கண்ணதாசனின் காதல் மற்றும் தத்துவம்
சென்ற கட்டுரையில் பருவத்தில் தோன்றி மரணத்தையும் தாண்டி நிலைக்கும் காதலைக் கவியரசர் எப்படி இயற்கையுடன் இறண்டறக் கலந்தது என உவமித்தார் என்று பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மனித உயிரனங்களை ஆட்டிப் படைக்கும் பணம், பதவி, புகழ் இவற்றையெல்லாம் விடக் காதல் மேன்மையான உணர்வு என்பதை எப்படித் தனது பாடல்களில் வடித்துள்ளார் என்று காணலாம்.
உலக மக்கள் அனைவரும் போற்றும் மிக உயர்ந்த உன்னத உறவு தாயுறவு. காதல் அந்தத் தாயுணர்வையும் கடந்தது என்பதை இப்படிச் சொல்கிறார் கவிஞர்.
“காதல் உன்பால் இல்லை என்றால்
கன்னி உள்ளம் கருகி விடும்
தேதி வைத்துச் சேதி சொன்னால்
தாய் முகமும் மறந்து விடும்” (காத்திருந்தேன் காத்திருந்தேன் – கைராசி)
பிறந்தநாள் முதல் தேவையறிந்து, அன்பும் பாசமும் கலந்தூட்டி வளர்த்த அன்னையை மறக்குமளவுக்கு காதலுணர்வு வலிமை கொண்டதாம்.
வேறொரு பாடலில், உறவுகள் அனைத்தையும், சுகங்கள் அனைத்தையும் துறந்து ஒதுக்க வல்லது காதல் என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால்பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாயிணையும் காதலர் முன்னே
கானல்நீர் போல் மறையோதோ? (ரோஜா மலரே ராஜகுமாரி .. வீரத்திருமகன்)
வரலாற்றை உற்று நோக்கினால், ஒரு நாட்டின் மிக உயர்பதவியை அடைந்த ஒவ்வொரு மன்னவரும் தனது அரசாட்சியை விரிவுபடுத்தித் தனது ஆதிக்கத்தின் கீழ் உலகமே இயங்க வேண்டுமென்று ஆசை கொண்டிருந்ததும், அப்படிப்பட்ட மன்னர்களையும் காதல் எப்படி ஆட்டிப் படைத்தது என்பதும் புரியும். இந்த வரலாற்று உண்மை கவிஞரின் கற்பனையில் தான் எவ்வளவு அழகான வார்த்தைகளாக உருப்பெற்றுள்ளது!
காதலுணர்வு அழகு, அறிவு, ஆஸ்தி எல்லாவற்றையும் கடந்தது என்பதை உணர்த்தும் பாடல் ஒன்று – மாற்றுத் திறனாளியான தன்னைக் காதலிக்கும் பெண்ணை நோக்கி ‘ என்னை காதலிக்க வேண்டுமென எப்படித் தோன்றியது’ என்று கேட்க அவள் நிலையிலிருந்து கவிஞர் சொல்வதைப் பாருங்கள்.
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா வீட்டில்
மணம்பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா. (இது அவனது கேள்வி)
மண்பார்த்து விளைவதில்லை மரம்பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா. (இது அவளது பதில்)
– (தாழையாம் பூமுடிச்சு தடம் பார்த்து நடை நடந்து –பாகப்பிரிவினை)
நாம் இவர்களுக்குத் தான் பிள்ளையாகப் பிறக்க வேண்டுமென்று எந்தக் குழந்தையும் பெற்றோரைத் தேர்ந்தெடுப்பதில்லை. அதே போல் காதலுணர்வும், கட்டுப்பாடுகளற்று, தன்னை அறியாமலே தோன்றும் எனும் மிகப் பெரிய நியதிக்கு எவ்வளவு சுருக்கமான, சுகமானச் சொற்கள்!
மற்றுமொரு பாடலில் காதலில் தாய்மையின் பாசத்தையும், தூய்மையையும் கண்ட ஒருவன் பாடுவதாக .. நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த முதல் பாடலில் காதல் தாயையும் மறக்கச் செய்யும் என்று சொன்ன அதே கவிஞர் காதலிலும் தாய்மை இருப்பதை, முதற் பாடலின் வரிகளுக்கு முரண்பாடான கருத்தை, எப்படிக் கையாண்டிருக்கிறார் பாருங்கள்.
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
காதலின் பரிமாணங்கள் கவிஞரின் கற்பனைகளால் பட்டை தீட்டப்பட்டு அவரின் சொற்சுவையால் மெருகேற்றப்பட்டு விலையில்லா வைரங்களாக மின்னுவதை வரும் இதழ்களிலும் தொடர்ந்து காணலாம்.
தெவிட்டாத தத்துவம்
பூஜ்யத்துக்குள் வசிக்கும் பூஜைக்குரிய இறைவனையும், கட்டையில் படுத்துவிட்டால் காசுக்காகாத கட்டழகையும் எவ்வளவு தத்துவார்த்தமாக கண்ணதாசன் கையாண்டார் என்பதைக் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கைச் சூழலிலும் புரிந்திருக்க வேண்டிய தத்துவங்களைக் குறித்து எவ்வளவு எளிமையான முறையில் திரைப்படப் பாடலில் எழுதியுள்ளார் எனப் பார்க்கலாம்.
“இடுக்கண் வருங்கால் நகுக – அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.”
என்ற வள்ளுவன் வாக்கு நாமறிந்ததே. இதன் உள்ளர்த்தமாகச் செறிந்துள்ள செயல் விளைவுத் தத்துவத்தை நன்குணர்ந்த மேதையான கண்ணதாசன், பாமரருக்கு விளக்க இவ்வண்ணம் கூறுகிறார்;
துன்பம் வரும் வேளையில சிரிங்க
என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க
பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?
எனத் தெரியாதது போல் கேள்வி கேட்டு, அவரே அதற்கு பதிலாக
இது மேல் புறத்தில் கசப்பு
கீழ்ப் புறத்தில் இனிப்பு
பட்டிணத்தார் கையிலுள்ள கரும்பு
என ஆழமாய் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். ஒரு துன்பம் நிகழும் பொழுது, நம் கணக்கில் எப்பொழுதோ செய்து வைக்கப் பட்ட பாவமொன்றின் பதிவு முற்றுப் பெறுகிறது என்பதால் சிரித்து மகிழ வேண்டுமென்பதே இதன் தத்துவ விளக்கமென்பதை நன்குணர்ந்தவர் நம் கண்ணதாசன்.
தானே பாடலெழுதி, அந்தப் பாடல் காட்சிக்குத் தானே நடித்த ”பரம சிவன் கழுத்திலிருந்த பாம்பு” தத்துவப் பாடல் தமிழர் எவராலும் மறக்க இயலுமோ?
தனது பரம வைரியான கருடனைப் பார்த்து, பாம்பு கேட்கிறதாம், சௌக்கியமா என்று. பரமசிவன் கழுத்திலிருக்கிறோமென்ற தைரியத்தில் கேட்பதை உணர்ந்த கருடன், பாம்பிற்குப் பதிலளிப்பதாக அருமையான நிதர்சனம் ஒன்றைப் பாட்டாகக் கூறுகிறார்
“யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே”
தன்னிலை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று உணர்த்துவதற்கு இதைவிட மேலான வரிகள் வேண்டுமோ?
மேலும், கணவன் மனைவி உறவு என்பது ஒரு இரண்டு சக்கர வண்டி போன்றது என்பதையும், அவை சரி சமமாக இல்லையென்றால் என்னவாகுமென்பதையும் அழகுத் தமிழில் அருமையாய்ச் சொல்கிறார்.
வண்டியோடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?
தன்னை விட அதிகம் படித்து புகழடைந்துக் கொண்டிருக்கும் மனைவியைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒரு கணவன் பாடுவதான பாட்டு. அந்தக் கணவனின் மனநிலையை இரண்டே வரியில் எடுத்துரைக்கிறார் பாருங்கள்.
நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே
நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன்
நீ வளர்ந்ததாலே..
பார்க்கும் பொருள் அனைத்தையும் ஒரு கவித்துவம் பொருத்தி வருணிப்பது என்பது கைவந்த கலையாகக் கொண்ட தமிழ்க் களஞ்சியம் என்பதை உணர்த்தும் பல ஆயிரம் வைர வரிகளில் இவையும் ஒன்று.
அனைவரும் அறிந்த மிக உயரிய தத்துவப் பாடலிது. இழப்பில், அதுவும் உறவு ஒன்றின் இழப்பில் தான், பெரும்பாலான மனிதர்கள் தத்துவம் குறித்துச் சிந்திக்கின்றனர். மனைவியை இழந்த கணவனொருவன், தன்னிழப்பைக் குறித்து நினைத்துப் பாடுவது போன்ற ஒரு காட்சியமைப்பு.
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
என்று நிதர்சனமான கேள்வி ஒன்றைக் கேட்டு, அதனைத் தொடர்ந்து
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது…
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்ற தத்துவத்தை எவ்வளவு ஜனரஞ்சகமாகச் சொல்கிறார் பாருங்கள். வணிக குலத்துலே பிறந்து பல வடிவங்களிலும் வணிக உறவுகளிலேயே திளைத்த கண்ணதாசன், அந்த வணிக எண்ணங்களைக் கொண்டு மனித பிறப்பு இறப்புத் தத்துவத்தை எவ்வளவு அழகாகக் கவிதை வடிவில் இயம்புகிறார் பாருங்கள்.
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும்
ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்
இதுவும் எம் பொய்யாமொழிப் புலவனைப் புரிந்து அதனை இன்றைய நடைமுறைக்கு எடுத்து இயம்பும் முயற்சியே.
தானே பணம் போட்டுச் சொந்தமாக எடுத்த படங்களில் ஒன்று “கவலை இல்லாத மனிதன்”. அதனைக் குறித்துக் குறிப்பிடுகையில், “கவலை இல்லாத மனிதன் என்றொரு படமெடுத்தேன், அந்தப் படத்தினால் வந்த கவலை கொஞ்ச நொஞ்சமில்லை” என நகைச்சுவையுடன் குறிப்பிடுவார் கண்ணதாசன் என்பது வேறு ஒரு சுவையான குறிப்பு. அந்தப் படத்தில் இடம்பெரும் அழகான தத்துவப் பாடல் “பிறக்கும்போதும் அழுகின்றாய்” என்ற சந்திரபாபுவினால் பாடப்பட்ட காலத்தால் அழியாத அற்புதப் படைப்பு. அதில்,
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
என இயற்கையாய் நடக்கும் செயல்களை வைத்து, எவ்வளவு உயரிய கருத்தையும் வழி நடத்தலையும் புரிந்திக்கிறார் என நினைக்க வியப்பாய் உள்ளது. மேலும்,
அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்…
என முக்தியடைவதைக் குறித்து இவ்வளவு எளிமையாய்த் தமிழில் இன்னொருவர் சொல்லியிருப்பாரா என வியக்குமளவுக்கு எழுதியிருக்கிறார் நம் கவியரசர்.
தமிழ்த் தாய்க்கு சற்று பாரபட்சம் பார்க்கும் உள்ளந்தான் என எண்ணத் தோன்றுகிறது நமக்கு. பல வருடங்களாய் முயற்சி செய்து, ஒற்றைக் கால் விரலில் நின்று தவம் செய்தாலும் கிடைத்தற்கரிய தமிழ்ப் புலமையை, ஆழ்ந்த அறிவை, சரளமான மொழி கையாள்தலை அந்தக் கிண்ணதாசனுக்கு மட்டுமே வழங்கி ஓரவஞ்சனை புரிந்தனளே என எண்ண எண்ண நமக்குச் சற்று வலியாகவே உணர்கிறோம். அந்தத் தத்துவ வித்தகனின் படைப்புகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் அறிவையுடைவர்களாய் நம்மை வைத்திருக்கிறாளே என்ற அளவுக்கு அந்தத் தாயைப் போற்றி, கவியரசின் தத்துவங்களை இன்னும் எழுதுவோம் எனக் கூறி இப்போதைக்கு விடை பெறுகிறோம்.
– ரவிக்குமார் மற்றும் மதுசூதனன்.