\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

வெப்பச் சூழ்நிலை காரணமாக உலகம் கொதிநிலையை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்கிறோமோ இல்லையோ, ஆனால் கண்ணுக்கெதிரே பகை, வன்மம், பழிவாங்கும் மனப்பான்மை ஆகியவற்றால் பூமி கொப்பளித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. பல நூறாண்டுகளாக அடக்குமுறையில் சிக்கிச் சிதறுண்டு போன பாலஸ்தீனர்களின் கோபம் மற்றும் ஆற்றாமையால்  துடித்துக் கொண்டிருந்த ‘டைம் பாம்’  ஒன்று பயங்கரவாதிகளின் கையில் சிக்கி வெடித்துச் சிதறியுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பியாவில் கிளம்பிய யூத எதிர்ப்பு, சியோன் இயக்கம் உருவாகக் காரணமாகயிருந்தது. இவர்களின் முனைப்பில் ஐரோப்பியாவுக்கு வெளியே யூதர்களுக்கான ஒரு இடம் வேண்டுமென கருவாக்கம் துளிர்த்தது என்கிறது வரலாறு. முதல் உலகப்போருக்குப் பின்னர் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பாலஸ்தீன நிலப்பரப்பில் சிறுபான்மையினராக இருந்துவந்த யூதர்கள், தமக்கென தனிநாடு கேட்டு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். மெதுவே உலகின் பல பகுதிகளிலிருந்தும் யூதர்கள் வந்துசேர தங்களது நிலப்பரப்பை விரிவுபடுத்திக்கொண்டே செல்ல, பாலஸ்தீனர்களின் ஆளுகையிலிருந்த நிலப்பரப்பு குறைந்து பெரும்பான்மையான பகுதி யூதர்கள் வசம் சென்றது. 1947ஆம் ஆண்டு ஐ.நா. சபை கொணர்ந்த இரு தனி நாடுகள் என்ற தீர்மானத்துக்கு, பாலஸ்தீனர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனிடையே 1948ஆம் ஆண்டு, பிரிட்டனின் நாட்டாண்மையில் யூதர் / அரேபியர் என்ற பகுதிகள் பிரிக்கப்பட்டு, இஸ்ரேல் என்ற பெயரில் தமக்கான நாடாக உருவாக்கிக் கொண்டனர் யூதர்கள்.  அதுவரையில் பெரியளவிலான போராட்டங்கள் இல்லாதிருந்த நிலத்தில், இஸ்ரேல் தனிநாடான பின்பு தொடர்ந்து போர்கள் நிகழத் துவங்கின. ஒரு காலக்கட்டம் வரையில் நிலவுரிமை என்றளவில் நடந்துவந்தக் கலவரப் போராட்டங்கள், ‘ஜெருசலேம்’ நகரில் அமைந்திருக்கும் யூத, கிறித்துவ, இஸ்லாமியப் புனிதத் தலங்கள் காரணமாக வேறொரு பரிமாணத்தை எடுத்தது. மூன்று மதத்தவர்க்கும் பொதுவாகயிருக்க வேண்டுமென, இப்பகுதி, ஐ.நா. கட்டுப்பாட்டில் சர்வதேச நகராக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த போர்கள் தங்களுக்குச் சாதகமாக அமைந்து விட, அதிரடியான ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டது இஸ்ரேல். கூடவே தங்களது ராணுவ பலத்தையும், நவீனத் தளவாடங்களையும், உளவு அமைப்புகளையும் அதிகரித்துக் கொண்டது. ஏற்கனவே நடந்த போர்களில் இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்ட பாலஸ்தீன அரேபியர்கள் இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் தினறினார்கள். தனி நாடு என்ற அங்கீகாரம் மற்றும் சரியான தலைமை இல்லாத காரணங்களால் இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல ஜிஹாதிய அமைப்புகள் உருவாகின.

இப்படி, ஆங்காங்கே சிறுசிறு அமைப்புகளாக எதிர்ப்பு காட்டி வந்த அனைத்தையும் ஒன்று சேர்க்கும் வகையில் உருவானது தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestine Liberation Organization (PLO)). துவக்கத்தில், இஸ்ரேல் என்ற நாடு இருக்கக்கூடாது எனும் நோக்கத்துடன் இயங்கிவந்த சில குழுக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட, மொத்த பாலஸ்தீன விடுதலை இயக்கமும், பயங்கரவாத அமைப்பாகவே கருதப்பட்டது. காலப்போக்கில், போர்கள் பிரச்சனைக்குத் தீர்வாகாது எனக் கருதிய, இதன் தலைவர் யாசர் அராஃபத், சமாதானப் பாதைக்கு முனைந்தார். 1993ஆம் ஆண்டு ஆஸ்லோ நகரில், அமெரிக்கா முன்னெடுத்த பேச்சு வார்த்தையின் முடிவில், இஸ்ரேலின் உரிமைகளை பாலஸ்தீன விடுதலை இயக்கம் மதிக்கவும், மாறாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பாலஸ்தீன மக்களின் குரலாக இஸ்ரேல் ஏற்பதாகவும் முடிவானது. பெயரளவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்பும், பல தீவிரவாத அமைப்புகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையை ஏற்காமல், நேரடியாக இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களில் இறங்கினர். அப்படி பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கு கட்டுப்படாமல், வலிமை பெற்றது தான் ‘ஹமாஸ்’. Harakat al-Muqawama al-Islamiya (Islamic Resistance Movement) என்பதன் சுருக்கமான ‘ஹமாஸின்’ நோக்கம், இஸ்ரேலியர்களை, பாலஸ்தீன நிலப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும். இந்த இயக்கம் உருவாக, இஸ்ரேல் உள்ளிட்ட சில மேற்கு நாடுகளும், அரபு நாடுகள் சிலவும் காரணமாக அமைந்தன என்றால் அது மிகையில்லை. ஒரு கட்டத்தில் ஹமாஸ் பாலஸ்தீனியர்களின் அரசமைப்பாகவே உருவானது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் உடைந்தபோது இதன் இன்னொரு பிரிவான ‘ஃபடா’ அமைப்பின் தலைமையில் சில பகுதிகள் ஆளப்படுகிறது. எவ்வாறாயினும் பாலஸ்தீன அரசு என்ற முழுமையான அரசு அமையாமல் போனதால், தனி நாடு என்ற அந்தஸ்து பாலஸ்தீனர்களுக்குக் கிடைக்காமல் போனது. முறையான பாதுகாப்பு அமைப்பு, ராணுவம் என்றில்லாததால் தங்களைத் தற்காத்துக் கொள்ள பயங்கரவாதம் ஒன்றே வழி என்ற முடிவுக்கு பாலஸ்தீனர்கள் தள்ளப்பட்டார்கள். இதன் காரணமாக இஸ்ரேலிய, பாலஸ்தீன மக்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் போராட்டங்கள், போர்கள் என நடந்துவந்தாலும், மறுபுறம் இஸ்ரேல் மேற்கு கரை, காஸா பகுதிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வந்தது. தற்போது 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் இங்கே வாழ்கிறார்கள் என அறியப்படுகிறது. இவர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் இப்பகுதியிலிருந்த பாலஸ்தீனர்கள் தினசரித் தாக்குதல்கள் மற்றும் கொடுமைகளுக்கு உள்ளாயினர். பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்தக் காரணங்களால் பல பாலஸ்தீனர்கள், ஜோர்டான், சிரியா, லெபனான் போன்ற நாடுகளுக்கு அகதிகளாகத் தப்பியோடினர்.

2017 ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் டானால்ட் டிரம்ப்,  ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். பிரிட்டன், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு ஐநாவில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அதுவரையில் ஜெருசலேமின் ஒரு பகுதியையாவது தமது சொந்தமாகக் கருதி வந்த பாலஸ்தீனிய அமைப்புகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சீண்டிவிட, கிளர்ச்சிகள், தாக்குதல்கள் கட்டுக்கடங்காமல் போயின. ஐநாவின் தலையீட்டையும், கண்டனங்களையும் இஸ்ரேல் பொருட்படுத்தவேயில்லை. முறையான அரசியலமைப்பு இல்லாத காரணத்தால், தனி அந்தஸ்து பெற்றிருந்த பாலஸ்தீனர்களையும் ஐநாவால் கட்டுப்படுத்த முடியாமல்போனது.

இயல்பான, அமைதியான வாழ்க்கை என்னவென்றே அறியாமல் பாலஸ்தீனியர்களின் பல தலைமுறைகள் அழிந்துபோனது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேலியப் பகுதிகளை நோக்கி மிகப் பெரிய, கொடூரமான தாக்குதல் நடத்தியதும் இந்த ஆற்றாமையின் வெளிப்பாடுதான். இஸ்ரேல் நாட்டின் பொதுமக்கள் ஒன்றுகூடும் பகுதிகளை நோக்கி ஏவப்பட்டத் தாக்குதல்தள் 1200க்கும் மேற்பட்ட அப்பாவி மனித உயிர்களைப் பலி வாங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல், இருநூறுக்கும் மேற்பட்ட, வெளிநாட்டவர் உள்ளிட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளார்கள். ‘அல்-அக்ஸா புயல்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தத் தாக்குதலை, இஸ்ரேலின் அடக்குமுறை, ‘அல்-அக்ஸா’ மசூதி ஆக்கிரமிப்பு, பாலஸ்தீன பெண்கள் மீதான வன்முறை ஆகியவற்றுக்குப் பதிலடியாகச் சொல்கிறது ஹமாஸ்.

.சுமார் 450 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியை ‘காஸா ஸ்டிரிப்’ என்றழைக்கிறார்கள். இங்கு பெரும்பாலும் பாலஸ்தீனியர்கள் உள்ளிட்ட, ஏறக்குறைய 24 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 80% மக்கள், ஐ.நா., பிற உலக நாடுகள் அளித்துவரும் சர்வதேச உதவிகளை நம்பிதான் வாழ்கிறார்கள். காசாவின் மத்தியத் தரைகடலை ஒட்டிய கடற்கரை, வான்பரப்பு மற்றும் முழு எல்லைப் பகுதிகளும் இஸ்ரேலின் கண்காணிப்பில் உள்ளது. ‘ஹமாஸின்’ தாக்குதலுக்குப் பின் வெகுண்டெழுந்த இஸ்ரேல், 24 மணி நேரத்துக்குள் இங்குள்ள மக்கள் அனைவரையும் வேறுநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் காஸா நிலப்பகுதிக்கான மின்சாரம், எரிபொருள், குடிநீர், உணவுப் போக்குவரத்து என அனைத்தையும் துண்டித்து மக்களை அவதிக்குள்ளாக்கி, இந்நிலப்பகுதியிலிருக்கும் பாலஸ்தீனர்களை அழித்தொழிக்கவேண்டும் என்பதில் உறுதியாய் நிற்கிறது இஸ்ரேல். குறிப்பாகப் பல தலைமுறைகளாக நடந்துவரும் இப்பிரச்சனையைத் தீர்க்க, வருங்காலப் பாலஸ்தீனியத் தலைமுறையைக் கிள்ளி எரிவதில் முனைப்பு காட்டும் வகையில் குழைந்தகள் மருத்துவமனை, பள்ளிக்கூடம் என்று குறிவைத்துத் தாக்கி வருகிறது. பள்ளிக்கூடங்கள், மசூதிகள் போன்ற பொதுப் பகுதிகளில் தஞ்சமடைந்திருக்கும் குடும்பங்கள் தொடர் ஏவுகணை தாக்குதல்களுக்குப் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது எந்தவிதத்திலும் அங்குவாழ்பவர்கள் தப்பித்துவிடக் கூடாது எனும் வெறியுடன் வேட்டையாடி வருகிறது இஸ்ரேல் அரசு.

பொதுமக்கள் கூடும் இடங்களான பள்ளி/கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகளை தாக்குவது, தண்ணீர், மின்சாரம் மற்றும் உணவுப் போக்குவரத்தைத் துண்டிப்பது போன்றவை சர்வதேசப் போர்க்குற்றங்கள். ஆனால், தொடக்கம் முதலே இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், மொத்தப் பாலஸ்தீனர்களையும் பழிவாங்கும் நோக்கத்தோடு செயற்பட்டு வருகிறது இஸ்ரேல். ஐ.நா.,மற்றும் பல நாடுகள் போரைத் தவிர்க்க இஸ்ரேலை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் ‘போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போரிடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது போர் நிறுத்தத்துக்கான அறிகுறி எதுவும் அண்மையில் இல்லை என்பதைப் புலப்படுத்துகிறது. தங்களிடம் இராணுவம், போர்த் தளவாடங்கள் எதுவும் இல்லையென்பதும், அக்டோபர் 7 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் அடிபட்ட புலியாகச் சிலிர்த்தெழும் என்பதும் ஹமாஸ் அமைப்பினருக்குத் தெரியாததல்ல. இருப்பினும் ‘வாழ்வா, சாவா’ என்ற இறுதிக் கட்ட முடிவுக்கு அவர்கள் துணிந்துவிட்டதாகவே தெரிகிறது. இன்னொருபுறம் லெபனானிலிருந்து ‘ஹிஸ்புல்லா’ என்ற தீவிரவாத இயக்கம், இஸ்ரேலின் செயலைக் கண்டிக்கும் வகையில் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

இஸ்ரேலுக்குத் துணை நிற்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், இஸ்ரேலுக்கு எதிராக ரஷ்யா, சீனா மற்றும் அனைத்து அரேபிய நாடுகள் முடிவெடுத்திருப்பதும் மற்றொரு உலகப் போர் மூளுமா என்ற கேள்வியை எழுப்பி வருகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னால், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், பகைகளை மறந்து அண்டை நாடுகளிடம் உதவி நாடி நின்றதொரு நிலையிருந்தது. இயற்கை நமக்குச் சுட்டிக்காட்டிய பாடத்தை மறந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது.

  • ரவிக்குமார்.  (கட்டுரை எழுதப்பட்ட நாள்  – நவம்பர் 2, 2023)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad