பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்
பலர் பேசிக்கொள்கிறார்கள்.
பாசாங்கற்ற பன்முகக் கலைஞனே
பூவில் இருந்து பிறந்த தேனே
சிப்பிக்குள் உதித்த முத்தே
ஐயா உங்களைப் பின்தொடர்ந்தவர்கள்
சிகரம் காண ஊக்கம் தந்த ஏணி நீங்கள்.
நீங்கள் ஏற்றிய தீபங்கள்
உங்களுக்காக ஒளிவீசும்
உங்கள் வாழ்க்கை
ஒரு புதுக்கவிதை போல்
தொடக்கம் முடிவற்றது.
தேடிவந்த குஞ்சுகளுக்கு
இரை கொடுத்து வாழ்வளித்த வள்ளலே
உங்கள் கமெரா பட்ட இடமெங்கும்
ஐயா ஒளிமூலம் காட்சி படைக்கும்
வித்தையை கற்றுத் தந்தவர் யார்?
படிமங்கள் சொல்லும்
கமெரா பிடித்த வித்தைக்காரனே
ஐயா என்னவென்று சொல்வேன் உங்களை
மௌனம் மூலம் கதை எழுதிய வித்தகனே
ஒரு மனிதனாய் வாழ்ந்த உத்தமனே
காலம் உங்களை எப்படி மறக்கும்?
ஐயா நீங்கள் இறந்து விட்டதாகப்
பலர் பேசிக்கொள்கிறார்கள்
சிரிப்பு – அழுகை – காதல் – காமம்
கலந்த ரசத்தைப் பிழிந்து
கலை ரசம் பொங்கத் தந்தவரே
கடைசிவரை கலைப் பாடம் கற்ற
கலையுலகின் மாணவனே
உங்களை வழியனுப்ப
மனம் ஏகவில்லை ஐயா…
நீங்கள் இறந்து விட்டதாகப்
பலர் பேசிக்கொள்கிறார்கள்
எப்படிச் சாத்தியமானது
ஐயா நீங்கள் முகம் காட்டிய
முதல் படமே கடைசியுமாக…
எங்களுக்கான வாழ்வின் கவிதைகளை
கமெராவில் செதுக்கிய பிதாவே
சென்று வா… நன்றாக ஓய்வெடு
நீ போட்ட விதைகள் விருட்சமாகும்
நீங்கள் கடைசியாக உதிர்த்த
தலைமுறை வரிகளே உங்களுக்கும்
“தமிழையும் தாத்தாவையும் மறவாதே”
மறவோம் ஐயா.
-தியா-