\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்காவில் தெருக்கூத்தை மேடையேற்றிய நாயகன்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 3 Comments

American_Therukoothu_Nayagan620x4432014ஆம் ஆண்டு மின்னசோட்டா தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் இருந்த நிகழ்ச்சி தெருக்கூத்து. ஒரு மணிநேரம் நடந்த இந்தக் கூத்து நிகழ்ச்சி பெரியோர் முதல் சிறியோர் வரை எல்லோரையும் கவர்ந்ததாக அமைந்திருந்தது. மின்னசோட்டாவிலுள்ள வளங்களை மட்டும் வைத்துக் கொண்டு சாத்தியப்படாத ஒன்றை சாத்தியப்படுத்திய உயர்திரு சச்சிதானந்தன் அவர்களுடன் ஒரு நேர்முக பேட்டி நடத்தினோம்.

கேள்வி : வணக்கம் சச்சிதானந்தன் வெங்கடகிருஷ்ணன், உங்களைப் பற்றியும் நீங்க வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

சச்சிதானந்தனின் பதில் : காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேறைநகர் என்கின்ற பெரும்பேர்கண்டிகை எனும் சிற்றூரில், விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். எங்கள் ஊர் ஒரு பாடல் பெற்ற தலம். இந்த ஊரில் உறையும் முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார் என்பது தனிச்சிறப்பு.

சுமாராகப் படித்து, இயந்திரவியல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து, மென்பொருள் துறையில் வேலையில் சேர்ந்தேன். மின்னசோட்டாவில் உள்ள பலரையும் போல் நானும் வேலைக் காரணமாக இங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறேன்.

பெரும்பேர்கண்டிகையில் எங்கள் வீட்டின் பின் சிறிய தோட்டம் வாழை, கத்திரி, மிளகாய், அவரைக்காய் மற்றும் கீரை வகைகளைப் பயிர் செய்வோம். நெற்பயிர், வேர்கடலை போன்றவை அதிகமாகப் பயிரிடுவோம். இந்த விவசாய வேலைகளில் நான் ஈடுபடுவதை எனது தந்தை அதிகம் விரும்பாத போதிலும், ஆங்காங்கே சிற்சில வேலைகள் செய்வதில் எனக்கு அலாதி ஆசை.

கிராமத்தின் நீர் ஆதாரம் ஏரி. எங்கள் ஊரின் ஒரு எல்லையில் குன்றின் தொடர் ஒன்று உண்டு. அந்த குன்றின் மீது முருகன் கோயில் ஒன்று உண்டு. ஊர் முழுதும் கோயில்கள். ஆண்டு முழுதும் பல விழாக்கள் நடக்கும். குறிப்பாக திரௌபதி அம்மன், மாரி அம்மன் மற்றும் முருகன் கோயில் ஆகிய கோயில்களில்  நடத்தப்படும் விழாக்களில் மேடை நிகழ்ச்சிகள் நிறைய நிகழ்த்தப்படும். பட்டிமன்றங்கள், மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள் பலவற்றை பார்த்து ரசித்திருக்கிறேன்.

கேள்வி : உங்க ஊர்ல நீங்க பார்த்த தெருக்கூத்த பத்திக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

சச்சிதானந்தனின் பதில் : எங்க ஊர்ல திரௌபதி அம்மன் கோயில்ல பாரதக் கூத்து நடத்துவாங்க. அந்த நிகழ்ச்சியை ஒரு தரம் பார்த்திருக்கிறேன். என் பாட்டி தாத்தா ஊருக்கு திருவிழாவுக்கு தவறாமப் போவோம். அங்கேயும் சில தெருக்கூத்துகள் பார்த்திருக்கிறேன். கர்ண மோக்சம், அர்சுனன் தபசு போன்ற ஒரு நாள் கூத்துகள் பார்த்திருக்கிறேன். சின்ன வயசுல, அந்த ஊர்ல கூத்துக் கலைஞர்கள் பக்கத்திலயே போய்ப் பாக்கிறத்துக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது.

கேள்வி : மூவேந்தர் கலைக் குழாம் ஆரம்பிக்க எது உந்து சக்தியா இருந்தது? அந்தப் பெயர் எப்படி தேர்ந்தெடுத்தீங்க?

சச்சிதானந்தனின் பதில் : சென்ற ஆண்டு தீரன் சின்னமலை வில்லுப்பாட்டு முயற்சிக்கு கிடைத்த ஆதரவும், அங்கீகாரமும் எனக்கு நல்ல உற்சாகத்தைத் தந்தது. நம்ம குழந்தைகளோட ஆர்வமும், பெற்றோர்கள் கொடுத்த உற்சாகமும் எனக்கு உந்துதலா இருந்தது. இது மாதிரியான அரிதான கலைகளை மேடையேற்ற ஒரு குழுவா சேர்ந்து முயற்சி செய்றது நல்லதுன்னு தோணிச்சு. அது தான் மூவேந்தர் கலைக்குழாம். தமிழ் வரலாற்றுல நாம இப்ப பெருமையா பேசுற நிறைய விடயங்கள் மூவேந்தர் ஆட்சி காலத்துல நடந்ததுதான். மேலும் இவங்க மூணுபேரும் பகை இல்லாம ஒண்ணா இருந்திருந்தா – நம்ம மண்ணுல அன்னியர் வந்து இருக்க வாய்ப்பே இருந்திருக்காது. மூவேந்தரின் பெருமையை இந்த கலைகள் மூலம் நம்ம அடுத்த தலைமுறைக்கு சொல்லணும்னு தான் இந்தப் பேரு வைச்சோம்.

கேள்வி : சிலப்பதிகாரத்தைத் தெருக்கூத்தாக கொண்டு வரணும்னு எதனால முடிவு பண்ணிங்க?

சச்சிதானந்தனின் பதில் :தெருக்கூத்து நடத்தணும்னு முடிவானதுமே, எந்தக் கதையைக் கையில் எடுப்பது என்பதில் பெரும் போராட்டமே நடந்தது. தெருக்கூத்து என்றாலே மாபாரதமும், ஆன்மீகக்கதைகளும் தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். மாறாகக் கதைக்களம் ஆன்மீகம் சாராது, சமூக சிந்தனையை ஊக்குவிக்கும் விதமாய் இருக்க வேண்டும் என நினைத்தேன். தமிழின் எழில் கொஞ்சும் இலக்கியங்கள் ஏதேனும் கையில் எடுக்கலாம் எனத் தோன்றியது. ஐயா சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் சிலப்பதிகார உரையைப் படித்துகொண்டிருந்த என்னை இந்தப் பெரும் காப்பியம் அடிமை கொண்டது. சுவை மிகுந்த, பொருள் செறிந்த, நடனம், இசை, நாடகம் எனப் பல கோணங்களைத் தொட்ட அருமையான பயணக் கட்டுரையான சிலப்பதிகாரமே கதையின் கருவானது.

கேள்வி : ஒரு பெறிய வெற்றிப் படைப்பை கொடுத்திருக்கிங்க.இன்னும் சொல்லப்போனா இது உங்களின் இரண்டாம் வெற்றிப்படைப்பு.இதை அரங்கேற்றிய அன்று மினியாபோலிஸ் தமிழர்களிடம் “talk of the city” உங்களுடைய தெருக்கூத்துதான். இந்த வெற்றிய எப்படிப் பாக்குறீங்க. இதற்கான உழைப்பும் திட்டமிடல் பற்றியும் சொல்லுங்களேன்.

சச்சிதானந்தனின் பதில் : மேடையில இந்த நிகழ்ச்சியை பார்த்தவங்க, பலரும் நல்லாப் பாராட்டினாங்க. குறிப்பா ஒருசிலர் இந்த நிகழ்ச்சி எழுபதுகளையும் எண்பதுகளையும் நினைவூட்டியதாச் சொன்னாங்க. அவங்க சின்ன வயசுல கண்ட கலைய இங்க மேடையில பார்த்ததாச் சொன்னாங்க. அது ரொம்பப் பெருமையா இருந்தது. அது எங்கள் குழுவோட பல நாள் உழைப்புக்குக் கிடைத்த சன்மானம்னு நினைக்கிறேன்.

பயிற்சி 15 வாரங்கள் நடத்தினோம். தவறாம எல்லாரும் கலந்துகிட்டாங்க. கதை வடிவம், பாடல் வரிகள் எழுதுறத்துக்கு 2 மாதம் ஆச்சி. இதுல ஏற்பட்ட சவால்கள் நிறைய.

ஒரு மணி நேரத்துல இந்த பெரும்காப்பியதின் கரு சிதையாமல், கலை வடிவத்தின் சிறப்புகளை முழுமையாக மேடையேற்றணும்.

கதையில வெளிப்படுத்த விரும்புற உணர்வுகளுக்கு ஏற்ற சந்தத்தை தேர்வு செய்யணும். குறிப்பா கோவலன், மாதவியின் இடையில் நடக்கும் ஊடல், கண்ணகியின் கோபம், கண்ணகி பாண்டியனிடம் வழக்காடல் போன்ற இடங்களில் பொருத்தமான சந்தங்களை அமைப்பது மிகவும் கடினமாகவே இருந்தது.

அண்மை காலங்களில் தெருக்கூத்து போன்ற அறிய கலைகளில் மக்களைக் கவரும் விதமாக வசனங்களையும், நகைச்சுவைகளையும் கொச்சைப் படுத்தி – இரு பொருள் பட அமைத்து விடுகின்றனர். இதனால் இந்தக் கலைகள் மதிப்பிழந்து விடுகின்றன. இதைத் தவிர்த்து, அமெரிக்க சூழலுக்கு ஏற்ற நகைச்சுவைகள் அமைப்பதில் பெரும் கவனம் செலுத்தினோம்.

கேள்வி : உங்களின் மூவேந்தர் கலைக் குழாம்- கொத்து அங்கத்தவர்கள் (team members) பற்றி பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்க முடியுமா?

சச்சிதானந்தனின் பதில் : கூத்தின் அங்கத்தினர் அனைவரும் இப்போது எங்கள் கலை குழாத்தின் அங்கத்தினர். இயல் இசை நாடகம் எனும் பலதுறைகளிலும் இருந்து உறுப்பினர்கள் சேர்க்க முயற்ச்சிப்போம்.

நடிகர்கள்:

1. குமரகுரு

2. ராஜீ சுந்தர்

3. வெங்கடசுப்ரமணி ஸ்ரீ

4. வேல்முருகன் மா

5. சாகுல் ஹமீது

6. ஸ்ரீனிவாசன் மு

7. மமதா ம

8. ரபீகா ரஹீம்

9. செல்வகுமார் வே

10. விஷ்னுப்ரியா ம

இசைக் கலைஞர்கள்:

1. பாலாஜி ச

2. பத்மநாபன் கோ

3. கரன் ப

4. கார்திகேயன் வெ

பாடியவர்கள்

1. உமா வெங்கட்

2. பாமா ராஜன்

3. ஹேமா கணபதி

கேள்வி : இதற்கான ஒப்பனை மற்றும் உடை வடிவமைத்த அனுபவங்களை எங்களோட பகிர்ந்துக்க முடியுமா?

சச்சிதானந்தனின் பதில்: தெருக்கூத்தின் முக்கியப் பகுதி ஆடை அமைப்பு மற்றும் அரிதாரம். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சிலப்பதிகாரக் காவியத்தில் சங்கமிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து மாதிரி உடை மகுடம் கைபட்டைகலை வர வழைத்துத் தந்தார் திரு சிவானந்தம். அதை வைத்து, இங்கேயே மூன்று அரசர்களுக்கான பிரயேகமான ஆடைகளையும் அணிகலன்களையும் வடிவமைத்தோம். கோவலனுக்கும், கட்டியங்காரன், கௌந்தியடிகள் ஆகியோருக்குத் தேவையான ஆடைகளை முன்னமே திட்டமிட்டு வடிவமைத்தோம். ஆடை வடிவமைப்பின் முழுப் பெருமையும் பாமா ராஜன் அவர்களையே சாரும். அணிகலன்களை வடிவமைப்பதில் உமா வெங்கட் பேருதவி செய்தார்.

ஒவ்வொருவருக்கும் தேவையான முகச் சாயங்கள் என்ன, எவ்வாறான வடிவமைப்புத் தேவை என்று யோசித்து, மாதிரிப் படங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டோம். அரிதாரம் பூட்டுவதற்கும் ஒப்பனைகளை செய்து முடிப்பதற்கும் சுமார் முன்று மணி நேரம் ஆனது. ஆடை அரிதாரத்திற்கு செலவிட்ட ஒவ்வொரு நொடியும் மேடையில் கதாபாத்திரங்களைத் தூக்கி நிறுத்த உதவியது.

கேள்வி : உங்களின் அடுத்த திட்டம் (படைப்பு) என்ன?

சச்சிதானந்தனின் பதில் : கும்மி, பொய்க்கால் குதிரை, கரகாட்டம், பறை – இதை எல்லாம் கலந்து நல்லதங்கா போன்ற நமது மண்ணின் கதையை மேடையேற்ற ஆசை.

கேள்வி : சிலப்பதிகாரத்தைத் தெருக்கூத்தா வேறு தமிழ்ச் சங்கங்களோ அல்லது வேறு அமைப்புகளோ கேட்டா நீங்க நடத்திக்கொடுப்பீங்களா? இதற்காக உங்களை தொடர்புக்கொள்வது எவ்வாறு?

சச்சிதானந்தனின் பதில் : நிச்சயம் செய்வோம். இதே கதையை மற்ற மேடைகளில் அரங்கேற்றவும் இயலும். பங்கேர்ப்பாளர்களின் நேரத்தை உறுதி செய்தபின் தொடர்பு கொள்பவருக்கு உறுதி தருவோம். வேறு கதைகள் வேண்டின், தயாரிப்புக்கு நேரத்தை கருத்தில் கொள்ளுதல் அவசியம். மூவேந்தர் கலைக் குழாத்திற்கு தனி மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி முகவரியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதுவரை satchitand@gmail.com மற்றும் 201-679-2933 முகவரியை பயன்படுத்தலாம்.

கேள்வி : இந்தக் கலையை நமது மின்னசோட்டா வாழ் இளம் சிறார்களிடம் கொண்டு செல்வதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா?

சச்சிதானந்தனின் பதில் : கண்டிப்பா! அடுத்த மேடையில தெருக்கூத்து அரங்கேறும்போது இரண்டு குழந்தைகளை வைத்து நகைச்சுவை செய்யலாம் என்ற திட்டமிருக்கு. அதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க இசையை அவங்களை வைத்தே உருவாக்கலாம்னு ஒரு எண்ணமும் இருக்கு. முயற்சிப்போம்.

கேள்வி : பனிப்பூக்கள் வாசகர்களோட வேறு ஏதேனும் சுவையான அல்லது அவசியமான நிகழ்வுகளை பகிர்ந்துக்க ஆசைப்படுகிறார்களா?

சச்சிதானந்தனின் பதில் : இந்த முயற்சியில் – அறிய கலையை மேடையேற்றிய பெருமை எனக்கும் எமது குழுவிற்கும் உண்டு. இது போல அரிதான கலையில் ஏதேனும் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொண்டால் இந்த முயற்சிக்கு பெரும் துணையாக இருக்கும். மேலும் வாத்திய அனுபவம் இருப்பவர்கள் எங்களுடன் இணைந்தால் பேருதவியாக இருக்கும். இந்தக் கூத்தினை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் சில மாற்றங்கள், முன்னேற்றங்களுடன் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளோம். இதிலும் பெரும்திரளாய் மக்கள் கலந்துகொண்டு ஆதரவைத் தரவேண்டும் என விரும்புகிறேன்.

சச்சிதானந்தனின் பெறும் முயற்சிகளுக்கு வாழ்த்தும் நன்றி கூறி  விடை பெற்றோம்.

-சத்யா-

படங்கள் – நன்றி சச்சிதானந்தன் , பவித்திரா சிறீதர், லாறென்ஸ் ராஜன்

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. Priya C K says:

    சிறப்பான நேர்காணல் . இந்த தெருக்கூத்தை கண்டு வியந்த பல குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று .

    என் 11 வயது மகள் இதனை பார்த்து “AWESOME” என்று கூறியதை கேட்டு நான் மகிழ்ந்தேன் . நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்தது சிலபதிகரம் . இதனை என் மகளையும் ரசிக்க வைத்து , வியக்க செய்த உங்கள் அனைவருக்கும் பல கோடி நன்றிகள் .

    Priya

  2. rani says:

    Keep up your good work Sachi, way to go!!!

  3. அரசு செல்லைய்யா says:

    நேர்காணல் முழுதும் தமிழ் மண் வாசனையும், தொல் தமிழ்க்கலைகள் காப்பாற்றப்படவேண்டும் என்ற பேரார்வமும் விரவியிருக்கின்றன. தமிழகத்திலேயே பார்ப்பதற்கு அரிதான தெருக்கூத்தினை அமெரிக்காவில் அரங்கேற்றுவது பெரும் சாதனை. அதுவும் தமிழர் ஒற்றுமை என்ற மையக்கருத்தை வைத்து சிலப்பதிகாரக்காப்பியத்தை தெருக்கூத்தாக வடிவமைத்து பயிற்சி கொடுத்து மேடையேற்றுவது நினைக்கவே மலைப்பைத்தருவது. மிகப்பெரும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகண்டிருக்கும் சச்சிதானந்தன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    தெருக்கூத்தில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.

    தொடருட்டும் உங்கள் கலைப்பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad