வரும் நாட்களில் ..
நாட்காட்டி தீர்ந்ததால் கரைந்தே
நரைகூட்டிக் காட்ட முனைந்தே
நாடகத் திரையென விழுந்தே
நொடியில் முடிவதோ கடந்தாண்டு?
நலமாய் வாழ்ந்திட வேண்டியே
நயமாய் வாழ்த்துப் பாடியே
நட்பாய் உறவுகள் கூட்டியே
நடுநிசியில் விடிவதோ புத்தாண்டு?
பதின்மூன்றதில் புலப்படாச் சிறப்பு
பதின்நான்கதில் புலர்ந்திடுமோ விளம்பு?
பகிர்ந்திருந்தால் பகைநாளும் பொன்னாளே!
பழித்திகழ்ந்தால் பொன்னாளும் பகைநாளே !
உன்வாழ்வு உன்னிடமென்பது வழக்கு!
உடைத்ததனை உள்ளிருந்து விலக்கு!
உலகவாழ்வும் உன்னிடமெனத் திருத்து
உரக்கவதனை உரைத்தேநீ விளக்கு!
அறிவுப் பசி கொண்டிரு
அன்பின் பசி உணர்ந்திரு.
ஆசைப் பற்றைத் தணித்து
அழிவின் பாதை தவிர்த்திரு.
இன்று பிறந்ததாய் எண்ணி
இன்முகம் காட்டி இருந்திடு!
இரவு மடிவதாய் எண்ணி
இருப்பதை இரவாமல் கொடுத்திடு!
வந்தோம் வீழ்ந்தோம் என்றன்றி
வாழ்ந்தோம் வாழ்வித்தோமென வீற்றிரு
வளமும் நலமும் விதைத்திரு
வையத்தில் விரல்ரேகை பதித்திரு.
– ரவிக்குமார்