\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

‘பண்ணு’ தமிழ் தவிர்ப்போம்

“இப்ப பாத்தீங்கன்னா பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு இஷ்யூ நடந்திட்டிருக்கு.. அதையொட்டி நேத்து அந்த பார்ட்டிலேர்ந்து ஒரு கண்டன கூட்டம் ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க.. அதுல பெர்பார்ம் பண்றதுக்காக சில ஆர்டிஸ்டையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. அவங்களும் பல மணிநேரம் டிராவல் பண்ணி நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க.. கூட்டம் கொஞ்சம் டல் அடிக்கிறதைப் பாத்துட்டு அவங்க கேஷுவலா பேசலாம், மக்களை கவர் பண்ணி அட்ராக்ட் பண்ணலாம்னு நெனச்சு பேசத் தொடங்கனப்போ ஒரு வார்த்தையை விட்டிறாங்க.. அதைக் கேட்டதும் அங்கிருந்தவங்க ஷாக் ஆகி மைக்கை ஆஃப் பண்ணிட்டாங்க.. அங்க ஒரு களேபரம் ஆவதை உணர்ந்து யாரோ காவல்துறைக்கு கால் பண்ணியிருங்காங்க.. அவங்க வந்து போராட்டம் பண்ணவங்களோட சேத்து அந்த பெர்பார்ம் பண்ண வந்த ஆர்டிஸ்டையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. என்ன ரீசன்னு பாத்தீங்கன்னா, அந்தக் கூட்டத்துல அவங்க மட்டும் பெர்பார்ம் பண்ண வரல.. மொத்தக் கும்பலும் பர்பார்ம் பண்ற கும்பல் தான்.. அதனால போலிஸால அவங்கள டிஃப்ரென்ஷியேட் பண்ண முடியல.. அந்த ஒரு கிளிப்பிங்கை கட் பண்ணி போட்டு, அதப் போய் டிரோல் பண்ணி, அவங்கள ஒரு மீம் மெட்டிரியலா மாத்தி, இன்னைக்கு சோஷியல் மீடியால அதுதான் டிரெண்டிங் ஆயிட்டிருக்கு.. டிவிட்டர்ல ஏகப்பட்ட பேர் அதை கமெண்ட் பண்ணியிருந்தாங்க.. அதுல சிலதை ஸ்கீரின் ஷாட்டா எடுத்து இங்க ஷோ பண்றேன்.. இது யாரு மனசையும் புண்படுத்தறதுக்காக இல்லை சடையர் பண்றதுக்காகவோ இல்லை.. அவங்கள பாடி ஷேம் பண்றதும் எங்க சேனலோட நோக்கம் இல்ல.. உங்களோட செண்டிமென்ட்ஸை அஃபண்ட் பண்றதும் எங்க நோக்கம் இல்ல…அந்த வீடியோவையும், கமெண்ட்ஸையும் பாத்துட்டு நீங்க என்ன நெனக்கிறீங்கன்றதையும் கீழே கமெண்ட் பண்ணுங்க.. அடுத்த வீடியோவில உங்களை சந்திக்கிற வரை வணக்கம்.. மறக்காம எங்க சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க”

வாசிக்கும் பொழுது, அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கும் ஒரு காணொளியில் வந்த ஒரு உரையின் சுருக்கம் என்று புரிந்திருக்கும். இயல்பான பேச்சுத் தமிழில் நடந்ததை விவரித்திருக்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ‘இயல்பான பேச்சுத் தமிழ்’ என்பதன் வரையறை தான் இங்கே சிக்கல். மேலே சொல்லியிருக்கும் அதே செய்தியில் கலந்திருக்கும் ஆங்கிலச் சொற்களை மட்டும் ஊன்றி கவனித்துப் பார்த்தால், எவ்வளவு இயல்பாக ஆங்கிலம் தமிழோடு இழைந்துவிட்டது என்பது விளங்கும்.

“இப்ப பாத்தீங்கன்னா பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு issue நடந்திட்டிருக்கு.. அதையொட்டி நேத்து அந்த partyலேர்ந்து ஒரு கண்டனக் கூட்டம் organize பண்ணியிருந்தாங்க.. அதுல perform பண்றதுக்காக சில artistயையும் invite பண்ணியிருக்காங்க.. அவங்களும் பல மணிநேரம் travel பண்ணி நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க.. கூட்டம் கொஞ்சம் dull அடிக்கிறதைப் பாத்துட்டு அவங்க casualலா பேசலாம், மக்களை cover பண்ணி attract பண்ணலாம்னு நெனச்சு பேசத் தொடங்கனப்போ ஒரு வார்த்தையை விட்டிறாங்க.. அதைக் கேட்டதும் அங்கிருந்தவங்க shock ஆகி micகை off பண்ணிட்டாங்க.. அங்க ஒரு களேபரம் ஆவதை உணர்ந்து யாரோ காவல்துறைக்கு call பண்ணியிருங்காங்க.. அவங்க வந்து போராட்டம் பண்ணவங்களோட சேத்து அந்த perform பண்ண வந்த artistடையும் arrest பண்ணிட்டாங்க.. என்ன reasonனு பாத்தீங்கன்னா, அந்தக் கூட்டத்துல அவங்க மட்டும் perform பண்ண வரல.. மொத்தக் கும்பலும் perform பண்ற கும்பல் தான்.. அதனால policeஸால அவங்கள differentiate பண்ண முடியல.. அந்த ஒரு clippingகை cut பண்ணி போட்டு, அதப் போய் troll பண்ணி, அவங்கள ஒரு meme materialலா மாத்தி, இன்னைக்கு social mediaல அதுதான் trending ஆயிட்டிருக்கு.. twitterல ஏகப்பட்ட பேர் அதை comment பண்ணியிருந்தாங்க.. அதுல சிலதை screen shotடா எடுத்து இங்க show பண்றேன்.. இது யாரு மனசையும் புண்படுத்தறதுக்காகவோ, satire பண்றதுக்காகவோ இல்லை.. அவங்கள body shame பண்றதும் எங்க channelலோட நோக்கம் இல்ல.. உங்களோட sentimentsஸை offend பண்றதும் எங்க எண்ணம் கிடையாது…அந்த videoவையும், commentsஸையும் பாத்துட்டு நீங்க என்ன நெனக்கிறீங்கன்றதையும் கீழே comment பண்ணுங்க.. அடுத்த videoவில சந்திப்போம். வணக்கம்.. மறக்காம எங்க channelக்கு subscribe பண்ணுங்க, like பண்ணுங்க, share பண்ணுங்க comment பண்ணுங்க”

Subscribe, meme material, trending, screen shot போன்ற துறைமொழி ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள், பேச்சுவாக்கில் உடனடியாகத் உதிக்காது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.  ஆனால் பிரச்சனை (issue), கட்சி (party), ஏற்பாடு (organize), நிகழ்த்து (perform), கலைஞர் (artiste), அழைத்து (invite) – இவையெல்லாம், மிக எளிமையான, வழக்கத்தில் உள்ள சொற்கள். மேலே சொன்ன காணொளி நிகழ்ச்சியில் உரையாடிவர்கள், தமிழ்ப் பற்றுள்ள இளைஞர்கள் தான். தனித்தனியாக, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தலைப்பில் பேசும் பொழுது மிக அருமையான தமிழ்ப் பதங்களைக் கையாள்வது கண்டு நான் ஆச்சரியப்பட்டதுண்டு. இயல்பான உரையாடல் என்று வரும்பொழுது, மிக எதார்த்தமாக ஆங்கிலச் சொற்கள் கலந்து விடுகின்றன. இவர்கள் மட்டுமல்ல, பொதுவாகத் தமிழ்நாட்டிலிருந்து இயங்கக்கூடிய அநேக ‘யூடியுப்’ ஊடகத் தடங்களின் நிலையும் இதுதான். (இங்கே  ‘யூடியுப்’ என்பதன் தமிழ்ச் சொல் வலையொளி அல்லவா? நீயே இப்படித்தானே எழுதுகிறாய் என்று சிலருக்குத் தோன்றக்கூடும். ‘யூடியுப்’ என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். அந்தப் பெயர்ச்சொல்லை அப்படியே பயன்படுத்துவது தான் முறை என்று நினைக்கிறேன்). வலையொளி / ஒளிபரப்பு போன்றவை Webcast எனும் பொருள் தரக்கூடியது.

‘ஒரு சிந்தனையோட்டத்தில் பேசும் பொழுது, (ஒரு ஃப்ளோ(flow)ல போயிட்டிருக்கும்போது), இணையான தமிழ்ச்சொல்லைத் தேடித் தேடி பேசுறது கஷ்டம். அதுமட்டுமில்ல, சொல்ல வர்ற விஷயத்தைக் கேக்கறவணும் புரிஞ்சிக்கணும் இல்லையா? இதைப் பெரிய குற்றமா தூக்கிட்டு வந்துட்ட’ என்று கேட்பவர்கள் இருக்கலாம். கண்டிப்பாக இதனைக் குற்றமென்று சொல்லமுடியாது. ஆனால் தொலைநோக்குப் பார்வையில், மொழிக்கு இவை ஊறு விளைவிக்கும், சேதப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பம் வளர்ந்து அகராதியில் புதிய சொற்கள் சேரும்பொழுது, அவை பொதுமக்களைச் சென்றடைய சில கால அவகாசம் தேவைப்படும் என்பதை மறுக்கவியலாது. ஆனால் வீட்டில் அன்றாடம் புழங்கக் கூடிய சொற்றொடர்களிலும் ஆங்கிலச் சொற்கள் தவறாமல் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. ‘தரையை மாப் பண்ணிடு’, ‘தண்ணி ஊத்தி வாஷ் பண்ணிடு’, ‘வண்டியை லாக் பண்ணிட்டியா’, ‘அந்த ஓரத்தில பார்க் பண்ணிடு’, ‘டிவியை ஆஃப் பண்ணிடு’, ‘லைட்டை ஆன் பண்ணு’, ‘பென்சிலை ஷார்ப் பண்ணிக்கொடு’ சாதாரணமாக குடும்ப உறுப்பினர்கள் பரிமாறிக் கொள்ளும் சொற்றொடர்கள் இவை.  சமையல் குறிப்பு காணொளிகள் பிரபலமடைய துவங்கிய பின்னர் ‘அதை அப்படியே 4 மணி நேரம் சோக் பண்ணிக்கோங்க’, ‘அடுப்பை சிம்ல / லோ ஃபிளேம்ல வெச்சிடுங்க’, ‘டிரை ரோஸ்ட் பண்ணாலும் நல்லாருக்கும்’, ‘டைமண்ட் டைமண்டா கட் பண்ணிடுங்க’, ‘ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்கின பருப்புஇது’ போன்ற சொற்றொடர்கள் பேதம் ஏதுமின்றி அனேக வீட்டு ‘கிச்சன்’களிலும் ஒட்டிக்கொண்டுவிட்டது.

எத்தனையோ வேற்றுமொழி ஆதிக்கங்களை கடந்துவந்த தமிழ் மொழியில், அரபி, உருது, சமஸ்கிருதம், பாரசீகம், பிரெஞ்சு, போர்த்துகீசம் என பிறமொழிச் சொற்கள் ஏராளமுள்ளன. அவற்றில் பல காலப்போக்கில் தமிழ்ச் சொல்லாகவே பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதையும் மறுக்கவியலாது. சான்றாக, ‘இரத்தம்’, ‘வார்த்தை’ (சமஸ்கிருதம்), ‘சால்வை’ (பாரசீகம்) போன்ற சொற்களும், ‘அசல்’, ‘காயம்’, ‘கைது’, ‘வசூல்’, ‘வாரிசு’ போன்ற எண்ணற்ற அரபுச் சொற்களும் தமிழில் இரண்டறக் கலந்துவிட்டது. குறிப்பாக, சட்டத்துறையில், ‘தகராறு’, ‘தரப்பு’, ‘பைசல்’, ‘ரத்து’, ‘வக்காலத்து’, ‘வக்கீல்’, ‘வாய்தா’ என ஏராளமான அரபுச் சொற்கள் சேர்ந்திருப்பதைக் காணமுடியும். அவற்றின் மூலத்தை, சொற்பிறப்பியலைத் தேடிப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய அளவில் தான் உள்ளன. ஹோட்டல், சினிமா, பென்சில், ஃபைல், ஷாம்பூ போன்ற ஆங்கிலச் சொற்களும் ஏற்கனவே தமிழ்மொழியோடு ஐக்கியமாகி விட்டன. பன்னெடுங்காலமாக பழகிவிட்ட இச்சொற்களைத் தவிர்த்துப் பேசுவது அவ்வளவு எளிதானதில்லை. எடுத்துக்காட்டாக, ‘காஃபி’ – (டச்சு – அரபி – துருக்கி என பல மொழிகளில் திரிபடைந்த சொல்) தமிழர்கள்  அன்றாடம் பயன்படுத்தும் இச்சொல் பல அகராதிகளில் தமிழ்ச்சொல்லாகவே பட்டியலிடப்படுகிறது. ‘குளம்பி’ என்றவொரு தனித்தமிழ்ச் சொல் பெருமளவு எடுபடாமல் போனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக ‘தேநீர் கடை’ என்ற பெயர்ப்பலகைகளை காணமுடிந்த அளவுக்கு ‘குளம்பிக் கடை’ என்பதை காணமுடிவதில்லை. இப்படி தமிழ் மொழியோடு கலந்து, வழக்கத்தில் இடம்பெறுபவை பெரும்பாலும் பெயர்ச்சொற்களே. வாக்கியங்களில் ஆங்கில வினைச்சொற்கள் சேரும்பொழுது ‘பண்ணு’ துனைவினை சேர்ந்துகொண்டு ‘பண்ணு’த் தமிழாக மாறிவிடுகிறது. 

