\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தீபாவளித் திரைப்படங்கள்

Diwali_movies_520x371பண்டிகைக் காலங்களில், பொங்கல்; தீபாவளி என எதுவாக இருந்தாலும், மக்கள் பூஜை புனஸ்காரம், புதிய உடைகள், பலமான சாப்பாடு என்பவை முடிந்ததும் அடுத்துச் செய்யத் துடிப்பது புதிய திரைப்படம் பார்ப்பது. தமிழர் கலாச்சாரத்தில் இவ்விஷயம் வெகு நாட்களாகவே ஒரு எழுதப்படாத சாங்கியமாகி விட்டது. இதை நன்கு புரிந்துக் கொண்ட தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இந்தச் சமயத்தில் போட்டியிட்டுச் சிறந்த படங்களைத் தர முயல்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படங்களில் சிலவற்றைப் பற்றி இங்கே காணலாம்.

ஆரம்பம்

2013ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளுக்கு வெளிவர இருக்கும் படங்களில் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பது ‘ஆரம்பம்’.

aarambam3_193x262இயக்குனர் விஷ்னுவர்தன், அஜீத்குமார் இணைந்து பணியாற்றியிருக்கும் இந்தப் படம் அவர்களின் முந்தையப் படைப்பான ‘பில்லா’ படத்தை விடப் பன்மடங்கு பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் அஜீத் குமார், ஆர்யா, ரானா, நயன்தாரா, டாப்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் தொடக்கத்திலேயே அஜீத், கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்குக் கதை இல்லை என்பதை வலியுறுத்தி, பொதுவாகப் படங்களில் காணப்படும் ‘கதாநாயகரைத் துதி பாடும் வசனங்களும் காட்சியமைப்புகளும் இருக்கக் கூடாது’ என்று கேட்டுக் கொண்டாராம்.

aarambam1_294x171மும்பையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு ‘சுபா’ அவர்கள் எழுதிய கதை தான் ‘ஆரம்பம்’. இப்படத்தில் அஜீத் ஒரு புலனாய்வு அதிகாரியாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் தனது நண்பர் ராணாவுடன் சேர்ந்து சில ரகசியங்களை அறிய முயல, எதிராளியினர் அவரது நண்பரைக் கொன்று அஜீத் மீது தீவிரவாதி பழியைச் சுமத்துகின்றனர். அஜீத், தான் தீவிரவாதியல்ல என்பதை நிருபித்து அப்பழியிலிருந்து மீள்வது தான் கதை என்று கூறப்படுகிறது.

புலனாய்வு, தீவிரவாதம் போன்ற அம்சங்கள் இருப்பதால், பல நாடுகளில் கதை நடக்கிறது. அஜீத் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மோட்டார் சைக்கிள், படகு, ஹெலிகாப்டர் சாகசங்களுக்குக் குறைவில்லை என்றுச் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சிற்சில விபத்துகளையும் மீறி அஜீத் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியுள்ளாராம்.

சிறு இடைவெளிக்குப் பின்னர்த் தமிழ்த்திரையில் மீண்டும் வலம்வரத் துவங்கியிருக்கும் நயன்தாரா இப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. கலகலப்பான பாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவரும் ஆர்யா, மற்றும் டாப்ஸி இருவரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவைக் கவனிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் எவ்விதக் குறையும் வைக்காமல் படத்தைத் தயாரித்துள்ளனர் ஏ.எம். ரத்னம் மற்றும் ஏ. ரகுராம். குடும்பத்தோடு அனைவரும் காணும் வண்ணம் இப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

irandamulagam4_420x572இரண்டாம் உலகம்

தீபாவளியன்று வெளிவரயிருக்கும் மற்றொரு பிரம்மாண்டத் திரைப்படம் ‘இரண்டாம் உலகம்’. செல்வராகவன் ஏற்கனவே இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போலவே இதுவும் ஒரு மிகுபுனைவு (fantasy) கதை.
காதலர்கள் இருவர் சந்தர்ப்பவசத்தால் இவ்வுலகை விட்டுப் பறந்து வேறொரு உலகில் சந்திக்கிறார்கள் என்பது மட்டுமே படத்தின் ஒற்றை வரிக்கதை.
இப்படத்தினைத் தனது கனவுப் படைப்பாகக் கருதுகிறார் செல்வராகவன். 2004ஆம் ஆண்டு இக்கதையைக் கார்த்தி, ஆண்ட்ரியாவை வைத்துத் தொடங்கினார். பின்னர் இக்கதைக்குப் பதில் இருவரையும் வைத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை எடுத்தார். பிறகு 2007ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஆண்டிரியாவை வைத்துத் தனது சொந்தத் தயாரிப்பில் இக்கதையைத் துவங்கிச் சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்திய பின்பு, பண நெருக்கடியால் கைவிட்டார். இடையில் யுவன் சங்கர், ஜி.வி. பிரகாஷ் என மாற்றி மாற்றி இசையமைப்பாளரை வைத்துச் சில பாடல்களும் பதிவு செய்யப்பட்டது. தனுஷ் இந்தப்படத்துக்காக ஒதுக்கிய நாட்களை வைத்து ‘மயக்கம் என்ன’ என்ற படத்தையும் இயக்கி வெளியிட்டார் செல்வராகவன். இப்படிப் பல தடங்கல்களால் தள்ளிப் போடப்பட்டு வந்த படத்தயாரிப்பை, பி.வி.பி. சினிமாஸின் பிரசாத் வி.பொட்லூரி கொடுத்த நம்பிக்கையின் பேரில் மீண்டும் துவங்கினார் செல்வராகவன்.

irandamulagam3_420x656இம்முறை ஆர்யா, அனுஷ்கா இருவரையும் நாயகன், நாயகியாக வைத்துப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பிண்ணனி இசை சேர்த்துள்ளார் அனிரூத். படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, படத்தொகுப்பு கோலா பாஸ்கர். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து இயற்றியுள்ளார்.

இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. உலகம் முழுதும் 2700 திரையரங்குகளில் படத்தை வெளியிட முடிவாகியுள்ளது. இப்படத்துக்கு ரஷ்ய மொழி, துருக்கிய மொழி உட்பட ஆறு உலக மொழிகளில் வசனங்கள் மொழிபெயர்க்கப்பட்டுத் தலைப்புகளாகச் சேர்க்கப்பட்டு வருகிறதாம்.

பிரேசில் மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இயந்திரன், ஏழாம் அறிவு, விஸ்வரூபம் போன்ற படங்களுக்குப் பின்னர் அதிகப்பட்ச பொருட்செலவில் (75 கோடியாம்!) வருவதால் எதிர்பார்ப்பும் மிக அதிகமாக வளர்ந்துள்ளது. படத்தின் பாடல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டுப் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

pandianadu2_420x573பாண்டிய நாடு

திரைப்பட இலக்கணக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பழிவாங்கும் கதை’ என்பதையொட்டி வெளிவரும் படம் ‘பாண்டிய நாடு’. ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’ போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன் அவர்கள் இயக்கியுள்ள படம் ‘பாண்டிய நாடு’. மதுரையில் நடைபெறுவதாக இப்படம் அமைந்துள்ளது.
இப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்துள்ளவர் ‘சுந்தரபாண்டியுன்’, ‘கும்கி’ புகழ் லக்‌ஷ்மி மேனன். வி்க்ராந்த், சூரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, படத்தின் சிறப்பம்சம். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருப்பவர் சுசீந்திரன். டி.இமான் இசையமைக்க, வைரமுத்து, மதன் கார்க்கி இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர்.பாஸ்கர் சக்தி வசனங்கள் எழுதியுள்ளார். மதி ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஆண்டனி படத்தொக்குப்பினை செய்துள்ளார். படத்தைத் தயாரித்திருப்பவர் விஷால்.
தனது முந்தைய இரண்டு மூன்று படங்கள் சரியாகப் போகாத நிலையில், விஷால் இந்தப் படத்தினைப் பெரிதும் எதிர்பார்த்துள்ளார்,

ஆல் இன் ஆல் அழகுராஜா

azaguraja1_259x112மற்ற மூன்று படங்களும் பழி வாங்குதல், ஆக்‌ஷன், கனவுப்புனைவுகள் என்று இருக்க யதார்த்தமான நகைச்சுவையைத் தனது பாணியாகக் கையாளும் ராஜேஷின் இயக்கத்தில் வெளிவருவது ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. ‘ஆல் இன் ஆல்’ ஆங்கிலம் கலந்திருப்பதால் அந்தச் சொற்களைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும்படி நுனுக்கி அழகுராஜா என வியாபாரம் செய்துள்ளனர். கார்த்தி நாயகனாக நடிக்க, காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். இத்துடன் ராஜேஷ் தனது அனைத்துக் கதையின் முக்கிய நாயகனாக நினைக்கும் சந்தானம் இவர்களுடன் நடித்துள்ளார். மேலும் இளைய திலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன் மேலும் பலர் நடித்துள்ளனர்.
இறுகிக் கிடக்கும் மனித மனங்களுக்குக் காமெடிப் படங்கள் தான் சிறந்த மருந்து எனும் உத்தியைத் தெரிந்து வைத்திருக்கும் ராஜேஷ் azaguraja3_225x225சந்தானத்தை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்துள்ளார். அது மட்டுமின்றி படத்தில் எண்பதுகளில் வெளிவந்த சில படக்காட்சிகளில் சந்தானம், கார்த்தி இருவரும் நடிப்பது போன்ற காட்சிகளையும் இணைத்துள்ளார், எனவே படம் ஹாஸ்யமாக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ராஜேஷ் கதை எழுத, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைக்க, விவேக் ஹர்சன் படத்தொகுப்பை ஏற்றுள்ளார். படத்தைத் தயாரித்துள்ளவர் ஞானவேல்ராஜா.

படங்களைப் பார்த்துவிட்டு உங்களது எண்ணங்களைப் பனிப்பூக்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

– ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad