ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-6
(பகுதி 5)
புதிய காலநிலை
புலம்பெயர்ந்த நாடுகளின் வேறுபட்ட காலநிலை, புவியியல் தரைத்தோற்றம், சுற்றாடல் என்பன எமது தேசத்தில் இருந்து சென்றவர்களைப் பெரிதும் பாதித்துள்ளன என்பதை அவர்களின் கவிதைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. புதிய இடம், குளிர் சூழ்ந்த காலநிலை என்பன ஒருங்கு சேர்ந்து அவர்களை மிகவும் பாதித்துள்ளன.
“இரவுகள் துயில்கொள்ளா!” என்ற கவிதையில் நார்வே நாட்டின் நீண்ட இரவு கவிஞருக்குப் புதிய அனுபவத்தைத் தருவதாகவும் இருள் சூழ்ந்த அகதி வாழ்வுக்கு அர்த்தம் சொல்வதாகவும் அமைகின்றது.
“மறந்தீரோ! இரவிலும் கதிரவன்
வாசற்படி வந்து சுகம் வினாவும்
நள்ளிரவுச் சூரிய தேசம் என்பதை
………………
சூரியனும்
குளிர்ந்தும் இருள் போர்வை போர்த்தாத
துருவ தேசத்தைக் கண்டு வியந்தேன்”14
இருள் தோய்ந்த துயர வாழ்வில் இருந்து பழக்கப்பட்டுப்போன ஈழத் தமிழனுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாகவும், இரவில்கூட ஒளி வீசும் நீண்ட பகல் நம்பிக்கை தருவதாகவும் அமைகின்றது. ஆனால் அர்ச்சனாவின் “பனித்துளி வாழ்வு” என்ற கவிதையில்;
“இன்னும் எத்தனை
குளிர் காற்று மோதும் சாமங்களில்
தூக்கம் கலைத்துத்
தனிமைச் சிறையில் அடைபட்ட கைதியாய்”15
புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் இரவு பகலாக ஓடாக உழைத்து உளியாகத் தேய்ந்து அன்றாடம் குளிரிலும் பனியிலும் அல்லற் பட்டு வாழும் அவல வாழ்வினையும் தூக்கமின்றி விழித்திருந்து உறவுகளின் முன்னேற்றத்துக்காகக் தன்னையே உருக்கும் தனிமைச் சிறையின் கொடூர நிலையினையும் எண்ணிக் கவிதைகள் படைத்தனர்.
“பனிமலையில் கால் சறுக்கும்
பாதாளம் பயங்கரம் காட்டி நிற்கும்
கைகள் விறைக்கும் – கடுங் குளிரின் கோரம்
கறுப்பு நிற இதழ்கள் கூட காயம்படும்”16
“பொய் மான் வேட்டை” என்ற கவிதையில் வரும் இந்த வரிகள் கோடை வெயிலின் கொடூரம் தாங்கி வளர்ந்தவர்கள், தாம் முன்னர் பழக்கப்படாத கடுங் குளிரின் கோரம் வாட்ட உடல் விறைத்து, கொடிய துயர் நிறைந்த அவல வாழ்வினை அனுபவித்து உயிர் வாழ்தலையும் பொருள் தேடலையும் நோக்கமாகக் கொண்டு வாழும் அந்தர நிலையினைக் கூறுகின்றன.
மேலை நாடுகளில் கோடை காலம், இளவேனிற்காலம் என்பது பொதுவாக எல்லோராலும் விரும்பப்படும் பருவமாகும். இத்தகைய மித வெப்பமான காலங்களில்தான் சிறு பூச்செடிகள் மொட்டு விடும். இளந் தென்றல் வீசும். சிறுவர்கள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சி பொங்க வாழ்ந்திடுவர். தாய்மார்கள் தம் குழந்தைகளின் விளையாட்டை ரசித்திருப்பர். இத்தனையும் ஒருங்கு சேரும் நிகழ்வுகளாக நடந்து கொண்டிருக்க, மறு புறத்தில் எதிலுமே ரசனையின்றி தன் குடும்ப நலனுக்காக உழைத்து முன்னேறத் துடிக்கும் புலம்பெயர்ந்தவர்களின் இயந்திர மயமான வாழ்க்கையைப் “பண்டமாற்று”17 என்ற தலைப்பிலமைந்த கவிதை நமக்குச் சொல்லிச் செல்கிறது.
14. திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.58
15. மேலது, பக்.108
16. மேலது, பக்.109
17. மேலது, பக்.112
-தியா-