வேகமெடுக்கும் என்விடியா எக்ஸ்பிரஸ்
வந்தேறிகளின் பங்கு அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட பல தரவுகள் உள்ளன. சமீபத்தில் வெளிவந்திருந்த ஒரு புள்ளிவிபரத்தில் கூட, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரவிருக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இன்றைய தேதிக்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் இருக்கிறார்கள். மற்றொரு பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் தந்தை சிரியா நாட்டில் இருந்து வந்தவர் என்பதை அறிந்திருப்போம்.
இப்படிப் பல அமெரிக்க நிறுவனங்களின் வெற்றிக்கு பிற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களின் பங்கு பலமாக இருந்துள்ளது. தைவானில் பிறந்த ஜென்சன் ஹூவாங் (Jensen Huang), தாய்லாந்தில் இருந்து ஒன்பது வயதில் அமெரிக்காவிற்கு வந்தபோது, அவரும் இது போல் ஒரு பெரிய நிறுவனத்தை இங்குக் கட்டமைத்து, எதிர்காலத்தில் தொழில்நுட்பவியலாளர்களாலும், முதலீட்டாளர்களாலும் கொண்டாடப்படும் பிம்பமாக மாறுவார் என்று நினைத்திருக்க மாட்டார். ஆனால், அது இப்போது நிஜமாகியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும் அதிகமாக அவருடைய நிறுவனமான என்விடியாவின் (Nvidia) மதிப்பு உயர்ந்துள்ளது.
தனது சிறு வயதில் அமெரிக்கா வந்த ஹூவாங்கிற்கு, வாழ்வு வசந்தமாக இருக்கவில்லை. அவர் பள்ளி கல்விக்காகத் தங்கி இருந்த இடத்தில், அவருடைய தினசரி வேலை, அங்கிருக்கும் கழிப்பறையைக் கழுவுவது தான். ஓரிகன் மாநிலத்தில் கல்லூரியில் படிக்கும் காலத்தில், அவர் முதலில் வேலைக்குச் சேர்ந்த இடம் – டென்னிஸ் (Denny’s) உணவகம். அங்கு அவருடைய முதல் வேலை மேஜை துடைப்பதும், பிறகு, உணவு பரிமாறுவதும் தான். அதன் பிறகு, முதலில் ஏஎம்டி (AMD) நிறுவனத்தில் மைக்ரோப்ராசசர் வடிவமைப்பாளராகச் சேர்ந்தவர், பின்பு எல்எஸ்ஐ லாஜிக் (LSI Logic) நிறுவனத்தில் இயக்குனராகப் பணியாற்றினார்.
கணினி வாங்கும்போது, அதன் இதயமாகச் செயல்படும் ப்ராசசருக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குவோம். பல ஆண்டுகளாக ப்ராசசர் உலகில் ராஜாவாக இருந்த நிறுவனம் – இண்டல் (Intel). கணிபொறியில் ‘இண்டல்’ ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் போதும், அது நல்ல கணிபொறியாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்த நிறுவனம் அது. அதற்கு அடுத்ததாக வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்களின் விருப்பமாக இருந்த ப்ராசசர், ‘ஏஎம்டி’ நிறுவனத்தினுடையது. கணினி ப்ராசசர் உலகில் போட்டியே, இந்த இரு நிறுவனங்களுக்கிடையே தான் இருக்கும். இன்னொரு பக்கம், ஸ்மார்ட்போன் ப்ராசசர் வணிகத்தில் குவால்காம் (Qualcomm) நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.
1993ஆம் ஆண்டு ஹூவாங் உருவாக்கிய என்விடியா நிறுவனம் இன்று இந்தப் பெருநிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே சென்று கொண்டிருக்கிறது. ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற பல பெரிய நாடுகளின் ஜிடிபியைவிட அதிகமான சந்தை மதிப்பை இந்நிறுவனம் பெற்றிருக்கிறது. குறுகிய காலத்தில் இத்துறையில் என்விடியா எவ்வாறு இம்மாதிரியான சாதனையைச் செய்ய முடிந்தது என்று தான் இன்று அனைவரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் என்விடியா நிறுவனத்தின் பயணம் எங்குத் தொடங்கியது என்று பார்த்தோமானால், மீண்டும் டென்னிஸ் (Denny’s) உணவகத்திற்குப் போக வேண்டி உள்ளது. கலிபோர்னியாவில் எல்எஸ்ஐ லாஜிக் (LSI Logic) நிறுவனத்தில் இயக்குனராக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹுவாங், சன் மைக்ரோ சிஸ்டம்ஸில் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த கிறிஸ் மற்றும் கர்டிஸ் ஆகியோருடன் பேசி கொண்டு உணவருந்திய ஒரு சமயத்தில் இந்த நிறுவனத்தைத் தொடங்க முடிவெடுத்தனர். நாப்பதாயிரம் டாலர்களை வைத்து, 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஹூவாங் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அன்று அவர்கள் பேசி முடிவெடுத்த அந்த உணவக மேஜையில் இன்று அந்தத் தருணத்தை நினைவுபடுத்தும்வண்ணம் ஒரு நினைவு சின்னத்தை டென்னிஸ் உணவக நிர்வாகம் அமைத்துள்ளது.
ஆரம்பத்தில் கணினி கொண்டு நாம் என்ன செய்து கொண்டிருந்தோம், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று கவனித்தோமானால், என்விடியா தொடங்கப்பட்டதின் காரணம் தெரிந்திருக்கும். கணக்கு போடுதல், கடிதம் எழுதுதல், படம் வரைதல், படம் பார்த்தல் என்று கணினியைப் பயன்படுத்தி வந்தவர்கள், விளையாட்டு விளையாடுவது, வரைகலை கொண்டு காணொலிகளை உருவாக்குதல் போன்ற வேலைகளைச் செய்யத் தொடங்கும் போது, கணினியின் அப்போதைய செயல்திறன் போதவில்லை. முப்பரிமாண காட்சிகள் கொண்ட கணினி விளையாட்டுகளை நல்ல தரத்துடன் விளையாட, முப்பரிமாண காட்சிகளைக் கொண்ட காணொலிகளை உருவாக்க, சாதாரண ப்ராசசர்கள் போதுமானதாக இருக்கவில்லை. உயர் திறன் கொண்ட கிராபிக்ஸ் ப்ராசசிங் யூனிட் (GPU) தேவைப்பட்டது. அத்தேவையை முன்னதாகவே உணர்ந்த ஹூவாங், கிறிஸ், கர்டிஸ் ஆகிய மூவர் கூட்டணி, அதைப் பூர்த்திச் செய்யச் சரியான நேரத்தில் என்விடியா நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
என்விஷன் என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கலாம் என்று நினைத்தால், அப்பெயரில் ஏற்கனவே ஒரு டாய்லட் பேப்பர் நிறுவனம் இருந்ததால், என்விடியா என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இன்விடியா என்ற லத்தீன் சொல்லுக்குப் பொறாமை என்று பொருளாம். ஹூவாங் சரியாகத் தான் பெயர் வைத்திருக்கிறார். இன்று அந்த நிறுவனம் பலரையும் பொறாமை கொள்ள வைத்துக் கொண்டிருக்கிறது.
நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்பக் காலத்தில் பல தடங்கல்களை, தோல்விகளை நிறுவனர்கள் காண வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் நிறுவனத்தை மூட வேண்டுமோ என்ற நிலை கூட வந்தது. பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான சம்பளத்தைக் கொடுக்கும் அளவு மட்டும் நிதிநிலை இருந்தது. அச்சமயம் “நம் நிறுவனம் முப்பது நாளில் மூட இருக்கிறது” என்ற சொற்றொடரை முன்வைத்துக் கூட்டங்களில் பணியாளர்களிடம் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் முன் வைத்த திட்டங்கள், பணியாளர்களிடம் நல்ல ஊக்கத்தை அளித்தன. அதன் பின், அவர்கள் வெளியிட்ட கிராபிக்ஸ் ப்ராசசர்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடின உழைப்பின் மூலம் நிறுவனம் கடுமையான சூழலில் இருந்து வெளிவந்தது.
1999 ஆம் ஆண்டுப் பங்கு சந்தையில் பங்குகள் வெளியிடப்பட்டு, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டினார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் விளையாட்டுச் சாதனத்திற்கான கிராபிக்ஸ் ப்ராசசரை உருவாக்கும் ஒப்பந்தம் மூலம் 200 மில்லியன் முன்பணமாகக் கிடைத்தது. நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட தொழில்நுட்பங்கள் கிடைக்க, பல சிறு நிறுவனங்களை வாங்கி, அதன் மூலம் பலவகை ப்ராசசர்களை உருவாக்கி விற்பனை செய்தது என்விடியா.
கணினிகள், ஸ்மார்ட்போன்கள் அடுத்து தானியங்கும் வாகனங்களுக்கான ப்ராசசர்களில் அடுத்ததாகக் கவனத்தைச் செலுத்தியது. உண்மையில் என்விடியாவின் அதிதிறன் ப்ராசசர்கள் எங்கெல்லாம் உயர்திறன் தேவைப்பட்டதோ, அங்கெல்லாம் பயன்பட்டது. உதாரணத்திற்கு, க்ரிப்டோ நாணயங்களைத் தேடி, கண்டெடுக்க அதிகத் திறன் கொண்ட ப்ராசசர்கள் தேவைப்பட்ட போது, என்விடியா கைக்கொடுத்தது. அதேபோல், 2022 ஆண்டின் இறுதியில் சாட்ஜிபிடி வெளியான சமயம், அதிலும் என்விடியாவின் பங்கு இருந்தது. இனி வரும் காலம், ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு காலம் என்று புலப்பட்டபோது, என்விடியாவின் அருமை அனைவருக்கும் புரிபட்டது. அப்போது இருந்து, பங்குச்சந்தையில் என்விடியா எகிறி அடிக்கத் தொடங்கியது.
2022 ஆண்டின் இறுதியில் 146 டாலர்கள் என்று இருந்த என்விடியாவின் ஒரு பங்கின் விலை, 2023 ஆண்டின் இறுதியில் 495 டாலர்களைத் தொட்டது. கடந்த ஐந்து மாதங்களில் மேலும் வேகமெடுத்து, தற்போது 1200 டாலர்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இது தற்செயல் என்றோ, சூதாட்டம் என்றோ சொல்லிவிட முடியாது. இந்தக் காலத்தில் என்விடியாவின் வருமானமும் பல மடங்கு கூடி உள்ளது. உதாரணத்திற்கு, 2022 இல் 26 பில்லியன் என்று இருந்த நிறுவனத்தின் வருமானம், இந்தாண்டு 60 பில்லியனை தொட்டுள்ளது. இதன் வருமானம் வருங்காலத்தில் இன்னும் உயர்ந்த வண்ணம் இருக்கும் என்று கணிக்கிறார்கள்.
அடுத்ததாக, செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை நிறுவனங்கள், அதிவிரைவாகச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக ப்ளாக்வெல் (Blackwell) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான ஆர்டர்கள், மைக்ரோசாப்ட், கூகிள், அமேசான், ஆரக்கிள் என நிறுவனங்களிடம் இருந்து என்விடியாவுக்குக் குவிந்தவண்ணம் உள்ளன. ஆக, இத்துறையில் என்விடியாவின் வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை. இண்டல், ஏஎம்டி ஆகிய போட்டி நிறுவனங்களும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். இருந்தாலும், என்விடியா பல படிகள் முன்னே வேகமாகச் சென்று கொண்டு இருக்கிறது.
என்விடியாவின் இத்தகைய வெற்றிக்குக் காரணமாக, ஜென்சன் ஹுவாங்கின் சரியான தலைமைத்துவப் பண்புகளைக் கைகாட்டுகிறார்கள். எந்த வகை ப்ராசசர்களுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வை, முன்னணி நிறுவனங்களுடன் கைக்கோர்த்து அவர்களுடன் சேர்ந்து பயணிப்பது, தலைவர் என்றாலும் புதுமையான தொழில்நுட்ப அறிவுடன் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது, நிறுவனத்திற்கு முன்னுதாரணமாகத் தினசரி கடுமையான உழைப்பை வழங்குவது என்று ஹுவாங் நமக்குச் சொல்லி கொடுக்கும் பாடங்கள் பல உள்ளன.
சந்தை மதிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாகத் தற்சமயம் மைக்ரோசாப்ட் உள்ளது. அடுத்த இடத்தில் இருக்கும் என்விடியா முதல் இடத்திற்குச் செல்லுமா அல்லது, இதன் தேவை குறைந்து, வேறு போட்டி நிறுவனம் வந்து கீழே செல்லுமா என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. வணிக உலகில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் என்விடியா தொடர்ந்து இத்தகைய பரபரப்பில் இருக்குமா அல்லது, வேகத்தைக் குறைக்குமா என்றும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், குறுகிய காலத்தில் பல மடங்கு வளர்ச்சியைப் பெற்ற என்விடியாவின் சாதனை வரலாற்றில் மறக்காமல் இடம் பிடித்து இருக்கும்.
- சரவணகுமரன்