நடைமுறையில் தூயத் தமிழ்ச்சொற்களைப் பாவிப்பது சற்று சிரமமாக இருக்கக்கூடும். இதற்குக் காரணங்கள் ஏராளமுண்டு. 

கவிதை, உரைநடை, சிறுகதை, புதினம், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என்று எண்ணற்ற ஊடக வடிவங்கள் கிடைக்கப்பெற்றதும், எளிய நடையில் நுகர்வோரைச் சென்றடைய பெரும் போட்டி உருவாகிவிட்டது எனலாம். சாமான்ய மனிதரைக் கவர, பேச்சுவழக்கில் கருத்தைத் தெரிவிப்பதற்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. நேரலை நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் தங்களது மனவுணர்வுகளை வெளிப்படுத்த, தமிழ்ச்சொல்லைத் தேட அவகாசமின்றி ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திவிடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி தொடர் போன்ற பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில்  வரும் பாத்திரங்களும் கூட ஆங்கில வினையும், தமிழ்த் துணைவினையையும் சேர்த்தே பேசுகிறார்கள். இதனைப் புதிய இயல்பாக எடுத்துக் கொள்ளும் பார்வையாளர்கள் இப்படிப் பேசும் நடிகர்கள், பேச்சாளர்களுடன் ஒருவித நெருக்கத்தை உணருவதாகக் கருதுகிறார்கள். இந்த வரவேற்பு அளிக்கும் ஊக்கத்தால் தமிழில் ஏகத்துக்கும் ஆங்கில வினைச் சொற்கள் சேருவதையும், அவற்றுக்கு செய், பண்ணு போன்ற சொற்கள் துணை நிற்பதையும் காணமுடிகிறது.    

உலகமயமாக்கம், இணைய வசதி போன்றவை உலகை சுருக்கி, புதிய கலாச்சார சாளரங்களைத் திறந்துவிட்டுள்ளது. எடுத்துகாட்டாக, வெளிநாட்டு குளிர் பானம் அல்லது வாகன விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் ஆங்கில ‘கவர் சொற்றொடர்கள்’ (catch phrase) மக்களை, குறிப்பாகப் பதின்ம வயதினரை எளிதில் கவர்ந்து விடுகிறது. இச்சொற்கள் வெகுவிரைவில் பேச்சுமொழியாக உருவெடுத்து, அன்றாட உரையாடல்களில் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவ்வகை சொற்றொடர்களின் ஆயுட்காலம் குறைவுதான் என்றாலும், விளம்பர உலகம் புதிதாகவொரு  மாற்றுச் சொற்றொடரை நுழைப்பதில் வெற்றி கொள்கிறது.  

இளைஞர்களின் வேலைத்தளங்களில், தொழிற்முறை உரையாடல்களில் ஆங்கிலம் பேச வேண்டியிருப்பதும், சில ஆங்கிலச் சொற்றொடர்களை மனதில் பதித்துவிடுகிறது. இவர்கள், தொழிற்முறையாக ஆங்கிலத்தில்  உரையாடும் பொழுது, தமிழோ (அல்லது வேற்றுமொழி சொல்லோ) கலந்துவிடக் கூடாது என்பதில் காட்டும் கவனத்தை, தமிழில் பேசும்பொழுது கடைபிடிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது . 

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஆங்கிலச் சொற்கள் கலப்பு, திணிப்பின் மூலமாக வந்தவை அல்ல. நாகரீகம், வணிகத் தொடர்பு, கலாச்சாரப் பரிமாற்றம், பணிச்சூழல், தொழில்நுட்ப வளர்ச்சி மூலமாகவே ஆங்கிலம் கலந்துவிடுகிறது. தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்தில், புதிது புதிதாக துறைசார்ந்த கலைசொற்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. அதற்கு ஈடான, எளிமையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குவதில் ஏற்படும் தாமதம், ஆங்கிலக் கலைச்சொற்கள் ஆழமாகப் பதிந்துவிடக் காரணமாகிறது. சான்றாக,   எனும் சொல்லுக்கு செயற்கை நுண்ணறிவு, செயற்கை அறிதிறன், செயற்கை அறிவாற்றல் எனப் பல்வேறு சொல்லாக்கங்களைக் காணமுடிகிறது. இதில் எதை பாவிப்பது சரியாகயிருக்கக் கூடும் என்று தீர்மானிப்பதற்குள் AI எனும் சொல்லாக்கம் சாமான்யருக்கும் பழகிவிட்டது. இந்த நேரத்தில், அதனை செநு, செஅ என்று மாற்றுவது அபத்தமாகிவிடும். தமிழில், கிமு, கிபி போன்ற குறுங்குறிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் ஒரு குறைதான். ரூ, எகா போன்ற குறுங்குறிகள் எழுத்தில் பயன்படுத்தப்பட்டாலும், பேச்சில் அவை ரூபாய், எடுத்துக்காட்டு என்றே சொல்லப்படுகிறது. ஆங்கில AC, TV, BP போன்றவை தமிழ்ப்படுத்தப்படும் பொழுது, காற்றுப்பதனி, தொலைகாட்சிப் பெட்டி, ரத்த அழுத்தம் என்று மாறுவதால், எளிமை காரணமாக அவற்றின் ஆங்கில குறுங்குறிகளே தமிழில் நிலைத்துவிடுகிறது. 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால், எந்தவொரு மொழியாகிலும், நாளும் புதிய எல்லைகளுக்குத் தள்ளப்படுகிறது. உலகத்துடன் இணையாக தொழில்நுட்பத்தைக் குறிக்கும் சொற்களும் சொற்றொடர்களும் உருவாக்கப்படுவது கட்டாயமாகிவிட்டது. தமிழ் மொழியில், புதிய சொற்களை உருவாக்குவதற்குப் பொறுப்பான ஒரு குழுவோ, அமைப்போ இல்லை. யார் வேண்டுமானாலும் தம் வசதிக்குத் தக்க சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.  ஆனால், அவை துல்லியமான, பொருத்தமான மொழிபெயர்ப்புதானா என்பது சந்தேகம் தான். சான்றாக, Artificial Intelligence என்பதற்கு செயற்கை நுண்ணறிவு, செயற்கை அறிதிறன், செயற்கை அறிவுத் திறன், செயற்கை நுண்மதி, செயற்கை அறிவாற்றல் என பல மொழிபெயர்ப்புகளைக் காணமுடிகிறது. சில சொற்கள், அவை பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா என்று விளங்கா வண்ணம் மொழிபெயர்க்கப்படுவதால் தவறான பொருளை தருபவையாகவும் மாறிவிடுகிறது. எ.கா – computer எனும் சொல்லுக்கு, கணிப்பொறி, கணினி, கணினிகணிப்பொறி, கணக்கிடும் பொறி என்ற பல மொழிபெயர்ப்புச் சொற்களுடன் ‘கணக்கிடுபவர்’ (computer – a person who computes) என்ற சொல்லும் சேர்ந்து பெருங் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

மேலும் எந்தவொரு ஆங்கிலச் சொல்லையும், நேர்பொருளில் தமிழ்ப்படுத்த முயல்வதை தவிர்க்கவேண்டும். ‘இருவிழி கண்ணாடி’ அல்லது ‘இருகண் நோக்கி’ என்ற சொற்கள் எதைக் குறிக்கின்றன தெரியுமா? தமிழ் இணைய அகராதிகள் சில ‘binocular’ஐதான் இப்படி மொழிமாற்றம் செய்துள்ளன. மேலுமொரு அகராதி இச்சொல்லுக்குத் ‘துரப்பணம்’ என்று துளியும் சம்பந்தமேயில்லாத பொருளைக் குறிப்பிட்டுள்ளது. இணைய அகராதிகள் பலவும், யார் வேண்டுமானாலும் சொற்களைச் சேர்க்கவும், பொருள் எழுதவும் திறந்துவிட்டுள்ளதன் பலனாக அனுபவமில்லாதவர்கள், ஆர்வ மிகுதியால் பதிவிடுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். 

 

இவ்வகையானச் சொற்களை உடனுக்குடன் ஒழுங்குப்படுத்தி,  தரப்படுத்தி, பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இணைப்பது நல்ல தீர்வாக அமையக்கூடும். தமிழ் இணையக் கல்விக்கழகம் (www.tamilvu.org) சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு ஆகியவை இம்முயற்சிகளை முன்னெடுத்தாலும், போதிய நிதி ஆதரவில்லாததால் அவற்றின் செயல்பாடுகள் மெதுவாகவேயுள்ளன என்பதை அறியமுடிகிறது.  ஒவ்வொரு நாளும் வெளிவரும் சொற்களின் பட்டியலைப் பராமரிக்கவும், பின்னர் அவற்றை சீரான இடைவெளியில் பட்டியலிடவும் அதிக முயற்சி தேவை. மக்கள் மத்தியில், ஆங்கிலச் சொல் உடனுக்குடன் அறிமுகமாகிவிடுவதால், அதற்கான தமிழ்ச் சொல்லை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற போக்கு வளர்வதற்கு, அங்கிகரிக்கப்பட்ட தமிழ்ச்சொல் விரைவில் அகப்படாதிருப்பதும் காரணம். தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள், அரசுகள் இந்தச் சிக்கலைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பது நலமளிக்கும்.

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், அனைத்து ஊடகங்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து, ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பல படையெடுப்புகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் தமிழ்மொழியை இவ்வகையான சின்ன சின்ன ஆங்கிலக் கலப்பு அச்சுறுத்தாது என்று வாளாதிருப்பது இனியும் சரிபட்டு வராது. செயற்கை நுண்ணறிவு, அதாவது Artificial Intelligence வேகமெடுத்து வரும் சூழலில் சரியான மொழிபெயர்ப்பும், கையாளுகையும் அவசியம். இயந்திர வழி கற்றல், ஏற்கனவே உள்ள தரவுகளிலிருந்து வடிவங்களைப் பகுப்பாய்வு செய்து அனுமானங்கள் மூலம் தனது சொல்வங்கியை வளப்படுத்திக் கொள்கிறது. தரவுகள் துல்லியமாகக் கிட்டாத பட்சத்தில்,  இது செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைக் குழப்படித்து, சேதப்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும். 

மொழிக் கலப்பு என்பது உலக மொழி வரலாற்றில் தவிர்க்க முடியாததாகிறது. உணர்வை வெளிப்படுத்தக் கூடிய, விவரிக்கக்கூடிய சொல் இல்லாத பொழுது வேற்றுமொழி சொற்கள் அதனை இட்டு நிரப்புவது காலங்காலமாக நடந்துவந்துள்ளது. ஒருவகையில் அம்மொழி வளம் பெறுகிறது என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே இருக்கும் சொல்லை, வேற்றுமொழிச் சொல் ஆக்கிரமிப்பதை அப்படி எடுத்துக் கொள்ளமுடியாது. அந்நியச் சொற்கள் நுழைந்து ஏற்படுத்தும் மாற்றங்கள் அம்மொழியின் இலக்கண அடிப்படையைச் சிக்கலாக்கிவிடும். ‘நான் ஷோ பண்றேன்’ என்பது ‘நான் காண்பிக்கிறேன்’ எனச் சொல்கிறதா அல்லது ‘நான் நிகழ்ச்சி நடத்துகிறேன்’ என்கிறதா எனப் புரிய நேரமெடுக்கும். இயன்ற வரையில் ‘பண்ணு’ தமிழைத் தவிர்ப்போம்.

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad