புறநானூறுக்காக ஒரு புனிதப் பயணம்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் தமிழார்வலர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடியும், பல்வழி அழைப்பிலும் திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைப் படித்து, பொருளறிந்து, விவரித்து, விவாதித்து, ரசிக்கிறார்கள். இவர்கள் புறநானூற்றுப் பாடல்களைப் படித்து முடித்தமையைக் கொண்டாட ஒரு விழா எடுத்தனர். ஆம்! வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து “புறநானூறு பன்னாட்டு மாநாடு” ஒன்றை ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில், மேரிலாந்து மாநிலம் சில்வர் ஸ்ப்ரிங் எனும் ஊரில் நடத்தினர். அமெரிக்காவின் பல பகுதிகள், கனடா மற்றும் தமிழகத்திலிருந்தும் சுமார் 350-க்கும் மேற்பட்ட பெரியோரும் சிறாரும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆன்மீக விழாக்கள் எடுப்பதே கடமையாகக் காலத்தைக் கரைக்கும் பெரும் பகுதியினர் இருக்க, புறநானூற்றுக்காக ஒரு பன்னாட்டு மாநாடு என்ற செய்தியே எனக்குத் தேனாய் இனித்தது. விழா எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை, விழாவின் கரு புறநானூறு என்பதால் இந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்று நானும் என் மகளும் புறநானூற்றுக்காக ஒரு புனிதப் பயணத்தைத் தொடங்கினோம். விழா ஏதோ என்றில்லாமல் கோலாகலமாக இருந்தது.
அறிஞர்களின் பேச்சு, ஆய்வுக்கட்டுரைகள், புறநானூறு சார்ந்த ஓவியப் போட்டி, வினாடி வினா, தமிழிசையில் புறநானூறு, நாடகம், நடனம், மற்ற போட்டிகள் என அனைத்துமே சிறப்பாக அமைந்தது. ஆச்சாரிய சூடாமணி திருமதி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் தயாரித்து வழங்கிய ”முத்தமிழ் முழக்கம்” நாட்டிய நாடகமும், நாட்டியப் பேரரசு மதுரை இ முரளிதரன் தயாரித்து வழங்கிய கல்கியின் ”சிவகாமியின் சபதம்” நாட்டிய நாடகமும் இந்த நிகழ்ச்சிக்கு மகுடமாய் அமைந்தது. இவை யாவும் நமது முன்னோடிகள் கடைபிடித்த மறம், அறம். கொடை, அரசியல் நெறி மற்றும் எளிமையான வாழ்வு என பல விழுமியங்களை நமக்கு நினைவூட்டியது.
6-லிருந்து 12 வயதுக்குள்ளான சிறார்கள் புறநானூற்றுப் பாடல்களைத் தெளிவாகவும், சிறப்பாகவும் ஒப்புவித்து அவையோரை வியப்பில் ஆழ்த்தினர். தமிழிசைப் போட்டியில் இனிமையான குரலில் இவர்கள் பாடிய புறநானூற்றுப் பாடல்களும், சிறுவர்களுக்கான விநாடி-வினா நிகழ்ச்சியில் இவர்களின் விடைகளும் காண்போரை மெய்மறக்கச் செய்தது. மினசோட்டா தமிழ்ச் சங்கத்தை சார்ந்த சிறார்களும் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்த செல்லும் திருமதி வைதேகி ஹெர்பெர்ட்டின் மொழிபெயர்ப்பு முயற்சியும், புறநானூற்றுப் பாடல்களின் பின்னணி, சிறப்பை அழகாய்த் தொகுத்து நூல் வெளியிட்ட முனைவர் R பிரபாகரனின் பணியும் போற்றுதலுக்கு உரியது. திருமதி வைதேகி ஹெர்பெர்ட்டின் புறநானூறு ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும், முனைவர் R பிரபாகரனின் புறநானூறு உரை நூலும், செல்வி பாரதி செல்வன் பாடிய 11 புறநானூறு பாடல்கள் அடங்கிய குறுந்தகடும் மற்றும் மாநாட்டின் விழா மலரும் வெளியிடப்பட்டன.
செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் மருதநாயகம், திரைப்பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி, பண்டைத் தமிழ் இலக்கிய ஆய்வாளர் அறிவுநம்பி மற்றும் கவிமாமணி. இலந்தை இராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
புறநானூறு குறித்த கட்டுரைகளை அறிஞர்களும் ஆய்வாளர்களும் வாசித்தனர். புறநானூற்று காலத்தில் மனிதனின் பிறப்பால் பிரிவினை இல்லை எனும் வாதத்தை முன்வைத்தார் தமிழறிஞர் திரு.பழனியப்பன். அகழ்வு ஆய்வுச் சான்றுகளுடன் நெடுமான் அஞ்சியின் காலம் கி.மு.490 என விளக்கும் முனைவர் ராஜ் முத்தரசு அவர்களின் கட்டுரை பலரையும் கவர்ந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான புறநானூற்றைப் படிக்க, விழா எடுக்க அவசியத்தை விளக்கினார் மாநாட்டின் மையக் கருத்துரை வழங்கிய முனைவர். மருதநாயகம். புறநானூற்றின் வாழ்த்து முறைகள், அஞ்சாமை, சமூக விழிப்புணர்வு, வாழ்வியல் கோட்பாடுகள், உவமைச் சிறப்புகள் மற்றும் கவிதை இயல் பற்றியும் கவிஞர். இலந்தை இராமசாமி, திரு. நாகலிங்கம் சிவயோகன், திருமதி. சரோஜா இளங்கோவன், முனைவர். முருகரத்தினம் மற்றும் திரு.வாசு ரங்கநாதன் ஆகியோர் பேசினர். “புறநானூறு பெரும்பாலும் வீரம் பற்றியும் மன்னர்கள் குறித்தும் பாடப்பட்டது” என்ற பரவலான கருத்தை மறுக்கிறார் முனைவர் அறிவு நம்பி.
கவிஞர் அறிவுமதி, அமெரிக்கத் தமிழரின் தமிழ்ப் பற்றை வெகுவாக பாராட்டினார். “தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிகள் தமிழகத்தில் இருக்க, இங்கே அமெரிக்காவில் ஒரு திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு டாலர் பரிசு கொடுக்கப்படுவதையும், இங்கே கொஞ்சி பேசும் பிஞ்சு மழலைகள் தமிழில் பேசுவது மற்றும் தமிழ் இலக்கியங்களில் காட்டும் ஆர்வம் ஆகியவற்றையும் கண்டு மகிழ்ந்ததாகத் தெரிவித்தார்.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜான் பெனடிக்ட் தனது உரையில், புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களை ஆவணப் படங்களாக தயாரிக்க வேண்டுமென்றும், தாய்த் தமிழகத்தில் மாணவர்கள் கண்டிப்பாகத் தமிழ் படிக்க வழிவகுக்க வேண்டுமென்றும் வலியுருத்தினார். மேரிலாந்து மாநில வெளியுறவுத்துறைத் துணைச் செயலாளர் முனைவர். ராசன் நடராசன், மாநில ஆளுநர் மார்ட்டின் ஓ’மாலியின் வாழ்த்துரையை வழங்கினார். அதில் செப்டம்பர் முதல் வாரத்தை புறநானூற்று வாரம் என அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 50 பேர் பங்கேற்ற புறநானூற்று வினாடி-வினாவைப் பக்குவமாக வடிவமைத்து நடத்திய திரு. நாஞ்சில் பீட்டர் ஐயா மற்றும் பயிற்றுவித்த திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்களின் முயற்சியைப் போற்றாமல் இருக்க இயலாது. அனைவரும் புறநானூற்றுப் பாடல்களை ஆழமாகப் படித்து, ஆராய்ந்து, ஆர்வமாக வினாடி வினாவில் கலந்துகொண்டனர். தமிழ்ச் சங்கச் செயலாளர் கல்பனா மெய்யப்பன் நன்றியுரை வழங்கினார்.
மாநாட்டுப் புரவலர் திரு. பாலகன் ஆறுமுகசாமி இது போல மற்ற தமிழ் இலக்கியங்களுக்கும் விழா எடுப்பது நமது கடமை என்றார். உணவும், ஒருங்கிணைப்பும் அருமையோ அருமை. வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து இந்த விழாவைச் செவ்வனே செய்து முடித்துள்ளனர். மொத்தத்தில் விழா, திருவிழாவாக, பெருவிழாவாக நடந்தது என்பதே உண்மை.
– சச்சிதானந்தன்