பணிதற்குரிய பணி
கேள்விப்பட்டதுண்டு. உணர்ந்ததில்லை. நாம் செய்யும் வேலைகளில் ஏதேனும் பிழை நேருமானால், ஏற்படும் சேதமென்ன? பிழை திருத்தக் கிடைக்கும் இரண்டாவது, மூன்றாவது சந்தர்ப்பங்கள் எத்தனை? பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரின் பிழைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மேலும், பிழைகளைத் திருத்திக் கொள்ளப் பல வாய்ப்புக்களும் கிடைக்கின்றன.
உலகில் மிகவும் வணக்கத்திற்குறிய பணிகள் என மிகச்சில பணிகளை மட்டுமே குறிப்பிட முடியுமென நினைக்கிறேன். தான் எட்டி பார்த்திராத உயரங்களைத் தங்கள் மாணவர்கள் முயற்சித்துப் பிடிக்கத் தங்களாலான அனைத்துப் பயிற்சிகளும் தன்னலமின்றி வழங்கும் ஆசிரிய பணி அத்தகைய வணக்கத்திற்குரிய ஒன்று. இந்தப் பணியில் பிழையேதும் ஏற்படின் ஒரு சமுதாயத்தையே பாதிக்குமளவுக்கு அபாயம் உள்ளது என்றாலும், உயிர் போகும் அபாயமோ, திருத்தி கொள்வதற்கு வாய்ப்பில்லையெனும் நேர நெருக்கடியோ இருப்பதில்லை.
அடுத்தபடியான வணக்கத்திற்குரிய பணி மருத்துவரின் பணி எனலாம். சகிப்புத் தன்மையுடன் உடலின் பல உபாதைகளை நிவர்த்தி செய்வதில் தொடங்கி உயிரினைக் காக்கும் பல பெரிய அளவிலான அறுவைச் சிகிச்சைகளைச் செய்து நோயாளிகளின் உயிர் காப்பது இவர்களின் பணி. அளவு கடந்த மனோதிடம் வேண்டுமென்பது நிச்சயமான விடயம். பிழைகள் புரிவதற்கு இடமில்லை, ஆனாலும், பிழைகளின் மொத்த விலை பல நேரங்களில் ஒரு உயிராக அமையும்.
ஒரு சிறிய பிழை, ஒரு நாட்டின் பாதுகாப்பையோ, மாட்சிமையையோ, ஒரு முழு சமூகத்தின் உயிர்களையோ, உடமைகளையோ பாதிக்கும் வகையில் அமையும் பணி என்பது இராணுவம் மற்றும் காவல் துறையின் பணியன்றி வேறேதாவது இருக்க இயலுமா? வெயில், மழை, கடுங்குளிர் என எந்த இயற்கையின் சீற்றங்களையும் பொருட்படுத்தாது எந்த நேரத்தில் எதிரி நாட்டின் படை எல்லைப் புறத்தைத் தாக்குமோவென அறியாது கண்களைக் காக்கும் இமைபோலக் கருமமே கண்ணாகக் காவல் காக்கும் இராணுவத்தினரின் பணி குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுவது நமது கடமையாகும்.
ஸ்பிளிண்டர்ஸ் – செய்தித் தாள்களில் படித்திருக்கிறோம். நிலப்பரப்பின் மேலோ அல்லது காற்று வெளியிலோ ஒரு பந்து போன்றதொரு குண்டு வெடிக்கும். அது வெடித்துச் சிதறுகையில் அதன் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கூர்மையான துப்பாக்கியின் குண்டு போன்ற வடிவமுள்ள பல நூறு உலோகத் துகள்கள் வாயு வேகத்தில் சிதறிப் புறப்படும். சுற்றியுள்ள அனைத்துப் பொருள்களினூடே துளைத்துக் கொண்டு செல்லும் இந்த உலோகத் துண்டுகளுக்குப் பெயர் ஸ்பிளிண்டர்ஸ். மனித மூளையின் அரக்கக் குணத்தின் வெளிப்பாடு. அழிவு பதையின் அடிக்கல். போர் முனையில் இது போன்ற குண்டுகள் பல அங்கும் இங்கும் வெடித்துச் சிதறும். இவற்றிலிருந்து தப்பி பிழைக்க ஒரே வழி நிலத்தின் அடியிலுள்ள பதுங்கு குழிகள் மட்டுமே. அது போன்ற ஒரு பதுங்கு குழியில் ஒருவராக அமர்ந்து சுற்றி வெடிக்கும் ஸ்பிளிண்டர்ஸ் தாங்கிய குண்டுகளின் வெடிப்பு நிற்பதற்காகப் பல மணித்துளிகள் காத்திருந்த ஒருவர், அதுபோன்ற காத்திருப்புக்களே தன் இளமையின் பெரும் பகுதியாகக் கொண்டிருந்த ஒருவரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?
என் முன்னோர் செய்த நல்வினைப் பயன், அதுபோன்ற, நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன்னுயிரைப் பணயம் வைத்த இராணுவ வீரர் ஒருவரை நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பு சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதற்கொப்ப, யான் பெற்ற செவிவழி இன்பத்தை நமது தமிழ்ச் சமுதாயத்திற்குப் பனிப்பூக்களின் மூலம் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறேன்.
எழுபத்தி மூன்று வயது, நல்ல ஆரோக்கியமான தேக அமைப்பு, நடப்பதற்கு மட்டும் ஒரு சிறிய வாக்கிங் ஸ்டிக்கின் உதவி, ஒரு சிறிய அளவெடுத்துச் செதுக்கப்பட்ட வெள்ளை முடி பெரும்பாலுமாக ஆக்கிரமித்த மீசை, முன் வழுக்கை, நம்பிக்கை மிகு உருவம், நகைச்சுவை உணர்வு ததும்பும் ஆளுமை, மொத்தத்தில் ஒரு பொலிவான, தன்னம்பிக்கை உள்ள, மரியாதைக்குரிய மனிதர்.
இந்தியா என்னுடைய நாடு, அதைக் காப்பதற்காக என் உயிரையும் தியாகம் செய்வதற்குத் தயார் என்ற உறுதிப் பாட்டுடன் விளங்கி, பல பதவி உயர்வுகளுக்குப் பின்னர்க் கர்னலாக இருந்து ஓய்வு பெற்றவர் சிராஜுதின் ராவுத்தர், கேரள மாநிலத்தைச் சொந்த ஊராகக் கொண்ட இஸ்லாமியர். இந்திய ராணுவத்தில் கேடட்டாக (Emergency Commission Officer) 1963 ஆம் ஆண்டு தனது ராணுவப் பணியைத் தொடங்கிய இவர், இந்திய, பாகிஸ்தானுக்கிடையே 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் முக்கியப் பங்கு வகித்தவர். இஸ்லாமிய மதத்தில் பிறந்து இந்திய இராணுவத்தில் பணி புரிந்து பாகிஸ்தானுக்கு எதிராகப் போருக்குச் செல்வது என்பது – அதுவும் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் – எவ்வளவு விவாதத்திற்குரியதாக இருந்திருக்குமென்பது விளங்கிக் கொள்ளக் கூடியது.
1965 ஆம் ஆண்டுப் போரில் இவருக்கான பொறுப்பு இந்தியாவின் மேற்கு எல்லையைக் காப்பது. இது இந்தியாவையும், சைனாவையும் பிரிக்கும் பூகோள எல்லை, இந்தப் பகுதியிலும் பெரிய அளவு தாக்குதல் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்டது. அதிர்ஷ்ட வசமாக எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை என்றாலும், ராணுவத்தினர் முழு நேர எச்சரிக்கையுடன் பணிபுரிய வேண்டிய கட்டாயம்.
இரண்டாவதாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே 1971 ஆம் ஆண்டு போர் நடைபெறுகையில் இவர் இந்திய ராணுவத்தில் மேஜர் பொறுப்பு வகித்துள்ளார். தனது வேலைப் பொறுப்பை அவர் விவரிக்கையில், நாமே போர்முனையில் நின்று இவர் செய்த அன்றாட வேலைகளைப் பார்வையிட்டது போன்ற ஒரு உணர்வு. பெரிதாக நாடகத் தன்மை ஏதுமின்றி அதே சமயத்தில் விபரம் எதனையும் விட்டு விடாது அந்த நாட்களை விளக்கிய முறை கேட்பவர் காதுகளுக்கு இன்பம். போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுப் படை முழுவதும் திரும்பி வரும் வரையில், போர்முனையில் மொத்தமாகப் பனிரெண்டு தினங்கள் பணிபுரிந்துள்ளார். அந்தப் பனிரெண்டு தினங்களில், இவரின் பணி அப்ஸெர்வேஷன் போஸ்ட் என்பது.
ஆப்ஸர்வேஷன் போஸ்ட் என்பது ஒரு நான்கு பேர் கொண்ட குழு, அந்தக் குழுவின் தலைவர் இவர் – ஆப்ஸர்வேஷன் போஸ்ட் ஆஃபிஸர் என்பது அந்தப் பதவியின் பெயர். இரண்டாவது நபர் ஒரு தொழில் நுட்ப உதவியாளர் – இவரது வேலை அந்தக் குழுவின் வாக்கி டாக்கி, தொலை நோக்கு கருவி (பைனாகுலர்) மற்றும் ஏனைய தொழில் நுட்பங்களைச் சரிபார்த்துத் தேவையான மாற்றங்களைச் செய்து தருவது. குழுவின் மூன்றாவது உறுப்பினரின் வேலை இவர் தொலை நோக்கிக் கருவியில் பார்த்துத் தரும் கட்டளைகளை, வாக்கி டாக்கியின் மூலம் பின்னால் வரும் துப்பாக்கிப் படையினருக்கு (artillery) தெரிவிப்பது. நான்காவது உறுப்பினரின் வேலை இவர்கள் நால்வரின் தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்வது. இவர்கள் நால்வரும் ஒரு குடும்பம் போலச் செயல்படுவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. மேஜருக்கும், தேநீர் தயாரித்துக் கொடுப்பவருக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. ஒருவர் மற்றொருவரின் உயிருக்கு அரணாகச் செயல்படுவர் என்பதும், அவர்களுக்குள் ஒரு அழகான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதும் அவரின் விளக்கத்தில் மிகவும் அழகாகத் தெரிந்தது.
பைனாகுலரில் பார்த்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து முன்னேறி வரும் எதிரிப் படையைப் பார்த்து, ஓரிரண்டு கிலோமீட்டர் பின்னால் வரும் நமது படைகளுக்குக் கட்டளைகள் கொடுப்பது நமது மேஜரின் தலையாய பணி.
“பாட்டரி டார்கெட் (battery target)” என்ற கட்டளைக்கு, நான் எதிரிப் படைகள் வருவதைக் கவனித்து விட்டேன் என்று பொருள்.
“ஸிக்ஸ் ரவுண்ட்ஸ்.. ஃபயர்”…. ஆறு பேர்கொண்ட ஒரு குழு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு முடிப்பர்.
“தர்ட்டி ஸிக்ஸ் ரவுண்ட்ஸ்.. ஃபயர்”…. ஆறு பேர்கொண்ட ஒரு குழு, ஒவ்வொருவரும் ஆறு ரவுண்ட் சுட்டு தீர்ப்பர்.
பைனாகுலரின் மூலம் குண்டுகள் சரியான இலக்கில் விழுகின்றனவாவென ஸிக்ஸ் ஃபிகர் கோஆர்டினேஷனில் (six figure co-ordination) பார்த்து, இல்லையென்றால் – லெஃப்ட், ரைட், ஆட் (add), ட்ரா என்ற கட்டளைகளுடன் எத்தனை நாட்ச்சஸ் (notches) என்பதையும் சேர்த்துக் கூறித் துப்பாக்கியின் இலக்குகளைச் சரியான இடத்தில் விழச் செய்வது இவரின் வேலை. உதாரணத்திற்கு, லெஃப்ட் த்ரீ நாட்சஸ் (left three notches) என்றால் குழுவிலுள்ள அறுவரும் துப்பாக்கிகளை மூன்று அலகு இடது புறமாகத் திருப்பிச் சுடவேண்டும். ஒவ்வொரு முப்பது வினாடிகளுக்கு ஒரு முறையும் இவரிடமிருந்து கட்டளைகள் வந்த வண்ணமிருக்க வேண்டும். எதிரிகளின் சேனைகள் முழுவதும் அழிந்து பட்டால், “டார்கெட் டெஸ்ட்ராய்ட்” என்ற கட்டளையுடன் இவரின் அந்தப் பகுதியின் பணி தற்காலிகமாக முடிவுக்கு வரும். இதனைச் சொல்லி முடிக்கும் பொழுது, இதற்கு மகுடம் வைத்தது போல், கர்னல் சொன்ன ஒரு செய்தி உணர்வை உலுக்கியது.
டார்கெட் டெஸ்ட்ராய்ட் எனும் கட்டளை வருவதற்குமுன், முப்பது வினாடிகளுக்கும் மேலாக இவரிடமிருந்து கட்டளைகள் ஏதும் வரவில்லையென்றால் இவரின் நால்வர் குழு எதிரிகளால் அழிக்கப் பட்டது என நமது படை முடிவெடுத்துக் கொள்ளுமாம். இவர் குழுவை அழித்தால், நம் படை எதிரிகளின் நடமாட்டம் தெரியாமல் கண்களை இழந்தவர் போலத் திக்குத் திசை தெரியாமல் அலையும் நிலை ஏற்படும் என்பது நிதர்சனமாக விளங்கிற்று.
பனிரெண்டு நாட்கள் கடும்போருக்குப் பிறகு, பாகிஸ்தானின் மத்தியப் பகுதியான சம்னாகுர் (Chamnakurd) நகரத்தில் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைத்த இந்தியப் படையில், நம் கர்னல் ராவுத்தரும் ஒரு பெருமிதத்தற்குரிய அதி்காரி. இந்த நிலையில் இ்ந்தியா அரசியல் காரணங்களுக்காகப் போர் நிறுத்தத்தை அறிவிக்க, இந்திய ராணுவம் நம் நாட்டிற்கே திரும்பி வர, போர் முடிவடைகிறது.
கர்னல் ராவுத்தர் சார்ந்திருந்த 9 ஃபீல்ட் ரெஜிமெண்ட் என்பது 9 பாரா (para) ரெஜிமெண்ட்’டாக மாற்றப்பட்ட பொழுது, இவர் சொந்த விருப்பத்தின் பேரில் பாரா ட்ரூப்பராக (para-trooper) மாற்றப்பட்டாராம். கிட்டத்தட்டப் பத்தாயிரம் அடி உயரத்தில் மிதக்கும் விமானத்திலிருந்து ஒவ்வொருவராகக் குதித்துத் தரையிறங்கிப் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். பத்தாயிரம் அடியிலிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் அடி வரும்வரை, எந்தத் துணையுமின்றித் தானாக விழ வேண்டுமாம் (free fall), முப்பது வினாடிகளில் ஐந்தாயிரம் அடியைக் கடந்தவுடன் தலையை நிமிர்த்தி மேலே பார்க்க வேண்டுமாம், இந்த நிலையில் பாராசூட் தன்னிச்சையாக விரிவடைய வேண்டும். அவ்வாறு விரிவடையவில்லையெனில், மார்புப் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள வளையத்தைப் பிடித்துப் பலமாக இழுத்துப் பாரசூட்டை திறக்க வேண்டும் – இதற்கு முப்பது வினாடி நேரம் மட்டுமே உள்ளது, தாமதமானால், பாராசூட் இல்லாமலேயே மனிதர் தரையிறங்கி விடுவார் – அதாவது, பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து விடுவார். கேட்கும்பொழுது எனது கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
“எவருக்காவது பாராசூட் விரிவடையாத அனுபவம் ஏற்பட்டுப் பார்த்ததுண்டா” என்றொரு கேள்வியைக் கேட்டு வைத்தேன். ஒரு சில வினாடி நிறுத்தி பின்னர், நேரடியாகப் பார்த்ததில்லை, ஆனால் ஓரிரு சம்பவங்கள் கேள்வி பட்டிருக்கிறேன் என்றார். அருகிலிருந்த கர்னலின் மனைவி, அதுவரை அமைதியாக எங்கள் சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர், இடை மறித்துத் தனது அனுபவம் ஒன்றைச் சொன்னார்.
அதிகாரிகளின் மனைவிமார்களைக் களத்திற்கு அழைத்துச் சென்று, பாரா-ட்ரூப்பர் குதிக்கும் சாகசத்தைப் பார்க்க அனுமதிப்பார்களாம். அப்படி ஒருமுறை பார்த்துக் கொண்டிருக்கையில், ஒவ்வொருவராகப் பாரசூட் கட்டி கொண்டு கீழிறங்குகையில், அடுத்ததாக இறங்குவது தன் கணவர் என்று தெரிந்தவுடன் இவருக்கு ஒரே அதிர்ச்சியாம். தரையிறங்கியவுடன், ஓடிச் சென்று கட்டி கொண்டு, “பாராசூட்டில் குதிப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கிறது. ஆனால், அது நீங்களாக இல்லாத பட்சத்தில்
என்றாராம்.
ஐந்து முறை இதுபோலக் குதித்தால் – அவற்றில் ஒன்றேனும் கும்மிருட்டு வேளையில் இருந்தால் – இந்திய அரசாங்கம் மரியாதைக்குரிய “இறகு” ஒன்றை அளித்துக் கௌரவிக்குமாம். இருபத்தி ஏழு முறை பாராசூட்டிலிருந்து குதித்த இந்த அஞ்சாத சிங்கம் மனைவியின் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட்டுப் பாரா-மிலிட்டரியிலிருந்து விலகி, ஆர்ட்டிலரி ட்ரூப்புக்கு பணி செய்யப் போனதாய்ச் சொல்லிச் சிரித்தார். கேட்ட மனைவியின் கண்களில் லேசான கண்ணீர் – இப்பொழுதும், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும்.
வெளிநாட்டு போர்கள் தவிர்த்து இவரின் மற்றொரு குறிப்பிடத்தக்க அனுபவம் “ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்” – 1984 ஆம் ஆண்டு பொற்கோயிலுக்குள் ஒளிந்து கொண்டு இந்திய ராணுவத்தைக் கதிகலங்க வைத்து நாட்டில் பல குழப்பங்களை விளைவித்த சீக்கியத் தீவிரவாதக் கும்பலை எதிர்த்து உள்நாட்டிலேயே நடந்த போரினை இந்திய ராணுவத்தின் சார்பாகத் தலைமையேற்று நடத்தியதில் ஒருவர் நம் கர்னல். இருசார் வாதங்களையும் மிகவும் நடுநிலையில் ஆராய்ந்து பேசியது மிகவும் போற்றுதலுக்கு உரியதாய் இருந்தது. இதன் விளைவாக இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்டதும் அதனைத் தொடர்ந்து சீக்கிய இனத்தின்மீது நம் தலைநகரிலே கட்டவிழ்த்து விடப்பட்ட ரத்தவெறியாட்டத்தின்போது புதுதில்லியில் பொறுப்பிலிருந்து நேரடியாகக் கண்டதையும் விவரித்தார். ராணுவத்தில் இவருடன் பணிபுரிந்த ஒரு சீக்கியரின் மொத்தக் குடும்பமும் ரத்த வெள்ளத்தில் மிதந்த கதையை அவர் சொல்ல, நமக்குச் சப்த நாடியும் ஒரு கணம் ஒடுங்கி நின்றது. இந்த மனிதர்களின் மிருக வெறி ஒழிவதென்னாள் என நினைக்கலானோம்.
அருகில் அமர்ந்து முழுவதும் கேட்டுக் கொண்டு, நாற்பது வருடங்களுக்கு முன்னால் பயணம் செய்து முடித்திருந்த கர்னலின் மனைவியையும் ஓரிரு வார்த்தைகள் பேசச் செய்தோம். தன் முதல் மகனின் கருவில் கொண்டிருக்கும்பொழுது கணவர் ராணுவக் கால்பந்துக் குழுவுக்காக விளையாடச் சென்றதையும், அவர் அருகிலில்லாத நாளில் அவசரக் கதியில் மகன் பிறந்ததையும் குறிப்பாக நினைவு கூர்ந்தார். போர்க்காலங்கள் தவிர மற்றத் தினங்களில் மிகவும் வசதியான வாழ்வு என்று கூறிய அவர், போர்க்காலங்களில் “பெட்டி வருது’ என்ற வாக்கியம் ஒவ்வொரு மனைவியரையும் மிகவும் துயரத்தில் ஆழ்த்தும் வாக்கியம் என்றார் – பெட்டியில் வருவது தனது கணவனாகக் கூட இருக்கலாம் என்ற காரணத்தால். இந்த இன்னல்களுக்கு மத்தியிலும், சற்றும் தயங்காமல், எனக்கு மட்டும் ஒரு பெண்குழந்தை பிறந்திருந்தால் அவளை நிச்சயமாக ஒரு ராணுவ அதிகாரிக்குத்தான் மணமுடித்துக் கொடுத்திருப்பேன் என்றார் தீர்க்கமாக.
கடைசியாகப் பேட்டியை முடிக்கும் விதமாகக் கர்னலை நோக்கி;
“கண்முன்னே உடன் பணிபுரிபவர் சுட்டு கொல்லப்படுகையில், இதிலிருந்து தப்பி போவதெப்படி என்ற எண்ணம் வரவில்லையா” – சாதாரண மனிதனான எம் கேள்வி.
“அது எப்படி, உடன் வேலை செய்தவனின் சாவுக்குப் பதிலாக எதிரியிடமிருந்து இரு உயிர்களையாவது காவு வாங்காமல் விடலாமா?” – சாதித்து முடித்த அவரின் பதில்.
யார் யாருக்கெல்லாமோ கோயில்கள் கட்டப்படுகின்றன. மரியாதைக்குச் சற்றும் தகுதியில்லாதவர்கள் காலிலெல்லாம் பலர் விழுகின்றனர். கர்னல் ராவுத்தர் போன்ற, நாட்டிற்காக உயிரையும் பொருட்டாகக் கருதாமல் பாடுபட்ட தியாகிகளை நாம் மதித்துப் போற்றுவதென்னாள்?
– வெ. மதுசூதனன்.
நல்ல மனிதருக்கு நல்லதோர் புகழாரம் தொடுத்தீர்.