திரைப்படத் திறனாய்வு – கும்கி
மைனா திரைப்பட வெற்றிக்குப் பிறகு வழக்கமான இயக்குனர்கள் போல், பெரிய நடிகர்களை இயக்கி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரையரைக்குள் சிக்கி கொள்ளாமல், தனக்கென பாதை வகுத்துக் கொண்டதற்கு பிரபு சாலமனை முதலில் பாராட்ட வேண்டும்.
மார்த்தாண்டம் பகுதியில் ஆதிகாடு எனும் கிராமம். இங்கு காட்டு யானைகளால் துயரப்படும் கிராமத்தினர், அரசாங்கம் உதவி செய்யாததினால் தாங்களாகவே பொருள் சேர்த்து, காட்டு யானையை விரட்ட, கும்கி யானை ஒன்றை கொண்டு வர முயல்கின்றனர். சந்தர்ப்ப வசமாக, கும்கி யானைக்கு பதிலாக கதாநாயகன் பொம்மனின் வேடிக்கை காட்டும் யானை கிராமத்துக்கு வந்து சேர்கிறது. அங்கு கதாநாயகி அல்லியை கண்ட நாயகனுக்கு காதல் மலர்கிறது. இவர்களின் காதல், காட்டுயானை சிக்கல்கள், கிராமக் கட்டுப்பாடுகள் இவை மூன்றையும் கொண்டு கதைக் களம் அமைந்துள்ளது. இந்த மூன்றில் எதற்குமே அதிக அழுத்தம் தராமல் இயல்பாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்.
யானைப் பாகன், அவனது வாழ்க்கை முறை, காதல் இவை தமிழ்த் திரைப்படத்துக்கு புதிது. இதை எழில்மிகு கிராமம், இயற்கை வளம் நிறைந்த காடுகளின் பின்னணியில் ஒரு அழகான ஓவியமாகப் புனைந்துள்ளனர்.
கதாபாத்திரங்கள், கதை இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிடுகிறது ஆர். சுகுமாரின் ஒளிப்பதிவு. துவக்கத்தில், பனித்துளி ஏந்திய புல்வெளிப் பின்னணியில் தலைப்பு பெயர் காண்பிக்கும் நேரத்திலிருந்து இவரது ஆளுமை வெளிப்படுகிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து நெய்திருக்கின்றனர் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும்.
நாயகி குளத்தில் நீர் எடுக்கையில் சூரிய ஒளி நீரில் பட்டு அவர் முகத்தில் ஓளியாடுவது,, நாயகி பூக்களை நகையாக அணிந்திருப்பது, அருவிகளின் சாரல், மேகக்கூட்டங்கள் என சின்னச் சின்ன காட்சிகளுக்கும் சிரத்தை எடுத்துள்ளது பார்ப்பவர் கண்களுக்கு விருந்து. இந்திய கிராமம் என்றாலே சிவப்பு மண்ணும் வறட்சியும் மட்டுமே எனும் விதியை உடைப்பதற்காகவே இயக்குனர் இது போன்ற கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கிறார் போலும். ஒரு பாடலுக்காக அயல்நாட்டுக்கு சென்று ஆயிரம் பேர் பின்னணியில் நடனமாடுவதைப் பார்க்கும் நமக்கு இது அரிய வரப்பிரசாதம்.
படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அனைத்துக் கட்டங்களிலும் க்ளோஸ் அப் காட்சி அமைத்த இயக்குனரின் தைரியத்தையும், நடிகர்களின் தன்னம்பிக்கையையும், ஒளிப்பதிவாளரின் திறமையையும் பாராட்டியே தீர வேண்டும். ஒவ்வொருவர் முகத்திலும் இயல்பான, அழுத்தமான உணர்வுகள். ஒளிப்பதிவாளர் இதற்கு கையாண்டுள்ள வெளிச்ச முறைகள் இந்த உணர்வுகளைக் கூடுதலாக மெருகேற்றிக் காண்பிக்கின்றன.
நாயகியின் தந்தையாக வருபவரும், அவரது சகோதரராக வருபவரும் மிக மிக இயல்பாக நடித்துள்ளனர். கிராமத்தினர் ஓவ்வொருவரின் தெரிவும் சிறப்பாக உள்ளது. திணிக்கப்பட்ட எதிர்நாயகன் (வில்லன்) இல்லாமல் திரைப்படம் வழங்குவது இயக்குனரின் மற்றுமொரு சிறப்பம்சம்.
இமானின் இசை படத்துக்கு வலுச் சேர்க்கும் மற்றுமொரு தூண். ஒவ்வொரு பாடலும் தென்றலாகத் தவழ்கின்றது. ஒண்ணும் புரியலே பாட்டில் ’கண்ட அழகிலே ஆசை கூடுதே’ எனும் வரிகளில் இமானின் குரல் இழைவது சிறப்பம்சம். ‘சொல்லிட்டாளே’ பாடல் மற்றுமொரு மகுடம். இப்பாடலில் மலையுச்சியிலிருந்து அருவியை காட்டுவது நாம் நேரில் அங்கு நிற்பது போன்ற உணர்வை அளிக்கிறது. படத்துக்கு இமானின் பிண்ணனி இசை உயிர் கொடுத்துள்ளது. கண்டிப்பாக இமானின் இசைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல் கல். பல விருதுகளைப் பெற்றுத் தரும்.
நாயகன் விக்ரம் பிரபு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார். அவரது உடற்கட்டும், வாகும் இளம் யானைப் பாகன் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமானது. கண்களில் காதல் உணர்வுகளையும், உடலசைவில் முரட்டுத்தனத்தையும் ஒருங்கே வெளிப்படுத்துவதில் முதற்படம் என்ற அளவில் பெரிதாக வென்றிருக்கிறார். காதலை முறித்துக் கொள்ள நாயகியிடம் பேசும் காட்சியில் குமுறலையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தும் காட்சி ஒரு உதாரணம்.
நாயகி லட்சுமி மேனன், மன முதிர்வும், சிறு பிள்ளைத்தனமும் ஒருங்கிணைந்த மிக அழகான ஓவியம். அனேகக் காட்சிகளில் அழகாகச் சிரித்துக் கண்களால் பேசுகிறார். சொல்லிட்டாளே பாடலில் காட்சியின் பிரம்மாண்டத்தைக் கண்களிலேயே காட்டுகிறார்.
தம்பி இராமையா நாயகனின் மாமாவாக வந்து, கதையை நகர்த்திச் செல்ல உதவுகிறார். இவரின் நகைச்சுவை ஒரு கட்டத்துக்கு மேல் காட்சியமைப்பின் வலுவைக் குறைக்கிறது.
படத்தில் வரும் ஆய்வாளரும் துணை ஆய்வாளரும் ஏதோ வில்லங்கம் ஏற்படப்போகிறது எனும் உணர்வை ஏற்படுத்துகின்றனர்.
யுகபாரதியின் பாடல்கள் குறிப்பிடத்தக்கது. ’நாடளவு இஷ்டத்துல, நகத்தளவு கஷ்டம் மச்சான் அளவுகோலே இல்ல அது தான் பாசம் மச்சான் – நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவே வேணும் மச்சான் ’ போன்ற மனதில் பதியும் எளிமையான வரிகளில் புனைந்திருக்கிறார்.
படத்தொகுப்பு, கலை என அத்துனை துறையினரும் சிறப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.
படத்தில் சில குறைகளும் தென்படுகின்றது. காட்சிகளில் அவ்வளவு மெனக்கெட்ட இயக்குனர் வசனங்களில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். தம்பி இராமையா ஆங்கிலச் சொற்கள் பேசுவது அவரது கதாபாத்திரத்திற்குப் பொருந்தாதது. ஆனாலும் இவை திரையரங்கில் சிரிப்பலைகளை எழுப்ப உதவுகிறது.
ஊரை விட்டுக் கிளம்புவதில் அவ்வளவு முனைப்புக் காட்டும் தம்பி இராமையா திடீரென்று காதலுக்கு ஆதரவாக மாறி குணச்சித்திரம் காட்டுவது எடுபடவில்லை.
தோற்றத்திலும், உருவத்திலும் ஆதிகாட்டு வாசிகளை நுணுக்கமாக காட்டியவர், அவர்களின் தமிழ் உச்சரிப்பில் அதைக் காட்ட தவறிவிட்டார். ’நீ எப்பவும் என் கூட இருப்பியா புள்ள?’ என நாயகன் கேட்கும் போது ‘நானிருக்கேண்டா’ என நாயகி சொல்வது நகரத்தை ஞாபகப்படுத்துகிறது.
படத்தில் வரும் வரைகலைக் காட்சிகளின் தரம் சற்றுக் குறைவே. குறிப்பாக இறுதியில் வரும் யானைகள் சண்டையிடும் காட்சி.
இறுதியில், திடுதிடுப்பென்று படம் முடிந்து விடுகிறது. ஒன்று, கதையை எப்படி முடிப்பது என இயக்குனர் குழம்பியிருக்க வேண்டும். அல்லது படத்தின் முடிவை பார்வையாளர்களிடம் விடத் துணிந்திருக்க வேண்டும்..
இப்படிச் சில குறைகள் இருப்பினும் ஒரு நல்ல படமாகவே தெரிகிறது கும்கி.
– ரவிக்குமார்