\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்க விருந்தாளி – நூல் விமர்சனம்

உலக நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், புவியியல், இனம், உரிமை என்ற எதோவொரு காரணத்துக்காகப் போர்கள் தொடுக்கப்பட்டதையும், அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் அறிய முடியும். அவற்றில், மனித இனம் நாகரிகமடைந்த பின்பு நிகழ்ந்த இரண்டாம் உலகப் போர் மிகக் கொடூரமான பேரழிவுகளை உண்டாக்கியது. ஏறத்தாழ ஏழு மில்லியன் மக்களின் உயிரை மாய்த்த இந்தப் போரில் பல நாடுகள் சுயத்தை இழந்தன; பல தலைமுறை கடந்தும் அதன் பாதிப்புகளிலிருந்து விடுபடாத குடும்பங்கள் ஏராளம். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் ஏறத்தாழ 26 ஆண்டுகள் நீடித்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்து, பல லட்சக்கணக்கானவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஈழப்போரின் பாதிப்புகள், காயங்கள், வலிகளிலிருந்து மீள முடியாமல், இன்றும் தவித்து வருபவர்கள் ஏராளம். மனதில் உறுதியுடன், திண்ணமான நம்பிக்கையுடன் வலிகளைக் கடந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றாலும், மனதில் ஏதோவொரு மூலையில் அழிக்க முடியாத வடுக்களாகப் பதிந்துவிட்ட நினைவுகள் அவர்களை விட்டு விலகுவதில்லை. அவர்களின் மனவுணர்வை எழுத்துக்களால் தொடுத்து, சிறுகதைகளாய்த் தொகுத்து படைத்துள்ளார் தியா காண்டீபன்.

‘அமெரிக்க விருந்தாளி’ சிறுகதை தொகுப்பு தரும் அனுபவத்தை எளிதில் விளக்கிவிட முடியாது. ஒவ்வொரு கோணத்திலும் வண்ணச் சிதறல்களுடன் புதுப்புது வடிவங்களைக் காட்டும் கலையுருக்காட்டியைப் போல் (kaleidoscope) ஒவ்வொரு கதையும், வாசிக்க வாசிக்க பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. தனிமைத் தணலில் தகித்து, திக்கற்று அலைகழிக்கப்படும் ஒருவனுக்கு, குளியல் தரும் மகிழ்ச்சியை, அவனது வலிகளினூடே மெலிதாய் அடிக்கோடிட்டுக் காட்டும் ‘உம்மாண்டி’யில் தொடங்குகிறது காண்டீபனின் பயணம். நெடுநாள் ஆசையைத் தீர்க்கும் சுற்றுலா பயணத்தில் திடுக்கென ஏற்படும் அசம்பாவிதத்தை விவரிக்கும் ‘தங்க வாசல்’  ஒரு அனுபவமென்றால், ‘அமெரிக்க விருந்தாளி’ பயணத்தில் அசம்பாவிதமாக ஏற்படும் சம்பவம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது. இடையே, நள்ளிரவு நிசப்தத்தின் பின்னணியில் ‘உஷ்..’ எனும் ஒலி சில்லிப்பூட்டுகிறது. 

‘அண்ணன்’ – அலாதியான உறவுப் பின்னலை, மிக யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் இச்சிறுகதை காண்டீபனின் எழுத்து நேர்த்திக்கு அத்தாட்சி. அண்ணன் தங்கையிடையே நடைபெறும் இயல்பான  உரையாடல்களில் வெளிப்படும் வெள்ளந்திதனம் கதாபாத்திரங்களின் பிறவியுணர்வை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது. அத்தனை வறுமையிலும் வளர்ப்பு ஆடுகள் மீது பெரியவர் காட்டும் பரிவு அம்மக்களிடையே ஒளிந்திருக்கும் நேயத்தின் வெளிப்பாடு. 

போர்ச்சூழலில், பெரியவர் / சிறியவர், ஆண் / பெண், ஏழை / பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் உறவுகளைத் தொலைத்து, உடமைகளை இழந்து திசைக்கொன்றாய், அடுத்தது என்ன என்ற இலக்கின்றி ஓடுவதை கண்முன்னே ஓவியங்களாய் வடிக்கிறது ‘பயங்கரவாதிகள் முகாம்’ எழுத்தாளரின் தூரிகை. தீபாவளிப் பண்டிகை கொண்டாடவுள்ள நேரத்தில், வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்பவம் நிகழ்ந்து விட தன் மகனைத் தூக்கிக் கொண்டு ஓடும் ஒரு தாயின் ஓட்டம் தான் கதை. ஒவ்வொரு வரியிலும் அந்தத் தாயின் மனவோட்டத்தை, அச்சத்தை, நம்பிக்கையை வண்ணங்களாய் கலந்து தீட்டியிருக்கிறார். தன்னை நம்பி, கூடவே வரும் லிங்காவிடமும், அவள் காட்டும் பரிவு கதாபாத்திரத்தின் குணத்தை குன்றிலிட்டு காட்டுகிறது. 

ஒவ்வொரு கதையின் வகைமையும், சூழலும் வெவ்வேறாக இருந்தாலும், படைப்பாளியின் எளிய, வழக்கு மொழிகள் மனதை கவர்கிறது. உரையாடல்கள் மிகக் குறைவாக இருப்பினும், உணர்வுகளையும், பின்னணியையும் விவரிப்பதில் அதிக சிரத்தை எடுத்துள்ளது மிகச் சிறப்பு. அதுவே நம்மை கதாபாத்திரங்களுடன் ஒன்றச் செய்துவிடுகிறது.

சொந்த ஊரை, நாட்டை விட்டு சந்தர்ப்பச் சூழ்நிலையால் உறவுகளைப் பிரிந்து புலம்பெயர்ந்து வாழும் பலருக்கும் இந்தச் சிறுகதை தொகுப்பு, நினைவாற்றல் பாலத்தை உருவாக்கித் தந்துள்ளது. வலிகளைக் கடந்த பூர்வீக நினைவுகள் தரும் மறுமலர்ச்சி  இந்த சிறுகதை தொகுப்பினை முக்கியமானதாக ஆக்குகிறது. 

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad