திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு
சென்ற பதிவில், பார்வையற்ற ஒர் இளைஞன், தனக்கு நெருக்கமான ஒரு பெண்ணின் அழகைத் தொட்டு, உணர்ந்து தான் கேள்விப்பட்ட பொருளோடு ஒப்புமை செய்த பாடலான ‘அழகே, அழகு’ பாடலைக் கண்டோம். ஒரு சாமான்யருக்கே காதல் வசப்பட்டவுடன், உலகமே அழகாக தோன்றத் துவங்கிவிடும்; பார்க்கும் பொருட்களை எல்லாம் இனிமை பொங்கிட, தனது காதலி/காதலனுடன் இணைத்துப் பார்க்கத் தூண்டும். ‘பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது; பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது’ என்ற நிலையே பொழுதெல்லாம் நீடிக்கும். இயற்கையின் படைப்புகளிலுள்ள அழகையெல்லாம் தனது துணை பிரதிபலிப்பதாகத் தோன்றும்.
கவிஞர் வைரமுத்துவின் பார்வையில் அழகு என்றதும் பலரது நினைவுக்கு வருவது அவரது ‘கண்ணுக்கு மையழகு’ என்ற கவிதை தான். அவரது கவிதைத் தொகுப்புகளில் இந்தக் கவிதையைப் பல வடிவங்களில் காணமுடியும். இந்தப் பாடல் திரைப்பாடலாக 1993 ஆம் ஆண்டு ‘புதிய முகம்’ படத்தில் வெளிவந்தாலும், 1989ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் (இன்றைய ‘பொதிகை’), புத்தாண்டு நிகழ்ச்சிக்காக, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்தக் கவிதையின் குறிப்பிட்ட வரிகள் பாடலாக ஒளிபரப்பாகியது. பி.ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் இதனைப் பாடியிருந்தார்கள். அந்தப் பாடலை இந்தச் சுட்டியில் காணலாம் .
(இதைப் போன்றே ‘ரோஜா’ திரைப்படத்தில், ‘ரேகே’ (Reggae) வடிவில் ஏ.ஆர்.ஆர். இசையில் மின்மினி பாடி இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ வரிகளும் ‘தூர்தர்ஷனில்’ எம்.எஸ்.வி. இசையில், சித்ராவின் குரலில் வெளிவந்தது )
(ஊடகங்களில் வைரமுத்துவின் இந்தப் பாடலைப் பல இசையமைப்பாளர்கள் நிராகரித்தது போன்ற செய்தி பரவுவதில் உண்மையில்லை).
பாடலின் வரிகள் இதோ :
அழகு! அழகு! அழகு!
கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
யானைக்கு கொம்பழகு
அவளுக்கு நானழகு
முகத்துக்கு மூக்கழகு
முதுமைக்கு நரையழகு
அவரைக்கு பூவழகு
அவளுக்கு நானழகு
பாம்புக்கு தோலழகு
பறவைக்கு சிறகழகு
ஒளவைக்கு கூனழகு
அவருக்கு நானழகு
விடிகாலை விண்ணழகு
விடியும்வரை பெண்ணழகு
அனிலுக்கு வாலழகு
அவருக்கு நானழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு
தமிழுக்கு ழ அழகு
அவளுக்கு நானழகு
இதன் வேறாக்க வடிவம் தான் புதிய முகம் படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியானது. இன்னும் சொல்லப் போனால் இந்தப் படத்திலேயே இருவேறு சந்தர்ப்பத்தில் சின்ன வரி மாற்றங்களுடன் இந்தப் பாடல் வரும். அனைத்து வடிவங்களும் முந்தையதை விட மெருகேற்றப்பட்டதாக இருந்தாலும், உன்னிமேனனின் குரலில், காதலன் காதலியின் அழகில் உருகிப் போகும் பாடல் இருசீர் ஓரடி இலக்கணத்துக்கு நெருங்கி அமைந்திருக்கும்.
எதெல்லாம் அழகு எனப்பட்டியலிடும் கவிதையில் பல்லவியாக அமைந்த வரிகள் இதோ
கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார்கூந்தல் பெண்ணழகு
பெண்களின் கண்களை வருணிக்காத கவிஞரே இருக்க மாட்டாரெனலாம். மீன், வாள், மான், திராட்சை எனப் பலப்பல பொருட்களோடு அவர்கள் கண்களை ஒப்பிடுவதுண்டு. அப்படிப்பட்ட கண்களுக்கு மேலும் அழகூட்டுவது பெண்கள் இடும் மை என்கிறது பாடலின் முதல் வரி. இன்றைய காலகட்டத்தில் கண்களை அழகூட்ட செயற்கை வடிவில் கண் இமைகள் (eye lashes) கிடைத்தாலும் கூட பொருத்தமான மை, என்றுமே கண்களை மெருகேற்றுவதை மறுக்க முடியாது. இந்த இடத்தில் கவிஞர் அப்துல் ரகுமானின் ‘கண்ணுக்கு மை தீட்டக் கோல் எடுக்கிறாள், அந்தோ யாருடைய விதி எழுதப்படப் போகிறதோ’ என்ற வரி அஞ்சனம் எனப்படும் மையின் வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் நினைவு கூறத்தக்கது. சரி, பாடலுக்கு வருவோம். மை கண்களுக்கு அழகு சேர்ப்பதாக சொன்னவர், கவிதைக்கு பொய்யழகு என்பது பொருத்தமாக இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.
வருணனை என்பதே மிகைப்படுத்துதல் என்பது தான். இந்த மிகைப்படுத்துதல் (literary exaggeration) மிகச் சிறந்த இலக்கிய நுட்பமாகும். கேட்பவர் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்த வல்லது. ‘ஹைபர்போல்’ (Hyperbole) எனப்படும் இந்த உத்தியை ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களில் அதிகம் காணலாம். “The brightness of her cheek would shame those stars” என ரோமியோ ஜூலியட்டை வருணிப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கம்பனின் வர்ணனைகளை உதாரணம் சொல்லி மாளாது. “வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிஜோதியின் மறைய. பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்!’ என்றும் ‘அன்றலர்ந்த தாமரையை வென்றதமா இவன் முகம்’ என்றும் இராமனை வர்ணிப்பது இவ்வகையான மிகைப்படுத்தல் தான். ‘இடையோ இல்லை; இருந்தால் முல்லைக் கொடி போல் மெல்ல வளையும்’ (நான் பார்த்ததிலே – அன்பே வா) என்று வாலி தன் பங்குக்குப் பாடியதும் சுவைகூட்டி கருத்துக்கு மெருகேற்றவே. ‘இருக்கானா இடுப்பிருக்கானா…இல்லையானா இலியானா’ (நண்பன்) என்பதும் அதுபோல தான் (கவிதையில் மட்டுமல்ல, இந்த மேற்கோளில் நான் சொன்ன பொய்யும் அழகுதான் என்று நீங்கள் சொல்வது புரிகிறது). கண்ணதாசன் இதை ஒரு பாட்டாகவே ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’ (ஆனந்த ஜோதி) என்று பாடியுள்ளார். ஆக, ‘கவிதைக்கு பொய்யழகு’ என்பதில் குறையேதுமில்லை.
பாடலின் பெரும்பாலான வரிகளில் நான்காம் வேற்றுமையான ‘கு’ இடம்பெற்றிருக்க ‘கன்னத்தில் குழியழகு’ எனும் வரியில் ஐந்தாம் வேற்றுமையான ‘இல்’ வருவதும் ஒரு அழகு. ‘கார்கூந்தலை (கருங்கூந்தலை) கொண்ட பெண்ணழகு’ என்பதில் ‘ஐ’ வேற்றுமையும் ‘கொண்ட’ எனும் உருபும் மறைந்து, தொக்கி வருகிறது என்ற இலக்கண விளக்கம் சுமையானாலும், சுவையானதே.
முதல் சரணத்தில் ‘ஒன்றுக்கு ஒன்று அழகு சேர்க்கும் வருணனை தொடர்கிறது. இரண்டே சொற்களைக் கொண்ட ஒவ்வொரு அடியும், ‘சொல்லுக்குப் பொருளழகு’ என்று பாராட்டத் தோன்றுகிறது.
இளமைக்கு நடையழகு
முதுமைக்கு நரையழகு
கள்வர்க்கு இரவழகு
காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கறையழகு
பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூனழகு
அன்னைக்கு சேயழகு
இளமைக்கு நடையும், முதுமைக்கு நரையும், கள்வர்க்கு இரவும், காதலர்க்கு நிலவும் அழகோ அழகுதான். அடுத்த வரியை அனேகர் ‘நிலவுக்கு கரையழகு’ என்று எழுதுவதுண்டு. கரை (shore), அதாவது கடல், நதி போன்ற நீர்நிலையை ஒட்டிய நிலப்பகுதிக்கு வேண்டுமானால் நிலவு அழகு சேர்க்கலாம். ஆனால், நிலவுக்கு கரை அழகு சேர்ப்பது சந்தேகமே. ‘நிலவுக்குக் கறையழகு’ என்பது பொருத்தமாக இருக்கக்கூடும். நிலவில் காணப்படும் கருந்திட்டுகளை (dark patches) கறை என்று குறிப்பிட்டு ‘நிலவுக்குக் கறையழகு’ என்பதே அழகு. ஆனால், ‘கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்று அந்த ஒளவையாரே பாடியிருப்பதை நினைவில் கொண்டால், ‘ஒளவைக்கு கூனழகு’ எனும் அடி கவிதைக்குப் பொருத்தமாகயிருந்தாலும், சற்றே நெருடலானது. அந்த நெருடலை ‘அன்னைக்கு சேயழகு’ எனும் அடுத்த வரி, மறக்கடித்துவிடுவது பேரழகு.
அடுத்த சரணத்தில் வரும் அடிகள் மேலும் அழகானவை. இருள் களைத்து, முகிலைக் கலைத்து சூரியன் வெளிவரும் நேரம் ‘விடிகாலை விண்ணழகு’ என்று சொல்லும் வகையில் அலாதியானது. ‘விடியும்வரை பெண்ணழகு’ எனும் வரியில் சிலருக்கு மாற்றுக் கருத்திருப்பது இயற்கையே. ஆனால் இது காதலன் தனது காதலிக்காகப் பாடும் பாடல் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நெல்லுக்கு நாற்று, தென்னைக்கு கீற்று, ஊருக்கு ஆறு, ஊர்வலத்தில் தேர் இவையெல்லாம் அழகோ அழகு. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய், தமிழ் மொழிக்குத் தனிச் சிறப்பு சேர்க்கும் ‘ழ’கரத்தை குறிப்பிட்டு, அது போல ‘தலைவிக்கு நானழகு’ என முடித்து வைப்பது இதமிகு நிறைவு. பாடலில், இந்த இரு வரிகளுக்கும் அழுத்தம் தருவதுபோல், தாள இசையில்லாமல், பியானோ மட்டும் வருடிக்கொடுப்பது அதிசுகம்.
விடிகாலை விண்ணழகு
விடியும்வரை பெண்ணழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ‘ழ’ அழகு
தலைவிக்கு நானழகு!
இத்தனை அழகுகளை, இரண்டு சொற்கள் கொண்ட, நேரடித் தொடர்பில்லாத ஒவ்வொரு அடியிலும் குறிப்பிட்டு, நேர்த்தியாகத் தொடுத்திருப்பது அருமை. இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு, ‘கண்ணுக்கு மையழகு’ எனும் முதல் வரியை மட்டும் கொண்டே முழுப் பாடலையும், மெட்டு சிதறாமல் பாட முடியும். முயன்று பாருங்கள்!
மேலே ஆண் பாடுவதாக வரும் வரிகளில், சிற்சில மாற்றங்கள் சேர்த்து பெண் பாடும் பாடல் முற்றிலும் புதியதொரு பரிமாணத்தைத் தருவதை மறுக்கவியலாது. இந்தப் பாடலில், சில அடிகளில் கூடுதலாக ஒரு சொல் சேருவது கவிஞருக்குச் சின்ன சுதந்திரத்தைத் தருகிறது.
கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
ஒழுங்கின்றி அடர்ந்து படரும் அவரைக் கொடியில், கொத்துக் கொத்தாய் முகிழும் பூக்கள் அழகு சேர்க்கும். அவரை, வகையைப் பொறுத்து வெள்ளை, ஊதா என்று மலரும் பூக்கள் கண்களுக்கு விருந்து. அது போலவே, கட்டுக்கடங்கா காளையாகத் திரியும் ‘அவருக்கு’ நான் அழகு சேர்க்கிறேன் என்று சொல்கிறாரோ நாயகி?
இந்தச் சரணத்தில் வரும் அடிகளைக் கவிஞர் அனுபவித்து எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. மழையில் நீராடி, பொலிவுப் பெற்றிருக்கும் இலைகளின் நுனியில் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன் என அஞ்சியபடி ஒட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளியை பார்த்திருப்பவர்கள் அதன் அழகை உணர்வார்கள்.
அவசர அவசரமாக நுரையைச் சேர்த்து கரையில் கொண்டுவந்து பத்திரப்படுத்திய பிறகு கடலுக்குத் திரும்பும் அலைகள் பலமிழக்கும் வரை காத்திருந்து, வெடித்து, சிதறி கரையும் நுரை தனியழகு. வானில் தோன்றும் நட்சத்திரங்கள் கண் சிமிட்டி இரவை அழகாக்கினாலும், பகலில் நட்சத்திரக் கண் சிமிட்டலை யாரும் பொருட்படுத்துவதில்லை. அப்படியில்லாமல் காதலனின் கண்களுக்கு, எப்போதும் தான் அழகு என்பதில் தான் எத்தனை நளினம்.
மழை நின்ற பின்னாலும்
இலை சிந்தும் துளியழகு
அலை மீண்டு போனாலும்
கரை கொண்ட நுரையழகு
இமை கொட்டும் விண்மீன்கள்
இரவோடு தான் அழகு
இள மாறன் கண்ணுக்கு
எப்போதும் நான் அழகு
அடுத்து வரும் சரணம் காதலனும் காதலியும், தனித்திருக்கும் சூழலில் பெறும் அழகான அனுபவங்கள். ‘அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு’ என்ற வரிகள் சன்னமாக இல்லறச் சங்கதியைச் சொன்னாலும் பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கியது. இயல்பாகவே, இவ்வகை மறைமுக வருணனைகள் கவிஞர்களைச் சிறகடிக்கச் செய்யும் தருணங்கள். (‘மஞ்சள் போனால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாள் என்பார்; பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாள் என்பார்’ – ‘கல்யாணமே ஒரு பெண்ணோடு தான்’ – லலிதா படத்தில் வரும் இந்தப் பாடலில் கண்ணதாசனின் கற்பனைகள் ஆனந்தக் கும்மியடித்திருக்கும்).
ஆனந்த மஞ்சத்தில்
அவிழ்ந்தாடும் குழல் அழகு
அடையாள முத்தத்தில்
அழிந்தாலும் பொட்டு அழகு
பென்ணோடு காதல் வந்தால்
பிறைகூட பேரழகு
என்னோடு நீ இருந்தால்
இருள் கூட ஓரழகு
என்னோடு நீயிருக்கும் நேரங்களில், உனது விழியிலிருந்தும், சிரிப்பிலிருந்தும் வெளிப்படும் ஒளி நாமிருக்கும் சூழலைப் பிரகாசமாக்கும்; நீ உறங்கும் போது ஒளி ஒய்வெடுக்க சென்று விட, படரும் இருளில் உலகப் பொருட்கள் விழிப்பார்வையிலிருந்து மறைந்துவிட மனப்பார்வையில் உன் முகம் நிறைந்திருக்குமே! அதனால் இருள் கூட ஓரழகு தான். எங்கெங்கோ இழுத்துச் செல்லும் ஒற்றை வரி!
அடுத்தப் பதிவில். இயற்கையோடு இணைந்தால் உலகில் அனைத்துமே அழகு எனச் சொல்லிடும் மற்றுமொரு அழகிய பாடலோடு சந்திப்போம்.
- ரவிக்குமர் –
Tags: Pudhiya mugam, vairamuthu, கண்ணுக்கு மையழகு, வைரமுத்து