களவினால் ஆகிய ஆக்கம்
வடிவேலு – பிறர் பொருளைக் கன்னமிட்டுப் பிழைப்பு நடத்துபவன். மாதத்தின் முதல் வாரத்தில் அளவுக்கு அதிகமாய் கையில் பணம்புரளும் – மற்றவர்களுக்கு சம்பள காலம் என்பதால். பேருந்தில் ஏறி ஒரு நிறுத்தத்தில் இருந்து இன்னொரு நிறுத்தம் வந்து சேரும் முன்னர் – கண் மூடி கண் திறக்கும் சிறு இடைவெளியில் – கால்சட்டைப் பையிலிருக்கும் பர்ஸோ, கட்கத்து மத்தியில் வைத்திருக்கும் மஞ்சள் பையோ, இவனின் கண்களிலிருந்து தப்புவது கடினம். மிகவும் சாமர்த்தியமாய் பணத்தை அடித்து விடும் “திறமைசாலி”.
திருடுவது பிழைப்பு நடத்துவதற்கு. அதைத் தவிர வேறெந்தப் பாவச் செயல்களிலும் வடிவேலு ஈடுபடுவதில்லை. பணத்தைத் திருடும் பொழுதும், சற்று மத்திய தரவர்க்கமும் அதற்கு மேலானவர்களுமா என்று பார்த்து மட்டுமே திருடுவது அவன் வழக்கம். தன் மனதுக்குள் தானே சொல்லிக் கொள்ளும் சமாதானம் – தன்னைப் போல் அன்றாடங்காய்ச்சிகளின் பணத்தில் கை வைக்கவில்லை என்பது. தான் திருடுபவர்கள் அந்தப் பணம்போனால் இன்னொன்றைச் சம்பாதித்துக் கொள்ளும் திறமை உடையவர்கள், அதனால் தான் திருடுவதால் பெரிய அளவு பாதிப்பு இல்லை என்பது அவன் தரப்பு நியாயம்.
சிறு வயதில் – அறியாத வயதில் – குடிகார அப்பா குடித்து விட்டு வந்து அம்மாவை அடிப்பதைப் பார்க்கப் பொறுக்காமல், கையில் கிடைத்த விறகுக் கட்டையைக் கொண்டு போதையிலிருந்த அப்பாவின் தலையில் அடிக்க, அங்கேயே மயங்கி விழுந்த அப்பா மரணம். பதினான்கு வயதுச் சிறுவன் வடிவேலுவுக்கு என்ன செய்வதென்றறியாத பயத்தில் ஊரைவிட்டே ஓட, தன் ஊரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள காரைக்குடிக்குச் சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து தப்பிக்க எத்தனித்த வடிவேலுவைப் போலிஸார் கோழி அமுக்குவது போல் அமுக்கிப் பிடித்தனர். சில வழக்காடு மன்றங்களுக்குச் சென்ற பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் பத்து வருடம் செலவழித்து வெளியே வந்த இளைஞன் வடிவேலுவை ஊரில் எவரும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வேலை எதுவும் கிடைக்காத நிலையில், வேறு எதுவும் வழி தெரியாமல், போனவர் வந்தவர்களை மிரட்டிப் பணம் கேட்க ஆரம்பித்தான். அது ஒரு சில இடங்களில் பலித்தது, ஒரு சிலரிடம் பலிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து களவாடுதல் என்பதைத் தொழிலாகத் தொடங்கினான் வடிவேலு.
பல சமயங்களில் திருடுவது தவறான செய்கை என மனசாட்சி உறுத்த, தனது பிள்ளைப்பருவ அனுபவங்களையும், அதைத் தொடர்ந்து ஒரு வேலையும் கிடைக்காத நிலையையும் மனதுக்குள் சொல்லிக் கொண்டு தான் செய்வது சரிதான் என நியாயப் படுத்தித் தொழிலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான் ஒரு பத்து வருடமாக. இந்தப் பத்து வருடத்திற்குள் பேருந்து நிலையத்தில் பூ விற்கும் அனாதைப் பெண் பேச்சியம்மாளை நிதமும் பார்த்து, அவளிடம் மயங்கி, அவளை மயக்கித் திருமணமும் செய்து கொண்டு, ஒரு எட்டு வயதுப் பெண் குழந்தைக்குத் தகப்பனும் ஆகியிருந்தான் வடிவேலு. தன் குடும்பத்தையும், அக்கம் பக்கத்தையும், தன்னை ஒரு சீட்டு வியாபாரியாக நம்ப வைத்திருந்தான். சீட்டு வியாபாரம் என்பது ஏழை எளியவர்களுக்காக நடத்தப்படும் நடமாடும் சிட் ஃபண்ட் – பல பிரபலமான கம்பெனிகள் மத்திய தரம் மற்றும் அதைவிட பணங்காசு அதிகமுள்ளவர்களை லட்சக்கணக்கில் ஏமாற்றும் தொழில், இவன் அதனைச் சிறிய அளவில் ஏழை எளியவர்களுக்கு ஏற்றபடி நூறு ரூபாய் இருநூறு ரூபாய் என்று நடத்திக் கொண்டிருந்தான். அந்தத் தொழிலில் நேர்மையாக நடந்து கொண்டாலும், அவன் நிரந்தர வருமானம் பேருந்தில் பிக் பாக்கெட் அடிப்பதுதான். அதை அவன் விட்டுக் கொடுப்பதாக இல்லை, அதே சமயத்தில் சீட்டுக் கம்பெனி அவனுக்கு ஒரு முகத்தைக் கொடுத்திருந்ததால் அதனையும் தொடர்ந்து கொண்டிருந்தான்.
வாரந்தோறும் வீட்டின் முனையில் இருக்கும் அரச மரத்தடி வினாயகருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூ, பழம், தேங்காயுடன் கற்பூரம் கொளுத்தி வழிபடுவான். தான் தெரிந்தே செய்யும் களவுக்கு வினாயகரையும் கூட்டுக் களவாணி ஆக்கும் முயற்சியிது.
இந்த வாழ்க்கையின் நடுவிலே, தன் மகள் அமுதாவை நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஆசை அவனிடம் மிகுந்திருந்தது. தன் தொழில் தன் குழந்தைக்குத் தெரியக் கூடாது என்பதிலும், அவள் படிப்பில் முழுதாகக் கவனம் செலுத்த வேண்டுமென்பதில் அவன் கண்ணும் கருத்துமாக இருந்தான். தான் இன்னும் அதிகமாகக் களவாடினால், இன்னும் நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கலாம் என்பது அவன் எண்ணம்.தன் மகளின் வகுப்பு அதிகரிக்க அதிகரிக்க, வடிவேலு ஏறி இறங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
வீட்டிற்கு அடுத்த தெருவில் உள்ள மிகவும் புகழ் பெற்ற மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமுதாவைப் படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசை வடிவேலுவுக்கு. அவனிடம் சீட்டுப் போடும் சிலர், குறைந்த பட்சம் மூன்றாம் வகுப்பிலிருந்தாவது ஆங்கிலக் கல்வி பயின்றால்தான் குழந்தைகளால் நன்கு புரிந்து கொண்டு, பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வருகையில் சுமையாய் உணராமல் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள் என்று கூற, அவர்களின் அறிவுரையை முழுமையாய் நம்பிய வடிவேலு, அந்தப் பள்ளிக்குச் சென்று விசாரிக்கலானான். அவர்களின் சட்ட திட்டங்கள் முழுமைக்கும் கட்டுப்படுவதாக வாக்களித்தபின், அவர்களும் குழந்தையை அடுத்த வருடம் மூன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள இசைந்தனர். அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என மொத்தம் ஒரு லட்ச ரூபாய் பள்ளி அடுத்த கல்வி ஆண்டுக்காகத் திறப்பதற்குள் கட்டவேண்டும் எனக் கேட்டவுடன் தலை சுற்றத் தொடங்கியது வடிவேலுவுக்கு.
கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்குள் ஒரு லட்ச ரூபாய் எப்படிப் புரட்டுவது? அப்பொழுதும், நமக்கு அந்தப் பள்ளி வேண்டாமென்று நினைப்பு வரவில்லை அவனுக்கு, மனது ஒரு தினத்திற்கு எவ்வளவு களவாட வேண்டும் என்று மட்டுமே கணக்கிடத் தொடங்கியது. ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஐநூறு ரூபாய்கள் சேமிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான், அப்படியென்றால் தினச் செலவுகளை மனதில் கணக்குப் போட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் அடிக்க வேண்டும். வேறெந்த எண்ணமுமில்லை, அனைத்து விதமான சாகசங்களையும் தொடர்ந்து, முன்னர் இருந்த ”கொள்கை” போன்ற எண்ணங்கள் அனைத்தையும் துறந்து, கையில் கிடைத்தவர்களையெல்லாம் கொள்ளை அடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தான்.
இரண்டு ஷிஃப்ட் “வேலை” செய்து, பலவித தில்லுமுல்லுகளை நிகழ்த்தி, தனக்குத் தேவையான ஒரு லட்ச ரூபாய் பணத்தைச் சேர்த்தே விட்டான் வடிவேலு. வரும் திங்கட்கிழமை அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு பள்ளி சென்று கட்டிவிட்டால் எல்லாம் முடிந்தது. மகள் நகரத்திலேயே மிகவும் உயர்ந்த பள்ளியில் நன்றாகப் படிப்பாள் – நினைக்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த வடிவேலு, வெள்ளிக் கிழமை இரவு நிம்மதியாய் உறங்கிப்போனான்.
மறுதினம் எழுந்த வடிவேலுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மகள் அமுதா கண் திறக்க இயலாமல் படுத்திருக்கிறாள். உடம்பு அனலாய்க் கொதிக்கிறது. நெற்றியில் கைவைத்துப் பார்த்த வடிவேலு வெப்பத்தின் அளவை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான். உடனடியாக அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்து செல்ல, மருத்துவர்கள் முதலுதவி செய்கின்றனர். பல பரிசோதனைகளுக்குப் பிறகு, இது கட்டுக்கடங்காத மூளைக் காய்ச்சல் என்றும், உடனடியாகத் தனியார் மருத்துவமனை எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் கூறப்படுகிறது. வினாடி ஒன்றும் வீண் செய்யாமல் ஆம்புலன்ஸ் பிடித்து, அருகிலிருந்த தனியார் மருத்துவமனை எடுத்துச் செல்கிறான் வடிவேலு.
அமெரிக்காவில் மேல்படிப்புப் படித்துப் பல துறைகளில் அனுபவம் பெற்ற பல்வேறு மருத்துவர்கள் பணிபுரியும் புகழ்பெற்ற மருத்துவ மனை அது. எல்லாவித சோதனைகளும் செய்து முடித்து பிறகு, திறமையான மருத்துவர் குழு, வடிவேலுவிடம் பேசுகிறது. அமுதாவைப் பிழைக்க வைக்க ஒரு பெரிய அளவிலான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் அதற்கு மொத்தமாக ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகுமென்றும் கூறுகின்றனர். வடிவேலுவால் பணத்தைப் புரட்ட இயலுமாவென்பதை மிகப் பெரிய கேள்வியாக வைக்கின்றனர். வடிவேலு சற்றும் தயங்காமல் தன்னால் முடியுமென்றும், உடனடியாக அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தன்மகளைக் காக்குமாறு மருத்துவர்களிடம் வேண்டிக் கொள்கிறான்.
“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்”
மற்றவர் பொருளைக் கவர்வதால் வரும் செல்வம் வளர்வது போன்ற தோற்றத்தைக் கொடுத்து, முடிவில் ஒன்றுமில்லாமல் கெட்டுவிடும் என்பதே இத்திருக்குறளின் பொருளாகும்.
அறுவைச் சிகிச்சைப் பிறகு இரண்டு வாரங்கள் முடிந்து அழகாகத் தேறி வரும் அமுதா பொழுது போவதற்கென தனது பாடப் புத்தகங்களை வாய்விட்டுப் படிக்க ஆரம்பிக்க, முதலாவதாகப் படித்த திருக்குறளும் அதன் விளக்கமும் தனக்கு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என எண்ணியவாறு இனி களவாடுவதில்லை என உறுதி கொள்கிறான் வடிவேலு.
– வெ. மதுசூதனன்.