\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மகளிர் தின வாழ்த்துக்கள்

பூமியில் வந்திறங்க, பூதவுடல் வருத்தினாள்!

பூரணமாய் வந்தியங்க, பூஞ்சிறகில் வளர்த்திட்டாள்!

தீதின்றிப் பிறந்திட்டேன், நன்மைகள் கூட்டினாள்!

தீரமுடன் வளர்ந்திட, திண்மைகள் காட்டினாள்!

 

அன்னையவள் பிரிந்தபின் அவளிடத்தை அலங்கரித்தாள்!

அன்னியர்கள் அணுகாமல் அருகிருந்து காத்திட்டாள்।

அண்ணியர்கள் இல்லம்வர, அரவணைத்தே இணைத்திட்டாள்!

அணங்கவளைக் கரம்பிடிக்க, அலங்கரித்தே பார்த்திட்டாள்!

 

தமக்கையும் தன்வழிபோக, தேவதையவள் புகுந்திட்டாள்!

தளிர்க்கரத்தால் கல்லிதனைத் தரமான சிலையாக்கினாள்!

தலைமையில் எனையேற்ற,  தன்னையே ஏணியாக்கினாள்!

தரணியில் நானியங்க, தன்னிகரில்லாக் காதலானாள்!

 

பிள்ளைகள் நான்கேட்க, பெண்களாய் உதித்தனர்!

பேதையும் பெதும்பையுமாய் வளர்ந்தெனை வளர்த்தனர்!

போதையில்லாப் பாதையினை போதனையின்றிக் கொடுத்தனர்!

பார்முழுதும் மறக்கடிக்கும் பாசமதைக் காட்டினர்!

 

இன்பமான நட்புகளும், இன்னும் பலவுறவுகளும்,

இன்னல்கண்ட பொழுதினிலே இமைநொடியில் உதவிகளும்,

இகம்முழுதும் நிறைந்திருக்கும் இணையில்லா மாதருக்கு

இகம்போற்றும் மகளிர்தின இனிமையான வாழ்த்துக்கள்!!

 

மகளிரே உலகின் மகத்தான அச்சாணி!

மனிதரின் இனமது மடியாமற்காத்த ஆணிவேர்!

மகேசன் அளித்திட்ட மங்காத வரமதனை

மனதார வணங்கிடுவோம் மகளிரின் தினமிதனில்!!

 

  • வெ.மதுசூதனன்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad