கலிஃபோர்னியா பற்றி எரிகிறது
இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது
கலிஃபோர்னியா பற்றி எரிகிறது
பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற வீடுகளையும்
குடும்பக் கதைகளையும்
நேசத்துக்குரிய நினைவுகளையும்
பாதுகாத்த பொக்கிஷங்கள்
ஒரு தீ மூச்சில் அழிக்கப்பட்டன
இன்னும் தீ பரவுகிறது
தென் கலிஃபோர்னியா ஒரு தீப்பொறியாக மாறிவிட்டது
ஒரு கவிஞர் தனது உயிருக்காகத் தப்பி ஓட
தனது காரை கைவிடுகிறார்
தீக்காயம் பட்ட தனது குழந்தையை
ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்ல
பின்னே ஓடுகிறாள் ஒரு தாய்
ஒரு சிற்பியின் கண்கள்
கனவுகளின் உயிர் நிறைந்த ஜன்னல்களாக
ஊடுருவுவது போல தீ எங்கும் ஊடுருவிப் பாய்கிறது
காற்று மரணச் சிரிப்புடன் பெரும் சத்தமாக
தீச் சுவாலையை அள்ளி வீசுகின்றது
அது மில்லியன் கணக்கானவர்களின்
கனவுகளைக் கொன்று தின்றுகொண்டிருக்கிறது
தீயணைப்பு வீரர்கள்
நெருப்புடன் மல்யுத்தம் செய்கிறார்கள்
புகை மட்டுமே எஞ்சியுள்ள ஒரு பெருநகரில்
ஒரு கலைஞன்
சாம்பலையும் தண்ணீரையும் கிளறி
வண்ணம் தீட்டுவதெப்படி
இனிவரும் ஒருநாளில்
ஒரு சிறுமி இறந்துபோன தன்
சிறிய நாயைப் பற்றி எழுத முனைவாள்
அவள் மீண்டும் பார்க்க முடியாத
அவளுடைய சிறந்த தோழி பற்றி எழுதுவாள்
தற்காலிகத் தங்குமிடத்தில் இருக்கும் ஒரு தாய்
இழந்த தன் குழந்தைக்காகப்
பிரார்த்தனை செய்வாள்
ஒரு வயதான மனிதன்
தனது இளமையின் காதல் பாடல்களை
தனக்குள்தானே பாடிக் கொண்டே இறந்து போவான்
கனவுகளைத் தொலைத்தவர்கள்
இப்போது எரியும் நகர வீதிகளில்
அலைந்து திரிகிறார்கள்
இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது
இது துயரமானது
கலிஃபோர்னியா பற்றி எரிகிறது
- தியா காண்டீபன்
Tags: California Fire, LA fire