மினியா போலிசு குளிர் – ஈரோடு தமிழன்பன்
சூரியன் ஈரத்தில் சொதசொதத்து
ஊருக்குள் நுழைகிறான்
பறவைகளின் கனவுகளுக்குள்ளோ
பாடல்களுக்குள்ளோ
வெப்பமான ஓரிடம் கிடைக்குமோ?
இப்படித்தான்
நடுங்குகின்றன பகல்கள்.
தமிழ்ப்பள்ளிக் குழந்தைகள்
கசடதபற வைக் கைகளில் தேய்த்துச்
சூடேற்றிக் கொள்கின்றனர்.
பாரதி பாரதிதாசன் நெருப்புக் கவிதைகளை
நெருங்கி அமர்ந்து
குளிர்காய்ந்து கொள்கின்றனர்,
சென்னை வெயில் சினமுள்ள வெயில்
மினியாபோலிசு வெயில்
கன்னிப் பெண்ணின் காதல் கோபம் போல;
ஆனாலும்
பத்துக் கப்பல் வெப்பத்தை அனுப்பும்படி
மின்னஞ்சல்கள் சென்னைக்கு
மினியாபோலிசிலிருநது.
இரவுகள்
உறக்கங்களைப் பிழிந்து காயப்போட
இடமில்லை.
வெந்துவிட்டதா உண்ணும் பதத்திற்கு
வந்துவிட்டதா என்று
கம்பியால் பணியாரம் ஒவ்வொன்றையும்
அம்மா
குத்திப் பார்ப்பதுபோல
வைகறை
புலரும் நொடிகளைக் கொத்திப்பார்க்கையில்
எல்லா நொடிகளும் இன்னும்
மாவுப் பதத்தில்.
எனினும்,
வாரம் கேட்டபடி நாளை,
மாதம் கேட்டபடி வாரத்தை
வருடம் கேட்டபடி மாதத்தை
காலம் கேட்டபடி வருடத்தை
எப்படியும் ஆக்கித்தர வேண்டுமே
இதோ
யுக அவசரமும் அடுத்த நாளின் நச்சும்—
வெந்தும் வேகாமலும்
கிழக்கு வானில்
மினியாப்போலிசுப் பணியாரம்!
– ஈரோடு தமிழன்பன்.