தவக்காலம் மனிதம் மலரும் ஓர் வசந்த காலம்!
அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரால் வணக்கமும் வாழ்த்துக்களும்…!
நம் கத்தோலிக்க தாய்த் திரு அவை, இந்த 2025ஆம் ஆண்டினை ‘புனித ஆண்டு’ ஆண்டாக அறிவித்து, “நம்பிக்கையின் திருப்பயணிகள்” என்ற நோக்குடன் கடந்து செல்ல, நம்மை இறைவழியில் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறது. கத்தோலிக்க திரு அவை, மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறப்பு ஆண்டுகளை புனித ஆண்டாக (ஜூபிலி) கொண்டாடுகிறது.
இத்தகைய புனித ஆண்டில், திருப்பயணிகளாகிய நாம் பயணிக்க ஆரம்பித்த நிலையில், இறைமகன் இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையில் உறுதியோடு மேலும் வளரவும், மேன்மை பெறவும் தவக்காலத்தில் அழைப்பு விடுகிறது.
இந்த தவக்காலம் மார்ச் 5ம் தேதி விபூதிப் புதனில் துவங்கி ஏப்ரல் மாதம் 17ம் தேதி பெரிய வியாழன் அன்று நிறைவு பெற்று, கிறிஸ்து இயேசுவின் சிலுவை பாடுகளை புனித வெள்ளி அன்று தியானித்து, இயேசு கிறிஸ்துவின் சிலுவைச் சாவில் நம்மை மௌனித்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாவைவென்று உயிர்த்தெழுந்த உண்மையான உன்னத நிகழ்வை, தகுதியுடனும் மகிழ்ச்சிபெருக்கோடும் கொண்டாட கத்தோலிக்க திரு அவை அழைக்கிறது.
இதன்மூலம் நாம் அனைவருக்கும், மனிதம் வளர்க்கும் திருத்தொண்டர்களாய் உயர்ந்திடும் வாய்ப்பையும் வழிமுறைகளையும் உருவாக்கி தந்துள்ளது.
நாம் வாழ்கின்ற இந்த வாழ்வில் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு அளிக்கும் மிகப்பெரியகொடை. அத்தகைய உயரிய கொடையால் ஒவ்வொரு தருணமும் வாழ்வின் உச்சம். இவ்வுண்மைக் கருத்தினை நிதானமாக நாம் சிந்தித்து நம்மை நாமே உள்நோக்கி, நம்மையே பரிசோதித்து, இறைமகன் இயேசுவிற்கு சான்று பகர்ந்து வாழ்ந்திட கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் இந்த தவக்காலம்.
இறைத்தந்தை நமக்களித்த இந்த கிடைப்பதற்கரிய மனுவாழ்வில், அதிலும் மேன்மை பொருந்திய இந்த கிறிஸ்தவ வாழ்வில் இன்று வரை நாம் எவ்வாறு வாழ்ந்துள்ளோம் என்பதை மதிப்பீடு செய்யும் காலம் இந்த தவக்காலம்.
இந்த அறிய வாய்ப்பினை எவ்வாறு நாம் பயன்படுத்தி உள்ளோம் என்று சிந்திப்போம்..! இறைவளம் பெற்று தூய ஆவியாருடன் இணைந்து செயலாற்றுவோம்.
தவக்காலம் என்பது கிறிஸ்தவ மரபில் ஒரு முக்கியமான ஆன்மீக காலமாகும். இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு (Easter) முன்பாக 40 நாட்கள் அனுசரிக்கப்படும் ஒரு தவமுயற்சியின் காலம்.
இந்த தவத்தில் நம்மை நாமே ஒருமுகப்படுத்தி, மனித குலம் முழுமைக்கும் இறைமகன் செய்த செபங்களையும், அனுசரித்த தியாகங்களையும், பட்ட துயரங்களையும், பாலைவனத்தில் 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்ததையும் நினைவுகூரும் காலம் தவக்காலம்.
மக்களினத்தை பாவ வாழ்விலிருந்து மீட்டெடுக்க இறைமகன் சந்தித்த சோதனைகளையும், பாடுகளையும் நினைவுகூரும் காலம் தவக்காலம்.
ஆண்டவர் இயேசுவை நேசத்தோடு நம் மனதில் இருத்தி, அவரைப்போல, முழு அர்பணிப்போடு நாமும் ஒருத்தல் மிக்க தவமுயற்சிகளினால் இறைவாழ்வில் நம்மை உயர்த்திக்கொள்ள வாய்ப்புதான் இந்த தவக்காலம்.
தவக்காலம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் அல்ல. இது மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நன்மைக்கான ஒரு வாய்ப்பு.
தவக்காலம் நாம் அனைவரிலும் நல்ல மனமாற்றம், தன்னடக்கம், சேவை மனப்பான்மை, போன்ற பண்புகளை சிறப்பாக வலியுறுத்தகிறது.
- தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு
தவக்காலத்தில் போது விரதம் கடைப்பிடிக்கப் படுகின்றன. இதன் மூலம் மனதையும் மற்றும் உடலையும் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், எளிமையான வாழ்க்கையின் சிறப்பையும் உணர்வதற்கும் இது உதவுகிறது.
- பிறர்நலம் பேணும் கருணை மற்றும் சேவை
தவக்காலத்தின் போது ஏழை, எளியவர்களுக்கு உதவுவதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இது, இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள சகாதா/Zakat, இந்து மதத்தில் உள்ள தர்மம், பௌத்த சமயத்தில் உள்ள தானம் போன்ற போன்ற பிறரன்பு பணியாகும்.
- உண்மை மற்றும் நேர்மை
மனதை தூய்மைப்படுத்தி, எது உண்மையானது, எது பொய்யானது என்பதைக் கற்றுக்கொள்ளும் தவக்காலம் கடமையிது.
- உலக அமைதி மற்றும் ஆன்மீக ஒற்றுமை
தவக்காலத்தில் காலத்தில் ஆழ்ந்து சிந்தித்தல் மேலும் மனதை ஒருமுகப்படுத்திய தியானித்தல் போன்ற இறை பயிற்சிகளில் மேற்கொண்டால் நிறைவான ஆன்மீக புத்துணர்ச்சி அடைவதை நாம் உணரலாம். இது பௌத்தர்களிடம் உள்ள “விபாஸ்ஸனா தியானம்”, இந்துக்களிடம் உள்ள “தியானம்”, இஸ்லாமியர்களிடம் உள்ள “இதிகாப்” போன்றது.
அன்பு, சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், ஆகியவைகள் நம்மில் துளிர்க்கச் செய்து, அவற்றை நம் அன்றாட வாழ்வில், நாம் சந்திக்கின்ற சோதனை மிகு சூழல்களில் வெளிப்படுத்தி நம்மையும் பிறரையும் நேசத்தோடு அணுகி இந்த தவக்காலத்தை நம் வாழ்வின் வசந்த காலமாக மாற்றுவோம்.
இத்தவக்காலத்தின் இறுதி வாரங்களில் இருக்கும் நமக்கு
இறை கருத்துக்கள்
சிலருக்கு அறிவிப்பாகவும்,
சிலருக்கு அறிந்ததாகவும்,
சிலருக்கு அயர்ச்சியாகவும்,
சிலருக்கு அருமையாகவும்,
சிலருக்கு அற்புதமாகவும்
அமைவது யாதாகினும்
இறைமகன் இயேசுவின் பெயரால் இறை தந்தைந்தைக்கே புகழாகிட இறைஞ்சி மன்றாடுகிறேன்…
தங்கள் அன்புமிக்க,
Wonderful message dear Anna