\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 4

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments

கனிபோன்ற காதல்

Kannadasan_600x826

காதலைப் பாடுவதில் தனக்கு எவரும் நிகரில்லாத தனிப்பெருமை பெறுகிறார் கண்ணதாசன். உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கையுணர்வு காதல். கவிதைகளுக்கும், கலைகளுக்கும் வற்றாத ஊற்றாக இருந்து வளம்தருவது காதல். காதல் கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? இது போன்ற கற்பனைகள் தனது காதலையும், தான் காதலிப்பவரையும் எப்படியெல்லாம் வர்ணித்து அழகு செய்கின்றன? காதல் கொண்ட சாமானியனுக்கே கவித்துவம் பிறக்குமென்றால், கவியரசரின் புலமையையும், கற்பனையையும் சொல்லவும் வேண்டுமா? அப்படிப்பட்ட பாடல்கள் சிலவற்றை இந்த முறை பார்ப்போம்.

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்

கடலினில் கொண்டு கரைத்தவளோ

பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்

பேரழகெல்லாம் படைத்தவளோ – அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென

சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிடத் தலை குனிவாள் … (செந்தமிழ்த் தேன் மொழியாள்)

பொதுவாக பெண்ணின் அழகைக் கண்டு ஆண்கள் மயங்குவது உண்டு. ஆனால் ஒரு பெண்ணே மற்றொருவளின் அழகை வியக்கும் வண்ணம் அமைந்த பெண்ணை வர்ணிப்பது போன்றதொரு பாடல். டி.ஆர். மகாலிங்கத்தின் உயர்சுருதி குரலிலும் காதல் சுவை சொட்டுகிறதென்றால் அது பாடல் வரிகளின் கற்பனை வளத்தாலும் சந்தத்தாலும் என்றால் அது மிகையில்லை.

—–

மற்றொரு பாடலில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தத்துவம் காதலருக்கு நிலம், நேரம் போன்ற எல்லைகளை கடந்து எப்படிப் பொருந்துகிறது என்பதை விளக்குகிறார் கவியரசர்.

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே

செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் மனமே

தென்னர் குல மன்றமே

இன்று கவி பாடும் என் செல்வமே

என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே

மக்கள் நம் சொந்தமே (அன்பு நடமாடும் கலைக்கூடமே)

பி. கு : ஊட்டியில், மலர்கள் பூத்துக் குலுங்கும் மே மாதத்தில் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடுகள் செய்து விட்டு, பாடலுக்காக கவிஞரை இயக்குனரும், தயாரிப்பாளரும் நிர்பந்திக்க அவர் ‘என்னய்யா மே மே ன்னு குதிக்கறீங்க ‘ என்று கேட்டுவிட்டு எழுதிக் கொடுத்த பாடல் இது. பாடலின் அனைத்து வரிகளும் ‘மே’ என்றே முடிவதை கவனியுங்கள்.

—-

ஒரு பெண் தன் தோழியிடம் தனது கணவனையும், அவனது காதல் விளையாட்டுகளையும் சொல்வது போல் அமைந்த பாடல்.

ஏனத்தான் என்னைப் பாரத்தான்

கேளத்தான் என்று சொல்லித்தான்

சென்ற பெண்ணைத்தான்

கண்டு துடித்தான்

அழைத்தான் சிரித்தான் அணைத்தான்

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்

முத்துத்தான் உடல் பட்டுத்தான்

என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான்

வளைத்தான் சிரித்தான் அணைத்தான்

எப்படி சொல்வேனடி (அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் ..)

—-

சில நேரங்களில் காதலன் தனது காதலியை வர்ணிக்கையில் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளவும் விழைவதுண்டு. இது போன்றதொரு சூழ்நிலை கண்ணதாசனுக்கு பழம் நழுவி பாலில் விழுவது போன்றதானது..

(ஆண்)

அழகான பழம் போலும் கன்னம் – அதில்

தர வேண்டும் அடையாளச் சின்னம்.

(பெண்)

பொன் போன்ற உடல் மீது மோதும் – இந்த

கண் தந்த அடையாளம் போதும் – இந்த

கண் தந்த அடையாளம் போதும் (துயிலாத பெண்ணொன்று கண்டேன்)

சாதுர்யத்துடன் ஆண் கேட்டதற்கு அதை விட சாதுர்யமாக பெண் பதிலளித்து பாடுவது அழகு.

இதே நிலையை ஒட்டிய மற்றொரு பாடல்.

தங்கப் பதக்கத்தின் மேலே – ஒரு

முத்துப் பதித்தது போலே – உந்தன்

பட்டுக் கன்னங்களின் மேலே – ஒன்று

தொட்டுக் கொடுத்திடலாமா – நீயும்

விட்டுக் கொடுத்திடலாமா (தங்கப் பதக்கத்தின் மேலே..)

பி. கு : மேலே சொன்ன பாடலை கேட்டு பாருங்கள் … “என்ன விலை அழகே..” பாடலின் கரு புரியும்.

—–

நமது பழங்கால இலக்கியங்களில் பெண்கள் தோழிகளுடன் விளையாடும் போது கூடப் பாட்டு பாடி மகிழ்வார்கள் என்று படித்திருக்கிறோம். அது போல, பூப்பந்து விளையாடும் நேரத்தைக் கூட வீணாக்காமல் காதலியும் காதலனும் ஒருவரை ஒருவர் வர்ணித்துக் கொள்வது போன்ற பாடல்.

இது தான் அந்த நிலவோ

என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து

இல்லை இது முல்லை

என்று போராடும் கண்ணில் வண்டு

வருவார் இன்று வருவார்

என்று மனதோடு சொல்லும் பந்து

வரட்டும் அவர் வரட்டும்

என்று வழி பார்க்கும் காதல் செண்டு (பறக்கும் பந்து பறக்கும்)

காதலியின் முகம் பார்த்து செல்லும் பூப்பந்து, அவளின் முகத்தைப் பார்த்ததும் இது தான் நிலாவோ என்று வியக்க, அவளின் வண்டெனும் கண்கள் இல்லையில்லை இது நிலாவை விட மென்மையான முல்லைப் பூ என்று சொல்கிறதாம். தற்காலக் கவிஞர்களின் கனவிலும் தோன்றாத கற்பனை !!

பி. கு. இப்பாடலை உருவாக்கிய பொழுது நாயகனும், நாயகியும் ‘டென்னிஸ்’ விளையாடுவதாக எடுப்பதாக இருந்ததாம். அதனால் தான் ‘வண்ணப் பந்து’, ‘டொக்’ எனும் பந்தடிக்கும் சத்தமெல்லாம். பின்னர் ஓடியாடி டென்னிஸ் விளையாடுவதைப் போல எடுக்க இயலாததால் பூப்பந்தாக மாற்றி விட்டனர். இத்தனைக்கும் அந்த ‘டொக்’ ஒலிக்காக இரண்டு நாட்கள் வாய்க்குள் விரலை விட்டு மூடி வேகமாக விரலை வெளியெடுத்து பயிற்சி செய்தவர் எம்.எஸ்.வியின். இசைக் குழுவை சேர்ந்த, டி.எஸ். பாலையாவின் மகன் சதன்.

—–

காதலுக்குக் கண் கிடையாது என்பார்கள். காதலுக்குக் கண் தேவையில்லை என்றவர் கவிஞர். கண் பார்வையற்ற காதலி கேட்கும் கேள்விகளுக்கு, விடையளிக்கும் காதலனைப் பாருங்கள்! காதலியின் அழகையே பதிலாகத் தருகிறான்!

பெண்: தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது?

ஆண்: தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது!

பெண் : இது குயிலா குழலா?

ஆண் : உன் குரலின் சுகமே!

பெண் : இது மயிலா மானா?

ஆண் : அவை உந்தன் இனமே!

பெண் : பூவின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய்க் காணுமா?

ஆண் : பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா?

பெண் : இங்கு கிளிதான் அழகா?

ஆண் : உன் அழகே அழகு!

பெண் : இந்த உலகம் பெரிதா?

ஆண் : நம் உறவே பெரிது! (இது இரவா பகலா )

இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போன்றதொரு பாடல். கண் பார்வை இல்லாத காதலன் காதலியைத் தொட்டுப் பார்த்து வர்ணிப்பதாய் அமைந்தது.

கூந்தல் வண்ணம் மேகம் போல

குளிர்ந்து நின்றது

கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்

கேள்வி ஆனது

பொன்முகம் தாமரை

பூக்களே கண்களோ

மனக் கண்கள் சொல்லும் பொன்னோவியம்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்

மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசையாவும்

முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ

தேன்குழல் விரல்களோ

ஒரு அங்கம் கைகள் அறியாதது

பூ உலாவும் கொடியைப் போல

இடையைக் காண்கிறேன்

போகப் போக வாழை போல

அழகைக் காண்கிறேன்

மாவிலைப் பாதமோ

மங்கை நீ வேதமோ

இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே (அழகே.. அழகு.. தேவதை)

கண்ணதாசனின் இடத்தை எவராலும் ஈடுகட்ட முடியாது என்பது சத்தியம்!

இரு உயிர்கள், கண்களால் சந்தித்து, உள்ளத்தால் இயைந்து, உடலால் இணையும் தருணங்களை எவ்வளவு நாசூக்குடனும், கவித்துவத்துடனும் உரைக்கிறார்!!

மங்கலக் குங்குமம் நெஞ்சிலே

மல்லிகை மலர்கள் மண்ணிலே

பொங்கிய மேனி களைப்பிலே

பொழுதும் புலரும் அணைப்பிலே

வாயின் சிவப்பு விழியிலே

மலர்க்கண் வெளுப்பு இதழிலே

சாயும் நிலவின் மழையிலே

காலம் நடக்கும் உறவிலே

(மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்)

“தெய்வம் என்றாலது தெய்வம் ; வெறும் சிலையென்றாலது சிலைதான் ” என்று கவிஞரே சொன்னது போல் இந்தப் பாடல் “விரசம் என்றால் விரசம் .. கவிதை என்றால் கவிதை” கண்ணதாசனைப் போல் காதலைப் புனிதப்படுத்தி உயர்வு செய்தவர் வேறு எவரும் இருக்க முடியாது.

தலைகாக்கும் தத்துவம்

”தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு…”

”அவள் ஒரு தொடர்கதை” படத்தில் வரும் இந்தப் பாட்டை தேன் போன்ற குரலுக்குச் சொந்தக்காரர் கே.ஜே. ஏசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டு ரசித்திராத தமிழ்க் காதுகளே இல்லையெனக் கூறிவிடலாம். விரக்தியில் வாடும் கவைக்குதவாத குடிகார அண்ணன் பாடுவதுபோல காட்சியமைப்பு இருந்தாலும், அந்தப் பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் மறுப்பதற்கியலா எதார்த்த தத்துவார்த்தங்களைக் கொண்டது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

“நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா

என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி…”

என்ற வரிகள்

”புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம்”

என்ற ஆதிசங்கரரின் பஜ கோவிந்தத் தத்துவத்தை எப்பொழுதும் நினைவு படுத்தும் நமக்கு. எவ்வளவு எளிதான வரிகளில் சொல்லியிருக்கிறார் என நினைக்கையில் மயிர்க் கூச்செறிகிறது… அதே பாடலில் மேலும் கூறுகிறார்;

”தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமாற் போனாலே வேதாந்தம்

மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி”

சித்தர்கள் அந்தமாய்க் கூறிய தத்துவங்களையும், வேதத்தின் அந்தங்களையும் சிறு கேலியாகக் குறிப்பிட்டு, தன்னையே உணர்ந்து கொண்டு ஞானம் பெறுவதென்பது குறிக்கோள் எனவும் அழகாய்க் குறிப்பிடுகிறார் கவியரசு. ஆயிரம் வேதங்களைக் கற்றாலும், தன்னை உணரும் வரை ஞானமில்லையென்பது அனைத்து தத்துவ ஞானிகளாலும் போதிக்கப் பட்ட பாடமே.

கர்ணன் படம் பார்த்திருப்பீர்கள். மகாபாரதத்தில் குருஷேத்திரப் போரில் கண்முன்னே எதிர்ப்படையில் அணிவகுத்து நிற்கும் உறவினர்களையும், குருக்களையும், பால்ய பருவத்திலிருந்து வந்த நண்பர்களையும் கண்ட அர்ஜுனன் செயலிழந்து காண்டீபத்தைக் கீழே போட்டுவிட்டு விரக்தி அடைகிறான். பெரும்பாலான சாதாரண மனிதர்களுக்கு இதுபோன்ற செயலிழந்த நிலை ஒருமுறையாவது தோன்றியிருக்கும் என நினைக்கிறேன். அப்பொழுது பகவான் கிருஷ்ணன் பார்த்தனுக்குக் கூறும் கர்மயோக நூலாகப் பிரசித்தி பெற்றது பகவத் கீதை. பல செய்யுள்களைக் கொண்ட இந்த நூலின் சாராம்சத்தை ஒரு திரைப்படப் பாடலில் எவ்வாறு கூறுகிறார் பாருங்கள் நம் கவியரசர்;

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!…

மரணத்தின் தன்மை சொல்வேன்!…

மானிடர் ஆன்மா மரணம் எய்தாது…

மறுபடி பிறந்திருக்கும்!…

மேனியைக் கொல்வாய்… மேனியைக் கொல்வாய்…

நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி,

வென்றுதான் தீரும்… ஓர் நாள்… ஆஆஆஆஆ

மேனிக்கும் ஆன்மாவிற்குமான வேறுபாடுகளையும் ஒரு வீரன் தான்கொண்ட கொள்கைக்கான கடமைகளையும் மூன்றே பத்திகளில் முழுமையாய்ச் சொல்லியிருப்பார் அந்தப் பாடலில். இந்தப் பாடலிலும் மரணமடையா ஆன்மாவின் தன்மைகளைச் சிறு குறிப்பால் விளக்கியிருப்பார் கவிஞர்.

தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற படத்தில் வந்த மனதை வருடும்படியான பதமான இசையில் பொழிந்த தத்துவப் பாடல்…

ஆசையே அலைபோலே

நாமெல்லாம் அதன்மேலே

ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

வாழ்க்கையைக் கடலாகவும் அதில் இடையராது தோன்றி மறையும் அலைகளை ஆசைகளாகவும் உருவகப் படுத்தி, அதில் கிடந்து உழலும் மனிதர்களின் நிலைப்பாடு குறித்து விளக்கிடும் பாடலிது. இதில் எதிர்பாராத நிலையில் தானாக விளையும் துன்பங்களையும் இன்பங்களையும் குறித்து இவ்வாறு கூறிகிறார் கவியரசு;

சூறைக் காற்று மோதினால்

தோணி ஓட்டம் மேவுமோ?

வாழ்வில் துன்பம் வரவு… சுகம் செலவு..

இருப்பது கனவு

காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

தத்துவ விளக்கம் பெரிதாக இருந்திராத பருவத்தில் “துன்பம் எப்படி வரவாகும்? இன்பம் எப்படி செலவாகும்? இதை மாற்றியல்லவா சொல்லியிருக்க வேண்டும்” என்று நாம் சிந்தித்ததுண்டு. “செயல் விளைவு” தத்துவத்தின் சாராம்சம் விளங்க, கவியரசின் இந்தப் பொன்னான வரிகளின் அர்த்தமும் விளங்கியது. நமக்கொரு துன்பம் நேரும்போழுது ஏற்கனவே நம் கணக்கில் செய்யப்பட்ட துன்பம் ஒன்று நீங்குகிறது என்று நினைக்கையில் அது வரவாகக் கருதப்பட வேண்டும் என்பது கவியரசரின் வாக்கு. சுகம் எதனையும் உயிர்ச்சக்தியைச் செலவிடாது அடைந்திடவோ, அனுபவித்திடவோ இயலாதென்பதால் சுகமென்பதைச் செலவு என்று குறிப்பிடுகிறார் தத்துவ வித்தகர் கண்ணதாசன் என்று உணர்கிறோம்.

(இன்னும் வரும்)

– ரவிக்குமார் மற்றும் மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad