\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு

Filed in இலக்கியம், கட்டுரை by on November 3, 2013 0 Comments

e-tamil-migration_520x818ஈழத் தமிழர்கள் புவியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரக் காரணங்களினால் உந்தப்பட்டுத் தாம் தொன்று தொட்டு வழிவழியாக வாழ்ந்த பாரம்பரிய மண்ணை விட்டு; முற்றிலும் வேறுப்பட்டப் பிறிதொருப் பிரதேசத்தில் வாழத்தலைப்படுவதைப் புலப்பெயர்வு என்றுக் கூறலாம். ‘புலம்’ என்ற சொல்லுக்குத் தமிழ் லெக்ஸிக்கன் அகராதியில் ‘திக்கு’1 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ள அதேவேளையில், ‘பெயர்தல்’ என்பதற்கு ‘இருப்பிடம் விட்டுப் பெயர்தல்’2 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும் “கலந்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்”3 என்ற அடியும் இங்கு நோக்குதற்குரியது. புலியூர்க்கேசிகன் தனது உரையில்; “மரக்கலம் மூலம் வருகின்ற செல்வங்களுக்காகத் தம் நாடுவிட்டு நாடு செல்லும் கடலோடிகள் பற்ப்பல நாட்டினருமாக தம்முடன் கலந்திருந்து வாழ்கின்றவர்கள்”4 எனப் புலம்பெயர் மாக்களுக்கு விளக்கம் சொல்லியுள்ளார். இங்கு கடலோடிகள், அயல்நாட்டினர் என்ற பொருளில் “புலம்பெயர்மாக்கள்” என்ற பதம் சுட்டப்பட்டிருப்பதை நோக்க முடிகின்றது. இந்நிலையில் சொந்த இருப்பிடம் விட்டு நீங்கி திசைகள் தோறும் நகர்வதை புலப்பெயர்வு எனக் கூற படுகின்றது.

இடப்பெயர்வு

ஒரு மக்கள் கூட்டத்தினர் தமது காலநிலை, பண்பாட்டுடன் கூடிய பிறிதொருப் பகுதிக்குத் தற்காலிகமாக நகர்வதை இடப்பெயர்வு என்பர். இவ்வாறான இடப்பெயர்வுகள் நீண்ட காலமாக ஈழத்தமிழருடன் ஒன்றிவிட்டன. இலங்கைக்குள்ளும் இந்தியாவுக்குமானத் தற்காலிக நகர்வுகளை இவற்றுக்கு வகைமாதிரிகளாகச் சுட்டலாம்.

இலங்கைக்குள்ளேயான இடப்பெயர்வு

 இலங்கையில் இன ஒடுக்குமுறைத் தொடங்கிய காலத்திலிருந்து இவ்வாறான இடப்பெயர்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இராணுவம் நிலைக் கொண்டுள்ள மற்றும் போர் நடைபெறுகின்ற பிரதேசத்தில் இருந்த மக்கள் தமது பூர்வீக நிலங்களைவிட்டு விலகியிருக்கப் பணிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது தற்காலிக நகர்வு என நினைத்துப் பலரும் இடம்பெயர்ந்தனர். ஆனால், காலப்போக்கில் அது நிரந்தரமாகி விட்டது. யாழ்ப்பாணத்தில் பலாலியைச் சுற்றிய பகுதிகள், தீவுப்பகுதிகள், முல்லைத்தீவு, வவுனியாவின் இராணுவ நிலைகளை அண்மித்த பகுதிகள் என்பன கடந்த இருபது வருடங்களாக மக்கள் குடியேற அனுமதிக்கப்படாதப் பகுதிகளாக உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கதாகும்.

1990-களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுப் புத்தளம், மன்னார் முதலிய நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். இன்றுவரை அவர்கள் அடிப்படை வசதிகளற்ற முகாம்களிலேயே வாழ்வைத் தொடர வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்தோர் இலக்கியங்களில் அண்மைக்காலம் வரை பெரிதும் பேசப்படாத பொருளாகவே இருந்து வருகின்ற யாழ்ப்பாண முஸ்லீம்களின் இடப்பெயர்வானது தற்போது மெல்லப் பேசும் விடயமாக மாறியிருக்கின்ற போதிலும் முஸ்லீம்கள் அல்லாத படைப்பாளிகள் இது குறி த்துப் பெரிதாகப் பேசியதாகத் தெரியவில்லை. வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற ஒரு சிலரே தமது கருத்துக்களைப் படைப்புக்களினூடே வெளிப்படுத்தியுள்ளனர்.

1950 ஆம் ஆண்டில் இருந்து வணிக நோக்கத்துக்காகக் கொழும்பு முதலிய நாட்டின் விருத்தியடைந்த பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் பலர், பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பாமல் தலைநகரில் வியாபார நிலையங்களை அமைத்து நிரந்தரமாகத் தங்கிவிட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

இவ்வாறு இலங்கைக்குள் குறிப்பாக வடக்கு கிழக்கில் அவ்வப்போது ஏற்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் படை ஆக்கிரமிப்புகள் காரணமாகத் தமிழர்களில் கணிசமான பகுதியினர் இலங்கைக்குள்ளேயே இடம்பெயர வேண்டியச் சூழ்நிலை ஏற்பட அவர்களின் தனித் தன்மை வாய்ந்த பிரதேசங்கள் பலவும் மக்கள் வாழ முடியாத சூனியப் பகுதிகளாக மாற்றப் பட்டன.

இந்தியாவுக்கான இடப்பெயர்வு

இடப்பெயர்வின் பிறிதொரு வடிவமாக இந்தியாவை நோக்கிய ஈழத் தமிழர்களின் நகர்வுகள் அமைந்தன. வசதியானவர்கள் மற்றும் வசதியற்ற மக்கள் எனப் பலரும் அயல் நாடான இந்தியாவை நோக்கிக் குடிப்பெயர்ந்தனர். இலங்கையின் வடக்குக் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் தமது பண்பாடு, காலநிலையுடன் கூடிய இந்தியாவின் தமிழ் நாட்டில் திருச்சி, இராமநாதபுரம், சென்னை, மதுரை முதலான இடங்களில் வசதியான வீடுகளை வாங்கியும், வாடகைக்கு வீடுகளைப் பெற்றும் ஏராளமானோர் வசதியாக வாழ்கிறார்கள். ஒரு இலட்சம் வரையிலான மக்கள் மண்டபம், புழல் முதலான அடிப்படை வசதிகளற்ற அகதி முகாம்களில் வாடுகிறார்கள்.

புலப்பெயர்வு

தமிழர்களின் இலக்கிய மரபு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை முதலிய மலை, காடு, வயல், கடல், மணல் சார்ந்த எல்லைகளுக்குள் நின்று படைக்கப்பட்டனவாக அமைகின்றன. மரபுவழி இலக்கியங்கள் ஐவகை நிலங்கள் பற்றிய பின்னணியிலேயே படைக்கப்பட்டவை. ஆனால், தமிழருக்குச் சற்றும் பழக்கப்படாத கண்டும் கேட்டும் அறிந்திராதப் பனிப் படர்ந்த நிலமும், பனிக் கட்டிகளால் மூடப்பட்ட வாழ்விடங்களில் வாழ்க்கை நடத்தும் முயற்சியும் அவர்களுக்குப் புதிய அனுபவங்களினைத் தந்தது. இதனால் “பனியும் பனிசார்ந்த நிலமும்” ஆறாந் திணையாகக் கொள்ளப்பட்டு அந்த நிலத்துக்கேயுரிய சூழலில் நின்று இலக்கியங்கள் படைக்கப் பட்டன.

“……………………………………

தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும்வகை செய்தல் வேண்டும்”5

என்ற பாரதியின் கனவு மெய்ப்படத் தமிழ் இலக்கிய வளம் பெருக்கி, உலகெங்கும் தமிழ்மொழியை அறிமுகஞ் செய்து இலக்கியங்கள் படைத்த பெருமை புலம்பெயர்ந்த தமிழர்களையேச் சாரும். இவ்வகையில் ஈழத் தமிழரின் புலப்பெயர்வுகளினைக் காலகட்டத்தின் அடிப்படையில் பின்வரும்  மூன்று தலைப்புக்களின் கீழ் பகுத்து நோக்க முடிகின்றது.

1950 – 1960 களில் ஏற்பட்ட புலப்பெயர்வு

1960 – 1980 களில் ஏற்பட்ட புலப்பெயர்வு

1980 களின் பின்னர் ஏற்பட்ட புலப்பெயர்வு.

1950 – 1960 களில் ஏற்பட்ட புலப்பெயர்வு

1950 களின் பின்னர் ஏற்பட்டப் புலப்பெயர்வு பெரும்பாலும் மேலை நாடுகளை நோக்கிய ஈர்ப்புணர்வின் காரணமாக அமைந்தது எனக் கருத முடிகின்றது. இக்காலப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்கள், போராட்டங்கள், இனக் கெடுபிடிகள் என்பன உந்தித் தள்ள, ஆங்கிலம் தெரிந்த புலமையாளர்கள் பலர் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.

