\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வயற்காற்று (பாகம் – 02)

Filed in இலக்கியம், கதை by on May 7, 2014 0 Comments

vayatkaaru2_620x444வயற்காற்று (பாகம் – 01)

காற்றில் மிதக்கவிட்ட இலவம் பஞ்சாகி மெல்லிய மேகங்கள் மிதந்துகொண்டிருந்தன. அன்று பழுத்த கொவ்வைப் பழம் போல ஓடிச் சிவந்தது வெட்கத்தால் சுரபியின் கன்னங்கள்.

“பெரிய சொற்பொழிவு ஆற்றிவிட்டாயத்தான் உனக்கு தேத்தண்ணி வைச்சுக் கொண்டு வரட்டோ… அல்லது கள்ளு கிள்ளு ஏதேனும்…”

“விளையாட்டில்லை சுரபி எல்லாம் மெய்…”

“ம்…ம்…ஆனால் எது உண்மை எது பொய் எண்டு ஒரு தெளிவில்லாமல் என்ரை மனம் குழம்புதே”

“இதிலை குழம்பிறத்துக்கு என்ன இருக்கிது… எனக்கெண்டால் ஒண்டும் தெரியலை…”

“அதுசரி அவையின்ரை பிரச்சினையை அவையளே தீர்க்கலாம்தானே அதுக்கேன் உன்னை கூப்பிட்டவை… நீயென்ன சமாதான நீதவானே…”

“நீயென்ன ஒண்டும் தெரியாமல் பேய்க்கதை கதைக்கிறாய்… பரணரூபன் வீட்டிலை ஒண்டென்றால் அது என்ரை வீட்டை நடந்தமாரித்தான்…அவனார் என்ரை நண்பனெல்லே… அதைவிடு அவன்ரை தங்கச்சிக்காக எண்டாலும்…அவளும் என்னோடை நல்லமாரித்தானே…”

“நல்லமாரி எண்டால்…”

“நல்லமாரி எண்டால் நல்லமாரித்தான்…”

சீலன் புன்முறுவலுடன் கூறிவிட்டு பார்த்துக் கொண்டிருக்க,

“உந்தக் கூத்து எப்பதொடக்கம் நடக்குது. ஒருக்கால் நான் அத்தையிட்ட வரவேணும் போலதான் கிடக்கு…”

“ஓம் சுரபி சொல்ல மறந்துட்டன் அம்மாவும் உன்னை பாக்க வேணும் எண்டு சொன்னவா முடிஞ்சா ஒருக்கா அந்தப்பக்கம் வாவன்…”

என்றான் ஏளனமாக

“பாத்தியே அத்தான் கதையோடை கதையாய் நடந்த தூரங்கூடத் தெரியேல்ல..”

கோடைகாலமென்பதால் குளத்தில் அவ்வளவாக தண்ணீர் இல்லையென்றாலும் சிறுபோக விதைப்புக்கு ஏற்றாப்போல அரைக்குளம் தண்ணீருக்கு மேல் நிறைந்து கரையில் வந்து முட்டி மோதி தாளம் போட்டுக்கொண்டிருந்தது. மருதமரங்கள் குளக்கட்டின் ஓரத்தில் எல்லைக் காவலர்களாக ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பிக்கொண்டிருந்தன…

அவற்றின் வேர்கள் குளக்கட்டை பேர்த்து உட்புகுந்து பாதுகாப்பு வலையமைத்து குளத்தை காவல் செய்தன. வழுவழுப்பான மருதமரத்தின் ஒரு பக்க வேரிலே ஆசுவாசமாக இருந்த சுரபி குளத்தை பார்த்து அதன் அழகில் புலனை செலுத்தத் தொடங்கினாள்.

“குளத்தை பாத்தியே அத்தான் எவ்வளவு வடிவாயிருக்கெண்டு…”

தாமரைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட முதலிரவு பஞ்சணை போல புதுக்கோலம் பூண்டு கண்ணுக்கு களிப்பூட்டிக்கொண்டிருந்தது குளம். இடையிடையே அல்லிகள் எட்டிப்பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டன. பாவம் அல்லிகள் கொட்டாவி விட்டே காலத்தைக் கடத்துகின்றன போலும். சூரியகாந்தி சூரியனின் திசையெல்லாம் திரும்பி நாள் முழுக்க தவமிருந்து காதல் செய்ய அல்லிகளோ கள்ளத்தனமாக சூரியனுடன் உறவாடவல்லவா முனைகின்றன.

“ஆ…தாமரைப்பூ… எவ்வளவு வடிவாயிருக்குது”

வாயைப் பிளந்தாள் சுரபி அவன் என்ன நினைத்தானோ சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு உடனே குளத்தில் இறங்கி கைநிறைய தாமரைப் பூக்களைப் பிடுங்கி வந்து அவளிடம் கொடுத்தான். அவள் மெய்மறந்து தாமரைப் பூவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கொத்துக் கொத்தாக தாமரைப்பூவை கையில் வைத்து குழந்தை போல சுரபி விளையாடுவதைப்  பார்த்து மனம் லயித்திருந்தான். நீல நிற வானத்தையே உள்வாங்கி போர்வையாக போர்த்திக் கொண்டு மலேரியா காய்ச்சல் வந்து கிடப்பவர் போல் அலைக்கரங்கள் உதறலெடுக்க நடுங்கிக் கொண்டிருந்தது குளத்து நீர்.

நீண்ட காலமாக குளத்துக்குள் தவமிருக்கும் கருமைநிறமான பட்ட மரங்கள் கொக்குகளின்… நாரைகளின்…மீன்கொத்திப் பறவைகளின் இருப்பிடங்களாக… தொலைவில் கரையோரமெல்லாம் விளாத்தி மரங்கள் வேலியமைத்து மழை காலத்தில் குளத்துக்கு தண்ணீர் வரும் வேகத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தன. திடீரென மீன் கொத்தும் பறவைகள் குளத்தில் விழுவதும் எழும்புவதுமான ஆரவாரித்துக்கொண்டிருக்க நீர்க்காக்கைகள் தங்களின் கரிய உடலை ஊறப்போட்டு நீரில் மூழ்குவதும் மேலே வருவதுமாக வித்தை காட்டிக்கொண்டிருந்தன.

பெரிய சிறகுகளை உடைய ஆலாப்பறவைகள் தங்களின் நீண்ட பனங்கிழங்கு போன்ற அலகுகளினால் மீன்களைக் கொத்தி பந்தாடிக்கொண்டிருந்தன.

“சுரபி இந்த இடத்தில தான் போன கிழமை நான் ஒரு பெரிய கரடியை கண்டனான்”

“என்ன கரடியோ…ஐயோ…”

“ஓம் … முகமெல்லாம் சடை மூடியபடி கரடிப்புள்ள வந்து கொண்டிருந்தார். நானும் என்ன நடக்குதெண்டு பாத்துக்கொண்டிருந்தன்…அந்த மரத்தடில வந்ததும் நிமிந்து எழும்பி ரண்டு கால்ல நிண்டுதுபார்… எனக்கு வேர்த்துக் கொட்டத் தொடங்கிட்டுது…”

“பிறகு…”

என்றாள் சுரபி ஒருவித நடுக்கத்துடன்…

“பிறகென்ன பிறகு? என்னைக் கண்டதும் கரடிக்கு பயம் வந்திட்டுது… அது ஒரே ஓட்டமாய் ஓடிட்டுது…”

“ஓமத்தான் அது ஏதோ புது மிருகமெண்டு நினைச்சு பயந்து ஓடியிருக்குமோ தெரியாது”

என்றாள் கிண்டலாக.  மாலைச் சூரியன் மருதமரத்தடியில் ஒழித்துக்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தது. இருவரும் நேரம் போனதுகூடத் தெரியாமல் நீண்ட நேரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

“அத்தான் நேரம் போகுது நான் வீட்டை போகப் போறன்”

என்றாள் சுரபி. அதை ஆமோதிப்பது போல தலையசைத்த சீலன், தூரத்தில் கையை காட்டி,

“அங்கை பாரன் ஒரு மான்கிளையை”

என்றான்.

“ஆ… என்ன வடிவாயிருக்கு!! படத்திலை வாறது போல…ஆ..ஆ”

அதன் அழகில் லயித்தாள் சுரபி.

“நீ பின்னேரத்தில இந்தப் பக்கம் வந்தாலெல்லோ…இதெல்லாம் நெடுக நடக்கிறதுதான். உனக்குத்தான் புதிசு…சும்மா வாயைப் பிளக்காதை…வலையன்கட்டு பாலம்போல கிடக்கு”

“சும்மா போ அத்தான் உனக்கு எல்லாத்துக்கும் ஒரு நக்கல்தான்… நவ்வி எண்டால் மான் எண்டு ஒருபொருள் இருக்கெண்டு உனக்கு தெரியுமேயத்தான்…ராமாயணத்திலையும் கலிங்கத்துப் பரணியிலயும் நவ்வியெண்டதுக்கு மான் எண்டுதான் பொருள் சொல்லியிருக்கினம் நான் படிச்சனான்…”

என்று சுரபி கூறிக்கொண்டிருக்க அவனுடைய முகத்தில் ஒருவித விகாரப் புன்னகை தோன்றி நொடிப் பொழுதில் மறைந்தது.

“உன்ரை படிப்பும் கத்தரிக்காயும் உதைப் படிச்சும் கடைசியிலை மண்ணைக் கிண்டிற பிழைப்புத்தானே… சும்மா படிப்பு படிப்பெண்டு உங்கை என்ன நடக்கிதோ ஆர்கண்டர்…”

“உனக்கு படிக்கிறதெண்டால் பாவக்காய் தின்னிறமாரியெண்டு எனக்கு தெரியுந்தானே அதுக்காக எல்லாரையும் படிக்கக் கூடாது எண்டு நீ நினைக்கிறது ஆகத்தான் ஓவர்…ஓ.. சொல்லிப் போட்டன்…”

“ஏன் நான் சொன்னதிலை என்ன பிழையிருக்குது…படிச்சு கிழிச்சு கடைசியில பார் காசுதான் செலவழிஞ்சது மிச்சமாயிருக்கும்… கலியாணத்துக்கு பிறகு மனிசனுக்கு சமைச்சுப் போடத் தெரிஞ்சால் காணும் அதுதான் பொம்புளப் புள்ளக்கு அழகு…”

“உனக்கெங்கே படிப்பைப் பற்றி விளங்கப் போகுது சும்மா போஅத்தான்… அதை விடு உன்னோடை சண்டை பிடிச்சு என்ன பலன் இருண்டிட்டுது நான் வீட்டை போகப்போறன்…”

சொல்லிக் கொண்டே நடக்கத் தொடங்கினாள் சுரபி. செய்வதறியாமல் அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

காற்று வீசும்…

– வேட்டையன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad