சுட்டு / வாட்டிச்சமைப்பது (Grilling) எளிதானது
கோடைகாலங்களில், புறநகர் பகுதிகளில், பல அப்பாக்கள் தங்கள் வீட்டின் பின்புறத்திலோ, பூங்காக்கள் போன்று பொதுவெளியிலோ வாட்டு அடுப்பு அல்லது வலைத்தட்டிகளில் (Grill) இறைச்சி, காய்கறிகள், பழங்களை நெருப்பிலும், புகையிலும் வாட்டி சமைப்பதைப் பார்த்திருக்கிறோம். நேரடியாக தணலில் சமைப்பதால் உணவின் மணமும், தன்மையும் காற்றில் பரவி, புதியதொரு சுவையுணர்வை அளிக்கும். குடும்பமாக, திறந்தவெளியில் நேரத்தைச் செலவிட எத்தனிக்க நினைக்கும் எவருக்கும், அதே சந்தர்ப்பத்தில் உணவும் தயாராவது அலாதியானதொரு அனுபவத்தைத் தரக்கூடும். தண்ணீரில் வேகவைக்காமல், பாத்திரங்கள் அதிகமில்லாமல் நேரடியாக நெருப்பில் வாட்டி எடுப்பது அனுபவம் வாய்ந்த சமையல்காரர்களுக்கு கூட சவாலாகயிருக்கும்.
‘கிரில்’ செய்வதில் பெரிதாக அனுபவம் இல்லாதவர்களுக்கும், நிலக்கரியை எரித்து சமைப்பதினால் உணவின் மேற்பகுதில் படியும் புகைப்படல வாசம் பிடிக்காதவர்களுக்கும் உதவவே எரிவாயு அனலடுப்புகள் கிடைக்கின்றன. ஆனாலும், முதன் முறையாக வாட்டி சமைக்கத் தொடங்குவதற்கு கரிப்புகையில் சமைப்பது சற்றே சவாலானதாகவம் ஆனால் சிக்கனமாகவும் இருக்கும்.
எரிவாயுவினால் இயக்கப்படும் வாட்டு அடுப்பை எளிதாக கையாளலாம். ஏனெனில் அவை சமையலறையில் நாம் பயன்படுத்தும் ‘காஸ்’ அடுப்புகளைப் போலவே செயல்படும். எளிதாக பற்றவைக்கவும், தேவைக்கேற்றவாறு சூட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். வேகமாகச் சமைக்கவும், வெவ்வேறு பதங்களில் உணவைச் சமைக்கவும் எரிவாயு வரப்பிரசாதமாக அமையும். ஆனால் புகை வாசத்துடன் உண்மையான ‘கிரில்’ பதார்த்தங்களைச் சாப்பிட விரும்புவோர்க்கு, கரியினால் எரியும் வாட்டு அடுப்பே சிறந்தது.
அதிக அனுபவமில்லாதவர்கள் அல்லது முதன் முதலாக வாட்டிச் சமைக்க எண்ணுபவர்கள் பெரிய வாட்டு அடுப்பு வாங்குவதை விட அகலம் குறுகலான, செங்குத்தாக இருக்கும் வாட்டு அடுப்பை வாங்குவது உகந்தது. கரிச் சூட்டை நிர்வகிப்பதற்கு கொஞ்சம் அனுபவம் தேவை, ஆனால் அதை நீங்கள் கற்றுக்கொண்டால், வேறு வழியில் பெற முடியாத தனித்துவமான- லேசாக கருகிய மற்றும் புகைபடிந்த சுவையைப் பெறுவது உறுதி.
கரி கிரில்லைப் பயன்படுத்தும் போது கரி புகைபோக்கியைப் பயன்படுத்துவது கரியைக் கொளுத்த எளிதான வழி. கிரில்லில் மேலேயிருக்கும் வலைத்தட்டியை எடுத்துவிட்டு, மரத் துண்டுகள் அல்லது காதிகக் குவியலை தீக்குச்சியால் பற்ற வைத்து, தீ லேசாகப் பரவிய பின்னர் கரியைப் பரப்பலாம். நிலக்கரி அதிகரித்தால், தணல் உக்கிரமாகிவிடும். கிரில் தட்டியை அகற்றவும். இப்போதெல்லாம் தீயை அதிகச் சிரமமில்லாமல் பரவச் செய்ய, ‘லைட்டிங்’ துண்டுகள் வந்துவிட்டன. வெளியில் எவ்வளவு காற்றடித்தாலும் இவை சட்டென தீப்பிடித்து, எளிதாக கரியைத் தீப்பிடிக்கச் செய்யும். தீ பற்றிக்கொண்டவுடன் கரித்துண்டுகள் செந்நிறமாக மாறிவிடும். சற்று நேரத்தில் செந்தழல் சாம்பல் சூழ நிறம் மாறிவிட்டால், உங்கள் வாட்டு அடுப்பு தயாராகிவிட்டதென அர்த்தம். நீங்கள் சமைக்கப்போகும் உணவுக்கு (இறைச்சி, காய்கறி) தேவையான சூட்டைப் பொறுத்து கரியைக் கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் எரிவாயு வாட்டு அடுப்பு பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் உள்ளூர் கடைகளில் எரி வாயு உருளைகளை வாங்கலாம் அல்லது உங்கள் வாட்டு அடுப்பு இயற்கை எரிவாயு இணைப்புடன் இணைக்கலாம். உங்கள் வாட்டு அடுப்பு அடிப்பகுதியில் காற்றோட்டங்களைத் திறந்து, உங்கள் நிலக்கரியை வெப்பமாக எரிக்க காற்று செல்ல அனுமதிக்கலாம் .
தேவையான சூடு கிடைத்ததும், வெவ்வேறு வெப்ப நிலைகளில் சமைக்க உங்கள் உணவை கிரில்லில் நகர்த்தி அல்லது திருப்பி வைத்துக் கொள்ளலாம். சில உணவு வகைகள் விரைவாக வறண்டு போகும். ஆனால் கோழியைப் போல நன்கு சமைக்கப்பட வேண்டிய இறைச்சிகளுக்கு, நீண்ட நேரம் வாட்டி எடுக்க வேண்டும். இதன்போது நன்றாக மொறுமொறுவென பொரிந்த சிறுசிறு துகள்கள் கிடைக்கவாய்ப்புண்டு. அலாதி சுவைதரும் இத்துகள்களைச் சாப்பிட பெரிய போட்டியே நடக்கவும் கூடும்.
தொழில்முறை ‘கிரில்’ வல்லுனர்கள், வெப்பமானியைக் கொண்டு வெப்பத்தை அளந்து சமைப்பதுமுண்டு. நீங்கள் எல்லாவற்றையும் கடினமான வழியில் செய்ய வேண்டியதில்லை. எளிமையாக, விரைவாக சமைக்க முன்னரே, தேவையான சுவையூட்டிகள் அல்லது மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைத்த இறைச்சியை பயன்படுத்தலாம். அதிக வெப்பத்தை உண்டாக்ககூடிய சதுர வடிவிலான ஒளி கரியும் சீரான சூட்டைத் தரும்.
வாட்டு அடுப்பு என்று வரும்போது, பொருத்தமான கருவிகள் உங்கள் பெரிதும் உதவிடும்.நீண்ட கைப்பிடிகளைக் கொண்டுள்ள வாட்டு அடுப்பு பாத்திரங்கள் சூடான தீப்பிழம்புகளில் பயன்படுத்த பாதுகாப்பானவை. எரி வாயு கொள்கலன்கள்,வாட்டு அடுப்பு பிடி கரண்டி மற்றும் வாட்டு அடுப்பு தூரிகை ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். சூட்டை அளக்கக் கூடிய இறைச்சி வெப்பமானி வாங்கி வைத்துக் கொள்வதும் நலம்.
உங்கள் வாட்டு அடுப்பு ஏற்றுவதற்கு முன், உங்கள் கிரில் வாட்டு அடுப்பின் கையேட்டைப் படிக்கவும். அதை எப்படி, எங்கு பாதுகாப்பாக அமைப்பது என்பது பற்றிய முக்கியமான தகவலை இது வழங்கும். உங்கள் வீட்டின் பக்கவாட்டில் அல்லது உள் முற்றம் கூரையின் கீழ் அல்லது வேறொருவரின் வீட்டை ஒட்டி வாட்டு அடுப்பு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் .உங்கள் வாட்டு அடுப்பு திறந்தவெளியில் வைத்திருக்க வேண்டும், அதனால் காற்று சுற்றுவதற்கும் வெப்பம் தன்னைத்தானே சிதறடிப்பதற்கும் நிறைய இடம் உள்ளது.
நெருப்பு கட்டுக்கடங்காமல் பரவுவது போல் தோன்றினால், பீதி அடைய வேண்டாம். சந்தேகம் இருந்தால், மூடியை மற்றும் துவாரங்களை மூடிவிட்டால், தீ தானாகவே அழிந்துவிடும். ஆக்சிஜன் சப்ளையைத் துண்டித்து சில நிமிடங்களில் தீ அழியும். மேலும், எப்பொழுதும் தீயை அணைக்கும் கருவியை கையில் வைத்திருப்பது நல்லது.
வாட்டு அடுப்பு உங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட சுவை உலகத்தைத் திறக்கும். சற்று பழகிவிட்ட பின்பு, உங்கள் கற்பனைக்கேற்றவாறு, புதுப் புது சமையல் குறிப்புகளை பரிட்சித்துப் பார்க்கலாம். வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்வதுடன் மட்டுமல்லாமல், வெளிப்புறக் காற்றை சுவாசிக்கவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கூடி நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடவும் ‘கிரில்லிங்’ சிறந்த வாய்ப்பை உருவாக்கித் தரும்.
-யோகி.