1956 இல் ஏற்பட்ட அரசியல் போராட்டங்களின் பின்னர் பல்வேறுபட்ட தொழில் வல்லுநர்களும் தமது தொழில்களைக் கைவிட்டு வளம் மிக்க நாடுகளை நோக்கித் தமது அசைவியக்கத்தினை மேற்கொண்டனர்.

1960 – 1980 களில் ஏற்பட்ட புலப்பெயர்வு

1960 களின் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிய ஈழத் தமிழரின் நகர்வுகள் அமைந்தன. இவ்வாறு சென்றவர்கள் தமது உடல் வலுவை நம்பி, அதையே மூலதனமாகக் கொண்டு, உழைத்துப் பொருள் பெருக்குதலை நோக்காகக் கொண்டிருந்தனர். இவர்கள் படிப்பிலும் சரி, தகுதியிலும் சரி முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்தவர்களை விட ஒருபடி தாழ்ந்த தரத்தையே கொண்டிருந்தனர்.

சாதாரண வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட இவர்களது புலப்பெயர்வானது சமூக வாழ்க்கையை மேம்படுத்துதல், தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தமது உச்சப்பட்ச தேவைகளைய் பூர்த்தி செய்தல் முதலான காரணங்களை நோக்காகக் கொண்டமைந்தன. இவர்களில் பலர் வாகனச் சாரதிகளாகவும், கட்டிடத் தொழிலாளர்களாகவும், வீட்டு மின்சுற்று இணைப்பாளர்களாகவும், வீட்டுப் பணியாளர்களாகவும், தாதியர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமது பணியினைத் தொடர்ந்தனர்.

1980 களின் பின்னர் ஏற்பட்ட புலப்பெயர்வு

1970 களில் முளைகொள்ளத் தொடங்கிய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக, ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குத் தமிழர்களின் அசைவியக்கம் முனைப்புப் பெற்றது. 1980 களின் பின்னர் ஏற்பட்ட இனக் கலவரத்தின் விளைவாக, இலங்கையில் தமிழர்களின் இருப்புக் கேள்விக்குள்ளாகத் தமது பாரம்பரிய தாயகப் பூமியை விட்டு விலகி ஓட வேண்டிய நிருப்பந்தம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டது. இதனால் பெருந்தொகையான இளைஞர்கள் பாதுகாப்புத் தேடி மேற்கு நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்தனர்.

1983 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின்னர் ஏறத்தாழ பதினான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இக்காலப் பரப்பில் நிகழ்ந்த புலப்பெயர்வானது சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக அமைந்தது. முன்னைய காலங்களைப் போன்று பொருளீட்டுதலை மட்டும் நோக்காகக் கொண்டிராமல் உயிர்ப் பாதுகாப்பை முன்னிறுத்தியதாகவும் இத்தகையப் புலப் பெயர்வுகள் அமைந்தமையினால் உழைப்பு இரண்டாம் பட்சமாகக் கருதப்படலாயிற்று.

புலம்பெயர்ந்த நாடுகளின் புதிய அனுபவங்களும், அதிர்வுகளும் அவர்களைப் பாதிக்க அவற்றை சிருஸ்டிப்புத் தன்மை கொண்ட இலக்கியங்களின் ஊடாகப் பதிவு செய்தனர். தாய் மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற இவர்கள் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், குறுநாவல், கட்டுரை , மொழிப்பெயர்ப்பு எனப் பல வடிவங்களில் இலக்கியங்களைப் படைத்திருந்த போதிலும் அவர்களின் “கவிதைகள்” தனித்துவமான இடத்தினைப் பெற்று விடுகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றால் கவிதைகளையேக் குறித்து நிற்குமளவிற்கு அவை மேலாதிக்கம் பெற்றுவிட்டன.

அடிக்குறிப்புகள்

1. தமிழ் லெக்ஸிக்கன் அகராதி, பக்.2785

2. மேலது, பக்.972

3. சிலப்பதிகாரம் 5,11-12

4. சிலப்பதிகாரம், புலியூர்க்கேசிகன் உரை, பக் 67

5. மெய்யன்பன்.சா, பாரதியார் கவிதைகள், பக்.173

அடுத்த இதழில் புலம் பெயர்ந்தோரின் கவிதைகள் பற்றி ஆராய்வோம்.

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad