பாமா ராஜன்
சங்கமம் 2014 தெருக்கூத்தின் உடை வடிவமைப்பாளர்
மினசோட்டாத் தமிழ் சங்கம் நடத்திய சங்கம் 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில மூவேந்தர் கலைக்குழாம் நடத்திய தெருக்கூத்து நிகழ்சியின் உடை வடிவமைப்பாளர் திருமதி பாமா ராஜன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு பேட்டிக் கண்டோம்.
அவர் வடிவமைத்திருந்த ஆடைகள் அந்த நிகழ்ச்சியின் தரத்தை ஒருபடி அதிகரித்துக் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. மினசோட்டாவில் கிடைக்கின்ற பொருட்களை வைத்துக்கொண்டு நம் பாரம்பரியம் மாறாமல் வடிவமைத்திருந்த விதம் மிக அருமை.
கேள்வி : வணக்கம் பாமா ராஜன், உங்களைப் பற்றியும் உங்கள் ஊர்,குடும்பம் மற்றும் வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
சென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்தேன். எனக்கு ஒரு அக்கா ஒரு அண்ணன் சென்னையில் இருக்காங்க.
நான் வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில் தான். என் கல்லூரி படிப்பு முடித்து ஐந்து வருடங்கள் சென்னையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு திருமணம் ஆகியது அதன் பிறகும் சென்னையில் ஐந்து வருடங்கள் குடியிருந்தோம். அதன் பிறகு என் கணவரின் வேலைவாய்ப்புக் காரணமாக அமெரிக்காவில் குடியேறினோம்.
2.கேள்வி : உங்களுடைய அமேரிக்க வாழ்க்கைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடியுமா?
கடந்த ஒன்பது வருடங்களாக நாங்கள் மினியாபோலிஸ் மாநகரத்துல தான் இருக்கோம்
3.கேள்வி : உடை வடிவமைப்பு மற்றும் ஆடை அலங்காரத்தில் உங்களுக்கு எப்ப ஆர்வம் வந்தது?
அடிப்படையில எங்க அம்மா ஒரு தையற்கலைஞர். அவங்க தைக்கும் போது நான் பார்த்திருக்கேன். அம்மா எப்போதாவது தையல் இயந்திரத்தை சும்மா வைத்திருக்கும் பொழுது அதில் தைத்துப் பார்ப்பேன். அதில் ஆர்வம் இருந்தாலும் பெரிய அளவில் ஈடுபாடு இருந்ததில்லை.. அமெரிக்கா வந்த புதிதில் பொழுது போகாத நேரங்களில் கலைப் பொருட்கள் செய்கின்ற சிறுவர் களுக்கான தையல் இயந்திரத்தில் விதவிதமான ஆடைகளை என் குழந்தைகளுக்கு வடிவமைத்துப் பார்த்ததுண்டு.
நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வந்து அதிலிருந்து மாதிரிகளைப் பார்த்து ஆடைகளை வடிவமைத்ததுண்டு. அதிலிருந்த என் ஆர்வத்தைப் பார்த்து என் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அன்னையர் தினத்தன்று, பெரிய கணிப்பொறியால் வடிவமைக்கப்படக்கூடிய தானியங்கி தையல் இயந்திரத்தை எனக்கு பரிசா வாங்கித் தந்தாங்க.
அதிலுள்ள எல்லா வித செயல்பாடுகளையும் அறியும் ஆர்வத்தில் பல விதமான உடைகளை எனக்கும் என் தோழிகளுக்கும் வடிவமைத்தேன்.
என் தோழிகள் இனி நீதான் எனக்கு எல்லாமே தைத்து
தரணும்னு சொல்லும் போது எனக்கு பெருமையா இருக்கும். அப்புறம் மினசோட்டாத் தமிழ் சங்க நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கு கொள்கின்ற சில நிகழ்ச்சிகளுக்கு ஆடைகள் தைத்து தந்திருக்கேன். அப்படி வந்ததுதான் இந்த தெருக்கூத்து வாய்ப்பும்
4.கேள்வி : ஆள் பாதி ஆடைபாதின்னு சொல்லுவாங்க.மூவேந்தர் கலைக் குழாம் அரங்கேற்றிய தெருக்கூத்துக்கு நீங்க வடிவமைத்திருந்த ஆடைகள் எல்லோர் மத்தியிலும் பெருமையாக பேசப்பட்டது. அதைப்பற்றி உங்க உணர்வுகளை சொல்லுங்க? அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
தெருக்கூத்துத நடத்தின மூவேந்தர் கலைக்குழாம் சச்சிதானந்தனிடம் என்னுடைய பெயரை யார் பரிந்துரைத்தாங்கனு தெறியலை. சச்சி என்னிடம் நீங்க தெருக்கூத்திற்கான ஆடைகளைத் தைக்க முடியுமானு ஒரு வார்த்தை தான் கேட்டாங்க. அதுக்கு நான் முடியும் தான் நினைக்கிறேன். நான் முயற்சிப் பண்ணுறேனு தான் சொன்னேன். அவர் ராஜாக்கள் அணியும் மாதிரி உடை ஒன்றை தந்து இது மாதிரி ஆடைகளில் உங்களின் கைத்திறனையும் கற்பனையும் சேர்த்து தைச்சித் தாங்கன்னு சொன்னாங்க. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பழைய கலைக்கான ஆடைகளை வடிவமைக்கப் போகிறோமென்று நினைத்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
5.கேள்வி : தெருக்கூத்திற்கான ஆடை மற்றும் அலங்காரத்திற்கு என்ன என்ன பிரத்தியேகமான பொருட்களை பயன்படுத்தினீங்க? அதற்கான குறிப்புகளை(refrence) எங்கிருந்து எடுத்திங்க?
அதற்கு தேவையான பொருட்களை முடிவு செய்த பின் ஒரு நாள் நானும் சச்சிதானந்தனும் கடைக்குச் சென்று எல்லாப் பொருட்களையும் தேவையான அளவு வாங்கினோம்.
இதை குறிப்பிட்ட தேதியில் தைத்து கொடுத்திடுங்கன்னு அவர் சொன்னதோட சரி.
நான் என்னிடம் கொடுக்கப்பட்ட அந்த மாதிரி உடையுடன் இணையத்துல நிறைய குறிப்புகள் எடுத்து, உதாரணத்துக்கு சொல்லனும் என்றால் அது வண்ணமிகு ஆடையாக, பெரிதாக, மன்னர்களின் மிடுக்கு உடையிலேயே தெரிவதாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் மனதில் கொண்டு, மினசோட்டாவில் கிடைக்கின்ற பொருட்களை வைத்து நம் பாரம்பரிய தோற்றம் மாறாத அளவிற்கு அலங்கரித்திருந்தேன்.
6. கேள்வி : தெருக்கூத்திற்கான ஆடை அணிகலன்கள் வடிவமைத்த பொழுது நடந்த சுவையான நிகழ்ச்சிகளை ஏதேனும் சொல்ல முடியுமா?
முதல் ஆடையை தைத்து முடித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதுவரை நான் அதுவரை சின்னப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் தான் தைத்திருந்தேன். ஆண்களுக்குத் தைத்ததில்லை.
இந்த உடை அவர்களின் உடல்வாகிற்கு பொருந்துமாவென்று
தெரியவில்லை. ஆதலால் அதை யாருக்காவது அணிந்து பார்க்க ஆசைப்பட்டு அவர்களின் பயிற்சி நடக்கின்ற இடத்திற்கு எடுத்துச் சென்றிருந்தேன்.
அங்கிருந்த அனைத்து கலைஞர்களும் போட்டிப்போட்டு அந்த உடைய அணிந்துப் பார்க்க ஆசைப்பட்டார்கள்.
கடைசியில் சாகுல் தான் வெற்றிப் பெற்றார்.
ஆடையைப் போட்டபின் ஒவ்வொரு அடவிற்கும் அது சரியாக இருக்குமா? ஆடையின் வட்டம் எவ்வளவு தூரம் வருகின்றது? என்றெல்லாம் என்று ஆர்வத்தோட பார்த்தார்கள்.
அதைப் பார்க்க சந்தோஷமாகவும், இந்த மாதிரியான உடைக்கு நம் மக்கள் ஆர்வம் காட்டியதைப் பார்க்க நகைச்சுவையாகவும் இருந்தது.
7. கேள்வி : இதேப் போல நாடகம், நாட்டிய நாடகம் மற்றும் குறும்படம் எடுப்பவர்கள் உங்களை அணுகினால் உதவி செய்வீங்களா? அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரியை தர இயலுமா?
என்னால் இயலும் என்று அவர்கள் நினைத்தால், அதற்கான நேரமும் எனக்கு இருந்தால், நான் கண்டிப்பாக செய்து தருவேன்.
என்னோட மின்னஞ்சல் முகவரி bamarajan@gmail.com
-சத்யா-
தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சியில் அரசர், அரசி போன்ற பாத்திரங்களுக்கு உடையமைப்பு வெகு முக்கியம். பார்ப்பவர்களை கூத்தில் ஒன்றவைக்க ஒரு முக்கியத்தேவை. தேர்ச்சிபெற்ற தையற்கலைஞரால் உருவாக்கிய உடையலங்காரம் என சொல்லத்தக்க வகையில் உருவாக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.