ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-3
புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் உள்ளடக்கம்
கவிதையின் உள்ளடக்கம் என்பது, அது எதைப்பற்றிச் சொல்ல முனைகிறது என்பதைப் பொறுத்ததாகும். கொளு, கரு, பாடுபொருள், உள்ளீடு, பொருள், விஷயம், தீம், பாவிகம் போன்ற பல பெயர்களினால் இதனை அழைப்பர். ‘’எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட பொருளின் செய்தி உள்ளடக்கம்’’ என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது. இவ்வகையில், ஒரு கவிஞன் கூறவிழையும் பொருள் பொதுமையானது. அது சமூகத்துக்குரியது. வருணனை மட்டுமே கவிஞனுக்கு உடைமையானது. கவிதையின் பொருள் வேறு, கவிதை வேறு. பொருள் என்பது கவிதைக்கு வெளியில் நிற்பது. வெளியில் இருக்கும் பொருளை மட்டும் கொண்டு ஒரு கவிதையை மதிப்பீடு செய்துவிட முடியாது. கவிதை சமூகத்திலிருந்து படைக்கப்பட்டது. அது சமூகத்துக்காகவே படைக்கப்பட்டது. அதனால் சமூகத்துக்கு அது எவ்வளவு தூரம் பயனுடையதாக அமைகிறது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி, தோல்வி அமைந்து விடுகின்றது.
1.கவிஞன் – நோக்கம்
2.கவிதை – உள்ளடக்கம்
3.சமூகம் – பயன்
கவிஞனின் நோக்கம், கவிதையின் உள்ளடக்கம், கவிதையின் பயன் என்பன ஏறத்தாழ ஒன்றையொன்று தழுவியன.1 எனவே கவிதைக் கலையை மகிழ்வுறுத்தும் நோக்கிலிருந்து மாற்றிச் சமூகத்துக்குப் பயன் தரக்கூடியதாக, சமூகத்தை நெறிப்படுத்தும் கருவியாக உருவாக்க வேண்டியது அவசியமாகின்றது.
புலம்பெயர்ந்தோர் கவிதைகளின் பாடுபொருட்கள் பலதரப்பட்டனவாக, உலகத் தரத்தினை நோக்கிச் செல்வனவாக அமைகின்றன. தனது தேசத்தில், தனது சமூகத்தில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்கள் தான் இழந்து வந்த நாட்டையும் மக்களையும் தன் உறவுகளையும் நினைத்து பிரிவாற்றாமையின் காரணமாக விளையும் ஒருவகையான புலம்பல் கவிதைகள் போன்றும் சிலவேளைகளில் இவை அமைந்துவிடுகின்றன.
புலம்பெயர்ந்தோரின் கவிதை முயற்சிகளை, அவற்றின் பொருள் நிலைக்கமைய நான்கு பெரும் போக்குகளாகப் பிரித்து நோக்கமுடிகின்றது.
1. வாழ்வியல் சிக்கல்கள்
2. போரின் தாக்கம்
3. பெண்ணிலைவாதம்
4. பொதுவானவை
என்பனவாகும்.
1. வாழ்வியல் சிக்கல்கள்
புலம்பெயர்ந்த தமிழர்களின் கவிதை முயற்சியென்பது, புகலிடத்தின் புதிய சூழல் தரும் அனுபவங்களின் வெளிப்பாடாகவும், மொழி, பண்பாடு, அரசியல், வாழ்வியல்சார் தவிப்புக்களாகவும், தம்மைத் தமக்குள்ளேயே தேடும் சுயத்தைப் புதுப்பிக்கும் முயற்சியாகவும், பிரிவாற்றாமையினை வெளிப்படுத்தும் படைப்புக்களாகவும் மேலெழுகின்றன. குறிப்பாக வேறுபட்ட சூழலில் அகப்பட்டுக் கொண்ட மனிதனின் தவிப்பை வெளிப்படுத்துதல், இழந்துவிட்ட தாய்நாட்டின் பற்றை நிலை நிறுத்துதல் என்பன இவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும்.
புலம்பெயர்ந்த கவிஞர்கள் அனைவரும் சுமூகமான நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குப் புலம் பெயரவில்லை. அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்களாக, அல்லது எதிர்த்து வாழப் பயந்தவர்களாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் என்பது முக்கியமான விடயமாக மேலெழுகின்றது. எந்தவொரு படைப்பாளன் மீதும் சூழ்நிலை தாக்கத்தை ஏற்படுத்துவது இயல்பு. இதன் அடிப்படையில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் அவர்களின் வலிகளை வரிகளாக்கித் தந்தமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்த நாடுகளின் வேறுபட்ட காலநிலை, தரைத்தோற்றம், சுற்றாடல், தாவரம், விலங்குகள், பறவைகள் என்பன எமது கவிஞர்களின் கற்பனையைப் பெரிதும் கவர்கின்றன. வித்தியாசமான கலாசாரம், வேறுபட்ட மொழிகளுடன் அன்றாடம் ஊடாடுகின்றனர். இதனால் புதிய உணர்வுகளையும் அனுபவங்களையும் தமது கவிதைகளில் வரையறுக்கின்றனர்.
அகதி உணர்வுநிலை
இன-நிறவெறித் தாக்கம்
புதிய காலநிலை
தாய்நாடு பற்றிய ஏக்கம்
பிரிவுத்துயர்
தகுதிக்கேற்ற தொழிலின்மை
வேலைப்பளு
விசாச் சிக்கல்
பண்பாட்டுச் சிக்கல்
சமூக விரோதச் செயல்
அந்நிய மனோநிலை உணர்வு
எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்
பிரயாண அவலம்
ஆகிய தலைப்புக்களினைத் தனித்தனியாக இனி அடுத்துவரும் இதழ்களில் பார்ப்போம்.
அடிக்குறிப்புகள்
1.அறவாணன்.க.ப, கவிதையின் உயிர் உள்ளம் உடல், பக்.38
-தியா-