\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments

Kannadasan_600x826”ஆண்டவன் எங்கே இருக்கிறான்?”

நாத்திகருக்கும் எழும் நியாயமான கேள்வி. ஞானிகள் பலரும் பல விதங்களில் விடையறிந்திருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய தத்துவத்தை நம்போல் சாதாரணருக்கும் விளங்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாக விடையளிக்கிறார் நம் கவியரசர்.

”ஆசை, கோபம், களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம் – இதில்

மிருகம் என்பது கள்ள மனம் – உயர்

தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த

ஆறு கட்டளை அறிந்த மனது

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்..”

ஆசை, கோபம், களவு என்ற விலக்க வேண்டிய மூன்று கட்டளைகளையும் அன்பு, நன்றி மற்றும் கருணை என்ற கொள்ள வேண்டிய மூன்று கட்டளைகளையும் அறிந்து அவற்றைப் பின்பற்றும் மனங்களே ஆண்டவன் குடியிருக்கும் இல்லங்களென்கிறார் கவியரசு.

மனித வாழ்வு எவ்வளவு நிலையற்றது, அந்த நிலையற்ற வாழ்வை முழுவதும் உணர்ந்து கொள்ளாமல் ஒருவன் வாழும் குறுகிய காலத்தில் எவ்வளவு பாவச் செயல்களைப் புரிகிறான்? எவ்வளவு உணர்ச்சிக் கொந்தளிப்பில் தகாத செயல்களைப் புரிகிறான்? எவ்வளவு அழகாக் கேட்கிறார் பாருங்கள்…

”ஆடிய ஆட்டம் என்ன?

பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வம் என்ன?

திரண்டதோர் சுற்றம் என்ன?

கூடுவிட்டு ஆவி போனால்

கூடவே வருவது என்ன?”

யாக்கை நிலையாமை குறித்து மற்றுமொரு பொன்னான தத்துவ வரிகள்.

”ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடி வரும் கூட்டம்

கொள்ளி வரை வருமா?

……..

விட்டு விடும் ஆவி

பட்டு விடும் மேனி

சுட்டு விடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு..

சூனியத்தில் நிலைப்பு..”

என்ன நிதர்சனமான கேள்வி, கருத்து… வாழ்க்கையின் முடிவை எளிமையான வார்த்தைகளில், மனதில் பதியும் வண்ணம் அழகாகக் கூறியுள்ளார் பாருங்கள். இதுவே முடிவு என்றறிந்தும் மனிதன் போடும் ஆட்டத்திற்கு அளவேயில்லாமல் போகிறதே என்ற வருத்தத்தில் உதிர்ந்த கவி முத்துக்கள் அவை.

குடும்பத்தின் மீது வெருப்புக் கொண்ட நாயகன் பாடுவது போன்ற பாடல் “பழனி” என்ற திரைப்படத்திலிருந்து. விரக்தி ஆறாய்ப் பெருகி ஓடும் இப்பாடலில்

“பெட்டைக் கோழிக்குக் கட்டுச் சேவலைக்

கட்டி வைத்தவன் யாரடா?

அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்

சோறு போட்டவன் யாரடா?

சோறு போட்டவன் யாரடா?”

என்று கேட்கிறார் கவிஞர். எல்லாம் இயற்கையாய் நடக்கையில் நாம் சாதித்து விட்டது போல நடந்து கொள்ளும் மனித இனத்தின் அறியாமையை எளிமையான உதாரணத்தில் எடுத்துரைப்பதாகக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து மனித இனத்தின் பல்வேறு துன்பங்களின் முழுமுதற் காரணமாய் கவிஞர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

“வளர்த்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்

வருந்தவில்லையே தாயடா..

மனித ஜாதியில் துயரம் யாவுமே

மனதினால் வந்த நோயடா….

மனதினால் வந்த நோயடா….

மனதைக் கட்டுப்படுத்தும் வித்தை கற்றவர்களுக்கு வாழ்வியல் துன்பங்கள் எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை என்பதே முற்றும் உணர்ந்த ஞானிகளின் கூற்றாகும். இதனைத் தெளிவாய் எளிமையாய் வழங்கிய கவியரசைத் தத்துவ ஞானி என்றழைப்பதில் பிழையேதும் உள்ளதோ?

காதல் கனி ரசம்

வாழ்க்கைத் தத்துவங்களைச் சொன்ன அதே கவிஞர் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் காதலின் மகத்துவத்துவத்தைச் சொல்வதையும் பார்ப்போம்.

பொதுவாகக் காதலர்கள் காதல் வயப்பட்டுக் கூறுபவை, ’உன் மனம் நானறிவேன்’, ‘என் மனம் நிறைந்தவளே’ போன்ற வாக்கியங்கள். கவிஞர் ஒரு படி மேலே சென்று, பண்பட்ட காதலர்கள் வழியாகச் சொல்வதைப் பாருங்கள்.

”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

நீ காணும் உலகங்கள் நானாக வேண்டும்”

ஒருவர் மற்றவர் உயிரோடு கலந்து விடும் உன்னத உறவை விளக்கிடும் வரிகள் இவை. காதலர்களுக்கென ’பத்துக் கட்டளைகள்’ வரைந்தால் முதலாவதாக இருக்க வேண்டிய கட்டளை மேலே கூறப்பட்ட வரிகள்.

இதே பாடலிலிருந்து தாயுணர்வுக்கு அடுத்தபடியாக  நெருக்கமுடைய காதலுணர்வை சொல்லும் மேலும் இருவரிகள்

”மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்

நானாக வேண்டும்.

மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்

நீயாக வேண்டும்.

பொதுவாகத் தனிக் கவிதைகளில் இருக்கும் சுதந்திரங்கள் திரைப் பாடல்களில் கிடைப்பதில்லை. சந்த நெறிகளுக்குட்பட்டே சொற்கட்டை அமைக்க வேண்டும். வளைந்து நெளியும் சந்தமெட்டிலும், வார்த்தை ஜாலம் புரிந்து, காதல் ரசம் சொட்டச் சொட்ட ஒரு பாடல். வாழ்வியல் சிக்கல்களினால் அவ்வப்போது காதல் உறவில் சலசலப்புகள் ஏற்பட்டால் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். காதுகள் வழியாகத் தென்றலென நுழைந்து இதயத்தை மயிலிறகாய் வருடும் வரிகளால் ‘நீயா? நானா?’ எனும் நிலை மாறி ‘நீயும் நானும்’ என்றாகிவிடுவீர்கள்.

அடுத்த பாடலும் காதலரிருவர் ஒருவரை ஒருவர் எப்படி அனுசரித்து இருக்கவேண்டும் என்பதைச் சொல்லும் பாடல்.

”கடலானால் நதியாவேன்;

கணையானால் வில்லாவேன்;

உடலானால் உயிராவேன்;

ஒலியானால் இசையாவேன்.

மொழியானால் பொருளாவேன்; ;

கிளியானால் கனியாவேன்;

கேள்வியென்றால் பதிலாவேன்;

(கண்ணானால் நான் இமையாவேன்; காற்றானால் நான் கொடியாவேன்).

இப்பாடலை அவ்வப்போது நீங்கள் கேட்டிருந்தாலும், மேலே சொன்ன வரிகளைக் கூர்ந்து பாருங்கள். ஒன்றில்லாமல் மற்றதில்லை என்ற உண்மையை கவிதைச் சுவையில், கருத்து எளிமையில் காதல் இனிமை சேர்த்து கண்ணதாசன் சொல்லியிருப்பதை அறியலாம்.

காலங்காலமாகப் பெண்களின் சிறப்பம்சங்களாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் பண்புகளைச் சொல்லி வருகிறோம். இவற்றில் நாணம் என்பது காதலுக்கே அழகு சேர்ப்பது. கவிஞரின் கற்பனையில் அது மேலும் அழகு பெறுவதைப் பாருங்கள்.

”உன்னை நான் பார்க்கும்போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும்போது

என்னை நீ பார்க்கின்றாயே.

நேரிலே பார்த்தால் என்ன?

நிலவென்ன தேய்ந்தா போகும்?

புன்னகைப் புரிந்தால் என்ன?

பூமுகம் சிவந்தா போகும்?”

(நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ)

இதெல்லாம் சரி. கவிஞரின் காதல் பாடல் சிறப்பா அல்லது தத்துவப் பாடல்கள் சிறப்பா?  காதல், தத்துவம் என இரண்டிலும் திளைத்து முத்தெடுத்த கண்ணதாசன் காதலுக்குள் தத்துவத்தைப் புகுத்திய பாடல் ஒன்றைக் கீழே காணுங்கள்.

ஏற்கனவே காதலில் தோல்வியுற்ற ஒருவருக்கும், அவரை ஒருதலையாய்க் காதலிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் வாதத்தில் கவிஞரின் இருமுகங்களையும் ஒரு சேர காணலாம்.

“முனிவன் மனமும் மயங்கும் பூமி

மோக வாசல் தானே

மனம் மூடி மூடிப் பார்க்கும்போதும்

தேடும் பாதை தானே (பெண்)”

காதல் மோகத்தில் பாடும் காதலிக்கு அவர் கூறும் பதில்

“பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்

காதல் கானல் நீரே!

இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்

போகும் ஞானத்தேரே! (ஆண்)”

(இது மாலை நேரத்து மயக்கம், இதைக் காதல் என்பது வழக்கம்)

இது போன்ற மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட பாடல் காட்சிகள் தோன்றுவது அரிது. இது போன்ற அரிதான  பாடல்களில் தத்துவமும், காதலும் ததும்பும் வரிகளை கண்ணதாசனை விடத் தெளிவுடனும், எளிமையுடனும் சொன்னவரில்லை, இனியும் இருக்கப் போவதுமில்லை.

(இன்னும் வரும்)

–    வெ. மதுசூதனன் மற்றும் ச. ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad