\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வெறுப்பு சூழ் உலகு

‘சங்கி’, ‘திராவிடியா’, ‘கோட்டா ஜாதி’, ‘கிராஸ்பெல்ட்’, ‘பாவாடை’, ‘அரிசி மூட்டை’, ‘மூத்திர குடிக்கி’, ‘கூலிபான்’, ‘நூலாண்டி’, ‘முக்கா’, ‘அந்நிய கைக்கூலி’, ‘கிரிப்டோ கைக்கூலி’, ‘ஆண்ட பரம்பரை’, ‘வந்தேறி’, ‘சொம்பு தூக்கி’, ‘கொத்தடிமை’, ‘சொறியன்’ – நீங்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பாவிப்பவராக இருப்பீர்களென்றால், ஊடக அகராதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சொற்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும். மேலும், ‘கதறுடா’, ‘கக்கூஸ் கழுவு’, ‘பர்னால் தடவிக்கோ’, ‘உண்டகட்டி வாங்கித் தின்னு’, ‘தொங்கிடு’ போன்ற சில அறிவுரைகள் வழங்கப்படுவதையும் காதுகள், கண்களில் தேன் வழிய அனுபவித்திருப்பீர்கள். இவையெல்லாம் கண்ணில் படாமல் தவிர்க்கதான் தான், நான் சமூக ஊடகங்களில் பங்கெடுப்பதில்லை; அல்லது அதையெல்லாம் கடந்து சென்றுவிடுவேன் என்று நினைப்பவரும் உள்ளனர். ஊரெங்கும் குண்டு மழை பொழிகிறது, வெளியில் சென்றால் பிணவாடை அடிக்கிறதென்று பாதாள பதுங்குகுழியில் ஒடுங்கிவிடுவதே மேலென்றுதான் நானும் நினைத்திருந்தேன். ஆனால் குண்டு மழை சத்தம் அதிகரித்தவாறேயுள்ளது; பிணவாடை பாதாளம் வரை கசிந்து, மேனியென்கும் வெறுப்புக் காற்று வருடுகிறது; பதுங்கியிருப்பதும் ஒரு கட்டத்தில் மூச்சு முட்டதானே செய்கிறது?

வெறுப்பு என்பது ஒரு நபர்மேல் அல்லது ஒரு தொகுதியைச் சேர்ந்தவர்கள்மேல் அல்லது ஒரு கருத்துக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான, எதிரிவினையின் வெளிப்பாடு. கோபம், ஆத்திரம், அருவருப்பு போன்ற கணநேர உணர்வுகளிலிருந்து வேறுபடும் வெறுப்பை பொதுவாகக் காலத்தால், எளிதில் குணப்படுத்த முடியாது. இதைச் சரியாக வரையறுக்க முடியாவிட்டாலும், வெறுப்புணர்வு 

கடந்த கால அனுபவங்கள் அல்லது துஷ்பிரயோகங்கள், அச்சங்களால் உண்டாகும் மன அழுத்தம், கருத்தியல் வேறுபாடுகள், சமூகக் கவலை, சுயமரியாதை நிலைப்பாடு போன்றவற்றால் தூண்டப்படுகிறது. தனிப்பட்ட எந்தவொரு நபருக்கும், விருப்பங்கள் இருப்பது போல சில வெறுப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த நபர், தன்னைச் சார்ந்தவர்களுடன் அதனைப் பகிர்ந்து அவர்களிடமும் அந்த வெறுப்பைத் தூண்டிவிடுவது தவறு. சுருக்கமாக, தனிப்பட்ட ஒருவரின் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பினரின் மத, இன, மொழி ரீதியிலான உணர்வைத் தூண்டி, மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கேவலமாக பேசினாலோ அல்லது ஒழித்துக் கட்ட வேண்டும் என்றோ அல்லது ஒருவரது தலையை வெட்டிக் கொண்டு வந்தால் பரிசு என்றோ வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி, சட்டம் – ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தினால் அது வெறுப்பு பேச்சு.

பல நாடுகளில் வெறுப்பைப் பரப்புவதைக் குற்றமாகவே கருதுகின்றனர். தண்டனையிலிருந்து தப்பிக்க ஊடகவாசிகள் குறியீட்டுச் சொற்களை உண்டாக்கிவிட்டனர். உதாரணமாக, அமெரிக்காவில் இனவெறி அடையாளங்களாகக் கருதப்படும் சில சொற்களை, இந்தியர்கள், ‘கல்லு’, ‘கோரா’, ‘சிங்கி’ என்ற குறியீடுகளாக மாற்றிவிட்டனர். படைப்பாற்றல் பெருகப் பெருக, ஏகப்பட்ட குறியீடுகள் வரத் தொடங்கிவிட்டன. 

மதம், சாதி, மொழி, அரசியல் சார்பு, பழக்க வழக்கங்கள் என்ற அடிப்படையில் பல அடையாளங்களைக் கொண்டிருக்கும்  இந்தியாவில் இன்று வெறுப்புணர்வும், வெறுப்புப் பேச்சும் தலைவிரித்தாடுகிறது. அன்றாட வாழ்வியலுக்காக தமது அடையாளங்களை மறைத்து, வழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயச் சூழலில் பலரும் சிக்கியுள்ளனர். ஆளும் அரசுகள், இந்தியாவின் தனித்தன்மையான ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் சித்தாந்தத்தை ‘ஓர்மையே வலிமை’ என்று மாற்ற முயல்வதும் வெறுப்புணர்வு வளர ஒரு காரணமாகிவருகிறது. (வேறுபாடுகளை மதித்து ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவது ஒற்றுமை(Unity). மாறாக ஓர்மை (Uniformity) என்பது அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது).

தேர்தல் நேரங்களில், பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பெரும்பான்மை மதத்தவரை ஒன்றிணைக்கிறோம் என்ற போர்வையில் ஆதாரமற்ற, திரிக்கப்பட்ட அல்லது முற்றிலும் பொய்யான செய்திகளைப் பரப்பி வெறுப்புணர்வை விதைக்கிறார்கள். சில காலம் முன்புவரை அரசியல் மேடைகளில் வெற்று முழக்கமாகவே இவ்வித பரப்புரைகள், மெதுவாக விழுது விட்டு ஆழமாக ஊன்றி விட்டதன் விளைவாக, இன்று அடிமட்டத் தொண்டனும் அதே வெறுப்பை வெவ்வேறு மொழிகளில், வழிகளில் கக்குகிறான். அதிகார, பண பலம் பெற்றுவிட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் இன்று தொழில்நுட்பப் பிரிவை (IT Wing) வைத்துள்ளது. இவை தத்தம் கட்சி கொள்கை, செயல்பாடுகளை பரப்புகின்றனவோ இல்லையோ, மதம், மொழி, இனம், ஜாதி என எந்தெந்த வழியில் வெறுப்புணர்வை தூண்டி எழுப்ப முடியுமோ எல்லாவற்றையும் கையாள்கிறார்கள். குறிப்பாக ஆளும் அரசுகளுக்கு ஒரு இக்கட்டான, நெருக்கடியான சூழல் வரும்பொழுது, இவ்வித வெறுப்புப் பேச்சுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பொய்யான, தேவையற்ற வெறுப்பு பேச்சுகளால் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுஜனத்தின் கவனத்தைத் திசைத் திருப்பி தங்களுக்குத் தேவையானவற்றை சாதித்துக் கொள்ளவும், பாதகமானவற்றை மறக்கடிக்கச் செய்யவும் அரசின் அதிகார மையம் சுழன்றடித்துச் செயலாற்றுகின்றன. ஊதிய அல்லது தரகு அடிப்படையில் வெறுப்பு நெருப்பைத் தூண்டிவிடும் ஊடக நுந்துநர்கள் (influencer), கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

”ஜெய் பஜ்ரங் பலி’ என்று சொல்லி (வாக்களிக்கும்) பொத்தானை அழுத்துங்கள்’, ‘புல்டோசரை எப்படி இயக்கவேண்டுமென குறிப்பிட்ட மாநில முதல்வரிடம் கற்றுக் கொள்ளுங்கள்’, ‘இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்’ (ஹிந்து கத்ரே மே ஹைன்),  ‘தாலி, மாடுகளை விற்று ஊடுருவிகளுக்கு கொடுத்து விடுவார்கள்’ நாட்டின் முதன்மை மந்திரியின் வார்த்தைகள் இவை. இதுபோன்ற வெறுப்பு விதைகளால்  ஊக்கமடைந்த அவரது கட்சியைச் சார்ந்த உறுப்பினர் பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியைச் சார்ந்த ஒருவரை ‘ஏய்.. தீவிரவாதியே… விருத்தசேதனம் செய்து கொண்டவனே .. ஏய் காமத் தரகனே.. ஏய் முல்லா உன்னை நான் வெளியில் பார்த்துக் கொள்கிறேன்” என்று அன்பொழுக பேசியிருந்தார். குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பாலியல் வன்கொடுமை குற்றத்தால் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்ய ‘அவர்கள் பிராமணர்கள்.. ‘சன்ஸ்காரிகள்’ (ஒழுக்கமானவர்கள்)’ என்று பரிந்துரைக்க, பிராமணர்கள் அல்லாதோர் ஒழுக்கமானவர்கள் இல்லையா என்ற சொற்போர் நடந்தது. இந்தச் சொற்போரில் பங்கேற்ற சாமானிய மக்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு போரைக் கொண்டு சென்றுவிட்டனர். மூலக் கருத்தை சொன்ன சட்டமன்ற உறுப்பினர், சந்தோஷமாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அண்மையில் அலகாபாத் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நடத்தப்பட்ட ஹிந்துத்துவா கூட்டத்தில் பேசிய நீதிபதி ஒருவர், ‘நீங்கள் ஒரு மாணவராக, வியாபரியாக, வக்கீலாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு இந்து; இந்நாட்டின் சட்டம் பெரும்பான்மையினத்தவருக்கானது; ‘கத்முல்லாக்களுக்கு’ அல்ல; இது ஆட்சேபனைக்குரிய வார்த்தை என்பதை தெரிந்தே தான் இதைச் சொல்கிறேன். இந்துக்கள் சாதுவானவர்கள், மாமிசம் சாப்பிடும் இஸ்லாமியரிடம் கருணை இருக்காது’ என்று பேசியுள்ளார். இப்படி நாட்டின் முதல்வரிடம் தொடங்கி அரசின் அனைத்து மட்டங்களிலும் மதவெறுப்பு விஷமாகப் பரவி வருகிறது. மறுபுறம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை ‘சிறப்பாக’ கொண்டாடும் வகையில் பல அரசு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன என்பதில் பெருமையடைய வேண்டியுள்ளது. 

மத, இனவெறியை உண்டாக்கி, தூண்டி விடுவதற்காகவே சிறுசிறு உதிரி அமைப்புகளை, கட்சிகளாக உருவாக்கி, நிதியளித்து இயக்குவதையும் ஒரு உத்தியாக வைத்துள்ளன பணபலம் மிக்க அதிகார மையங்கள். தங்களைக் குறுநில மன்னர்களாக எண்ணிக்கொள்ளும் இந்த உதிரித் தீவிரவாத அமைப்புகள் உள்ளூர்த் தொகுதிகளில் வெவ்வேறு வண்ணம் பூசிய வெறுப்புணர்வை வளர்த்தெடுத்து முதலாளிகளுக்கு விசுவாசம் காட்டுகிறார்கள். 

‘கொழுக்கட்டையும், தேங்காய் மூடியையும், மாட்டு மூத்திரத்தையும் குடிச்சிட்டு திரியற நீ ஆன்மிகவாதியா? மாட்டை தின்பவன் கீழ் ஜாதி, மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மேல் ஜாதியா?’ என்று கோயம்புத்தூர் பாதிரியார் கொளுத்தி போட்டது; அரசியலமைப்பிலிருந்து, மதச்சார்பற்ற, சமவுடைமை (secular, socialistic) என்பவற்றை நீக்கவேண்டுமென வழக்கு தொடர்ந்தது; ‘நீ நல்ல ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பொறந்திருந்தா..’ என்று மாநில முதல்வரைக் கேட்டது; சதுரங்க போட்டியில் வென்ற இளைஞனுக்கு (அவர்கள் மொழியில் தெலுகு பையனுக்கு) பரிசளித்த தமிழ்நாட்டு முதல்வரை, ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது’ என்று மேற்கோளிட்டு ஒருவர் பதிவிட்டது; ‘இஸ்லாமியரும், கிறித்தவரும் சாத்தானின் பிள்ளைகளாகி விட்டன. இன்று நாடு இருக்கும் அவலநிலைக்கு காரணம் அவர்கள் தான்’ என்று பேசுவது; எந்த மதக் கடவுளுக்கு அதிக மனைவிகள் என்று சொற்போர் ஆய்வுகள் நடத்தப்பட்டது; “ஜப் முல்லே கேட்டே ஜாயேங்கே, வோ ராம் ராம் சில்லாயேங்கே” (முஸ்லீம்கள் கொல்லப்படும்போது, ராமரின் நாமத்தை உச்சரிப்போம்) மற்றும் “ஹிந்துஸ்தான் மே ரஹ்னா ஹோகா, ஜெய் ஸ்ரீ ராம் கஹ்னா ஹோகா” (நீங்கள் இந்தியாவில் வாழ விரும்பினால், நீங்கள் ஜெய் ஶ்ரீராம் சொல்ல வேண்டும்) போன்ற முழக்கங்களை விதைப்பது தான் இந்த உதிர் அமைப்புகளின் வேலை. அமைப்பு ரீதியாக இல்லாமல், ஊடக நிறுவனங்கள் சிலவற்றின் மூலமும் வெறுப்புரைகள் பொதுமக்கள் மனதில் இறக்கப்படுகின்றன – ‘கோவிட்டை பரப்ப மாநாடு என்ற பெயரில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் புகுந்துள்ளனர்’ என்றது ஒரு ஊடகம். ‘முன்னோர்கள் கோயிலில் நாயனம் ஊதியதால் தான் இன்று அவர் முதல்வராக உள்ளார்’ என்று ஒரு ஊடகம் சொல்ல, ‘உன் முன்னோர்கள் கோயிலுக்குள் கடவுளைத் தொட்டு அர்ச்சனை செய்த பின்னரும் நீ ஏன் முதல்வராகவில்லை’ என்ற எதிர்வாதம் ஊடகத்தை மட்டுமல்லாமல் நாயனம் வாசிப்பவர் மற்றும் அர்ச்சனை செய்பவர்கள் மனதையும் ரணகளமாக்கியது. ஊடகங்களில் சர்வசாதாரண வழக்கமாகிவிட்ட இவ்வகையான வெறுப்புணர்வு மற்றும் பிரிவினை சித்தாந்தங்கள் இளந்தலைமுறையினரிடையே வேரூன்றி வரும் அவலங்களையும் பார்க்க முடிகிறது. கிரிக்கெட் போட்டியொன்றில் ஆட்டமிழந்து வெளியேறிய பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய வீரரின் முகத்தருகே சென்று ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சந்தோஷித்தது ஒரு கும்பல். மாட்டுக் கறி வைத்திருந்த்தாக சொல்லி நடந்த கொலைகளும், வன்முறைகளும் ஏராளம். மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுவனொருவன், தன்னைவிட வயதில் குறைந்த மூன்று இஸ்லாமிய சிறுவர்களை ‘ஜெய் ஶ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லி, செருப்பால் அடிக்கும் கானொளி அதிர்ச்சியளிக்கிறது. அடித்த மற்றும் அடிபட்ட சிறுவர்களிடையே இது தொடர் வன்மமாக மாறக்கூடிய அபாயத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.

முன்பெல்லாம் செய்தித்தாள்கள், தவறானதொரு தகவலை வெளியிட்டுவிட்டால், அடுத்த நாளே அந்தத் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கும் பண்பு இருந்தது. அந்த நாகரீகம் காலாவதியாகி, இன்று  செய்தித்தாள்களும், ஊடகங்களும் சித்தரிக்கப்பட்ட அல்லது போலியான கருத்தைத் திணிக்கும் மிகக் கொடிய சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. பங்களாதேஷில் இந்து சாமியாரைப் பிடித்து அவரது தலையை மழித்ததாக கானொளி ஒன்று வெளியாகி வெறுப்புக் கணலுக்குத் தூபம் போட்டது. உண்மையில் மனநலம் குன்றி, கவனிபாரற்று திரிந்த ஒரு இஸ்லாமியரை, அங்கிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் அவருக்கு முடிவெட்டி, சவரம் செய்து புதிய உடைகள் அணியச் செய்து அவரை மனநலப் பாதுகாப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த காட்சி உண்மை – ஆனால் அதன் பின்னணியைத் திரித்து வெளியிட்டு, வன்முறையை தூண்டி இன்பமடைந்தனர் சிலர். இன்னொரு சம்பவத்தில் ஒரு இஸ்லாமியன் ‘ஃபர்கா’ அணிந்துகொண்டு மற்றொருவரைத் தாக்குவதாக ஒரு கானொளி பரப்பப்பட்டது. விசாரணையில் அது ஒரு இந்து இளைஞன் என்பதும், இஸ்லாமிய வெறுப்பைத் தூண்ட சித்தரிக்கப்பட்ட நிகழ்வு அது என்பது புலனானது. நான்கு பேர் ஒரு சிறுவனின் பூனூலை அறுத்துவிட்டதாக தீயென பரவிய செய்தியின் பின்னணியில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட இடத்திலிருந்த சிசி டிவி காட்சிகள் அந்தச் சிறுவன் எந்த சம்பவம் நடைபெறாமல், சாதாரணமாக கடந்துசென்ற உண்மை வெளிப்பட்டது. இன்னொரு சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சித் தலைவர்கள் கொண்டு சென்ற அரசியலமைப்பு புத்தகம் பைபிள் ஆகத் திரிக்கப்பட்டு விஷமாகப் பரவியது. இது போன்ற திரிக்கப்பட்ட தகவல் அல்லது காணொளிகளின் உண்மையற்ற படிவத்தைப் பார்த்தவர்கள் இலட்சக்கணக்கானோர்; ஆனால் அச்சம்பவங்களின் பின்னணியை ஆராய்ந்து உண்மையான தகவலை (fact checking) சொல்லிய தகவல் / கானொளி சில ஆயிரம் பேரை மட்டுமே சென்றடைந்தது. 

துரதிருஷ்டவசமாக, அப்பாவி பொது ஜனங்களுக்குள் வன்மவெறி ஊட்டப்படுவதும் அமைதியாக நடந்து வருகிறது. ஒரு காலத்தில் காலண்டர்களில், கண்களில் கருணையும், சாந்தமிகு புன்னகையும், அருள் புரியும் கண்களும் கொண்டிருந்த இராமர், முருகர், கிருஷ்ணர், சிவபெருமான், அனுமன் உள்ளிட்ட கடவுளர்கள் இன்று இணைய தளங்களில், கண்களில் கோபம் பொங்க ஆக்ரோஷத்தோடு காட்சிப்பட்டிருப்பது அதிகமாகப் பகிரப்படுகிறது. தெருவோர கடைகளில், இந்து வியாபாரிகள் காவி கொடிகளையும், இஸ்லாமியர் தங்கள் பெயர்ப்பலகையையும் வைத்து அடையாளபடுத்தும் அதிகாரமட்ட முயற்சிகள் நடக்கின்றன. அதாவது, வேறொரு மதத்தவருடன் வர்த்தக ரீதியாக கூட தொடர்பேற்படுத்திக் கொள்ளகூடாது என்பது தான் சூட்சமம்.

இந்தியாவில் மட்டும் தான் மத, இன வெறுப்பு உள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை. இந்தியாவின் அண்டை நாடுகளையும் மத வெறி மற்றும் வெறுப்பின் ஆக்டோபஸ் கரங்கள் பற்றிக்கொண்டது. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தால், இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு அதிகரித்துள்ளது. இந்த சகிப்பின்மை காரணமாக, இந்து பாரம்பரியத்துடனான தொடர்பை பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பங்களாதேஷில் இந்து கோயில்கள் உடைக்கப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அச்செய்திகளையும் திரித்து, தவறான வகையில் இந்திய ஊடகங்களில் திணித்துவருகின்றனர் விஷமிகள். உதாரணமாக, அங்கு இஸ்லாமிய பிரிவினர்களிடையே எழுந்த மோதலில் அங்குள்ள இஸ்லாமியப் புனித தளமொன்று (ஹஸ்ரத் பாபா அலியின் சூஃபி ஆலயம்) கொள்ளையடிக்கப்பட்டு, எரிக்கப்பட்டதை ‘இந்து கோயில் எரிப்பு’ என்று கொளுத்திப் போட்டனர். மேற்கு வங்கத்தில் கந்தகோஷ் எனும் பகுதியில், துர்கா பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சிலையை விழா முடிந்தபின் கடலில் கரைப்பதற்காக சிறுசிறு பகுதிகளாக உடைக்கும் காணொளியைப் பதிவிட்டு, ‘ஒன்றரை கோடி இந்துக்கள் வாழும் பங்களாதேஷ் நாட்டில் இந்து கோயில்கள் அடித்து உடைக்கப்படுகிறது. இந்துக்கள் நாடோடிகளாக விரட்டப்படுகிறார்கள். உணர்வுள்ள இந்துக்களே உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள்’ என்று பதறியிருந்தார். உடனே இக்காணொளி இலட்சக்கணக்கில் பகிரப்பட்டது. உண்மை கண்டறியும் சில அமைப்புகள் இதன் முழு பின்னணியை ஆதாரத்துடன் எடுத்துப் போட்டது பலர் கவனத்தை ஈர்க்கவில்லை. 

கண்டங்கள் கடந்து, கனடா, அமெரிக்காவிலும் மத இன வெறுப்பு துளிர்விடத் தொடங்கிவிட்டதையும் மறுக்க முடியாது. இந்துக்கள்-சீக்கியர்களுக்கிடையே எழும்பிய கலவரங்கள், கனடா-இந்திய உறவையே அசைத்துப் பார்த்துள்ளது. இவை பொதுப்படுத்தப்பட்டு, கனேடியர்கள் சமூக ஊடகங்களில், ‘இந்திய’ இன துவேஷத்தை உண்டாக்கத் தொடங்கிவிட்டதைக் காணமுடிகிறது. 

‘எக்ஸ்’ வலைத்தளம் ஒரு கட்சி சார்பு நிலையெடுத்த பின்பு, அதற்கு முன்பிருந்ததைவிட கிண்டலும், நையாண்டி பதிவுகளும் அதிகரித்துள்ளது. பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுபவர்களும் தவறான, இழிச் சொற்களை சங்கோஜமில்லாமல் எழுதித் தள்ளினர். அவை பெரும்பாலும் அரசியல் நிலைப்பாடு குறித்தவை. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலைக் குறித்த பதிவுகளில், யூத, இஸ்லாமிய சார்பெடுத்து வெறுப்பைக் கொட்டியவர்கள் கூட தத்தமது கண்ணோட்டத்தை பதிவிட்டிருந்ததைக் காணமுடிந்தது. மற்றவருக்குள் வெறுப்பை விதைப்பதாக இல்லாமல் இருந்தாலும், வரம்பற்ற இழிசொற்கள் வழிந்தோடின. ஊடகம் மூலம் மட்டுமல்லாமல், பொதுஇடங்களில் இன / மதம் குறித்த மோதல்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுகிறது. 

சமீபத்தில் மெக்சிகோவிலிருந்து அமெரிக்கா வந்தடையும் விமானமொன்றில் பயணித்த இந்தியக் குடும்பத்தினரை ‘நீங்கள் அமெரிக்கர் இல்லை..  F—— இந்தியாவிலிருந்து வந்துள்ளீர்கள்.. நாற்றம் பிடித்த தந்தூரிகள்.. உங்களுக்கு ஒழுக்கம் கிடையாது, சட்டத்தை மதிக்காதவர்கள்’ என்று பதிவிட முடியாத சொற்களால் இழிவுப்படுத்தியுள்ளார் ஒரு பெண்மணி. விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் நடந்ததால், இன்றுவரை அந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் உள்ளது. 

2022ஆம் ஆண்டு டெக்ஸஸ் மாநிலத்தில் ஒரு உணவகத்திலிருந்து வெளியே வந்த நான்கு பெண்களை எழுத முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்து, அடித்து ‘இந்தியாவுக்குத் திரும்பிப் போங்கள்’ என்று இழிவுபடுத்திய பெண் மீது பயங்கரவாத அச்சுறுத்தல் உட்பட நான்கு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. சில மாதங்களுக்கு முன், அப்பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டு, நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்க வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களில், கலிஃபோர்னியா உணவகம் ஒன்றில்,  ஒரு இந்தியரை, ‘நீ ஒரு அருவருக்கத்தக்க நாய்.. அழுக்கான இந்து.. மாட்டுக் கறி சாப்பிடாத நீ இங்கே வராதே.. இந்தியாவை அழித்துவிட்டு, இப்போது அமெரிக்காவை அழிக்க வந்திருக்கிறாயா? நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன்.. ‘பீஃப்’..நீ ‘பீன் பரிட்டோ’வை வாங்கிக் கொண்டு ஓடு ‘ என்று முகத்தில் காறித் துப்பி, அவமானப்படுத்தினார் ஒருவர். அசிங்கப்பட்டவர் ஒரு இந்து; அசிங்கப்படுத்தியவர் ஒரு சீக்கியர். அந்த சீக்கியர் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டார். கைதுக்குப் பிறகு இச்சம்பவம் குறித்து காவலதிகாரி ஷான் வாஷிங்டன், ‘பாலினம், இனம், தேசியம், மதம் மற்றும் பிற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூக உறுப்பினர்களையும் பாதுகாக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்’ என்று முகநூலில் பதிவிட்டார். ‘ஒருவரையொருவர் மதிக்கும்படி சமூகத்தை வலியுறுத்த விரும்புகிறோம், இது போன்ற எந்தவொரு சூழ்நிலையைப் பற்றி தெரிந்தாலும் உடனடியாக புகாரளிக்குமாறு’ம் அவர் கேட்டிருந்தது ஆறுதலுடன், நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது. இப்பண்பு, அரசியல் மற்றும் அதிகார வர்கத்தினரிடம் இல்லாதது மிகப்பெரிய குறையே. அவர்கள் தங்கள் சுயநலனுக்காக, உதிரி அமைப்புகள் மூலமும், கூலிக்கு அமர்த்தப்பட்ட ஊடக இன்ஃபுளுயன்சர்ஸ் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் மூலமும் பொதுமக்களிடையே வெறுப்புத் தணலை மூட்டி குளிர் காய்கிறார்கள். இவ்வகையான வெறுப்புப் பேச்சுகளின் ஆழம் புரிந்தாலும், ‘பேச்சுரிமை’ என்று கோஷமிடும் கும்பலும் இருக்கத்தான் செய்கிறது.

‘பீஃப் சாப்பிடக் கூடாது’ என்று ஒரிடத்தில் சிறுபான்மையினரை ஒடுக்கும் போது ‘பீஃப் சாப்பிடு’ என்று இன்னொரு இடத்தில் சிறுபான்மையினர் அவஸ்தக்கு உள்ளாகிறார்கள்; ‘ஒன்றரை கோடி இந்துக்கள் வாழும் பங்களாதேஷ் நாட்டில் இந்து கோயில்கள் அடித்து உடைக்கப்படுகிறது’ என்று வருந்தும் சிலர் ’17 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்திய நாட்டில் மசூதிகள் இடிக்கப்படுவதை’ நியாயப்படுத்துகிறார்கள்.

‘அங்க அடிச்சா இங்கே வலிக்கும்’ என்பதை உணரும் நாம் ‘இங்க அடிச்சா அங்கே வலிக்கும்’ என்று சிந்திப்பதில்லை. நாம் காலப்போக்கில், பிற தரப்பினரை, பிற இனத்தவரை, பிற மதத்தவரை, பிற வர்க்கத்தினரை, பிற நம்பிக்கையாளர்களை நேசிப்பதற்கும், மன்னிப்பதற்கும் மறந்து போகிறோமோ என்று தோன்றுகிறது. உலகெங்கும், சுனாமி அலைகளாக ஆர்ப்பரிக்கும் வெறுப்பு அலையை எதிர்த்து நிற்க சகோதரத்துவமும், சமத்துவம் போற்றும் மனிதமும் வேண்டும். பிள்ளைகளுக்குச் சொத்தும், பணமும் சேர்த்து வைத்துச் செல்ல எண்ணும் ஒவ்வொருவரும், கூடவே கொஞ்சம் மனிதநேயத்தையும் விட்டுச் செல்ல வேண்டும். ஊடகத் தகவலை உணர்வால் விழுங்காமல் அறிவால் நுகர்வோம்.

 

ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad