முருங்கைக்காய்க் கறி
நாட்டுப் புறமாயிருந்தால் என்ன, நகரப் புறமாயிருந்தால் என்ன முருங்கையின் மகிமையைத் தமிழர் அகத்திய குணப் பாடம் தொட்டு தற்காலம் வரை போற்றி மகிழுவர். தற்காலத்தில் உணவகங்களில் சாம்பாரில் மிதக்கும் ஒரு துண்டு காய்கறியாகக் காணப்படினும் அது முருங்கையின் தனிப்பட்ட சுவையை, மகிமையை ஒருபோதும் தரமாட்டாது.
“செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும் – மறமே
நெருங்கையிலை யொத்தவிழி நேரிழையே நல்ல
முருங்கையிலையை மொழி” –
என்கிறது அகத்தியர் குணபாடம்
தமிழகத்திலும் ஈழத்திலும் சுண்ணாம்புக் கற்பாறை உதிர் செம்மண்ணில் உலர்ந்த வெயிலிலும் நன்றாக வளரும் தாவரம் முருங்கை. இதன் பதமாக காய்த்த இளம் பச்சை நீண்ட காயும், அதன் முருங்கைக்கீரை என அழைக்கப்படும் இலைத்துளிர்களும் உடல் நோய் நிவர்த்தி செய்யும் மரகதங்கள்.
முருங்கைச் சமிபாடு, உடல் மந்த நிலை, உடல் சூடுபோன்றவற்றை தணிக்கும் உணவாகும். தொன்மையான சித்த ஆயுள் பத்தியக் கை மருந்து நூல்கள் உடல் பலகீனம், கருப்பைக் கோளாறுகள், மற்றும் சுண்ணாம்புச் சத்துக் கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும் என்கிறது.
மினசோட்டாவில் முருங்கைக்காய் இந்தியக் கடைகளில் கோடைகாலத்தில் கிடைக்கும். மற்றைய காலங்களில் ஏற்கனவே நறுக்கப்பட்ட பொட்டலங்களாக குளிர்சாதனப் பெட்டிகளிலும் காணலாம்.
முருங்கைக்காய் கறிக்கு வேண்டியவை
1 சிறு கிளை கறிவேப்பிலை
2 நகம் உள்ளிப் பூண்டு – தட்டி எடுத்துக்கொள்ளவும்
10 – சீரகம்
10 – வெந்தயம்
1 நுள்ளு pinch கடுகு
½ இறாத்தல் முருங்கைக் காய்
1 கோப்பை தேங்காய்ப் பால்
2 கோப்பை கட்டி தேங்காய்ப் பால்
½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 மேசைக் கரண்டி கறித்தூள்/யாழ்ப்பாணக் கறி மிளகாய்த்தூள்
5 சின்ன வெங்காயங்கள் – சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்
5 அரை பாதியாக நறுக்கிய பலா விதைகள் அல்லது
1-2 நறுக்கிய சிறிய உருளைக்கிழங்கு
பாதி எலுமிச்சை
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
தயாரிக்கும் முறை
1. முருங்கைக் காயை 3 அங்குலத் துண்டுகளாக நறுக்கி, இரண்டாகப் பிளந்து கொள்ளவும்.
2. முருங்கைத் தூண்டுகளின் வெளி நார்களை அகற்றிக் கழுவிக்கொள்ளவும்.
3. அடுத்து சீரகம், வெந்தயம், கடுகு, உள்ளியைச் சட்டியில் போட்டு மத்திம வெப்பத்தில் வறுக்கவும்.
4. கடுகு வெடிக்கும் தருணத்தில் 1 கரண்டியளவு சமையல் எண்ணெய் விட்டு, வெங்காயம், முருங்கக்காய்த்துண்டுகளையும், மஞ்சள் தூளையும் இட்டு ஓரிரு நிமிடம் தாளிக்கவும்.
5. தொடர்ந்து தேங்காய்ப் பாலையும் விட்டு, கறித்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. பின்னர் கட்டிப்பாலை விட்டு மெதுவாக அகப்பை இல்லை கரண்டியால் துளாவவும். பின்னர் வெப்பத்தைத் தணித்து சட்டியை மூடி குழம்பு தடிக்க விடவும்.
7. முருங்கைக்காய்க் கறியை அடுப்பில் இருந்து அகற்ற முதல் பாதி எலுமிச்சையைப் புழிந்து மீண்டும் துளாவவும்.
முருங்கைக் காய்க் கறியைச் சோறு, இடியப்பம், புட்டு, உரொட்டி போன்ற உணவுகளுடன் பரிமாறலாம்.
– யோகி