ஹோலி திருவிழா 2024
வட அமெரிக்க மாநிலமான மினசோட்டா, ‘மேப்பில் குரோவ்’ நகரில் அமைந்துள்ள இந்து கோவில் சார்பாக மார்ச் பதினாறாம் நாள் ‘ஹோலி’ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை அந்நகராட்சித் தலைவர் (Mayor) முந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் சேர்ந்து மந்திரங்கள் பாடி, குத்துவிளக்கேற்றி, சிறப்பாகத் தொடங்கி வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்தக் காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டு ஹோலிப் பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் மக்கள் பலரையும் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, திலகமிட்டு, வண்ணப் பொடிகளைத் தூவி அல்லது தெளித்து அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்கின்றனர். இந்தப் பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். இந்தியாவின் வட மாநிலங்களில் இந்தப் பண்டிகையை வண்ண மயமாக, மிகவும் விமரிசையாக் கொண்டாடுகிறார்கள்.
அந்நாள் முழுதும் தொடர்ந்த இத்திருவிழாவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு மொழிப் பாடல்களைப் பாடி, நடனமாடிப் பங்கேற்று வந்திருந்த அனைவரையும் மகிழ்வித்தனர்.
கோவில் நிர்வாகத்தினர் வந்திருந்தவர்களை வரவேற்று நன்றி தெரிவித்தார்கள். நடன நிகழ்ச்சிக்குப் பின்பு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக!
Tags: Holi, Holi festival