நெஞ்சு பொறுக்குதில்லையே
“நான் கொஞ்சம் கீழே வரைக்கும் போய்ட்டு நடந்துட்டு வரேன்” என்று கிளம்பினார் அம்புஜம்.
“தினம் இப்படி போய் நடக்க வேண்டியது அப்புறம் ராத்திரி முழுக்க மூட்டு வலின்னு முனக வேண்டியது. இதே வேலை உனக்கு” என்று சொல்லியபடி உள்ளே இருந்து வந்தார் சதாசிவம்.
“மூட்டு வலி ஒண்ணும் நடக்கறதால இல்ல. வயசாச்சு. இந்த மாசி வந்தா 63 வயசு ஆச்சு. மூட்டு வலி வராம என்ன?..
“ஆமாம் பாட்டி ஆகி ஆறு வருஷம் ஆச்சு.
“கீழே போனா கொஞ்சம் பொழுது போகும். எல்லாரையும் பார்த்து கொஞ்ச நேரம் பேசிட்டு வரலாம். மெதுவா நடந்துட்டு வரேன்.
“சுருக்கமா சொன்னா வம்பு பேச போற” என்று சிரித்தபடி சதாசிவம் தன் புத்தகத்தை புரட்டினார்.
“ஆமாம் உங்களுக்கு பொழுது போகலைன்னா பாகவதம், பாரதியார் இப்படி ஏதோ ஒரே புத்தகம். எனக்கு நாலு பேர் முகம் பார்த்துட்டு வந்தா தான் பொழுது போகும்.
“சரி என்னவோ பண்ணு. இந்தா உன்னோட மொபைல் எடுத்துகிட்டு போ. தனியா போகும் போது கைல எப்பவும் வெச்சுக்கோ.”
” சரி நான் ஆறரை மணிக்குள்ள வந்துடறேன். என்னோட ஸீரியல் நேரம் வந்துடும். அப்புறம் சப்பாத்தி பண்ணனும்.”
“கடவுளே இந்த மெகா ஸீரியல் பயித்தியம் எப்போ தெளியுமோ” என்று சிரித்தபடி பகவத் கீதையை படிக்கத் தொடங்கினார் சதாசிவம்.
சதாசிவம் அம்புஜம் தம்பதியர் அறுவது வயதை கடந்த முதியவர்கள். நாற்பது வருட தாம்பத்தியத்தின் முதுமைக் காலத்தில் இருப்பவர்கள். ஒரு பெண் சசி, பையன் ரகு இருவருக்கும் திருமணம் செய்து, பேரன், பேத்தியை விடுமுறை நாட்களில் கொஞ்சி வருகிறார்கள். அவர்கள் இருப்பது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. சுமார் நாற்பது குடும்பங்கள் இருக்கும் அதில் ஆறு மாடி. இது போல் மூன்று மாடி கட்டிடங்களுக்கு இடையில் ஒரு சிறிய பூங்கா போல அமைந்திருக்கும். மாலையில் பள்ளி முடிந்த சிறுவர், சிறுமியர் விளையாடுவது ஒரு புறம், அவர்கள் தாயோ, தந்தையோ அவர்களை ஒரு கண்ணில் கவனித்தபடி தங்கள் ஒத்த வயதுடையவர்களுடன் பேசிய படி ஒரு புறம், ஒரு சாரார் நடந்து கொண்டு வலம் வந்தபடி ஒரு புறம். வயதான பெண்மணிகள் கூட்டமாக பேசுவது ஒரு புறம் என தினசரி மாலை வேளையில் அந்த குடியிருப்பில் இருப்பவர் அனைவரும் வெளியில் வருவது ஒரு வழக்கம்.
அன்றும் அது போலவே அம்புஜம் வந்து தன்னை ஒத்த வயதுடையாரை கண்டு புன்னகைத்தபடி அவர்களுடன் அமர்ந்து கொண்டார். நாலாவது மாடி மரகதம் அம்மாள் அழுதபடி ஏதோ சொல்ல தொடங்கினார்.
“நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு தெரியல. பெரிய சண்டை நேத்திக்கு”. “என்ன ஆச்சு? ” என்று எல்லோரும் கேட்க,
“ஒண்ணும் இல்ல. தினம் தினம் நான் சாயங்காலம் டீவீ. ஸீரியல் பாக்கற நேரம் தான் என் பேரனோட வீட்டுப் பாடம் எழுத உக்கார்றா என் மருமக. டீவீ. அணைக்கணும். பாடம் படிக்க முடியலன்னு ஒரே சண்டை. வேற நேரத்தில பாக்க வேண்டியது தானே டீவீன்னு. காலைலேந்து நமக்கு வேலை இல்லையா என்ன. சின்ன சின்ன வேலை எவளோ இருக்கு. ஸ்கூல் முடிச்சு வந்தவுடனே விளையாடக் கூட்டிட்டு போகாம படிக்க வெச்சா என்ன?.”
“ஆமாமாம் நாம ஏதாவது சொன்னா நம்ம மரியாதை தான் போகும். ஏதோ பெரிய பாடம் படிக்கற மாதிரி, இந்த பசங்க எல்லாம், ஒண்ணாவது, ரெண்டாவதுக்கு எவ்ளோ ஹோம் வர்க். இதுல அவங்க படிக்கற பொழுது யாரும் பேசக் கூடாது. டி.வி. ஓடக் கூடாது. ரொம்பத்தான் அலட்டல் ஆயிடறது” அம்புஜம் வேறு மரகததுக்கு ஒத்து ஊத, மரகதம் அம்மாள் இன்னும் அதிகமாக வீட்டு புலம்பலைத் தொடங்கி, அழுது .. இப்படியாக ஒரு மணி நேரம் ஓடி போனது.
பேசிக் கொண்டே இருக்கும் போது, திடீரென்று அம்புஜம் கையில் இருந்த மொபைல் அடித்தது. “சரி நான் வரேன் இவர் தான் போன் பண்றார்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அம்புஜம்.
மாடிக்கு வந்தவுடன் சதாசிவம், “என்ன அம்புஜம் வாகிங்க் முடிஞ்சுதா?”
“இல்ல இன்னிக்கு மரகதம் அம்மா ரொம்ப வருத்தமா இருந்தாங்க. அதனால எல்லோருமா சேர்ந்து பேசிட்டு வந்தோம்”.
“வெட்டி வம்புன்னு சொல்லு”.
“இல்ல பாவம் அவங்க மனக் கஷ்டத்தை சொன்னாங்க. இந்த காலத்து சின்னப் பெண்கள் எல்லாம் கொஞ்சம் கூட பெரியவங்கன்னு மரியாதை இல்லாம எதுக்கெடுத்தாலும் வெடுக்குனு பேசறது. ரொம்பத் தப்பு. கொஞ்சம் கூட பெரியவங்க மனசை பத்தி யோசிக்கறது இல்ல. அவங்க வீட்டுல என்ன ஆச்சுன்னு தெரியுமா?”
“நான் சொல்லாதென்னாலும் நீ கேட்க போறதில்லை .. சொல்லு” அம்புஜம் மரகதத்தின் புலம்பலை மறுமுறை ஒப்பித்து, கூடச் சேர்த்து மரகதத்தின் மருமகளுக்கு இன்னும் திட்டு வழங்கினார்.
“அய்யோ பாவம் விடு அம்புஜம் நமக்கு ஏன் இன்னொருத்தர் விஷயம்” என்று நிறுத்தினார்.
“சரி நீங்க எதுக்கு போன் பண்ணி வர சொன்னீங்க?”.
“ஓ அதுவா சசி போன் பண்ணினா. உன்ன போன் பண்ண சொன்னா”.
தன் பெண்ணின் சசியின் எண்ணை அழுத்திய அம்புஜம், “சொல்லு சசி என்ன பண்ற?, எப்படி இருக்க. குட்டிப் பயல விளையாட கூட்டிட்டு வந்தியா?
எதிர்முனையில் சசி ஏதோ பேசியதை கேட்டபடி ம் கொட்டியவர், சிறிது நேரம் கழித்து, “ஆமாம் உன் மாமியார் பண்றது நியாயமே இல்லை. குழந்தை படிப்பு முக்கியமா? இல்லை ஸீரியல் முக்கியமா? காத்தாலேந்து சும்மா தான இருக்காங்க. இதுக்கா சண்டை போடறது. நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை கேளு. ஆறு வயதில நல்லா படிக்க வேண்டாமா. இப்பல்லாம் எவ்ளோ ஹோம் வர்க் தராங்க பாவம் தான் நீ. சரி அப்புறம் பேசு”ன்னு சொல்லி விட்டு வைத்து விட்டார்.
அவர் பேசினதை கேட்டபடி இருந்த சதாசிவம் “நீ என்ன பேசறன்னு நீயே கேட்டியா.” என் கேட்க,
“என்ன?? ஆனாலும் இந்த சசியோட மாமியார் ரொம்ப டீவீ பயித்தியம் புடிச்சு அலையணுமா. சரி இருங்க மணியாச்சு இன்னிக்கு கதை என்ன ஆச்சுன்னு பார்க்கணும். டீவீ போடுங்க.”
ஒரு பெரிய நெடு மூச்சுடன் சதாசிவம் “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்” என பாடியபடி உள்ளே சென்றார்.
– லக்ஷ்மி சுப்பிரமணியன்