தெருக்கூத்து
மின்னசோட்டா மாநிலத் தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் நான் மகிழ்ந்த நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்தி கொள்ள இச்சிறு கட்டுரையில் முனைகின்றேன். ஐம்பெறும் காப்பியங்களின் முதன்மைக் காப்பியமானது சிலப்பதிகாரம். இதன் மற்றொறு சிறப்பு மூவேந்தரும் இதில் கதை மாந்தர்கள். இந்த மூவேந்தர் கதை சொல்ல புதிதாய் முளைத்திருக்கும் மூவேந்தர் கலைக் குழாமின் தெருக்கூத்து மிக மிக அருமை. மிக நேர்த்தியான காட்சி அமைப்புகள். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசித்த நிகழ்ச்சி. என்றால் அது மிகையில்லை.
இந்த நிகழ்ச்சி ஆரம்பத்ததிலிருந்து முடியும் வரை நான் என் வாழ்வின் 20 வருடங்கள் பின்னோக்கிச் சென்று இருந்தேன் என்பது நிகழ்ச்சி முடிந்த பிறகே அறிந்து கொண்டேன். நான் என் பதின்மர் வயதுகளில் எங்கள் ஊரில் மண்ணில் வட்டமாக அமர்ந்து கொண்டு இரவு முழுதும் நடக்கின்ற அந்தத் தெருக்கூத்தை அப்படியே சின்னச் சின்ன, நல்ல மாற்றங்களுடன் அரங்கேற்றியிருந்தனர். அந்த மாற்றங்களை ஒரு ஒப்புமைக்குச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கும் 20/20 போட்டிக்குமான ஒப்புமையாகச் சொல்லலாம். இரவு முழுதும் நடக்கும் நிகழ்ச்சியை ஒரு மணிநேரத்திற்கு சுருக்கியது, வேகமான கதையமைப்பும், மெறுகேற்றப்பட்ட பின்பாட்டும் இசையும் அலங்காரமும், உடை வடிவமைப்பும் தெருக்கூத்திற்கே உள்ள இயல்பு மாறாமல் ஆனால் அதே சமயத்தில் பிரம்மாண்டமாகவும் செய்திருந்தனர். இயக்குனர் பாலாவின் படங்களை பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் பார்த்தது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தனர். அரங்கத்திலிருந்த சிலர் அவர்களே இந்த நிகழ்ச்சியை நடத்துவது போன்று பெறுமைப்பட்டுக் கொண்டிருந்தனர். எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் தன் ஏழு நாட்டு நண்பர்களுக்கு டுவிட்டரில் ஒளிபரப்பி பெறுமைப்பட்டுக் கொண்டிருந்தார். இதன் மற்றொறு சிறப்பு தெருக்கூத்தைப் புதிதாய்ப் பார்த்த நம் சிறுவர்களையும் அது ஈர்த்துவிட்டது என்பதுதான். என் நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருக்கையில் இதனை அறிந்து கொண்டேன்.
அதில் பங்கு பெற்ற அனைவரும் மிக அருமையாக நடித்திருந்தனர். ஒவ்வொரு கதா பாத்திரமும் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. சேர , சோழ, பாண்டிய மன்னர்களின் அறிமுகமும் அனைவரையும் கவர்ந்திருந்தது. மூவேந்தர்களும் எப்படி வரலாற்றில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லவோ அது போல இங்கும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடவிலும் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்தனர்.
ஆரம்பத்தில் கதையின் போக்கிற்கு இணங்கி இலகுவாக நடித்துக்கொண்டிருந்த கண்ணகி உச்ச காட்சியில் வழக்குரை காதையில் கையில் சிலம்பேந்தி நடிப்பில் மிரட்டி விட்டார்கள். உண்மையில் அரங்கத்திலிருந்தோரை சற்றே பயமுறுத்தி விட்டார் என்று சொன்னால் அது மிகையல்ல. மாதவியாய் நடித்தவர் ஒரு தேர்ந்த நாட்டிய மங்கை. அவர் நடனத்திலும் தன் முகபாவத்திலும் அரங்கத்தினரைக் கட்டிப்போட்டுவிட்டார். வேறு யாரையோ மனதில் நினைத்து என்னிடம் பேசுகிறாரோ என்ற காட்சியில் மாதவியின் நடிப்பு தேர்ந்த கலைஞர் என்பதைக் காட்டியது. பாண்டிமாதேவியாய் நடித்தவரின் நடிப்பும் பாராட்டும் படியாகவும் இருந்தது.
அமைதியான நடிப்பால் கௌந்தியடிகள் கலக்க தனது ஆர்ப்பாட்டமான நடிப்பால் பொற்கொல்லன் தகதகத்தார். இந்த இருவரும் அவரவரின் பாத்திரத்திற்கேற்ப அழகான நடிப்பை வெளிப்படுத்தினர்.
வந்த எல்லாக் காட்சிகளிலும் நாகரிகக் கோமாளி கலக்க, கதையின் நாயகன் கோவலன் நடிப்பிலும் நாயகனானார். காதல் காட்சிகளில் பின்னிட்டார்.
இளங்கோவின் சொற்களைக் கொண்டு நற் சந்தங்களின் கட்டியப் பாடல்களும், அதைப்பாடிய நட்டுவனார் குழுவும் இசைக் கலைஞர்களும் ஒரு முழுமையான படைப்பைத் தந்திருந்தனர்.
இவர்களின் இந்தக் கலைப்பணி தொடர எங்களின் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
-சத்யா-
படங்கள் – நன்றி சச்சிதானந்தன் , பவித்திரா சிறீதர், லாறென்ஸ் ராஜன்
நல்ல தமிழில், நீரோட்டமான நடையில், படிக்க சுவைதரும் வகையில் தெருக்கூத்து நிகழ்ச்சியைப்பற்றி கட்டுரைவடித்திருக்கிறீர்கள். படிப்பவர்கள் தாமே அரங்கத்தில் இருந்து ரசிப்பதுபோல உணர்வைத் தருகிறது. நன்றியும் பாராட்டுக்களும்.