இலகுவான மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
1 இறத்தல் அறக்குளா அல்லது வச்சிர மீன் Seer/King Fish steaks
5 நறுக்கிய சின்ன வெங்காயம்
2 நறுக்கிய பச்சை மிளகாய்
1 சிறுகிளை கறிவேப்பிலை
2 நறுக்கிய உள்ளிப்பூண்டு நகம்
4-5 மிளகு
சிறிதளவு கடுகு
½ தேயிலை கரண்டி வெந்தயம்
1 தேயிலை கரண்டி சீரகம்
1 சிறிய கோளை உருண்டை அளவிலான பழப்புளி marble size
1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்
1 மேசைக் கரண்டி கறி மிளகாய்த்தூள்
3 கோப்பை தேங்காய்பால்
1 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்
உப்பு தேவையான அளவு
தயாரிப்பு முறை
மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி பின்னர் மஞ்சள், பாதி கறி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து ஒருபக்கத்தில் வைத்துக்கொள்ளவும். பழப்புளியை சற்று சூடான ½ கோப்பை நீரில் குழைத்து, புளிச்சாறை வடித்துக்கொள்ளவும்.
ஒரு தட்டையான சட்டியில் மிதமான சூட்டில் சற்று மிளகு, வெந்தயம்,கடுகு,சீரகம் போன்றவற்றைப் பாதி கறிவேப்பிலை சேர்த்து 1-2 நிமிடம் வறுக்கவும். பின்னர் சமையல் எண்ணெய் சேர்த்துக்கிளறி, மீன் துண்டுகளை அதன் மேலை வைக்கவும். 30 நாழிகளில் மீன் துண்டுகளை மறுபுறம் திருப்பி விடவும். மேலும் 30 நாழிகளில் இதர பொருட்களை எல்லாம் சேர்த்து கொதிக்க வைக்கவும். மீன் துண்டுகள் குழம்பில் மூழ்கி இருப்பது முக்கியம்.
மீன் குழம்பு கொதித்துக் குமிழிகள் வரும் பட்சத்தில் இன்னும் 15 நிமிடங்களில் அடுப்பை அணைத்து மூடி விடலாம். மீன் குழம்பை சோற்றுடன் அல்லது ரொட்டியுடன் பரிமாறலாம்.
மேலதிக குறிப்பு :
நாட்டுப்புறங்களில் விறகு அடுப்பில், மண்சட்டியில் செய்யப்பட்ட மீன் குழம்பை அடுத்த நாள் பரிமாறி சுவைத்துச் சாப்பிடுவது பழக்கம்.