கிற வார்த்தை மட்டும் தெரியும்.. ஃப்ரேம்ல, ஃபோர் கிரவுண்ட்ல மனோ, பேக் கிரவுண்ட்ல ‘வில்லன்’ங்கிற வார்த்தை .. அது வரைக்கும் ஹீரோவா இருந்த மனோ வில்லனா தெரிவாரு… அந்த நேரத்துல மனோ லேசா திரும்ப, மனோவோட நிழல் ஸ்கிரீன்ல விழும்.. ‘வில்லன்’ வார்த்தைல ‘ன்’ ஒற்றெழுத்துல செவப்பு கலர் புள்ளி, மனோ நிழலோட மூக்கு மேல விழும்.. அந்த நேரத்துல சொக்கு, ‘நானும் உங்க மாமனாரும் சேர்ந்து தான் நீங்க கொடுத்த லெட்டரை யாமினிகிட்ட கொடுக்கலை’ன்னு சொல்வாரு.. அதுவரைக்கும் ஹீரோவா, வில்லனா தெரிஞ்ச மனோ, அந்த நிமிஷம், ஜோக்கரா, ஒரு கோமாளியா தெரிவாரு.. ஒரு நிமிஷ, அழகான, கவிதைக் குறியீடு அது..எதையாவது பார்த்தவுடனேயே வெளிப்படையாகத் தெரிஞ்சுதுன்னா அது குறியீடே இல்ல.. அது திணிப்பு..”
‘ஹைய்யோ.. எப்புட்றா மச்சி.. இதெல்லாம் புரியறதுக்கு எங்களுக்குப் பத்து வருஷமாவும்’ என்றான் வரது.
‘இப்டிதான் நம்மவர் டிரஸ்ஸைப் பத்தியும் சொல்றாங்க..என்ன பண்றது? ஒர்த்தர் போடற டிரஸ்ஸே அவங்கள அடையாளம் காட்டும் குறியீடுன்னு சொன்னது யாரு தெரியுமா?”
‘மூடி..’
‘யாரு?’ அதிர்ந்தான் வரது.
‘மூடியைக் குடுடா.. எவ்வளவு நேரமா பாட்டிலை மூடாம கையிலேயே புடிச்சிகிட்டு வர்றது’ பரிதவித்தான் ஜனா.
‘அவரு போடாத காஸ்டியூமா? அதெல்லாம் புரிஞ்சுடுச்சா எல்லார்க்கும்.. மேக்கப் டீம், காஸ்டியூம் டீம், ஃபோட்டோகிராஃபர் டீம்னு கலக்குற அவருதான் மிகச் சிறந்த நடிகர்னு, இன்னொரு நடிகரே ஒத்துக்கிட்டாரு தெரியுமா?’
‘அதெல்லாம் நீ கேக்கக்கூடாது.. நீ எப்டி கேக்கலாம்? கேக்கக்கூடாது செல்லம்.. ’ சிரித்தான் வரது.
‘சரி குறியீட்ட விடு.. ஜாதியெல்லாம் இப்ப தேவையா? தொடர்ந்து, தானே சர்ச்சையைக் கிளப்பிவிடற மாதிரியிருக்கு’, ஜனா விடுவதாயில்லை.
‘சபாஷ் நாயுடு’ன்னு படத்தோட டைட்டில் வெச்சா அவங்களைக் கிண்டல் பன்றமாதிரியாயிடுமா? இல்ல, ‘சிங்காரவேலன்’ படம், அந்தப் பேருக்காகவே கம்யூனிசப் படமாயிடுமா? கம்யூனிசம் பேசின படத்துக்கு ‘அன்பே சிவம்’ னு டைட்டில்.. 2004 ல ‘விருமாண்டி’யா மாறிய அதாவது மாற்றப்பட்ட ‘சண்டியர்’, 2014ல் ‘சோழத்தேவன்’ அப்படிங்கிறவரோட டைரக்ஷன்ல ‘சண்டியர்’ ஆகவே வந்துது..இது ரெண்டுத்துக்கும் முன்னாடி, 1995 ஆம் வருஷம் ‘வாரார் சண்டியர்’னு ஒரு படம் வந்துது.. ‘சின்னக் கவுண்டர்’ 1992ல வந்துது.. ‘மறவன்’ 1993ல வந்துது.. சரி அதெல்லாம் பழசுன்னு விட்டுடலாம்.. இப்போ 2019ம் வருஷம் ‘தேவராட்டம்’னு படம் வந்து நல்லா ஓடுச்சு.. இன்னும் கேட்டா அந்த டைரக்டர் எடுக்கிற ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ எல்லாமே ஜாதி அடிப்படையிலான கதாபாத்திரம் தான்..’
‘மத்தவங்க நடிக்கிறதுக்கும் சீனியர்ஸ் நடிக்கிறதுக்கும் வித்தியாசமிருக்கில்ல? அரசியல், மதங்களை இவங்க எல்லாம் அவாய்ட் பண்லாமே?’ மடக்கினான் வரது.
‘லால் சலாம்’ அரசியல் இல்லையா .. ‘செவ்வணக்கம்’னு யாரு சொல்லுவாங்க பொதுவா? காலா, கபாலி, சர்க்கார் எல்லாமே அரசியல் தான்… ‘காலா’ படம் அனெளன்ஸ் பண்ணவுடனே ஹாஜி மஸ்தானின் குடும்பத்திலேர்ந்து ஒரு கண்டனம் வந்தது.. ஹாஜி மஸ்தானைக் குறிக்கிற மாதிரி எந்தக் கருத்தும் இருக்கக்கூடாதுன்ற நிபந்தனையோட படமெடுக்க அனுமதிச்சாங்க.. என்னைக்கு பேரு, டிரஸ், இத்யாதி இத்யாதிலேர்ந்து ஜாதி, மதத்தைக் கண்டுபிடிக்கிற புத்திசாலிங்களா ஆயிட்டமோ, அன்னைலேர்ந்து இந்தப் பிரச்சனை ஓடிக்கிட்டுதான் இருக்கு, இருக்கும். என்ன அந்தக் காலத்துல ஐயர், பிள்ளைவாள், முதலியார்னு இருந்தது.. அப்புறம் தேவர், கவுண்டர், நாயக்கர், சண்டியர்னு வந்தது… இப்ப சமீப காலமா தலித்திய பின்னணில படங்கள் வருது.. அதே மாதிரி தான் ஊர் அடையாளங்கள்.. அடியாளுங்களை, ரவுடிங்களை பிடிக்கணும்னா நார்த் மெட்ராஸ்ல போலிஸ் ரெய்டு போகும்.. கொஞ்சம் மண் வாசனை கலந்த, ‘ரா’வான, லோ பட்ஜெட் கதைன்னா மதுரை, திருநெல்வேலி அப்படின்னு செட் பண்ணிக்கிறாங்க.. இதைத் தவிர்க்கவே முடியாது..’
‘கொறஞ்ச பட்சம் வெளிப்படையான டயலாக்ஸை அவாய்ட் பண்ணலாமில்ல?’
‘அதென்னவோ நெஜந்தான்.. ‘சுந்தர பாண்டியன்’ படத்தில், ‘நானும் கள்ளன்தான், நீங்களும் கள்ளர்தான் அதனால பொண்ணைக் கட்டி கொடுங்க’ ன்னும், ‘பருத்தி வீரன்’ படத்தில ‘நம்பி வந்தவனை வாழ வைக்கிறவந்தான் தேவன்’ ன்னும் வசனம் வரும்… ‘தேவர் மகன்’ல, ‘அவங்கள ‘ராஜு’ன்னு சொல்லுவாங்க அங்க.. தேவருக்கு நிகரான ஜாதிதான்’ ன்னு சொல்றதெல்லாம் ஓவர்… கதாபாத்திரஙகளைப் பொறுத்தவரைக்கும், இன்னும் மாறாத பழைய தலைமுறையைச் சமாதானப்படுத்துவது மாதிரியிருக்கும்.. இதையெல்லாம் குறிப்பிட்ட ஜாதிப் பெயரை குறிப்பிடாம சொல்றது கொஞ்சம் கஷ்டமான கலை.. வெளிநாட்டு படங்கள்ல இந்த சிக்கல் இல்லை.. இங்கயே மலையாள படங்கள்ல எல்லா ஜாதிப் பெயர்களும் வரும்.. உறுத்தல் இல்லாத மாதிரி.. அதை யாரும் பெருசுபடுத்தறதுமில்ல’
‘தமிழ்லேயே கூட அப்பயிருந்த பிள்ளை, ஐயர், முதலியாருங்க செய்யாத ஒரு டிஸ்டர்பன்ஸ், இல்லாத சர்ச்சைங்கெல்லாம் இப்ப வருதே..’
‘ஆங்.. அதுக்கு காரணம் ‘ரியாலிட்டி’ பில்ட் பண்றதா சொல்லிகிட்டு, அந்தந்த கேரக்டர்ஸுக்கு டீடெய்ல்ஸ் சேத்ததினால வர்ற பிரச்சனை.. ‘கேரக்டர் போர்ட்ரேயல்’ .. அந்தக் காலத்து முதலியார், பிள்ளை, ஐயர், சாயபு எல்லாரும் இயல்பா இருந்தாங்க… பேரளவில் மட்டும், அதிகமா போனா அவங்க காஸ்டியூம் மட்டுமே அடையாளமா இருக்கும்.. போகப் போக, சாயபுனா கறிக்கடை வெச்சிருப்பார் இல்லைனா கள்ளக்கடத்தல் பண்ணுவார், கிறித்துவப் பொண்ணுன்னா பாருக்குப் போவும், நைட் கிளப்ல டான்ஸ் ஆடும்; பிராமணர்னா வாத்தியார், புரோகிதர், பாட்டு டீச்சர், முதலியார்னா பணக்காரர், பண்ணையார்னு எஸ்டாபிளிஷ் பண்ணப் பண்ண அதெல்லாம் ஒரு ‘ப்ராண்டிங்’ ஆயிடுச்சு.. ஒரு இஸ்லாமிய கதாபாத்திரப் பெயர் இருந்துதுன்னா அது நேர்மறையா, எதிர்மறையான்னு கூட தெரிஞ்சிக்காம சர்ச்சை கிளம்பிடுது… ‘ஜெய்பீம்’ படத்துல, காலண்டர் ஒரு பிரச்சனையை கிளப்புச்சு.. அது ‘இண்டக்ஸிங்’ வகையான குறியீடு.. அதே படத்தில பிராமணர்களைக் கேலி பண்றமாதிரி தேவையில்லாத ஒரு கதாபாத்திரம் சேக்கப்பட்டிருக்குன்னு ‘யூ டியூபர்’ ஒர்த்தரு கெளம்பினார்..’
‘அப்படியா? அர்த்தமான சாத்திரங்களைப் பேசுறவராச்சே அவரு..’
‘அவரே தான்.. அதவிட அந்தப் படத்துல ‘தமிழ்ல பேசுடா’ன்னு ஒரு போலிஸ் கதாபாத்திரம் விசாரனைக்கு வரும் ஒரு வடநாட்டு கதாபாத்திரத்தை கன்னத்தில் அறையும்.. ஏன் இந்தி வெர்ஷன்ல இதே போலிஸ் கதாபாத்திரம் ‘உண்மையைப் பேசுடா’ன்னு அடிக்குதுன்னு அர்த்தமில்லாத கேள்வியைக் கிளப்பினார்.. இதே சீனுக்கு, அரசியல் கட்சி தலைவர் ஒர்த்தர் அந்த போலிஸ் கதாபாத்திரத்தின் மேல மனிதவுரிமை வழக்குப் போடனும்னு அடம் புடிச்சார்.. இப்டி காரணமேயில்லாமல் படத்தைக் கழுவி ஊத்தவும் ஒரு கும்பல் காத்திருக்கு’
‘ஒருவகையில அது சரிதானே.. காமெடிக்காக ஒரு குறிப்பிட்ட சாதியை சாடுவது தப்பு தானே’
‘அது சாதியச் சாடல் இல்லைடா.. அது ஒரு கேரக்டர் அவ்வளவு தான்.. ‘உழைப்பாளி’ படம்னு நினைக்கிறேன்.. அதில ஒரு குருக்கள் ஸ்கூட்டர்ல ‘ரெட் சிக்னலை’க் கிராஸ் பண்ணிப் போவார்.. ஏன் சாமி சிக்னலுக்கு நிக்காம கிராஸ் பண்ணிட்டீங்களேன்னு கேக்கும்போது, ‘பகவான் போகச் சொன்னார், போனேன்’ என்பார். கேட்டவர் சூப்பர் ஸ்டார். இந்தக் குருக்களும் தேவையில்லாத கேரக்டர் தான். அதெல்லாம் ஒரு சின்ன ‘காமெடி ரிலீஃப்’.. ஆனா ‘விஸ்வரூபம்’ படத்துல ‘பாப்பாத்தியம்மா.. நீ சாப்ட்டு சொல்லு…உப்பு காரம் போறுமான்னு’ அப்படினுட்டு சிக்கனைக் காமிச்சு சொல்ற ‘டயலாக்’ கண்டிப்பா அவசியமில்லாதது. மனைவி பிராமின் என்பதை வேறு விதமாகச் சொல்லியிருக்கலாம்.. அதைத் தொடர்ந்து மனைவிக்கு வேறொருத்தரோட ‘அஃபேயர்’னு சொல்லும் போது எல்லாத்தையும் சேர்த்து கனெக்ட் பண்ணி சர்ச்சையாடுச்சு.. ‘ப்ரோக்கன்’ தமிழ் பேசும் அமெரிக்க கேரக்டர் ஒன்னு விஸ்வநாத்தின் அம்மாவை ஷ்பஷ்டமா தமிழ்க் கெட்ட வார்த்தையில திட்டும்.. இதெல்லாம் அநாவசியமா துருத்திக்கிட்டு நிக்கும்.. விஸ்வரூபம்-2 படத்துலேயும் இப்படி நெறய இருக்கும்.. நேச்சுரல் என்பதைத் தாண்டிய ‘ஓவர் டூயிங்’ .. ஒரு டைரக்டரா, ரொம்பப் பெரிசா, அவர் ஃபெயிலான இடங்கள் இதெல்லாம்..’
‘அப்பாடா இப்பவாது உங்காளு தப்பு பண்ணுவார்னு ஒத்துகிட்டயே’
‘எங்காளு உங்காளுன்னு இல்ல.. ஒரு ஆர்டிஸ்ட்க்கு, கொஞ்சமாச்சும் லிபர்ட்டி வேணும்.. அது உனக்கு பிடிக்குமா பிடிக்காதாங்கிறது வேற விஷயம் .. எனக்குப் பிடிக்காததை, எனக்குப் புரியாததை நீ செய்யவேகூடாதுங்கிறது மடத்தனம்.. படத்துக்கு இங்கிலீஷ்ல பேரான்னு ஒரு கும்பல் இன்னொரு பக்கம் கெளம்பிடுச்சு..‘தூங்காவனம்’, ‘குருதிப் புனல்’னு அழகான தமிழ்ப் பேரு வெச்சப்ப பாராட்டினாங்களா யாருமாச்சும்.. ‘மதிகெட்டான் சோலை’ங்கிற பேருன்னு வெச்சா புரியாதுன்னு ‘குணா’வா மாத்தவெச்சாங்களே தெரியுமா?’
‘ஆயிரம் சொல்லு.. ரங்கராய சக்திவேல் நாயக்கர், தெரிஞ்சே கிரியேட் பண்ற ஒரு சர்ச்சை. பெயரளவிலாவது ஜாதிய ஒட்டுக்கள் கொஞ்ச, கொஞ்சமா மறைஞ்சுகிட்டிருக்கிற காலத்துல இது, உறுத்தலா இருக்கில்ல? இது ஒரு வகையான நெகட்டிவ் மார்கெட்டிங்னு சொல்றேன்.. ஒத்துக்கிறியா, இல்லையா?’ கண்டிப்பு காட்டிக் கேட்டான் வரது
‘இருக்கலாம்.. ஒருவேளை நெகட்டிவ் அட்வெர்டைஸ்மெண்ட்ல வர்றது போல, நீங்க இப்படி நெனச்சிருப்பீங்க, ஆனா இது வேறன்னு சொல்ற மாதிரி ரங்கராஜ நம்பி, சக்திவேல் கவுண்டர், வேலு நாயக்கர் எல்லாம் கலந்த கதாபாத்திரமா இருக்கலாம்.. யாரு கண்டா?’
‘உங்காளைப் போலவே நீ சொல்றதும் ரொம்பத் தெளிவா ‘புரியுது’டா.. ஆள விடு’ சலித்துக் கொண்டான் ஜனா.
‘அவ்வளோ ஈஸியா எப்டி விடறது.. காப்பி காப்பின்னு சொல்றியே, மஜ்பூர் தொடங்கி, திரிசூல், கஸ்மே வாடே, கூன் பசினா, நமக் ஹலால், தீவார்னு அமிதாப் பச்சனோட எத்தனைப் படங்கள் தமிழ்ல இறங்குச்சுன்னு இன்னொரு நாள் சொல்றேன்.. ‘சூப்பர் ஸ்டோரிஸ்’ அதெல்லாம்’.
- வோல்டெய்ர்
Tags: Kamal Haasan, Mani Ratnam, Thug Life