தமிழே அமுதம்
மலைகடைந்த மலையமுதம் அருவி தன்னில்
மனங்குளிர மாந்திநின்று குளித்துப் பார்த்தேன்
மலைமுகட்டில் கொம்புத்தேன் அமுதம் மொத்தம்
மலையளவு நான்பருகி சுவைத்து உண்டேன்
மழையமுதம் தனில்நனைந்து ஆடிப் பாடி
மட்டற்ற மகிழ்வினிலே திளைத்து நின்றேன்
கலைமிளிரும் கனித்தமிழின் அமுதம் போன்று
கடுகளவும் பேரின்பம் கண்டேனில்லை!
பாற்கடலை தேவர்கள் கடைந்தெ டுத்தப்
பாலமுதம் இனிக்காமல் கசக்கக் கண்டேன்
தோற்றமிலா குளிர்தென்றல் அமுத மென்னை
தீண்டிவுடல் குளிர்வித்தும் இன்பம் காணேன்
கூற்றுவனால் குடைசாயா உடலி னுள்ளே
குடியிருக்கும் உயிரமுதம் இனிக்கக் காணேன்
மாற்றமிலா மாத்தமிழே அமுத மென்பேன்
மற்றதிலும் திகட்டாத அமுதம் காணேன்!
மங்கைதரும் இன்பப்பா லமுதங் கூட
மனநிறைவு இல்லாத ஏக்கங் கண்டேன்
அங்கமெலாம் புல்லரிக்கும் பூவாம் மழலை
அமுதமது திகட்டிடவே திகைத்து நின்றேன்
எங்கெங்கும் நிறைந்திருக்கும் எழிலாம் சோலை
இயல்பமுதந் தனில்கூட நிறைவு காணேன்
மங்காத மூச்சங்கத் தமிழே இன்ப
மகிழ்வமுதம் என்பதனை நானு ணர்ந்தேன்!
எந்தமிழே ஈடற்ற அமுத மாகும்
எந்தமிழா வேர்வரையில் மாந்தி நீந்து!
செந்தமிழு நிகரற்ற அமுத மென்று
செவ்வாய்கோள் வரைகொண்டு செல்வாய் இன்றே!
நந்தமிழே தாயமுதம் பருகி நித்தம்
நாநிலமும் பருகிடவே நூல்கள் செய்வாய்
பைந்தமிழே பாரமுதம் என்ப கைநீ
பாரோர்க்கு விருந்தாக்கி வாழ்வாய் நீடு!
– நெருப்பலைப்பாவலர்இராம. இளங்கோவன்